Trending

இந்திய விடுதலை போரில் மகாகவி பாரதியாரின் பங்கு

 

இந்திய விடுதலை போரில் மகாகவி பாரதியாரின் பங்கு

முன்னுரை

இந்தியர்கள் அடிமைப்பட்டு கிடந்தபோது அவர்களின் அறியாமையை விலக்கி, விடுதலை பற்றி அறிய செய்த தலைவர்கள் பலர்! அதே போல தமிழகத்தின் மக்களை, தன் எதிர்கால சிந்தனை வைத்து கவிபாடி கட்டுரைகளை தீட்டி அவர்களது உள்ளப்பூட்டை திறந்தவர் பாரதி. இந்திய விடுதலை போரில் அவரது தனித்துவமான பங்கு குறிப்பிடத்தக்கது. அவற்றை  இந்த கட்டுரையில் காண்போம். கட்டுரை PDF கீழே தரப்பட்டுள்ளது.


ஒற்றுமை


நம் மக்கள் அடிமைப்பட்டு கிடந்ததையே அடியோடு அறியாதவர்களாய் இருந்தனர். அதுபோலவே நிறம், மதம், சாதிகளிடையே பிரிந்து, தங்களுக்குள்ளாகவே சண்டையிட்டுக் கொண்டு  இருந்தவர்கள். அவர்களை தன் கவிபாடும் திறமையினால் கட்டியிழுத்து ஒற்றுமை உணர்வை அவர்களிடம் விளைய வைத்தவர் பாரதி.


➤ பாரதியாரின் கற்பனையில் பாரத தேசம்


உள்ளுக்குள்ளே இவ்வளவு ஏற்றத்தாழ்வு இருக்கும் போது அன்னியரிடம் என்ன நாம் நீதி கேட்பது? என்பதை "ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில் அன்னியர் வந்து புகல்என்ன நீதி?" என்ற வரிகள் மூலம் தங்களை முதலில் சுயதரிசனம் அடைய வைக்கிறார். நாமெல்லாம் ஒர் தாயின் வயிற்றில் பிறந்தவர்கள் சண்டையிட்டு கொண்டாலும் நாமெல்லாம் சகோதரர் இல்லையோ? என்று ஒன்றுபடுத்துகிறார்.  


"ஜாதி மதங்களைப் பாரோம்- உயர்

ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்

வேதிய ராயினும் ஒன்றே- அன்றி

வேறு குலத்தின ராயினும் ஒன்றே"

"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே - நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே

நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த 

ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?"


அயலானிடம் இருந்து விடுதலை அடைய முதலில் இங்கு ஒற்றுமை இருந்தாலே அவனது பிடியை அவிழ்த்து விட்டு அவனை ஒட விடமுடியும்! என்பதையே தனது முதல் விடுதலை போரின் பங்காக எடுத்துக்கொண்டார் என்பதை இதன் முலம் அறிய முடிகிறது. 'ஒற்றுமையே பலம்' என்பதை அறிந்தே பாரதி இந்திய விடுதலை போருக்கு மக்களை முதலில் ஒற்றுமை மூலம் தயார்படுத்தியிருக்கிறார். 


பாரதநாடு எங்கள் தாய்


நம்மிடம் அளவில்லாது அன்பு செலுத்துபவள் நம் அன்னை தான். அது போன்றே இந்த பாரத நாடும் அன்னை போன்றவள்! என்று தனது பாடல் மூலம் விடுதலை வேட்கையை தூண்டினார். நாம் நம்மை ஒருவர் எது சொன்னாலும் பொறுத்துக்கொள்வோம். ஆனால் நம் தாயை பற்றி யாராவது ஏதாவது பேசினால் நமக்கு கோபம் வரும். இந்த உளவியலையே தனது கவி மூலம் நம் பாரத நாடும் தாயை போன்றவள், அவளுக்கு ஒர் துன்பம் எனில் நாம் சும்மா இருந்திடுவோமோ? என்று உணர்வைத்தவர். அது மட்டும் இன்றி நம் பாரத தாயை, 


"பாரதப் போரெனில் எளிதோ? - விறற்

பார்த்தன்கை வில்லிடை ஒளிர்வாள்

மாரதர் கோடிவந் தாலும் - கணம்

மாய்த்துக் குருதியில் திளைப்பாள்"


➤ பாரதி ஓர் தெய்வமாகவி


➤ பாரதியின் காதல் கதை


பத்தாயிரம் வீரரை எதிர்த்துப் போர் செய்யவல்ல வீரர்கள் (மாரதர்) கோடி பேர் வந்தாலும் அவர்களை கண் நேரத்தில் மாய்த்து அவர்களது குருதியை அனுபவிக்கும் வீரமிக்கவள் எங்கள் பாரததாய். வீரம் மட்டும் மிக்கவள் அல்ல அழகும், குணமும் உடையவளும் அவளே! என்பதையும் தனது கவிகள் மூலம் சொல்லி இருக்கிறார்.  இத்தகைய பாடல்கள் சுகந்திரத்தின் மீது அனைவரின் உணர்வும் வெளிப்பட உறுதுணையாக இருந்தது. 


பாரதி ஒர் தீவிரவாதி!


பாரதியார் 'சுதேசமித்திரன்'இதழில் மொழி பெயர்ப்பாளராகச் சேர்ந்தபின், அவ்விதழின் ஆசிரியர் ஜி.சுப்புரமணிய அய்யரின் தொடர்பால் அவருக்கு  முதன் முதலில் விடுதலையுணர்வு ஏற்பட்டது. 


விவேகானந்தரின் உதவியாளர் நிவேதிதா தேவியைச் சந்தித்து அவரிடம் உபதேசம் பெற்றார்.


விவேகானந்தரின் சிசியை ஒர் நாள் பாரதி சந்திக்க நேர்ந்தது.  நிவேதிதா தேவியின் அருளுரையும், வங்கப்பிரிவினையால் ஏற்பட்ட எழுச்சியும் பாரதியை ஒரு தீவிரவாதியாகவே மாற்றியது. 'சுதேசமித்திரன்' மிதவாதப் போக்குடன் செயல்பட்டு வந்த ஒர் இதழ். பாரதியோ நாட்டின் மீதும் விடுதலை உணர்வின் மீதும் உள்ள தீவிர  நிலைப்பாட்டினால், பாரதிக்கும், சுதேசமித்திரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பாரதி 'சுதேசமித்திரனில்' இருந்து  விலகி மண்டயம் சீனிவாசன் குடும்பத்தார் தொடங்கிய ‘இந்தியா’ வார ஏட்டின் ஆசிரியர் குழுவில் 1906 இல் சேர்ந்தார். தனது தீவிர நிலைப்பாட்டினால் அந்த இதழில் விடுதலை, சுதந்திரம் குறித்து பல கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதி குவித்தார். முதன் முதலில் அந்த இதழில் தான் அரசியல் குறித்த கேலிச்சித்திரம் இடம் பெற்றது.  அதனாலும் மற்றும் பல கட்டுரைகள் சர்ச்சைக்குரியதாக கருதப்பட்டு பாரதியின் மீது வழக்கும் விழுந்தது. அந்த இதழில் அவர் எழுதிய தீவிர எழுத்துக்களே மக்களிடையே  போரில் ஈடுபட உண்டான தீ பொறியாக மாறியது.  அது மட்டும் இன்றி விடுதலை போருக்கு ஈடுபட்ட மற்ற தலைவரிகளையும் தன் கவியின் மூலம் பெருமைப்படுத்திய சுயநலம் அற்றவர். காந்தி, நௌரோஜி, லாஜபதி இன்னும் பலரை தன் கவி மூலம் பாராட்டியும் அவர்களது பணிக்கு நன்றி செலுத்தியும் உள்ளார்.


➤ பாரதியார் பற்றிய கட்டுரை


பாரதி ஒர் காலப்பயணி


பாரதி விடுதலை உணர்வை மக்களிடையே பரப்ப பல மாநாடுகள் ஏற்பாடு செய்து உள்ளார். காந்தியை அவர் சந்தித்து அவர் தனது மாநாட்டுக்கு வரும் படி அழைத்ததும், காந்தி வேறொரு மாநாட்டுக்கு செல்வதாக கூறியும் அவர் மீது பாரதி மரியாதை கொண்டுள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது. பாரதி எதிர்கால சிந்தனை உடையவர்,


➤ பாரதி கற்பனையில் பாரத தேசம் 3500 வார்த்தை


"ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே

ஆனந்த சுகத்திரம் அடைந்துவிட்டோமே" 


என்று பாடியவர். எப்படியும் நம் நாடு நம் வசமே என்பதை அறிந்தே தான் அவர் இப்படி எழுதி இருக்கிறார். தன் கவியின் மூலம் எதிர்காலத்திடம் சென்றுவிட்டவர் அவர். அது மட்டும் இன்றி தனது கவிகளை இந்த தமிழகம் போற்றும் நாள் வரும், இப்போது நம் மக்கள் குழந்தை பருவத்தில் உள்ளனர். அவர்கள் கண் திறக்கும் போது என் அருமையை காண்பர் என்றும் கணித்து ஒர் 'காலப்பயணியாகவே' ஆகிவிட்டார். 


முடிவுரை


தூப்பாகிகளை ஏந்தி நம்மை அடிமை படுத்தியவரை ஆயுதங்கள் ஏதும் இன்றி தனது எழுத்து மூலமே எட்டு திசையும் சிதறியடித்த எட்டயப்புரத்தவன் நம் மகாகவி பாரதி.  அவர் வறுமையிலும், வற்றாத தன் கருத்தின் மூலம் பாரதத்தின் விடுதலைக்கு தன் பங்கினை அளித்த ஒப்பற்றவர். அன்று தமிழகத்தில் உள்ள பல மக்களின் பார்வை சுதந்திரத்தின் மீது திரும்ப வைத்தவர் பாரதி தான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.


➤ கட்டுரை PDF DOWNLOAD

1 Comments

  1. பாரதியை இந்த நூற்றாண்டு பிள்ளைகளும் அறிய வைக்கும் அரிய முயற்சி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு