Trending

அழுகிய அத்தி | குறுந்தொகை 24 கதை

 


அன்று இரவு நேரத்தில்,


"மா…  நான் இங்க எட்டு மணிக்கெல்லாம் வந்துட்டேன். நாளைக்கு நீ காலைல கிளம்பிடு…


நான் நாளைக்கு காலைல ஐந்து மணிக்கெல்லாம் கிளம்புறேன்! அதான்…"


"சரி, நான் கிளம்பிடுறேன்" என்றாள் மனவருத்தம் முகத்தில் திரையிட.


"ஒரு… இரண்டு வருசத்துக்குள்ள வந்துடுவேன்… பத்திரமா இரு! இன்னொரு விசயம், பிள்ளைய பத்திரமா பாத்துக்க!" என்று பரணி கூறியவுடன் தனது கையால் தனது வயிற்றை தடவினாள் ஆனந்தி.


"சரி… நீங்க சாப்டீங்களா?"


"ம்ம்… இப்ப தான் கடைல சாப்டேன்… சரி மா, காலைல அவுஸ் ஒனர்ட சாவிய கொடுத்துட்டு அவுங்ககிட்ட சொல்லிட்டு கிளம்பு, சரியா?"


"சரிங்க"


"அங்க எப்புடி என்னனு தெரிய, முடிஞ்சா ஃபோன் செய்வேன் இல்லைனா நாம நேர்ல தான் இனி பேச முடியும்!, சரியா?… சரி வைச்சிடுறேன்…"


"ம்ம்…" இவ்வாறாக இரண்டு வருடத்துக்கு முன்பு தன் கணவனுடன் பேசிய கடைசி வார்த்தைகள் ஆனந்தி நினைவுபடுத்திக்கொண்டே, காட்டில் விறகுகளை பொறுக்கி கொண்டிருந்தாள். பொறுக்கிய விறகுகளை ஒன்றாக கட்டி அதனை தன் தலையில் சுமந்த படி நடந்து வந்தாள். ஐந்தடி உயரமும்,  நீண்ட‌ மூக்கினில் சிறு புள்ளி இட்டதை போன்ற சின்ன மூக்குத்தி. அவளின் நிறத்திற்கு அவள் சுமந்து வந்த விறகுகளின் கருமை நிறம் உவமை ஆனது. அவளது உருவத்திற்கும் அதுவே உவமை! அத்தகைய மெல்லிய உடல்.


காட்டினை கடந்து  சில மைல் தூரம் வந்த பிறகு,  மண்ணால் கட்டப்பட்ட தனது குடிசை வீட்டுக்குள் நுழைந்தாள். உள்ளே சென்று அடுப்பின் அருகில் இருந்த இடைவெளியில் தலையில் சுமந்த விறகுகளை வைத்து விட்டு, வயிற்றில் சுமந்த பிள்ளையை பார்க்க நெருங்கினாள். அந்த குழந்தை தூளியில் தூங்கிக்கொண்டிருந்தது. அந்த குழந்தையின் முகத்தில், மாலை சூரியனின் வெப்பம் குறைந்த ஒளி கீற்றின் துளை வழியாகபட்டது. சிறிதாக அந்த தூளியை ஆட்டிவிட்டுவிட்டு  பின் வெளியே வாசல் திண்ணையில் அமர்ந்தாள். 


"சாமி… விறவு பொறுக்கியாந்துடியா?" என்று தலையில் புல்லை அங்கங்கு கிழிந்தபடி இருந்த நைலான் சாக்கில் வைத்து அதை தலையில் சுமந்தபடியே ஆனந்தியின் தாய் செல்லபாப்பா கேட்டாள்.


"அடுப்பு பக்கத்துல வச்சிருக்கேன்" 


"சரி… பொழுது போயி, வாசல்ல உட்காராத உள்ளவா!" என்று செல்லபாப்பா கூற உடனே உள்ளே வந்து அமர்ந்தாள். 

செல்லபாப்பா ஆடுகளுக்கு புல்லை வைத்துவிட்டு. உள்ளே வந்து விறகுகளை நெருப்பு மூட்டி சாதத்திற்கு ஒலை வைக்க தொடங்கினாள்.


ஆனந்தியிடம் "நாளைக்கு விடிய போயி துணிய தொவச்சிட்டு வந்துடு" என்றாள். ஆனந்தியும் எதையோ யோசித்தபடி தலை அசைத்தாள். 


சில மணி நேரத்திற்கு பிறகு, ஆனந்தி தன் பிள்ளையை தூக்கிக்கொண்டு வாசலில் நின்று நிலவுத்தாயை கைகாட்டி சோறு ஊட்டிக்கொண்டிருந்தாள்.  எதிர் வீட்டில் இருந்து யாரோ ஒருவர் ஆனந்தியின் பக்கம் வந்துக்கொண்டே "ஆனந்தி நல்லா இருக்கிறியா?" என்றார்.


"வாங்க ராசாத்தி அத்த, நல்லா இருக்கேன். எப்ப வந்தீங்க?"


"நல்லா இருக்கேன் தாயி, மீனாட்சிய பாத்து ரொம்ப நாள் ஆகுது, அதான். அக்காவ ஒர் எட்டு பாத்துட்டு போயிடலாம்னு மதியமா வந்தேன்!. நாளைக்கு புறப்பட்டுடுவேன்" என்று பேசிக்கொண்டே,  ராசாத்தி குழந்தையிடம் விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தாள். பின்பு குழந்தையை ஆனந்தியிடம் வாங்கி அவள் தூக்கிக்கொண்டு கொஞ்சினாள். குழந்தை அவள் தலை முடியை இழுத்தும், காதை பிடித்து இழுத்தும் விளையாடியது. 


"சரிம்மா, இந்தா பிடி,  நான் அப்பறமா வரேன்"


"சரிங்க அத்தை" என்று குழந்தையை வாங்கிக்கொண்டு மீண்டும் சோறு ஊட்டிக்கொண்டிருந்தாள். ராசாத்தி எதிர் வீட்டில் புகுந்தாள்.


நடந்துகொண்டே சோறு ஊட்டிக்கொண்டிருந்த ஆனந்தியின் காலில் ஏதோ குத்தியது. கீழே பார்த்தால் ஏதோ தோட்டின் திருகாணி கிடப்பது போல இருந்தது. இடுப்பில் இருந்த குழந்தையை இறுக பிடித்தபடி குனிந்து அதை எடுத்தாள். இது ராசாத்தி அத்தை உடையதாக தான் இருக்க வேண்டும்! என்று எதிர் வீட்டை நோக்கி நடந்தாள்.


"இப்ப வரல, இரண்டு வருசத்துக்கு முன்னாடி வந்தவதான்!, இங்க தான் இருக்கா?"


"அப்புடியா!?, சரி நான் ஏதோ இப்ப புருஷன் வீட்ல இருந்து சும்மா வந்துருக்கானு நெனச்சேன்!"


"இல்ல… இல்ல… புருஷன்காரன் என்ன ஆனானே தெரியல, நாம் ஏதாவது கேட்டா வெளிநாட்டுல இருக்காருனு கத கட்டுறாளுங்க ஆய்யும் மொவளும்!"


"ஓ! அப்புடியா சேதி…" 


"காலேஜ் படிக்கும் போது ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டா!, மாப்பிள வீட்டுல இவுங்கள சேத்துகள, தனி கொடுத்தனம் இருந்தாங்க ரொம்ப கஷ்டம் போல. அவன், இவள ஆய் விட்டுக்கு அனுப்பிட்டு எங்கையோ போயிட்டான். இவ சின்ன புள்ளையா இருந்தப்ப இவன் அப்பன் குடிச்சே போய்சேந்தான். ஒன்டி ஆளா செல்லபாப்பா இவள வளத்தா, இப்ப அதே மாதிரி இவளுக்கு ஆயிட்டு. பொம்பள பிள்ளை வேற, பாவம் போ!" 


"படிச்ச இவளுக்கு புத்தி எங்க போனுச்சி?" என்று ராசாத்தி, மீனாட்சிய பார்த்து கேட்கும் போதே ஆனந்தி வீட்டுக்குள் நுழைந்தாள். "வாமா… ஆனந்தி…" என்று இருவரும் ஒருக்க குரல் எழுப்பினர். 


இது வரை அவர்கள் பேசியது காதில் விழுந்தும் அதை காட்டிக்கொள்ளாமல் ஆனந்தி முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்டு "அந்த உங்க திருகாணி லூசா இருந்திருக்கும் போல, கீழ விழுந்திட்டு இந்தாங்க…"  என்று கொடுத்தாள்.


"ஓ...பிள்ள புடிச்சி இழுத்தாள அப்ப விழுந்திருக்கும் போல!"என்றாள் ராசித்தி.


"சரி... நான் வரேன் அத்தை"


"சரி வாமா" 


ராசாத்திக்கு அழுகை பீறிட்டு வந்தது. ஆனாலும் அதை அடுக்கிக்கொண்டே அகத்துக்குள் அழுதுகொண்டாள்.


"நாம பேசுனத அவ கேட்டு இருப்பா?" என்று சந்தேகத்துடன் ராசாத்தி கேட்க "கேட்டா என்ன? இனி ஊரே இவள பத்திதான் பேச போகுது!" என்றாள் மீனாட்சி.


மறுநாள் காலை, அழுக்கு துணிகளை எல்லாம் அன்னகூடையில் அழுத்தி வைத்து அதை துவைக்க  ஆற்றுப்பக்கம் போனாள் ஆனந்தி. 


ஆற்றங்கரையில் நின்ற சில பெண்கள் எதோ பேசிக்கொண்டிருந்தனர். ஆனந்தி அருகில் செல்ல செல்ல அவர்களது வார்த்தைகள் அவளைப்பற்றித்தான் என்பது புரிந்தது. ஆனாலும் அவள் 'அங்கு நாம் சென்ற உடன் பேச்சை நிறுத்திவிடுவார்கள்' என்று எண்ணிய படியே சென்றாள்.  ஆனால் அவர்கள் அப்போது தான் ஜாடை அதிகம் வைத்து பேசினர்!  அது அவள் மனதை குழைத்தது‌. மறுவார்த்தை ஏதும் இன்றி வேகமா துணியை துவைத்து விட்டு வந்தாள். அப்போது அந்த ஆற்றின் அருகில் இருந்த அத்தி மரத்தில் இருந்த ஒரு அத்தி பழம் கீழ விழுந்து குழைந்து கிடந்தது. அதன் மேல் நண்டுகள் ஏறி அதை மேலும் குழைத்தது. அதை பார்த்த ஆனந்திக்கு தான் அந்த அத்தி பழமாகவும், அந்த நண்டுகள் இந்த கொடிய நாக்குகளை உடைய பெண்களாகவும் தோன்ற, ஒர் நாள் என் கணவன் என்னிடம்  வரும்போது - இந்த நண்டுகளுக்கு உவமையான இந்த பெண்களின் நாக்குகள், இந்த அத்தி பழம் போல அழுகிபோகட்டும்! என்று சாபம் கொடுத்தபடியே, தன் வழி சென்றாள்...




குறுந்தொகை 24 செய்யுள்


கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்

என்னை யின்றியுங் கழிவது கொல்லோ

ஆற்றயல் எழுந்த வெண்கோட் டதவத்

தெழுகுளிர் மிதித்த ஒருபழம் போலக்

குழையக் கொடியோர் நாவே

காதலர் அகலக் கல்லென் றவ்வே. 


குறுந்தொகை 24 உரை விளக்கம்


கரிய அடிப்பக்க  நிறத்தினை உடைய வேப்ப மரத்தில் ஒளி பொருந்திய வெண்மை நிற பூக்கள் பூத்துவிட்டன. என் தலைவன் இந்த இளவேனிற் காலம் முடிவதற்குள் வந்து விடுவேன் என்று கூறியவர் இன்னும் வரவில்லையே?  ஆற்றின் அருகில் இருக்கும் அத்தி மரத்தின் கீழ் கிடக்கும் அத்தி பழத்தை  நண்டுகள் குழைத்து சிதைக்கின்றன. அது போல இந்த கொடிய ஊர் பெண்டிர் என் காதலன்  என்னை விட்டு பிரிந்ததால் அவரையும் என்னையும் தவறாக சொல்லி. புரம் பேசி திரிகின்றனரே, அவர்கள் நாக்கு இந்த பழத்தினை போல அழுகட்டும்!

தென்றல் இதழ் 30

1 Comments

  1. கனவன் வரட்டும்.நாக்குகள் அழுகட்டும்

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு