Trending

பாரதியார் பற்றிய கட்டுரை

பாரதியார் பற்றிய கட்டுரை


முன்னுரை


"யாமறிந்த புலவரிலே, பாரதி போல் தமிழ் மொழியில் சிறப்பானவர் எவரும் இலர்" என்று பாரதியைப் புகழ்வதே சாலத்தகும். இந்திய தேசிய விடுதலைப் போரில் பாரதியின் பங்கு அளவிடதற்கு அரியது. இவரது கரு'மை' தோய்ந்த ஒவ்வொரு எழுத்துகளும் அக்னி குஞ்சுகளாயின. பாடலின் ஒவ்வொரு அசைகளும் ஆய்தம் ஏந்தின. இன்றைய பல நவீன கவிஞர்களுக்கு அவ்வெழுத்துகளே கவசமாயின. புதுகவிதை எனும் புது வித்தை தெளித்து ஜீவிதமாய் தமிழ் மொழியோடு இரண்டற கலந்த இக்கவியின் புகழை ஒரு சிறு கட்டுரையால் அளந்துவிட முடியுமா? சின்னச் சின்ன பிள்ளைகளுக்கும் பாடல்களால் விடுதலை வேட்கையை தூண்டிய இம்மகாகவியின் மாட்சிமையை ஒருபெரும் கட்டுரையாலும் தான் கூறிவிட முடியுமா? இயன்றவரையில் பாரதியின் புகழை அளவிடுவதே இந்த பாரதியார் பற்றிய கட்டுரையின் நோக்கம். கட்டுரை PDF கீழே உள்ளது


பிறந்தான் மகாகவி


பாரதியார் 1882 ஆம் ஆண்டு இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் அன்றைய திருநெல்வேலி மாவட்டத்தில் சின்னசாமி ஐயர், இலக்குமி அம்மாள் இணையருக்கு டிசம்பர் 11 ஆம் நாள் பிறந்தார். பாரதியின் பெற்றோர் அவருக்கு இட்டபெயர் 'சுப்பரமணியன்' ஆகும். இருந்தாலும் உற்றார் உறவினர்களால் பாரதியார் சுப்பையா என்றே அழைக்கப்பட்டார். பாரதியின் ஐந்தாவது அகவையிலே தாயார் இலக்குமி அம்மாள் இயற்கை எய்தினார். அதனால் பாரதியார் தந்தையாருடன் தனது பாட்டியார் பாகீரதி அம்மையாரின் உறுதுணையுடனுமே வளர்ந்தார். தந்தை சின்னசாமி ஐயர் மகன் வருங்காலத்தில் அரசாங்க உத்தியோகத்திற்கு செல்வான் என்று எதிர்பார்த்து பாரதியை கல்வி பயில வைத்தார். ஆனால் அப்போது உலகம் அறிந்திருக்கவில்லை ஒரு மகாகவி பிறந்து விட்டான் என்பதை.


பாரதி தனது பள்ளி படிப்பின் போதே இலக்கணம் தேர்ந்தவர்களால் புனையப்படக்கூடிய ஆற்றல்மிகு கவிதைகளை இயற்றும் பக்குவத்தை அடைந்திருந்தார். பாரதியின் ஆற்றல் கண்டு பொறாமை கொண்ட எட்டையபுர அரசவைக் கவிஞர் காந்திமதிநாதன் பாரதியாரை 'பாரதி சின்னப்பயல்' எனக்கூறி அவமானப்படுத்தினார். பாரதியோ அச்சிறு வயதிலும் தனது தமிழ் கவி ஆற்றலால் அரசவைக் கவிஞரை புலமையால் வென்று காட்டினார். எட்டையபுர மன்னர் பாரதியின் திறமையை கண்டு வியந்தார். பாரதிக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்யவேன் என்று வாக்களித்தார்.


➤ பாரதியாரின் கற்பனையில் பாரத தேசம்


இளமையும் வறுமையும்


பாரதியார் 1897 ஆம் ஆண்டு தனது பதினைந்தாம் வயதில் செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு சின்னசாமி ஐயரின் தொழில் ஏற்பட்ட பெரும் இழப்பால் பாரதியின் குடும்பம் வறுமைக்குத் தள்ளப்பட்டது. பின் தந்தையின் மரணம் பாரதியை சொல்லவொண்ணா துயரத்திற்கு தள்ளியது. பாரதியார் எட்டையபுர மன்னனுக்கு தனது நிலையை எடுத்துக்கூறினார். பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டார். எட்டையபுர அரண்மனையிலே பாரதியாருக்கு வேலைக் கிடைத்தது. பின் அப்பணியை விட்டு பாரதி தன் அத்தை குப்பம்பாள் அழைப்பை ஏற்று காசிக்கு வந்தார். 1898 முதல் 1902 வரை பாரதியார் காசியிலேயே தங்கி இருந்தார்.


தமிழும் பாரதியும்


பாரதியின் வாழ்க்கை நதியில் இழுத்தடிக்கப்பட்ட சறுகு போல இருந்தாலும் இயல்பாகவே பாரதியின் வாழ்க்கை புலமையின் மீதும் நம் தமிழ் மொழியின் மீதும் வீற்றுக் கொண்டிருந்தது. காசிதனில் பாரதியார் வேதங்களை நன்கு அறிந்தார். வேதங்களின் ஆழ் பொருள் எல்லா உயிர்களையும் சமமாக பாவிப்பது என்னும் சமத்துவ எண்ணத்தினை தீர்க்கமாக அறிந்திருந்தார். 


7 ஆண்டுகளுக்கு பின்னர் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது. பாரதியின் வாழ்க்கை பெரும்பகுதி தமிழிலேயே கழிந்தது. இதைப் பற்றி அவரே தனது எழுத்துகளால் பதிவு செய்துள்ளார்,


"கவிதை எழுதுபவன் கவிஞன் அன்று. கவிதையையே வாழ்க்கையாய் உடையோன், வாழ்க்கையையே கவிதையாய் செய்தோன். அவனே கவி" - பாரதியார்


பாரதி காசியில் வாழ்ந்த போது தமிழ் மட்டுமல்லாது ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி, வங்காளி, பிரென்சு போன்ற மொழிகளில் புலமைப் பெற்றார். இருந்தும் "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று பெருமைப்பட கூறியவர் நம் பாரதி.


உலகில் மிக சிறந்த கவிஞர்களின் பட்டியலில் நம் பாரதியும் வீற்றிருக்கிறார். அவரது தேனினும் இனிய தமிழ் கவிதைகள் இன்றளவும் பள்ளி புத்தகங்களில் பாடமாக்கப்பட்டுள்ளது. இந்திய விடுதலைப் போராட்டத்தை மையமாகக் கொண்டே பாரதி பாஞ்சாலி சபதத்தை படைத்தார். பாரதியின் ஒவ்வொரு துளி இரத்தமும் வியர்வையும் தமிழ் மொழிக்காகவும் இந்தியத்திரு நாட்டிற்காகவுமே சோராது உழைத்தன.


"எமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்"


என்று பாரதி கூறிவதிலிருந்தே அவரது தமிழ் பற்றும் நாட்டுப்பற்றும் தெரிய வருகிறது.


➤ இந்திய விடுதலை போரில் மகாகவி பாரதியாரின் பங்கு


ஆசிரியர் பணி


காசியை விட்டு வந்த பாரதி மீண்டும் எட்டைய புர அரண்மனையிலே வேலை செய்தார். பின் அரண்மனையில் கிணற்று தவளைப்போல் இருப்பதால் மக்களுக்கு எந்த பலனும் கிட்டாது என்பதை உணர்ந்த பாரதியார், மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் மாதம் 17 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது சென்னையில் 'சுதேசமித்திரன்' பத்திரிக்கை நடத்தி வந்த சுப்பிரமணிய ஐயர் மதுரைக்கு வந்திருந்தார். அவருக்கு பாரதியின் அறிமுகம் கிடைத்தது. பாரதியின் திறமையையும் மொழிப் புலமையையும் கண்டு வியந்த சுப்பிரமணிய ஐயர் சுதேசமித்திரன் பத்திரிக்கையின் உதவி ஆசிரியராக பாரதியை நியமனம் செய்தார்.


1905 ஆம் ஆண்டு வங்காளப் பிரிவினை கிளர்ச்சி, 'சுதந்திரம் எனது பிறப்புரிமை' என்ற திலகரின் வீர முழக்கம் பாரதியைப் புரட்சி வீரராக மாற்றியது. எழுத்தாளராகவும், புரட்சி வீரராகவும் மட்டுமல்லாமல் மேடைப் பேச்சாளராகவும் விளங்கினார். பாரதி 'சக்கரவர்த்தினி' என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றினார். இந்தப் பத்திரிகை பெண்கள் விடுதலை, பெண்கள் முன்னேற்றம் இவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு நடத்தப்பட்டது. பின்னர் பாரதி 'இந்தியா' பத்திரிகையின் பொறுப்பாசிரியர் ஆனார். 


திலகரின் தீவிரவாதத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். 'சுதேச கீதங்கள்' என்னும் கவிதைத் தொகுப்பு வெளியானது. 'இந்தியா' பத்திரிகை ஆசிரியர் கைதானார். ஆங்கிலேய அரசு பாரதியாரையும் கைது செய்து சிறையில் அடைக்கத் தயாரானது.


➤ பாரதி ஓர் தெய்வமாகவி


தேசியக் கவி


பாரதியார் பற்றிய கட்டுரை


பாரதியின் பல புரட்சிகரமான கவிதைகள் ஆங்கிலேய அரசால் தடைசெய்யப்பட்டன. தீரர் சத்திய மூர்த்தி உள்ளிட்டோர் பலரின் ஆதரவால் பாரதியின் இலக்கிய கருத்து சார்ந்த சில பாடல்கள் மட்டுமே கவிதைத் தொகுப்பாக வெளிவந்தது. ஆனாலும்


நொந்தே போயினும் வெந்தே மாயினும்

நந்தே சத்தர் உவந்தே சொல்வது 

வந்தே மாதரம்


போன்ற பாரதியின் அனல் தெறிக்கும் பத்திரிக்கை கட்டுரைகள், மேடைப்பேச்சுகள், கவிதைகள் போன்றவை தடைபடாமல் வெளிந்து கொண்டிருந்தன. இதனால் மக்களுக்கு சுதந்திரத்தாகம் மேலெலத் துவங்கியது. பாரதியை மக்கள் தேசியக் கவியாக ஏற்றனர். தேசத்திற்காக எழுத்தினை இரத்தமென வடிக்கும் பாரதி ஒரு சுதந்திர போராட்ட வீரராக உருவெடுத்தார். பாரதியின் எழுத்து தனலாய் மாறி அனலென பரவியது. தேசத்திற்கென ஒரு பாடல் தீ பிறந்தது. அந்த தேசியத் தீ, தேசியக் கவியாய் உருவெடுத்தது. பாரதியாரின் கற்பனையில் பாரத தேசம் பல இலக்கியகளில் சுடர்விட்டெரியத் தொடங்கியது. அவர் அவரது இதழ்களில் எழுதிய ஒவ்வொரு பக்கமும் இந்தியாவின் எதிர்காலமும் தமிழின் வளர்ச்சியுமே வெளிப்பட்டது. அவரது வாழ்நாள் இவ்விரண்டிற்கென தியாகமானது.


➤ பெண்கள் பற்றி பாரதியார்


புதுச்சேரி வரவு


பாரதியின் புரட்சிகரமான கவிதைகள் கட்டுரைகள் ஆங்கிலேயர்களை ஆத்திரமூட்டியது இதனால் பாரதியை ஆங்கிலேய அரசு கைது செய்ய முனைந்தது. அடிமை இந்தியாவில் அஞ்சி அஞ்சி வாழ்வதை விடவும், சிறைப்பட்டு சித்திரவதைப்படுவதை விடவும் வெளியே இருந்து விடுதலை வேள்வியைத் தொடருவது புத்திசாலித்தனம் என்று பாரதி எண்ணினார். 1908 ஆம் ஆண்டு புதுவைக்கு காலடி எடுத்து வைத்தார். 'இந்தியா' பத்திரிகையும், புதுச்சேரியிலிருந்து புயலாக வெள்ளையர் ஆட்சிக்கு எதிராகப் பாய்ந்தது. 


1908 ஆம் ஆண்டு முதல் 1918 ஆம் ஆண்டு வரை பாரதியார் புரட்சிக் குயிலாய், புதுமைக் கனலாய் கவி மழை பொழிந்தார். 'கண்ணன் பாட்டு', 'குயில் பாட்டு', 'பாஞ்சாலி சபதம்' போன்ற படைப்புகளை இயற்றினார். 1918 ஆம் ஆண்டு புதுவையை விட்டுக் கிளம்பிய பாரதியார் கடலூரில் கைதாகி விடுதலையானார். பின் தமிழ்நாட்டில் நீண்ட காலம் சுற்றுப்பயணம் செய்த பாரதி 1919 ஆம் ஆண்டு காந்தியடிகளைச் சந்தித்தார். பாரதியின் துணிவையும், நேர்மையையும், வீரத்தையும் கண்ட காந்தியடிகள் அருகில் இருந்த ராஜாஜியிடம் இவர் ஓர் அபூர்வ மனிதர். இவரைப் பொக்கிஷம் போல பாதுகாக்க வேண்டியது தமிழர்களின் கடமை என்றார்.


➤ பாரதியின் காதல் கதை


புது படைப்பு


பாரதி இலக்கணம் செய்வதில் வல்லவர் எனினும் புதுமையான இலக்கிய நடைகளே புது இலக்கணங்கள் உருவாகக் காரணம் என்பதை அறிந்தவர். பாரதிக்கு முன்பு இருந்த கவிஞர்கள் பெரும் புலவர்கள் படித்தோருக்கு மட்டும் விளங்கும் இலக்கண கவிநடை கவிதைகளையே படைத்து கொண்டிருந்தனர். பாரதி அவ்விதியை மதித்தார். அவைகளை உதாசீணம் செய்யாமல் மரபுக்கவிதையில் பாரதி சுத்த அறிவுடன் விளங்கினார். ஆனாலும் எளிய மக்களுக்கும் புரியும் விதத்தில் கவிதை செய்தால் தான் தமிழ் வளர்ச்சி தடையல்லாதிருக்கும் என்று அறிந்த பாரதி, புதுகவிதை நடையை உண்டாக்கினார். அவர் உண்டாக்கிய புதுக்கவிதை நடையே இன்றைய பல தமிழர்களின் கவிதை ஆர்வத்தினை தீர்த்து வைக்கின்றது. பாரதி மரபுக்கவிதைக்கும் புதுகவிதைக்கும் சமமான அங்கீகாரத்தை அளித்தார். அதன் சிறப்பாக பாரதியின் வசனக்கவிதைகள் புதுகவிதையின் முதற் தங்கமாய் மிளிர்கின்றது. கவிதையில் மட்டுமல்லாது மக்கள் எதை அடைய சிரமப்படுகின்றனரோ அவற்றிலெல்லாம் பாரதி ஓர் புதுமையைப் படைத்து பொதுமை ஆக்கினார். வேதத்தை பிராமணர் தான் கற்க வேண்டும் என்ற மூட விதியை பாரதி எதிர்த்தார். தன் பாடல்களில் வேதப்பொருள்களை இணைத்தார். 


ரிக் வேதத்தின் மூலக்கருத்துகளையே பாரதியார்,


ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி

அலையும் அறிவிலிகாள்! - பல்

லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்

டாமெனல் கேளீரோ?


சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்

சுருதிகள் கேளீரோ? - பல

பித்த மதங்களி லேதடு மாறிப்

பெருமை யழிவீரோ?


என்று வேதக்கருத்துகளை பாரதியார் பாடல்வழி பரப்பினார். அனைத்து மக்களும் போற்ற வேண்டிய வள்ளலாரின் கொள்கையான ஜீவகாருண்யத்தையும் பாரதியார் தனது கட்டுரைகளின் வழி பரப்பி வந்தார். மனிதன் மிருகங்களையும் பறவைகளையும் கொன்று உண்பதை தடுக்கவும் எல்லா தமிழர்களையும் ஒழுக்க சீலர்களாய் ஆக்க வேண்டுமென்றும் பாரதி கனவு கண்டார். ஞான மார்க்கம் எல்லா மக்களுக்கும் அவசியம் என்று அறிந்தே ஞானரதம் என்னும் நூலை பாரதியார் படைத்தார். நால் வருண பாகுபாடு மக்களைப் பிரிக்க அல்ல, மக்கள் ஒழுக்கமுடனும் தர்மத்துடனும் வாழவே நால்வருணம் படைக்கப்பட்டது என்பதை பாரதி வலியுறுத்தினார்.


➤ பாரதி 'சின்னப்பயல்' கதை


முடிவுரை


திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவில் யானைக்கு தேங்காய் அல்லது வாழைப்பழம் தருவது பாரதியின் வழக்கம் அன்றும் பாரதியார் அவ்வாறு பழத்தைக் கொடுக்கும் போது யானை தாக்கியதால் 1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கடுமையான உடல் தாக்கங்களுடன் நோய்வாய் பட்டார். இதன் விளைவால் கடும் வயிற்றுக்கடுப்பு நோயால் பாதிக்கப்பட்ட பாரதியார், செப்டம்பர் 11, அதிகாலை 1.30 மணிக்கு காலமானார். பாரதியாரின் இறுதி ஊர்வலத்தில் வெறும் 14 பேரே கலந்து கொண்டனர். இந்த நாட்டிற்காக தனது முழு வாழ்க்கையையுமே அர்பணித்து தியாகம் செய்தவரின் இறுதி யாத்திரை வெறும் 14 நபர்களுடன் பரிதாபத்திற்குரியதாய் நிகழ்ந்தது. பாரதியார் எழுத்தாளர், கவிஞர் என மொழியியல் ரீதியாக மட்டுமல்லாது உண்மையிலே தலைச்சிறந்த தியாகியாகவும் மாவீரராகவும் இந்த வளரும் இந்தியாவில் ஒளிவிடுகிறார். அவர் காட்டிய பாதையில் தமிழர்களாகிய நாம் அடக்கமுடன் பயணிப்பதே நாம் அவருக்கு செய்யும் இறுதி மரியாதையாய் கொள்ளலாம். வாழ்க பாரதி புகழ்! வளர்க தமிழ்


➤ கட்டுரை PDF DOWNLOAD

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு