Trending

பாஞ்சாலி துகில் உறிக்கப்பட்டதில் நாம் அறிய வேண்டியது

 

பாஞ்சாலி துகிலுறியப்பட்டதில் நாம் அறிய வேண்டியது

நம்பிக்கை கரைபுரண்டோடும் போதுதான் இறைவனின் திருவுள்ளம் நம்பக்கம் திரும்பி பார்ப்பதாய் புராண இதிகாசங்கள் பேசுகிறது.


இதன்படி, பிரஹலாதன், அரிச்சந்திரன், அர்ஜூனன், மார்க்கண்டேயன் இன்னும் ஏனையோர் உள்ளார்கள்


அவதாரங்களான இராமன், கிருஷ்ணன், நபிகள் நாயகம், இயேசு கிறிஸ்த்து போன்றோர்களும் ஆண்டவனின் பால் நம்பிக்கையெனும் பெருமூச்சை இடைவிடாது கடைப்பிடித்தோராவர்.


இன்றைய நம் மக்களுக்கு நம்பிக்கை தான் தேவை. தூய சிந்தனை, நற்வொழுக்கம், வைராக்கியமான இறை நம்பிக்கை இதுதான் பிண்ட உட்பொருளுக்கு உதவுவனவாகும்.


சந்தேகம் அற்ற நம்பிக்கைக்கு தளர்வுகள் இருப்பதில்லை.


கிடைக்குமோ? கிடைக்காதோ? நடக்குமோ? நடக்காதோ? என்ற சந்தேகத்துடனான இறையெண்ணம் வீணே. இறைவன் ஒன்றும் லாட்டரி சீட்டல்ல. கேட்பதை கேட்டபடியே வழங்கும் கற்பகத்தருவும் அல்ல.


இறை நம்பிக்கையில் தளர்வுற்றோர்களுக்கு இயல்பாகவே ஒரு கேள்வி எழும், 'நான் பிறருக்கு நல்லதையே செய்தாலும் எனக்கு நன்மை விளையாதது ஏன்?'


இதே கொஞ்சம் பொது சிந்தனை கொண்டோர், 'உலக மக்களெல்லாம் துன்பப்படும் போது எங்கே சென்றார் உங்கள் இறைவன்?' என்று ஆத்திரமுடன் கேட்பர்.


அவர்களுக்கு என் பதில், 'இறைவன் உலக மக்களின் துன்பத்தை நீக்க உங்களை படைத்திருக்கிறான்' என்பது தான்


இதுபோன்ற கேள்விகளால் நம்பிக்கை இல்லாதது தெரிகிறதேயன்றி இறைவன் இல்லாமல் இல்லை என்பது என் துணிபு.


பாம்பு கடித்தவுடன் எவன் 'செத்து போய்விடுவோமோ?' என்று நினைக்கிறானோ அவன் தான் வேகமாக சாவன். வலுவான இறை நம்பிக்கை இச்சந்தேக நச்சை நம் உடலை விட்டு நீக்குகிறது.


பாஞ்சாலி துகிலுறியப்பட்டது பாரதமறிந்தோர் அனைவரும் அறிந்ததே.


ஆனால் அச்சம்பவம் நமக்கு உணர்த்தும் நம்பிக்கை உட்கருத்தை வெகு சிலரே அறிந்திருக்க வாய்ப்புண்டு.


தருமன் தன் அனைத்து தம்பிகளையும் பாய்ச்சிகை ஆட்டத்தில் ஈடாக்கி இழந்துவிட்டான். பின் தன் உரிமையுள்ள மனையாளான பாஞ்சாலியை ஈடாக்கி இழந்தான்.


பாண்டவர்களை சபை நடுவே அவமானப்படுத்த துடியாய் துடித்து கொண்டிருந்த துரியோதனன் தன் தம்பி துச்சாதனனை அழைத்து திரௌபதியை மானபங்கம் படுத்த சொன்னான்.


அண்ணன் சொல்வதை அணுவளவும் யோசிக்காது செய்யும் துச்சாதனனும் பாஞ்சாலியின் சேலையை உருவத் தொடங்கினான்.


பாஞ்சாலி தன் கணவன்மார்களிடம் காக்கும்படி கெஞ்சிப்பார்த்தாள் இருந்தாலும் சகுனியின் தீபுத்திசாலித்தனமும் பயன்படாத பழைய தர்மமும் பாண்டவர்களை செயல்படாதபடி செய்துவிட்டது.


இனி துருபத கன்னிகைக்கு உற்ற துணை ஒன்றே. அது தான் இறைவன்.


பாஞ்சாலி ஸ்ரீ கிருஷ்ணரை மனத்தில் நிறுத்த தொடங்கினாள். 


'ஸ்ரீ கிருஷ்ணா, ஸ்ரீ கிருஷ்ணா… அபயம் அபயம்' என்று நொடிக்கு நொடி முனகினாள்.


ஸ்ரீ கிருஷ்ணன் கவனித்தபாடில்லை. அவளது துகில் அவிழ்க்கப்பட்டு கொண்டே இருந்தது. 


முடமாகி இருந்தாலும் பாண்டவர்கள் தன் மனையாள் சேலையை மாற்றான் அவிழ்ப்பதை கண்டு துடித்து கொண்டிருந்தார்கள். அவை இவ்வவ செயலை காண முடியாது கூனி குறுகிக் தலை கவிழ்த்தது.


பீஷ்மர் பிணமானார். விதுரர் மறைவிடம் சென்று அழுது கொண்டிருந்தார். துரோணர் தாளமுடியாத சோகத்தில் அவிழ்ந்தினார்.


இங்குள்ள எவராலும் தம் மானத்தை காக்க முடியாது என்பதை நன்கு அறிந்தும் பாஞ்சாலி, ஸ்ரீ கிருஷ்ணனையே மலைபோலே நம்பினாள்.


இன்னும் ஒருசுற்று துணியே அவளது உடலை கவ்வி இருந்தது. அதுவரை பாஞ்சாலி தன் மானத்தை தன்னாலே காக்க முடியும் என்ற சிறு நம்பிக்கையோடு இடது கையினால் இடைத்துணியை நன்கு பிடித்து இருந்தாள்.


ஆனால் உடலில் ஒருசுற்று துணியே மீதம் இருப்பது தெரிந்த உடன் அவளது கோடிதர நம்பிக்கையும் ஸ்ரீ கிருஷ்ணன் மேல் சென்றது. அவள் தனது இடது கையினால் பிடித்து வைத்திருந்த இடை துணியையும் தியாகம் செய்ய துணிந்தாள். மானத்தை பற்றிய சிந்தை விட்டு இடுப்பு துணியில் இருந்த பிடியையும் நீக்கினாள். தன் இரண்டு கைகளையும் தலைமேல் தூக்கி குவித்து 'ஸ்ரீ கிருஷ்ணா' என்றாள்


அவ்வளவு தான் கதை.  கண்ணபிரானின் பெருங்கருணையால் திரௌபதியின் ஆடைகள் அவிழ்க்க அவிழ்க்க மேலும் மேலும் வளர்ந்தன. துச்சாதனன் கை சோர்ந்து விழுந்தான். 


பற்றற்றான் மேல் வைக்கும் பற்று (நம்பிக்கை) உற்ற நேரத்தில் உதவுவதாகும்.


திரௌபதியின் தெய்வ நம்பிக்கை அவள் தனது இடுப்பு துணியில் கை வைத்திருக்கும் போது முழுமையாக இல்லை. எப்போது அவள் தன்னை மறந்து இனி தெய்வம் ஒன்றே துணை என்ற நிலை எய்தி இடுப்பு துணியில் இருந்து கைகளை நீக்கினாளோ அந்த கணமே இறைவன் அவளை இரட்சித்தார்.


இதனை பிள்ளை பெருமாள் ஐயங்கார், மெய்த்தவளச் சங்கெடுத்தான் மேகலை விட்டங்கைதலை வைத்தவளச்சங் கெடுத்தான் வாழ்வு என்கிறார்.


இறைவன்பால் நம்பிக்கை எத்தனை முழுமையாக இருக்க வேண்டும் என்பதற்கு இக்கதை ஒரு சான்று.


அதனால் நம்பிக்கை இழக்க வேண்டாம். இறைவனிடம் எனக்காக ஒன்று நான் வேண்டி கொள்ள வேண்டுமானால் ஔவைப்பாட்டி போல் நான் இதைத்தான் வேண்டுவேன்,


இறைவா!

இனி பிறவாமல்

வேண்டும்!

பிறந்தால்

உன்னை மறவாமல்

வேண்டும்!


ஈசதாசன்

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு