Trending

சிரஞ்சீவி கொண்டுவந்த சஞ்சீவி..! | கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும்

 கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும்

சிரஞ்சீவி கொண்டுவந்த சஞ்சீவி..!
மாருதம் என்றால் காற்று!


சண்டமாருதம் என்பது ஆக்ரோஷமான புயல்காற்றை குறிக்கும்..


காற்றை போல வலிமையானவன் 

வேகமானவன் என்பதால் அனுமன் "மாருதி" எனப்பட்டான்.வாயுவுக்கு பிறந்தவன் என்ற பொருளில் "வாயு புத்திரன்" எனப்பட்டான்.
ஆஞ்சை என்பதும் வாஞ்சை என்பதும் ஒன்றே.. ஒருவகை பரிவு பாச உணர்வை குறிக்கும். அதாவது உள்ளூர அன்பு காட்டுவது..!

Angio என்கிற லத்தீன் சொல்லுக்கும் இதுவே மூலம். இதயத்தை திறக்காமலேயே அடைப்பை எடுக்கிற

உட்புற அறுவை சிகிச்சைக்கு "ஆஞ்சியோ பிளாஸ்டி" என்று பெயர்! (ஆஞ்சியோ கிராம்.. என்றால்தான் நம்மவர்களுக்கு தெரியும்)


மூடிய விதை உடைய தாவரங்களை "ஆஞ்சியோ ஸ்பெர்ம்"

என்று அறிவியல் பாடத்தில் படித்திருக்கலாம்!மனிதநேயம்,

உயிர்நேயம்.. என்பது போல..


ஆஞ்ச நேயம் கொண்டவன் ஆஞ்சநேயன் ஆனான்!
சஞ்சீவி என்பதும் சிரஞ்சீவி என்பதும் ஒரே வார்த்தை தான்!!


காமம் என்ற பழந்தமிழ் சொல் ஆரம்பத்தில் குடிப்பெருக்கத்தை குறித்தது! பிறகு குடியிருப்பையும் குறித்தது.

அதுவே பின் வடமொழி தழுவி 'கிராமம்' ஆயிற்று!!


(இலங்கை யில் 'கதிர்காமம்' என்றே இன்றும் ஊர் இருக்கிறது!)


சமணம் வடக்கில் போய் ஸ்ரமணம் என்றானது.


அவ்வழிதான் சஞ்சீவி ~சிரஞ்சீவி ஆன கதையும்..!


என்றும் நிலைத்திருக்ககூடியவை சிரஞ்சீவிகள்..


அனுமன் சிரஞ்சீவியும் ஆவான்!பகவான் விஷ்ணுவுக்கு எப்படி கருடன் உறுதுணையோ அதுபோலவே ராமபிரானுக்கு அநுமன் இருந்தபடியால் இருவருக்குமே "திருவடி" என்ற பெயரும் உண்டானது.

காலத்தால் முன்னவர் என்பதால் கருடனை "பெரிய திருவடி" எனவும்

இளையவரான

அநுமனை "சிறிய திருவடி" எனவும் கூறுவார்கள்."சொல்லின் செல்வன்" என ராமன் சொன்னதாக கதையில் வந்தாலும் உண்மையில் அப்பெயரை சூட்டியவன் நம் கம்பன் அல்லவா..?


அது மட்டுமா..?


இன்னும் எத்தனை எத்தனை.. மெய்க்கீர்த்திகள் அனுமனுக்காக காவிய நெடுகிலும் அமைந்துள்ளன.. !!சரி இது ஒருபுறம் இருக்கட்டும்.

நாம் நேராக யுத்த காண்டத்தில் பிரவேசித்து.. மகத்தான காட்சிகளை கண்டுரசிப்போம் வாருங்கள்!!


*******. ******


யுத்த காண்டம்


(மருந்துமலைப் படலம்)ஒரு இக்கட்டான மாயமந்திர தருணத்தில் ராவணன் கை ஓங்கியது ! சூழ்ச்சியினால் மாயப்போர் நிகழ்த்தி இந்திரஜித் மூலமாக 'பிரம்மாஸ்திரம்' ஏவி விட்டான்.. அது இலக்குவனை தாக்கிடவே சேனையின் பெரும்பகுதியோடு அவனும் வீழ்ந்து மூர்ச்சை ஆனான்!!


ராமசேனை முழுவதும் தடுமாறி உடைந்து நின்றது!

ராமனேகூட தம்பியின் நிலை கண்டு நொந்து உயிர்துறக்க முனைந்தான்! 


விபீஷணர் ஜாம்பவான் ஆகியோர் அவனை தேற்றினர். ஜாம்பவான் சஞ்சீவினி எனும் அரிய மூலிகை மருந்து மலை இருப்பிடம் பற்றி உரைக்கிறார்.. அதன் மகத்துவம் யாதெனில்..,,"மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும், மெய் வேறு வகிர்களாகக்


கீண்டாலும் பொருந்துவிக்கும் ஒரு மருந்தும், படைக்கலங்கள் கிளர்ப்பது ஒன்றும்,


மீண்டேயும் தம் உருவை அருளுவது ஓர் மெய்ம் மருந்தும், உள; நீ, வீர!


ஆண்டு ஏகி, கொணர்தி' என அடையாளத்தொடும் உரைத்தான், அறிவின் மிக்கான்..!"


(பொருளுணர..)


"மாண்டுபோனவர்களையே உயிர்பிக்கிற மருந்து ஒன்றும், உடலை இரண்டாக கீண்டுபோட்டாலும் ஒட்டிவிடும் மருந்துஒன்றும், உடலை தைத்த படைக்கருவிகளை நீக்கி குணமாக்கும் மருந்தும், இழந்த அங்கத்தை மீட்டுத்தருகிற மெய்ம்மருந்தும் கூட இவ்வுலகில் உள்ளன... அதன் அடையாளம் சொல்றேன் போய் சட்டுனுகொண்டுவா" என்றார் அறிவுமிக்க ஜாம்பவான்!இதோ உடனே போறேனே..! அது எங்க இருக்குனு மட்டும் சொல்லுங்க..னு அனுமாரு கேட்டாரு...


அதற்கு ஜாம்பவான்,,,


( இந்த கடலை எல்லாம் பின்னால தள்ளிட்டு நீ கடந்துபோனினா.. 9000யோசனைக்கு பிறகு இமயம் வரும்.. அது 2000யோசனை உயரமுடையது .. அங்கிருந்து இதுவரைக்கும் நீ வந்த தொலைவ போல மறுபடியும் கடந்தீனா..  கடைசியா 'பொற்கூடம்' னு ஒரு மலைவரும்!!)


" பின்பு உளது இக் கடல் என்னப் பெயர்ந்ததற்பின் யோசனைகள் பேச நின்ற


ஒன்பதினாயிரம் கடந்தால், இமயம் எனும் குலவரையை உறுதி; உற்றால்,


தன் பெருமை ஓர் இரண்டாயிரம் உளது யோசனை; அது பின் தவிரப் போனால்,


முன்பு உள யோசனை எல்லாம் முற்றினை, பொற்-கூடம் சென்று உறுதி, மொய்ம்ப! ""என்னாது ? இவ்ளோ தூரமா?" 


அட இருப்பா இன்னும் முடியல...


(அந்த மலையிலேந்து 9000யோசனை தொலைவுல நிடதம்னு ஒரு செம்மலை வருமாம்! அதோட உயரமும் அதே அளவாம்.. (9000யோசனை...! )


அதைகடந்து பலதொலைவுபோனா எல்லா மலைகளுக்கும் அரசனான வடமலை தெரியுமாம்..!  அதோட அளவு எவ்ளோ தெரியுமா? 32000 யோசனை!!..)" இம் மலைக்கும் ஒன்பதினாயிரம் உளதாம், யோசனையின் நிடதம் என்னும் செம்மலை;


 அம் மலைக்கும் அளவு அத்தனையே; அது கடந்தால், சென்று காண்டி,


எம் மலைக்கும் அரசு ஆய வடமலையை; அம் மலையின் அகலம் எண்ணின்,


மொய்ம் மலைந்த திண் தோளாய்! முப்பத்து ஈர் - ஆயிரம் யோசனையின் முற்றும்...!!"(ஜாம்பவான் சொன்னதை கேட்டு, பாதி உயிர் எஞ்சி இருந்த வானரர்களுக்கு மீத உயிரும் போயிருக்கும்.. கேட்ட எல்லோரும் தலைசுற்றி விழிக்க.. அனுமன் மட்டும் ஆவலோடு தொடர்ந்து கேட்டான் போலும்.....)


ஜாம்பவான் மேலும் தொடர்ந்தார்..,


"மேருவினைக் கடந்து, அப்பால் ஒன்பதினாயிரம் உள ஓசனையை விட்டால்,


நேர் அணுகும் நீலகிரிதான் இரண்டாயிரம் உள யோசனையின் நிற்கும்;


மாருதி! மற்று அதற்கு அப்பால் யோசனை நாலாயிரத்தின் மருந்து வைகும்,


கார் வரையைக் காணுதி; மற்று, அது காண, இத் துயர்க்குக் கரையும் காண்டி...!"ஐயோ..போதும்!  போதும்! list- டு ரொம்ப பெரிசா போயிகிட்டே இருக்கே...!
Route கேக்கிற நேரத்தில் போய் எடுத்துட்டே வந்திடலாம் போலிருக்கே -னு ஆஞ்சநேயர் புறப்பட்டுவிட்டார்..


(விஸ்வரூபம் எடுத்து...)ஆகாயத்தையே விழுங்கியவனாக வளர்ந்துநின்ற அனுமனை காணுங்கள்...!


"ஓங்கினன் வான் நெடு முகட்டை உற்றனன்; 

பொன் தோள் இரண்டும் திசையோடு ஒக்க

வீங்கின; 

ஆகாசத்தை விழுங்கினனே என வளர்ந்தான் - வேதம் போல்வான்..!"
நியூட்டனின் மூன்றாவது விதியை ராக்கெட் உந்த தத்துவத்தில் மட்டுமல்ல.. அநுமன் உந்தி புறப்படும்போதும் பயன்படுத்துவதால், அறிவியலை கம்பன் காவியத்திலும் கற்கலாம்...!


"வால் விசைத்து, கைந் நிமிர்த்து, வாயினையும் சிறிது அகல வகுத்து - மானக்


கால் நிலத்தினிடை ஊன்றி, உரம் விரித்து, கழுத்தினையும் சுரிக்கிக் காட்டி,


தோல் மயிர்க் குந்தளம் சிலிர்ப்ப, விசைத்து எழுந்தான், 


அவ் இலங்கை, துளங்கிச் சூழ்ந்த

வேலையில் புக்கு அழுந்தியது..ஓர் மரக்கலம்போல்..! சுரித்து உலைய - விசயத் தோளான்..!"(பொருளுணர..)


வால் ஓங்கி தரையில் அடித்து விசைக்க.. பறப்பதற்கு தோதாக கைகளை உயர்த்தி.. வாயினையும் அகலப்படுத்திக்கொண்டு.. வலிய கால்களை நிலத்தில் அழுந்த ஊன்றி நெஞ்சை விரித்து கழுத்தை சுருக்கி தோல்மயிர்கள் எல்லாம் பூனைகள் சிலிர்ப்பதுபோல சிலிர்த்து.., விசையுடன் உந்தி வானில் பாய்ந்தான்..!! அதற்கு சமமான எதிர்விசை இலங்கை நிலத்தில் உண்டாயினதால் அது சுரிந்து அழுந்துபட்டதாம்.. எப்படிதெரியுமா? ஆழ்கடல் சுழலில் சிக்கிக்கொண்ட மரக்கலம் போல இலங்கை குறுகண்டமே ஆழியில் அழுந்தி சுழன்று எழுந்ததாம்..!!


(விசயத்தோளான் = வெற்றி தோள்)


அடுத்து

அனுமனின் விசையால் விளைந்ததை பாருங்கள்...


"கிழிந்தன, மா மழைக் குலங்கள்..!


கீண்டது, நீள் நெடு வேலை..!


கிழக்கும் மேற்கும்

பொழிந்தன, மீன்..!


தொடர்ந்து எழுந்த, பொருப்புஇனமும், தருக் குலமும், பிறவும், பொங்கி அழிந்தன..!


வானவர் மானம், ஆகாயத் திடையினில் பேர் அசனி என்ன

விழுந்தன..! 


நீர்க் கடல் அழுந்த ஏறின மேல், கீறின போய்த் திசைகள் எல்லாம்!!"


அதாவது,,


ஓசோன் படலத்தில் ஓட்டைவிழாத குறையாக மழைமேகங்களை துளைத்துக்கொண்டு

அநுமன் புறப்பட்ட விசையால் கடலே இரண்டாக கிழிந்ததாம் அதனால் அதிலிருந்த மீன்கள் சிதறி மழையாக பொழிந்ததாம்! உண்டான பேரலையில் மலைமரம் செடிகொடிகள் பொங்கி அழிந்ததாம்.. வானவர் (வி)மானங்கள் ஆகாயத்திலேயே நொறுங்கி கடலில் வந்து விழ அதனால் எழுந்த அலைகள் திசைகளை எல்லாம் மறைத்தனவாம்!!வானில் புயலென புகுந்த அனுமனின் வேக ஒப்பீடு...!!


"

'உரு' என்றார் சிலர் சிலர்கள்.!


'ஒளி' என்றார், சிலர் சிலர்கள்..!


 'ஒளிரும் மேனிஅரு' என்றார், சிலர் சிலர்கள்..!


'அண்டத்தும் புறத்தும் நின்று, உலகம் ஆக்கும் கரு' என்றார், சிலர் சிலர்கள்..!


 'மற்று' என்றார், சிலர் சிலர்கள்..!


 கடலைத் தாவிச்செரு வென்றான் நிலை...


ஒன்றும் தெரியகிலார் - உலகு அனைத்தும் தெரியும் செல்வர்...! "வானில் light speed ல் அநுமன் விரைகிறான்.. (விநாடிக்கு 3லட்சம் கி.மீ. வேகம்)அதைபார்த்த சிலர் ஏதோ உருவம் போனுச்சே..! என்றனர்


சிலர் இல்லை ஏதோ ஒளிக்கீற்றுதான்..! என,


 வேறுசிலரோ அருவமான ஏதோ ஒளிர்மேனி என்றனர்.


இன்னும் சிலரோ 'கடவுளாகவும் பரம்பொருளாகவும் ஞானிகள் சொல்கிறார்களே அதுதான் போயிருக்கும்' என்றார்கள்..


அவர்கள் கண்ணுக்கு அவ்வளவுதான் தெரிந்தது..!


ஆனால் முற்றும் ஓதி உணர்ந்ததாக விளங்கும் மகாரிஷிகளுமே கூட ஐயோ! இதை என்னனு சொல்றதுனே தெரியலையே! என விழித்தனராம்...!!


அப்படி போனாராம் காலத்தை கிழித்தபடி காற்றின் மைந்தன்..!


(கம்பன் சித்திரம்னா சும்மாவா??)
ஒருவழியா போய்சேர்ந்து மலைய கண்டுபுடிச்சி அதுல இறங்கினான் அநுமன். அவன் வைரத்தோள் மோதி அக்குன்றமே அசைந்ததாம்!
தோட்டனன் அனுமன், மற்று அக் குன்றினை, வயிரத் தோளால்...,,


(தோட்டனன் = தோண்டினன்/ ஆட்டி அசைத்தனன்)


ஜாம்பவான் சொன்ன மூலிகையை

இங்க நின்னுதேடிகிட்டிருந்தா Time waste ஆயிடும்னு சிந்தித்த அநுமன், அகிலம் வியந்து பாராட்டும் அந்த உன்னத காரியத்தை நிகழ்த்தினான்..!


வேருடன் அந்த நெடுங்கிரியை பெயர்த்து தன் உள்ளங்கையில் ஏந்தியபடி பொங்கிதிரண்ட மேகங்கள் வழியே விரைந்து புறப்பட்டான்..!!


உங்களுக்கே புரியும் எளிய தமிழில் கம்பன் கைச்சித்திரம் காணுங்கள்...


" 'இங்கு நின்று, இன்னன மருந்து என்று எண்ணினால்,


சிங்குமால் காலம்' என்று உணரும் சிந்தையான்,


அங்கு அது வேரொடும் அங்கை தாங்கினான்,


பொங்கிய விசும்பிடைக் கடிது போகுவான். "மலையின் பிரம்மாண்டத்தையும்.. அதை நொடியில் எடுத்து கரத்தில் ஏந்தி உலகம் சுற்றிய தாய்மை குணாளனையும் படியுங்கள்..
"ஆயிரம் யோசனை அகன்று மீ உயர்ந்து,


ஆயிரம் யோசனை ஆழ்ந்தது அம் மலை..!!


'ஏ' எனும் மாத்திரத்து, ஒரு கை ஏந்தினான்...


தாயினன் - உலகு எலாம் தவழ்ந்த சீர்த்தியான்..!. "இப்படியாக பறந்து ஒளியின்வேகத்தில் அனுமன் இலங்கையின் எல்லையை வந்தடைந்தான்!(வங்க கடலில் இலங்கையின் வடதிசையில் மையம்கொண்ட 'மாருதி' எனும் புயலை வாசியுங்கள்...)"கடல் கிளர்ந்து எழுந்து மேல் படர,

கார் வரை..


இடை இடை பறிந்து விண் ஏற, இற்று இடை..


தடை இலாது உடற்றுறு சண்டமாருதம்..


வட திசை வந்தது ஓர் மறுக்கம் உற்றதால்..!"

'வந்தான்' என்பதற்குள்ளேயே மலையுடன்  இறங்கிவந்து நின்றானாம் வீர அனுமான்..!

வஞ்சகர் பூமியில் தடம்பதிக்க விரும்பாமல் அந்தமலை அந்தரத்திலேயே நின்றதாம்!!
"தோன்றினன் என்பது ஓர் சொல்லின் முன்னம் வந்து


ஊன்றினன் நிலத்து அடி, கடவுள் ஓங்கல்தான்


வான் தனில் நின்றது, வஞ்சர் ஊர் வர


ஏன்றிலது ஆதலின்.. அனுமன் எய்தினான்...!"
மலையிலிருந்து வீசிய மூலிகை காற்று பட்டதுமே மொத்த வானரசேனையும் வீறுகொண்டு எழுந்துவிட்டது.


போர்முடிவில் இறந்த அரக்கர்களின் உடலை எல்லாம் உடனடியாக அப்புறப்படுத்தி கடலில் வீசும்படி ராவணன் சொன்னபடியால் அவர்களின் உடல் ஆழியில் வீசப்பட்டு அழிந்துவிட்டது!


மற்றபடி,,

மருந்துகாற்று பட்ட உடன்..

உயிரற்ற மரக்கலங்களுக்கே  உயிர் வந்துவிட்டது என்றால்,,

குரங்குகள் பிழைத்ததை பற்றி நான் கூறித்தான் தெரியணுமா??

என்கிறான் மிக எகத்தாளமாக நம் கம்பன்...!


இதோ அதை சுவையுங்கள்..."அரக்கர் தம் ஆக்கைகள் அழிவு இல் ஆழியில்..

கரக்கலுற்று ஒழிந்தன ஒழிய கண்டன..

மரக்கலம் முதலவும் உய்ந்து வாழ்ந்தன;

குரக்குஇனம் உய்ந்தது கூற வேண்டுமோ? "இதற்குமேலும் ஒரு கற்பனை காட்சியை கூறவும் இயலுமோ...??  அடுத்த முறை பார்க்கலாம்!


சூரியராஜ்


4 Comments

 1. சிரஞ்சீவி கொண்டு வந்த சஞ்சீவி

  கம்பன் கொண்டு வந்த கம்பரசம்

  அதை

  சுவைமிக்க சொல்லவந்த சூரியராஜ்

  எல்லாமே சமர் தான்

  ReplyDelete
  Replies
  1. சமமான என்கிற ரீதியில் சமர் என சொன்னாலும்,, சமர் என்பதற்கு சண்டையிடுதல் என்ற அர்த்தமும் இருக்கிறது.. நான் இரண்டாவதையே எடுத்துக்கொள்கிறேன்.. அதில்தான் தோற்றாலும்கூட பெருமையாக இருக்கும்..!

   Delete
 2. எவரையும் ஈர்க்கும் வகையில் கம்பனின் கவியோவியத்தை சொல்வதில், எனக்கு நீங்கள் ஜாம்பவான்.

  ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு