Trending

மனிதனின் வயிற்றுக்குள் பிளாஸ்டிக்! பகீர் ஆய்வு முடிவு

 


தமிழ்நாட்டில் கொஞ்ச மாதங்களுக்கு முன் பேப்பர் கப்புகளை தடை செய்ததாக சொன்னார்கள் ஆனால் பேப்பர் கப்புகள் இன்றளவும் மக்கள் புழக்கத்தில் தான் இருக்கிறது.


சாலையோர டீ கடைகளில் மட்டுமல்லாமல் கல்லூரி வளாகத்திற்கு உட்பட்ட கேண்டீன்களில் கூட பேப்பர் கப்புகள் கேட்பார் இல்லாமல் பயன்படுத்தப்படுகிறது. இதோடு டீ காப்பி பார்சல் என்ற பேரில் சூடான அவற்றை பாலித்தீன் பைகளில் கட்டி கொடுக்கிறார்கள்.


இதன் விளைவு தான் சமீபத்திய ஆய்வின் அதிர்ச்சி தரும் ரிசல்ட்.


ஆம். சூடான டீ காப்பி குளிர்ச்சியான பழச்சாறு அல்லது வேறு பானங்கள், ஏன்?  தண்ணீரை கூட பிளாஸ்டிக் பாட்டில்கள் அல்லது பிளாஸ்டிக் பைகளில் வைத்து பருகும் போது அதன் வழியே பாலி எத்திலின் டெரிப்த லேட் உடலுக்குள் செல்கிறது என்கின்றன சர்வதேச ஆய்வுகள்.


நெதர்லாந்து நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் 22 நபர்களிடமிருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளில் 17 நபர்களின் ரத்தத்தில் பிளாஸ்டிக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் அவர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் சேமிக்கப்பட்ட பானங்களை பருகியதே ஆகும்.


பேப்பர் கப்பில் டீ காப்பி குடிக்கும் போது அதன் பேப்பர் சுவையையும் சிலர் அறிந்திருக்க கூடும். அது வெறும் பேப்பர் மட்டுமல்ல. பேப்பர் கப்பில் தண்ணீரை ஊற்றி குடிப்பதால் கூட பாலிஸ்டிரின் என்ற வேதிப்பொருள் உடலில் கலக்கிறது. ஒருவகையில் இதுவும் பிளாஸ்டிக் தான்.


பேப்பர் கப்புகளில், ஊற்றப்படும் சூடான திரவத்தை தாங்கும் அளவிற்கு உள்ளே வழவழப்பான பிளாஸ்டிக் கோட்டிங் பயன்படுத்தப்பட்டிருக்கும். அதில் இருப்பதே பாலிஸ்டிரின் எனும் நச்சு பொருளாகும். 


இதில் சூடான டீ அல்லது காப்பி போன்றவற்றை பேப்பர் கப்பில் ஊற்றி குடிக்கும் போது பாலிஸ்டிரின் அதோடு கலக்கிறது. திருமண மண்டபங்களில் உணவு பரிமாறும் போதே பேப்பர் கப்பில் டீயை ஊற்றி வைத்து சென்றுவிடுவார்கள் நாம் பொறுமையாக சாப்பிட்டு முடித்த பிறகு அதை எடுத்து குடிக்கும் போது டீ-யில் முழுமையாக பாலிஸ்டிரின் வேதிபொருளானது கலக்கப்பட்டிருக்கும். இது பின்நாளில் உடலுக்கு பெரும் தீங்கை தரக்கூடியது.


அதனால் எப்போதுமே பேப்பர் கப்புகளை சூடாக, குளிர்ச்சியாக என்று எதை குடிக்கவும் பயன்படுத்தாதீர்கள். பாயாசத்தை பேப்பர் கப்பில் வைத்தால் கூட அதை உடனே எடுத்து உங்களது இலையில் போட்டுவிடுங்கள் அல்லது பரிமாறும் போதே பேப்பர் கப்புகளை மறுத்துவிடுங்கள்


இதோடு மட்டுமல்லாமல் நாம் காய்கறிகளை சேமித்து வைக்கும் கவர்கள், மேக்கப் சாதனங்கள், டூத் பேஸ்ட், மருந்துகள் மூலமாகவும் பிளாஸ்டிக் நம் உடலில் கலப்பதை நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள விரிஜே ஆய்வியல் பல்கலைகழக ஆய்வாளர் டிக் வேதாக் தெரிவித்துள்ளார்.


இந்த மைக்ரோபிளாஸ்டிக்குகள் உடலில் கலப்பதால் உடலுக்குள் ஆக்ஸிஜன் எடுத்து செல்வதில் சிரமத்தை ஏற்படுத்தும். புற்றுநோய், ஹார்மோன் பாதிப்புகள், மலட்டுத்தன்மை கூட வரலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.


நெதர்லாந்தில் நடந்த ஆய்வில் ஆண்கள், பெண்கள், வயதானவர்கள் என பல தரப்பட்ட மக்களை சோதித்து பார்த்ததில் சராசரியாக ஒவ்வொருவரின் உடலிலும் 700 நானோ மீட்டர் அளவுள்ள பிளாஸ்டிக்குகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது இந்த அளவு நமது முடியை விட 140 மடங்கு சிறியதாகும்.


இரத்தத்தில் மெல்லிய இழைபோல கண்டுபிடிக்கப்பட்ட பெரும்பாலான பிளாஸ்டிக்குகள், பாலிப்ரோப்பிலீன், பாலிஸ்டிரீன், பாலிமெத்தில் மெதாக்ரைலேட், பாலி எத்திலின் போன்றவையாகும்.


1950ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை 900 கோடி டன் பிளாஸ்டிக் உலகில் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் அதில் வெறும் 9% பிளாஸ்டிக் மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளது. மீதி மனிதன் கடலினுள்ளும், மீன்கள் வயிற்றிலும், பறவைகளின் உடலிலும், தீவுகளின் ஓரத்திலும், குப்பை கூளங்களிலுமே இருப்பதாக எண்ணுகிறான். ஆனால் அவற்றில் ஒரு பங்கு நமது உடலின் உள்ளே கலந்து இருப்பதை இப்போது தான் உணர்கிறோம்.


பிளாஸ்டிக்கை தவிர்க்க முடியாத ஒரு உலகில் பிறந்துவிட்டோம். இதன் தீமையை நன்குணர்ந்து முடிந்த வகையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்போம்.


தீசன்

4 Comments

  1. நல்ல விழிப்புணர்வு பதிவு.. நன்றி

    ReplyDelete
  2. மேலிடத்தில் உள்ளவர்கள் நல்லதை நினைத்தாலும் கீழ் மட்டத்தில் உள்ள உணவு பாதுகாப்பு அதிகாரிகள், காசை வாங்கிக் கொண்டு கண்டும் காணாமல் போகிறார்கள். இதில் நாடு உருப்புடுவது எப்போது? ஒழிக்க வேண்டும் என்று நினைத்தால் ஓழிக்கலாம்? எப்போது நினைப்பது என்பதுதான் பிரச்சினை. தடை செய்யப்பட்ட பொருள் என்றால் அது அறவே கிடைக்கக் கூடாது. கிடைக்கிறது என்றால் அதை ஒழிக்க முடியாது.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான். பிளாஸ்டிக்கை முழுவதுமாக ஒழித்து விட முடியும் என்று தோன்றவில்லை (இன்றைய சூழலில்). ஆனால் முயற்சி செய்யலாம். எப்போது துணியினால் செய்யப்பட்ட பையோ அல்லது மஞ்சள் பையையோ கவுரவம் பார்க்காமல் பயன்படுத்த ஆரம்பிக்கிறோமோ அப்போது தான் பிளாஸ்டிக்கை முழுவதுமாக ஒழிக்க கூடிய பயணம் ஆரம்பம் ஆகும்.

      Delete
  3. ஓட்டுநர் உரிமம், காப்பீடு முதலியன சரிபார்த்து கட்டணம் வசூலிப்பதுபோல.. ஒவ்வொருவர் வாகனத்திலும் பொருட்களை வாங்கிபோகும்வண்ணம் பை இருக்கிறதா என்பதையும் சோதிக்க வேண்டும்.
    அப்போதுதான் மறக்காமல் வெளியில் போகும்போது பை எடுத்து செல்வார்கள்.

    மலிவு விலையில் துணிப்பை கிடைக்க செய்யவேண்டும்.
    தேவைவந்தவுடன் பழக்கமே இல்லாத மாஸ்க் விற்றுத்தீரவில்லையா?? அதுபோல இதுவும் விற்கும். அல்லது பொருளோடு பைக்கும் கட்டாய கட்டணம் போட்டு விடலாம். பால் தண்ணீர் இறைச்சி முதலியவற்றுக்கும் நெகிழியை நீக்கி மாற்றுவழி கண்டறியப்படவேண்டிய காலம் நெருங்கி விட்டது.

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு