Trending

எங்கே உள்ளான் எல்லாம் வல்லான்

எங்கே உள்ளான் எல்லாம் வல்லான்


எங்கே இருக்கிறான் இறைவன்?

கண்டார் எவரும் உள்ளார்களா? கண்டு மீண்டார் எவரும் உள்ளார்களா?


புராண கதைகளையும் நம்ப இடமில்லாத சில செவிவழி சம்பவங்களையும் மட்டுமே ஆதரமாக வைத்துக் கொண்டு இறைவனை நம்புவது எப்படி?


இரண்யன் நரசிம்மனை நேரில் கண்ட பிறகே அல்லவா விஷ்ணு இருப்பை நம்பி இருப்பான்.


காண கண்களை கொடுத்து விட்டு காண முடியாதான் காட்சிக்கு அரியான்தான் என்றால் மூளைக்கு சமீபமாக இருக்கும் கண்கள் இந்த சேதியை எவ்வாறு ஒப்புக் கொள்ளும்?


நாம் இறைவனை நேரில் கண்டாலொழிய ஒப்பு கொள்ளக்கூடாது.


"சரி.. நேரில் காண என்ன தான் வழி?"


கீதை சொல்கிறது, "கண்ணாடியைப் பார்"

_______________


நாம் தான் இறைவன். இது தான் கருத்து. 


இந்து மதம் கருத்து விரோததிற்கு ஒன்றும் புதிதல்ல. அதுவே ஆறு மதங்களின் கூட்டு. கொஞ்சம் புத்த மத பொறியல். சமணம் போட்ட தயிர்.


இதை விட எளிதாக கூற முடியாதென்று நினைக்கிறேன். இதை விரிவாக பிறகு காண்போம். நிற்க.


இந்து மதத்தை அடக்கிய மதங்கள் பல ஆனால் அது இன்றும் பல கலாச்சாரங்களுக்கு மத்தியில் பரவி விரவி நிற்கிறதென்றால் அதன் கொள்கைகள் எத்தனை மகத்துவம் வாய்ந்தது என்பதை அறிதல் வேண்டும்.


கீதையின் கருத்துபடி பார்த்தால், கீதையை சொன்னவனும் ஒருவனே சொன்னதை கேட்டவனும் அவனே.


"எவன் எல்லா பொருள்களிலும் ஆத்மாவையும் ஆத்மாவில் எல்லா பொருள்களையும் பார்க்கிறானோ, அவனே காட்சி உடையான்." என்கிறது கீதை


அதாவது, ஒரு உயிருள்ள மரத்தை வெட்டி கதவு செய்தாயிற்று.


இப்போது அதற்கு உயிருண்டா எனக்கேட்டால், 'இல்லை' என்போம்.


ஆனால் காட்சி உடையான் அதற்கும் உயிருண்டு என்றே கூறுவான்.


தத்துவவிளக்கம் யாதெனில் இப்பரந்தன்ற பேரண்டம் முழுவதுமே இறைவனின் உயிர் நீக்கமற நிறைந்துள்ளது. சிறிய அணு முதல் பெரிய சூரியன் வரை இறைவனே என்கிறது கீதை. அது அழிவில்லாதது. ஆதி அந்தம் அற்றது. அளவிடதற்கு அரியது. 


அதாவது, நாம் கண்ணால் காணும் அனைத்துமே இறைவனின் உடலாகும்.


அதனுள் நிறைந்து இருப்பதே இறைவனின் உயிராகும்.


'எள் நிறைந்த நெய் ஒத்து நின்றானை' என்று வெண்பாமாலை கூறியது இதன் காரணங்கருதியே


நாமும் இறைவனின் உடலே நம்முயிரும் இறைவனின் உயிரே. 


இறை உடல்-உயிரின் பகுதிகளாகவே மரம், செடி, கொடி, புல், விதை, மனிதன், விலங்கு, நிலம், காடு, மலை, ஈ, எறும்பு, நாய், நரி, பன்றி, எருமை, கோள், வெளி என இருக்கும் எல்லாமுமே செயல்படுகிறது என்பதை தெளிதல் வேண்டும்


அதனாலே தான் கீதை, அர்ஜூனனை ஜீவாத்மா என்றும் கண்ணனை பரமாத்மா என்றும் கூறுகிறது.


ஜீவாத்மா என்பது பிறப்பெடுத்த ஆத்மா. பரமாத்மா என்பது மூல ஆத்மா.


மூல ஆத்மாவில் இருந்து பிரிந்து பிறப்பெடுத்த ஆத்மாவே ஜீவாத்மா என்பது கீதையின் கருத்து.


இதனோடு மனித பிறப்பை ஒப்பு செய்து பார்க்க. தந்தையின் உயிரணுக்கள் மூலத்திலிருந்து பிரிந்து வந்து ஜீவிக்கும் இடமான தாயின் கருவறையில் தசையோடு கூடிய உயிராக பிறப்பெடுக்கிறது.


எல்லா பொருள்களிலும் ஆத்மாவையும் ஆத்மாவில் எல்லா பொருளையும் காண்பதென்பது அண்டம் யாவையும் பிண்டத்தில் அடங்கும் எனும் கூற்றுக்கு விளக்கு எனலாம்.


எனில் இறைவன் எங்கே இருக்கிறான் எனும் கேள்விக்கு சற்றே கீதை கொண்டு ஆராய்ந்தோமானால், இறைவனே நாம் தான் என்றும் நாம் காணும் அனைத்து பொருளும் இறைவனின் உடல் வடிவங்களே என்பதையும் அறியலாம்.


பட்டணத்து பிள்ளை அடிகள் எழுதிய ஒருபா ஒருபஃது எனும் நூலில் உலகமும் அது கொண்டுள்ள அனைத்து படைப்புப் பொருட்களும் இறைவனின் உடல் மற்றும் இறைவனின் உயிர் என்ற தத்துவ விளக்கத்தை காட்டுகிறது.


"உண்மை புத்தி இருக்கின்ற அறிஞன் அனைத்தையுமே சமமாக பாவிக்கின்றான்"


அனைத்தின் உள்ளும் இறைவன் இருக்கிறான் என்பதையும் இறைவனே அனைத்துமாகி இருக்கிறான் என்பதை அவன் அறிகின்றான். அதனாலே தான் அவன் 'அறிஞன்'




ஈசதாசன்

2 Comments

  1. பூமி ஒரு உயிர் கோளம். பூமிக்கு உயிர் உள்ளது. அதே போல் இந்த பிரபஞ்சம் முழுவதுக்கும் உயிர் இருக்கும். நல்ல கருத்து

    ReplyDelete
  2. ஆர்த்திSeptember 19, 2022 at 6:46 PM

    உலகில் உள்ள அனைவருக்கும் ஒரே உயிர் என்கிறீர்களா?

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு