Trending

சங்கரலிங்கனார் உயிர் தியாகம் தந்த தமிழ்நாடு

சங்கரலிங்கனார் உயிர் தியாகம்


முன்னுரை


"மெட்ராஸ் மாகானம்" என்ற பெயரை "தமிழ்நாடு"என பெயர் மாற்றம் செய்து 1968 ஆம் ஆண்டு ஜுலை 18 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் பெயர் மாற்ற தீர்மானத்தை, அப்போதைய முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் கொண்டு வந்தார்கள். அந்த வரலாற்றுச்  சிறப்பு வாய்ந்த தினத்தைதான் "தமிழ்நாடு நாள்" என இப்போதைய முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.


மெட்ராஸ் "தமிழ்நாடு" ஆனதற்கு அண்ணா முன்முயற்சி எடுத்தாலும், அதற்கு அடிப்படை விதையை விதைத்து, அதற்காக 76 நாள் உண்ணாவிரதம் இருந்து தன் உயிரையும் கொடுத்தவர் விருதுநகர் சங்கரலிங்கனார். அவரை பற்றியும் தமிழ்நாடு நாள் உருவான வரலாறு பற்றிய குறிப்பையும் இக்கட்டுரையில் காண்போம்.


சங்கரலிங்கனார் இளமைப் பருவம்


விருதுநகர் மாவட்டம் மண்மலை மேடு கிராமத்தை  சேர்ந்தவர் சங்கரலிங்கனார்.1895 ஆம் ஆண்டு  கருப்பசாமி, வள்ளியம்மை தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.  கல்விக்கண் கொடுத்த காமராஜர் படித்த "சத்ரிய வித்ய சாலா" பள்ளியில்தான் படித்தார். நாடார் குலத்தில் பிறந்ததால் வணிகத்தில் ஈடுபட்டார். காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு உப்பு சத்தியாகிரகம் நடந்த தண்டி யாத்திரையில் கலந்து கொண்டவர்.


காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் மக்களுக்கு விரோதமாக காங்கிரஸ் நடந்து கொண்ட போது,  துணிவாக எதிர்த்தவர் சங்கரலிங்கனார்.


அதனால்தான் பூரண மதுவிலக்கு, தீண்டாமை, இரயிலில் இரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு பிரிவினை, போன்றவற்றை எல்லாம் எதிர்த்தார்.


மொழிவாரி மாநிலம்


அப்போதைய மெட்ராஸ் மாகானத்தில், ஆந்திராவின் பெரும்பகுதியும், கர்நாடகாவின் பெல்லாரி போன்ற பகுதிகளும், கேரளாவின் மலபார் போன்ற பகுதிகளும் இணைந்து இரூந்தன.


மெட்ராஸ் மாகானத்துக்கு தமிழ் பேசும் ஒருவர் முதல்வராக முடியாத  நிலை இருந்தது.


சென்னையை சேர்ந்த தெலுங்கை தாய் மொழியாக கொண்ட பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் 1952 ஆம் ஆண்டு ஆந்திராவை சென்னையிலிருந்து தெலுங்கர்கள் வாழும் பகுதியை பிரித்து தரக்கோரி 56 நாள் உண்ணாவிரதம் இருந்து உயிரைவிட்டார். அவரது போராட்டம் காரணமாக எழுந்த எழுச்சியில் 1953 ஆம் ஆண்டு தெலுங்கு பேசும் மக்களுக்காக ஆந்திரா உருவானது. 1956 ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படாடன.


பின்னர் ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்றவை  மொழிவாரியாக உருவாகி, உருவான நாளை அங்கெல்லாம் விழாவாக  கொண்டாட ஆரம்பித்தார்கள். எல்லோரும் எடுத்துக் கொண்ட பிறகு மிச்சம் மீதி இருந்த பகுதி மெட்ராஸ் மாகானமாக தொடர்ந்தது.


உண்ணாவிரதம்


இதைக்கண்டு ஆத்திரம் கொண்ட சங்கரலிங்கனார், மெட்ராஸ் மாகானம் என்பதை தமிழ்நாடு என மாற்ற வேண்டும் என்பது உள்பட பன்னிரண்டு கோரிக்கைகளோடு விருதுநகர் தேசபந்து திடலில் 1956 ஆம் வருடம் ஜுலை 27 அன்று உண்ணாவிரதம் தொடங்கினார். பொட்டி ஸ்ரீராமுலு போல ஒரு உயிர் போனால்தான் இதற்கு ஒரு நிலையான தீர்வு கிடைக்கும்  என நம்பினார்.


உண்ணாவிரதம் இருந்து அவர் உடல் நலிவடையத் தொடங்கியதும் தமிழக மக்களிடையே ஒரு எழுச்சி ஏற்பட்டது.


அப்போதைய தமிழக தலைவர்களான அண்ணா, ம பொ சி, ஜீவா, கக்கன், இராஜாஜி, காமராஜர்  போன்றவர்கள் அவரை சந்தித்து  உண்ணாவிரத்தை முடித்து கொள்ளும்படி கோரினார்கள். கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே உண்ணாவிரதத்தை முடிப்பேன் உறுதியாக கூறிவிட்டார் சங்கரலிங்கனார்.


சங்கரலிங்கனாரின் கோரிக்கைகள், மாநில அரசின் வரம்புக்கு அப்பாற்பட்டவை என காமராஜர் தனது இயலாமையை தெரிவித்துவிட்டார் 


மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் அரசும் மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசும் அசைந்து கொடுக்கவில்லை.


உணவையே தொடாத சங்கரலிங்கனார் தன் லட்சியத்தில் பின்வாங்காது, 76 நாட்கள் உண்ணாதிருந்து அக்டோபர் 13 1956 அன்று உயிர் துறந்தார்.


காங்கிரஸ் கட்சிக்காரர் என்றாலும், தன் கோரிக்கையை ஏற்காத காங்கிரஸ் கட்சியை நம்பாமல், தான் மரணம் அடைந்தவுடன் தனது உடலை அடக்கம் செய்யும் பொறுப்பை, மாயாண்டி பாரதி என்ற கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரிடம் ஒப்படைத்தார்.


உயிர் போனாலும் அவர் மூட்டிய தீ அணையவில்லை.


திமுகவும் ம.பொ.சியின் தமிழரசு கழகமும் இப்பிரச்சினையை கையில் எடுத்தன.


சட்டசபையில் தீர்மானம்


திமுக 1957 ஆம் வருடம் மே 7 ஆம் தேதி திமுக  தமிழக சட்டமன்றத்தில் மெட்ராஸ் மாகானம் என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்றும் தீர்மானத்தை கொண்டு வந்தது. ஆனால் அத்தீர்மானத்துக்கு 42 வாக்குகளே கிடைத்தது. காங்கிரஸின் 127 எதிர்ப்பு  வாக்குகளால் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.


பின்னர் 1961 ஆம் ஆண்டு ஷோஷலிஸ்ட் உறுப்பினர் பி.சின்னத்துரை கொண்டு வந்த, தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானமும் காமராஜரால் விவாதத்துக்கே எடுத்துக் கொள்ளப்படவில்லை.


1961ல் பாராளுமன்றத்தில் மேற்கு வங்க கம்யூனிஸ்ட் உறுப்பினர் பூபேஸ் குப்தா மெட்ராஸ் மாகானத்துக்கு தமிழ்நாடு என பெயர் மாற்றும் தீர்மானத்தை கொண்டு வந்தார்.


அதில் கலந்து கொண்டு உரையாற்றிய அண்ணா சிலப்பதிகாரம்,மணிமேகலை, பரிபாடல், தொல்காப்பியம் போன்ற இலக்கியக் காலம் தொட்டே தமிழகத்துக்கு தமிழ்நாடு என பெயர் வழங்குவதை ஆதாரத்துடன் ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.


"வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்" என்ற தொல்காப்பிய வரிகளையும் "இமிழ் கடல் வேலியை தமிழ் நாடாக்கின" என்ற சிலப்பதிகார பாடலையும் எடுத்துக் காட்டினார்.


"மெட்ராஸை தமிழ் நாடாக்கி என்ன சாதிக்க போகிறீர்கள்" என காங்கிரஸார் கேட்டவுடன் "பார்லிமென்டை லோக்சபாவாக்கி என்ன சாதித்தீர்கள்" என அண்ணா கேட்டார். "பிரசிடென்டை இராஷ்டிரபதி  என மாற்றி என்ன பலனை கண்டீர்கள்" என அண்ணா கேட்டார்.


"மாநிலத்தின் தலைநகராக உள்ள ஊரின் பெயர்தான் மாநிலத்தின் பெயராக அமைய வேண்டும்" என வாதிடப்பட்டபோது "அப்படியானால் கேரளாவுக்கு ஏன் திருவனந்தபுரம் என்றும் ஆந்திராவுக்கு ஹைதாராபாத் என்றும் கர்நாடகாவுக்கு பெங்களூர் என்றும் ஏன் பெயர் வைக்கவில்லை" என அண்ணா கேட்டார்.


காங்கிரஸ் அமைச்சர் ஆர் வெங்கட்ராமன் எழுந்து "மெட்ராஸ் மாகானத்தை  தமிழ்நாடு என ஒப்புக்கொண்டால் மெட்ராஸ் பெயரில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் காலாவதி ஆகிவிடும்" என்றார். அதற்கு அண்ணா "கோல்டு  கோஸ்ட்" என்ற நாடு தனது பெயரை "கானா" என்று மாற்றிக்கொண்டதே! கானா மீது இந்தியா போட்ட ஒப்பந்தங்கள் ஏன் காலாவதி ஆகவில்லை" என அண்ணா கேட்டார்.


பார்லிமென்டை "லோக்சபா" என்றும் கவுன்சில் ஆப் ஸ்டேட்ஸ் என்பதை "இராஜ்யசபா" என்றும் பெயர் மாற்றிய உங்களால் "தமிழ்நாடு" என பெயர் மாற்ற முடியாதா? என பிரதமர் நேருவை பார்த்து நேருக்கு நேர் கேட்பார்.


ஆனால் அந்த தீர்மானமும் பின்னர் 1964ல் திமுக அரங்கண்ணலால் கொண்டு வந்த தீர்மானமும் தோற்கடிக்கப்பட்டது.


காங்கிரஸால் பலமுறை தோற்கடிக்கப்பட்ட தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானம் அண்ணா ஆட்சி அமைந்த பிறகு 1968 ஜுலை 18 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பேரவைத் தலைவர் ஆதித்தனார் அனுமதியுடன் அண்ணா "தமிழ்நாடு" என மூன்று முறை கூற "வாழ்க" என்று உறுப்பினர்கள் வின்னதிர முழக்கமிட்டார்கள்.


தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானம் நாடாளுமன்றத்தில் 1968 நவம்பர் 23 அன்று நிறைவேறியது.


1969 ஜனவரி 14 பொங்கல் முதல் அதிகாரபூர்வமாக மெட்ராஸ் தமிழ்நாடானது


ஜெ மாரிமுத்து

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு