Trending

பாரதி ஒரு தெய்வமாக்கவி!

 தெய்வமாக்கவி



பகைவனுக்கருள்வாய் !! நன்னெஞ்சே!

பகைவனுக்கருள்வாய்..!!


புகைநடுவினில் தீ இருப்பதை பூமியிற்கண்டோமே..! நன்னெஞ்சே!

பூமியிற் கண்டோமே!


பகைநடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கிறான்!! 

நன்னெஞ்சே !

பரமன் வாழ்கிறான்...!"


இன்னா செய்தார்க்கும் இனியவே செய்ய சொன்னான் வள்ளுவன்!


எதிரிகளால் துன்புறும்போதும்

"இன்னதென அறியாமல் செய்கிறார்..! பிதாவே..! இவர்களை மன்னியும்..! " என்றார் ஏசு!


"அவமதித்த எதிரிகளையும் கண்ணியத்தோடு நடத்தியவர் நபிகள் நாயகம்!"


ஆனால் பகை நடுவினில் தான் வணங்கும் அன்புருவான பரமனை பார்த்த ஒரே ஆள் நம் மகாகவி பாரதியாக தான் இருக்கும்! 


இல்லாவிட்டால் பகைவனுக்கருள்வாய் ! நன்னெஞ்சே! - என எந்த கிறுக்கனாவது வேண்டுவானா??


பாரதி பாடாத தெய்வங்களா...?


"சொல்லாலும் மனத்தாலும் தொடரொணாத பெருஞ்சோதி..!" என அல்லாவை பாடியிருக்கிறான்..


"ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்! எழுந்து உயிர்த்தனன் நாளொரு மூன்றில்..!" என ஏசுவை பாடியிருக்கிறான்..


"நமக்குத்தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல் இமைப்பொழுதுஞ் சோராதிருத்தல் - உமைக்கினிய மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்! சிந்தையே இம்மூன்றுஞ்செய்."


என்று விநாயகர் நான்மணிமாலை கோத்திருக்கிறான்..!


"வில்லினை யொத்த புருவம் வளைத்தனை வேலவா! -அங்கோர் வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி யானது வேலவா! வடிவேலவா!"

என்று  கந்தனை காவடிச்சிந்தில் கரைத்திருக்கிறான்..


"காட்டு வழிதனிலே -அண்ணே!

கள்ளர் பயமிருந்தால்? - எங்கள்

வீட்டுக் குலதெய்வம் - தம்பி

வீரம்மை காக்குமடா!


நிறுத்து வண்டியென்றே - கள்ளர்

நெருங்கிக் கேட்கையிலே - எங்கள்

கறுத்த மாரியின் பேர் சொன்னால் காலனும் அஞ்சுமடா!!"


என்று நாட்டார் தெய்வத்தையும் விட்டுவைக்காமல் நயம்புனைந்த சொல்லேர் உழவன்தான் பாரதி..!


என்றாலும் இவைபற்றி ரசம்பாடுவது என் நோக்கமல்ல..


"ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்! பராசக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்! "

என்று அவன் மலைமகளை பாடியதையோ


"வெள்ளைத் தாமரைபூவில் இருப்பாள்..!

வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்..! "

என்று கலைமகளை பாடியதையோ


"சின்னஞ்சிறு கிளியே ! கண்ணம்மா செல்வ களஞ்சியமே!"


என்று கண்ணனை கொஞ்சி தாலாட்டியதையோ 


"எத்தனை கோடி இன்பம் வைத்தாய் - எங்கள் இறைவா..!" 

என பொதுவில் பாடியிருக்கிறதையோ பற்றி கூட

 நான் இங்கு வியாக்யாணம்  செய்ய போவதில்லை..!


இவை எல்லாம் இறைவனை பற்றி இறைவனிடமே பாடுகிற முகஸ்துதி!!


நான்

மகாகவி என்ற மகத்தான ஞானி கொண்டிருந்த ஆழ்ந்த தெய்வீக கருத்துகளை பற்றி கொஞ்சம் ஆலோசிக்க வந்திருக்கிறேன்..!


ரிக் யஜுர் சாம அதர்வணம் எனும் நான்கு வேதங்களையும் நீங்கள் கற்க விரும்பினால் முதலில் பாரதியின் வசனகவிதைகளை வாசியுங்கள். அதைதாண்டி வேதத்திலும் கூட ஏதுமில்லை..!


**** **** *****

ஒரு

பேராசிரியர் மாணவர்களை பார்த்து கேட்கிறார்..! "கடவுள் இருக்கிறாரா?"


ஒரு மாணவன் எழுந்து, "ஆம் இருக்கிறார் " என்றான்.


மீண்டும் ஆசிரியர் கேட்டார் அப்படியானால் " சாத்தான் இருக்கிறானா..?"


அந்த மாணவன் சற்றே தயங்கி "இல்லை..‌." என்றான்


"அது எப்படி..? கடவுள் என ஒருவர் இருக்கும்போது சாத்தானும் இருக்கத்தானே வேண்டும்... ?"


நீண்ட யோசனைக்கு பிறகு அந்த மாணவன் சொன்னான் 

"ஐயா! இப்போது உங்களுக்கு குளிர்கிறதா..?"


"என்னது குளிரா? கோடைவெயில் வாட்டுகிறது எப்படி எனக்கு குளிரும்..? குளிர்காலம் வந்தால்தான் வெப்பம் குறையும்.. குளிரும்!"


மாணவன் சொன்னான்..

"ஐயா! வெப்பம் குளிர் இரண்டும் வெவ்வேறு அல்ல.. ஒன்றின் பற்றாகுறை தான் மற்றொன்று!

வெப்பம் குறைந்து போவதைதான் நாம் குளிர் என வேறுபெயரிட்டு அழைக்கிறோம். நீங்கள் வெப்பத்தையே காண்பீர்களாயின் குளிர் உங்களுக்கு புலப்படாது!

அதுபோல கடவுள் பற்றிய சிந்தனை கொண்டவனுக்கு சாத்தான் குறித்த பயம் தேவையற்றது..!" என்று முடித்தான்!


ஆசிரியர் அப்படியே ஆடி போனார்!


இப்படி ஆசானுக்கே பாடம் எடுத்த அந்த மாணவன்தான் பின்னாளில்

ஜெகம்புகழ் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.. ஆனான்!

(மேற்சொன்ன சம்பவம் நிஜத்தில் நடந்ததா என்பது இரண்டாம்பட்சம் தான்.. ஆனால் அது தூண்டுகிற சிந்தனை முதல்தரமானது)


 ஐன்ஸ்டீனின் சமகாலத்தில்தான் பாரதியும் வாழ்ந்திருக்கிறான்..!


இருவருமே ஒன்றைதான் சொன்னார்கள். 

ஐன்ஸ்டீனின் அதிர்ஷ்டம் அவர் ஜெர்மனியில் பிறந்துவிட்டார்!


பாரதிபாவம்.. நம் பாரதத்தில் வந்து உதித்துவிட்டார்!


பாரதி என்ன சொன்னான்.. ?


"ஒளியற்ற பொருள் ஜகத்திலே இல்லை!!

இருள் என்பது குறைந்த ஒளி!"


என்றான்.


ஆம் சான்றோர்களே ! பிரபஞ்சத்தில் எந்த இடத்தையும் குறிப்பிட்டு , இது இருள் என்றோ.. ஒளி என்றோ.. கூற முடியாது! எந்த இருளைவிடவும் அதிகம் இருண்ட இன்னொரு இடம் உண்டு! சூரியனைவிடவும் பிரகாசமான வேறு சூரியன்கள் உண்டு. எப்படி வெயிலுக்கு முன்னே விளக்கொளி எடுபடாதோ.. அதுபோல பிரளயகால பேரொளியின் முன் நம் கதிரவனின் கீற்றொளியும் எடுபடாது.. சற்று மங்கி அடங்கிதான் தெரியும்..! ஆக ஒளியின் பற்றாகுறைதான் இருள்!

பாரதி சொன்ன இதைத்தான் வேறுவிதமாக ஐன்ஸ்டீன் சொன்னார்!


அண்டசராசரமும் ஒன்றை மற்றொன்று சார்ந்துள்ளன. இதுதான் சார்பியல் தத்துவத்தின் சாரம்சம்!


மனித பேரறிவு இப்போதைக்கு அறிந்துவைத்திருக்கும் அதிகபட்ச விஷயமே இதுதான். இதை ஐன்ஸ்டீனும் பாரதியும் சொல்லி ஒரு நூற்றாண்டு கடந்துவிட்டது. மேற்கொண்டு விஞ்ஞானிகள் எதுவும் புதிதாக கண்டறிந்த பாடில்லை!


விஞ்ஞான பூர்வமாக மட்டுமல்ல மெய்ஞான மேதையாகவும் பாரதி உலவியிருக்கிறான்...என்பதை அவனை படித்தோர் யாவரும் உணரக்கூடியதே..


அத்வைத சித்தாந்தத்தை அவரை விட சுருக்கமாக அந்த ஆதிசங்கரராலும் நமக்கு கூற முடியாது!


'அது'வென்றால் முன்னிற்கும் பொருளின் நாமம்..!

அவனியிலே பொருளெல்லாம் அதுவாம்...! நீயும், 

அதுவன்றி பிறிதில்லை ஆதலாலே..!"


_____________


இன்று ஆற்றலுக்காக ஆயிரம் கோடிகள் செலவு செய்கிறோம்..

சக்தியை பற்றி பாரதி சொல்கிறான்.. கேளுங்கள்..


சக்தியை கட்டுப்படுத்த முடியுமா ?


மண்ணிலே வேலிபோடலாம்.! வானத்திலே வேலி போடலாமா?


போடலாம்!


மண்ணிலும் வானம்தானே நிரம்பி இருக்கிறது!

மண்ணை கட்டினால் அதிலுள்ள வானத்தை கட்டியதாகாதா?


உடலைக்கட்டு.. உயிரை கட்டலாம்!

உயிரைக்கட்டு உள்ளத்தை கட்டலாம்.!

உள்ளத்தைக்கட்டு... சக்தியை கட்டலாம்!


"அண்டம் யாவுமே பிண்டத்துள் அடக்கம்" என்பார்களே..! அதையேதான்‌ பாரதியும் சொன்னான்


சற்றே யோசியுங்கள்..


ஜப்பான் மாதிரி ஒரு நாட்டையே அழிக்க.. கண்ணுக்கு தெரியாத ஒரு அணுவின் ஆற்றலே போதுமானதாக இருந்ததல்லவா..?


இன்று அகில உலகையும் ஆட்டிப்படைப்பது இருக்குதா இல்லையா என்றே தெரியாத ஒரு தீநுண்மிதானே ..!



நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே ... பாடலை நீங்கள் கேட்டிருப்பீர்கள்..!!


அதில்..


"வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம் கானலின் நீரோ? வெறும் காட்சிப்பிழைதானோ..?


போனதெல்லாம் கனவினைபோல் புதைந்தழிந்தே போனதனால்..,, நானும் ஓர் கனவோ?

இந்த ஞாலமும் பொய்தானோ?"


என்று மாயா தத்துவத்தை போகிற போக்கில் பாடிவிட்டு போவார்!!


அதே பாடலில் தான்


"காண்பதெல்லாம் மறையுமென்றால்..

மறைவதெலாம் காண்பவன்றோ?" என்கிற விடைகாண முடியா தத்துவகோட்பாடுகளும் புதைந்துகிடக்கும்..!


நாம் இன்று காற்றில்பரவும் பிணிகளுக்கு பயந்து அடைந்து கிடக்கிறோம்... காற்று குறித்த மகாகவியின் வசனகவியை படியுங்கள் கட்டாயம் உங்கள் சிந்தனைக்கு தீனியும் உள்ளத்தில் ஒரு ஒளியும் உண்டாகும்...!


"மழைக்காலம்.


மாலைநேரம்.


குளிர்ந்த காற்று வருகிறது.


நோயாளி உடம்பை மூடிக்கொள்கிறான். பயனில்லை!


காற்றுக்கு அஞ்சி உலகத்திலே இன்பத்துடன் வாழ முடியாது.


பிராணன் காற்றாயின் அதற்கு அஞ்சி வாழ்வதுண்டோ?


காற்று நம்மீது வீசுக...

அது நம்மை நோயின்றி காத்திடுக.


மலைக்காற்று நல்லது.


கடல்காற்று மருந்து.!


வான் காற்று நன்று.!!


ஊர்க்காற்றை மனிதர் பகைவனாக்கிவிடுகின்றனர்.

அவர்கள் காற்றுதெய்வத்தை நேரே வழிபடுவதில்லை! அதனால் காற்றுத்தேவன் சினமெய்தி அவர்களை அழிக்கிறான்!


காற்றுத்தேவனை வணங்குவோம்!


அவன் வரும்வழியில் சேறுதங்கலாகாது. நாற்றம் இருக்கலாகாது. அழுகின பண்டங்களை போடலாகாது.. புழுதிபடிந்திருக்கலாகாது. எவ்வித அசுத்தமும் கூடாது.


காற்று வருகின்றான். அவன்வரும்வழியை நன்றாகத் துடைத்து நல்ல நீர் தெளித்து வைத்திடுவோம்!


அவன்வரும் வழிகளிலே சோலைகளும் பூந்தோட்டங்களும் செய்து வைப்போம்.


அவன்வரும் வழியிலே கர்ப்பூரம் முதலிய நறும்பொருள் கொளுத்தி வைப்போம்!


அவன் நல்ல மருந்தாகி வருக.

அவன் நமக்கு உயிராகி வருக.

அமுதாகி வருக...!


காற்றே வா!

மெதுவாக வா.


ஜன்னல் கதவுகளை அடித்து உடைத்துவிடாதே.‌


காகிதங்களையெல்லாம் எடுத்து விசிறி எறியாதே!


அலமாரிப்புத்தகங்களைக் கீழே தள்ளிவிடாதே!


பார்த்தாயா? இதோ தள்ளிவிட்டாய்!


ஏடுகளை கிழித்துவிட்டாய்!


வலியிழந்தவற்றை தொல்லைப்படுத்தி வேடிக்கை பார்ப்பதில் நீ மஹா சமர்த்தன்!


நொய்ந்த வீடு, நொய்ந்த கதவு, நொய்ந்த கூரை, நொய்ந்த மரம், நொய்ந்த உடல், நொய்ந்த உயிர், நொய்ந்த உள்ளம் -- இவற்றைக் காற்றுத்தேவன் புடைத்து நொறுக்கிவிடுவான்!


சொன்னாலும் கேட்க மாட்டான்!


ஆதலால் மானிடரே வாருங்கள்..


வீடுகளை திண்மையுற கட்டுவோம்!

கதவுகளை வலிமையுறச்சேர்ப்போம்!


உடலை உறுதிகொள்ள பழகுவோம்!

உயிரை வலிமையுற நிறுத்துவோம்!

உள்ளத்தை உறுதி செய்வோம்!!


இங்ஙனம் செய்தால், காற்று நமக்கு தோழனாகி விடுவான்.


காற்று மெலிய தீயை அவித்துவிடுவான்..!


வலிய தீயை வளர்ப்பான்..!


அவன் தோழமை நன்று.

அவனை நித்தமும் வாழ்த்துகின்றோம்!"


சூழலை பாழடித்துவிட்டு எத்தனை நாட்கள் தான் நாம் முககவசத்தோடு (facemask) திரிந்து கொண்டிருக்க முடியும்?


காற்று கெட்டததல்ல.. அது வரும் வழிநன்றாக இருந்தால் அது நன்மை தரும். ஆனால் இந்தியாவில் எந்த வழி நன்றாக இருக்கிறது கூறுங்கள்..?


சரி வெளிநாடுகள் தூய்மையாகதானே இருந்தன.. அவையும் ஏன் பெருந்தொற்றில் சிக்க வேண்டும்?


ஏனென்றால் அவர்களிடம் சுற்றமும் புறமும் சுத்தமாக இருந்தபோதிலும் உள்ளம் சுத்தமாக இல்லை. வலிமையாகவும் இல்லை போலும்!


நுட்பமாக பாரதி சொன்ன வரிகளை கவனியுங்கள்...


காற்று மெல்லிய தீயை அணைக்கும்.

வலிய தீயை வளர்க்கும்!!


விளக்கை ஊதினால் அணைகிறது.


ஆனால் அடுப்பை ஊதினால் எரிகிறது..!


அதுதான் காற்றின் மகத்துவம். நாம் அடுப்பாய் இருக்க வேண்டும்.


நாம் தூய்மையாகவும் வலிமையாகவும் இருந்து விட்டால் பிரபஞ்சம் தாமாக வந்து நமக்கு உதவதொடங்கிவிடும்! அதன் பெயர்தான் தெய்வீகம்.


இறைவனை எவரேனும் பார்த்ததுண்டா..?


பாரதி ஒருவன்தான் தொட்டுப்பார்த்தே சொல்லியிருக்கிறான்...


"தீக்குள் விரலை விட்டால் நந்தலாலா..! - நின்னைத்

தீண்டும் இன்பம் தோன்றுதடா! நந்தலாலா..!"


தொட விரும்புபவர்கள் உடனே போய் தொட்டுப்பார்த்துக்கொள்ளுங்கள்..!


ஏழ்மையில் வாடும்போது கூட..

"தாயே பராசக்தி! கேவலம் சாதாரண உப்பு புளி மிளகாய் பிரச்சனைக்கெல்லாம் சாமான்ய மனிதனைபோல என்னை கவலைபட வைத்தாயானால் சத்தியமாக சொல்கிறேன் உன்னை இனி வணங்கமாட்டேன்!" என்று தான் தொழும் தெய்வத்தையே உரிமையோடு மிரட்டுகிற தைரியம் பாரதியை அன்றி வேறு யாருக்கு வரும்?


இறுதியாக நம் தெய்வமாக்கவி வரிகளிலேயே.. முடிக்கிறேன்!


உயிர்களிடத்தில் அன்பு வேணும்!

தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும்..!

வைரமுடைய நெஞ்சு வேணும்-இது

வாழும் முறைமையடி பாப்பா!


சூரியராஜ்


6 Comments

  1. இப்படியோர் கவிஞரை அவரது சமகாலத்தோர் கவனிக்காமலும் மதிக்காமலும் இருந்தார்கள் என்பதை படித்தறியும் போது பெருவியப்பை தருகிறது.

    பாரதி புகழ் வாழ வேண்டும்!
    இனி வரும் சமுதாயத்திற்கும் பாரதி எளிது பட்டவராக இருத்தல் வேண்டும்...

    வாழும் முறைமையை சொன்னவர்... வாழ்வாரவர்

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக... நம் முன்னோர் செய்யாமல்விட்டதற்கும் சேர்த்து மகாகவியை நாம் கொண்டாடிதீர்ப்போம்!

      Delete
  2. ஆகா! பாரதியின் கவி சுனாமி என்னை அடித்துக்கொண்டு சென்று விட்டது நீங்கள் இயற்றிய இந்த கவி பொங்கும் கட்டுரையின் மூலம். அருமை அருமை 👏👏

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தான் குகனாரே! கவிசுனாமியேதான்.. எத்தனை முறை அந்த சிறிய கவிதை புத்தகத்தை எடுத்துவாசித்தாலும் ஒவ்வொருமுறையும் புதிதாக ஒரு வரியோ புதியதோர் உணர்வோ ஒரு சிந்தனை தூண்டலோ எழாமல் இருந்ததில்லை.. பாரதி ஒரு மாயக்காரன்.

      Delete
  3. பாரதி மகாகவி, மெய் ஞானி சந்தேகமே இல்லை. அவரை உள்வாங்க நமக்கும் சிறிதேனும் அந்த ஞானம் வேண்டும். இக்கட்டுரையின் ஆசிரியர் பாரதியை அவர் கருத்துகளை சற்றும் அதன் ஆழம் குறையாமல் அழகு தமிழில் அரிய வார்த்தைகளில் தொகுத்திருக்கிறார். ஒவ்வொரு வார்த்தையும் முத்தாக ஒளிர்கின்றது. உப்பு புளி பற்றிய பாரதியின் கவிதையை முழுமையாக வெளியிட வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றி!

      உப்பு புளி.. பற்றி கவிதையில் அவர் பெரிதாக ஏதும் சொல்லவில்லை. (அல்லது எனக்கு தெரியவில்லை)

      அவரோடு பழகிய சிலர் வாய்வழிக்கதையாக நினைவுகூறும் சம்பவங்களில் அதுவும் ஒன்று.
      வீட்டு வாடகை, மளிகை கடைகாரர், பால்காரர் காலையிலேயே கடன்பாக்கி கேட்டு வந்து பாரதிவீட்டு வாசலில் நிற்பார்களாம்..
      அப்போது அவர் பூஜைஅறைக்கு போய் பராசக்தி யிடம் இவ்வாறு துதிபாடி வேண்டிக்கொள்வாராம்.

      இச்சம்பவம் 'கப்பலோட்டிய தமிழன்' திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும்.

      Delete
முந்தைய பதிவு அடுத்த பதிவு