Trending

மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் ம.பொ.சி

 

மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் ம.பொ.சி



முன்னுரை


நமது இந்திய சுதந்திர போராட்டத்திற்கு மகாத்மா காந்தியடிகள் தலைமையேற்ற பிறகு இந்தியாவின் செம்மை தன்மையினையும் தனித்தன்மையினையும் கருதிற்கொண்டு பிரித்தானிய அரசு பிரித்தது போல் அல்லாமல் இந்திய மாநிலங்கள் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். அதன் அடிப்படையில் 1920களில் உருவானது தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி.


இதன் பிறகே மொழிவாரி மாநிலங்களை பற்றிய பேச்சு வார்த்தைகள் தீர்மானங்கள் அதிகமானது. 


1955 ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி ம.பொ.சி தனது தமிழரசு கழகம் கட்சி நடத்திய செயற்குழுவில், தமிழ்நாடு என பெயரிடப்பட வேண்டும் என்கிற தீர்மானத்தை எடுத்து கூறினார். தமிழக மக்களுக்கு தமிழக நிலப்பரப்புக்கு 'தமிழ்நாடு' என்னும் பெயர் எத்தனை அத்தியாவசியமானது என்பதை எடுத்துரைத்தார்.


ம.பொ.சி-யின் கருத்து காட்டுத்தீ ஆனது.


முழு அடைப்பு


முன்னர் மெட்ராஸ் பிரெசிடென்ஸி என்பது கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு என்ற நான்கு மாநிலங்களின் கூட்டாக இருந்தது. 1956 ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்ட போது நான்கு மாநிலமும் தனித்தனியாக ஆனது. இருந்தும் அப்போது சென்னை மாகாணம் 'மெட்ராஸ் ஸ்டேட்' என்ற ஆங்கிலேயர் வைத்த பெயரிலே இருந்தது.


ம.பொ.சிவஞானம் அவர்கள் 'தமிழ்நாடு' என்ற பெயரை இலக்கிய ரீதியில் எடுத்து காட்டுகளோடு கூறிய போது தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டனர். 'தமிழ்நாடு' என்னும் பெயரில் வரலாற்று சிறப்பும் கலாச்சார பெருமையும் இருப்பதை உணர்ந்தனர்.


ம.பொ.சி 'தமிழ்நாடு' என்னும் பெயரை அறித்திருந்த இரண்டே மாதத்தில் 1956 பிப்ரவரி 20ஆம் தேதி தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென மாநிலம் முழுவதும் அனைத்து கட்சிகளின் சார்பில் முழு அடைப்பு போராட்டமும், வேலை நிறுத்தமும் நடைபெற்றது.


மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் ம.பொ.சி


தமிழரசுக் கட்சி தலைவர் ம.பொ.சிவஞானம் என்ற தமிழ்ஞானர் ம.பொசி அவர்கள் 1948 செப்டம்பர் 13ஆம் நாள் தார் ஆணையக் குழுவைச் சந்தித்து, 'தமிழ்நாடு' பெயர் மாற்றம் பற்றியும் மொழிவாரி மாநிலம் பற்றியும் கோரிக்கை விண்ணப்பம் கொடுத்தார். 


அதன் சுருக்கம்


“சென்னை மாகாணத்தைத் தமிழகம், ஆந்திரம், கேரளம், கன்னடம் என நான்கு மொழிவழி மாநிலங்களாக உடனே ஏக காலத்தில் பிரிக்க வேண்டும். தமிழ்நாடு தனி மாநிலமாகப் பிரிய வேண்டியது அவசியம் என்பதைத் தமிழர்கள் உணர்கின்றனர். அந்தப் பிரிவினை அவசரமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். பிரிக்கப்படும் தமிழ் மாகாணத்தின் எல்லைகள் தெற்கே குமரி முனையாகவும் வடக்கே திருப்பதியாகவும் இருக்க வேண்டும். சென்னை நகரம் தமிழ்நாட்டிலேயே இருக்க வேண்டும். புதிய தமிழகம் சட்டசபை, மந்திரிசபையோடு கூடிய சுயாட்சியுள்ள மாகாணமாக இருக்க வேண்டும். அந்நிய நாட்டுறவு, போக்குவரத்து, பாதுகாப்பு ஆகியவற்றை மத்திய அரசுக்கு விட்டுக் கொடுத்து, ஏனைய எல்லா அதிகாரங்களும் உள்ள சுதந்தர அரசுகளாக மாநிலங்கள் இருக்க வேண்டும்”.


ஆனால் தார் ஆணையம் 1948 டிசம்பர் 10ஆம் நாள் அளித்த அறிக்கையில், மொழி அடிப்படையில் மாநிலங்கள் அமைக்கக் கூடாது என்றும் நிர்வாக வசதிக்கேற்ப இப்போதுள்ள மாநிலங்களைப் பிரிக்கலாம் என்றும் பரிந்துரை செய்தது. இதனால் ம.பொ.சி அவர்கள் மொழிவாரி மாநில உருவாக்கத்தில் அளித்த பெரும் முயற்சி வீணானது


வடக்கெல்லை போராட்டம்


"தாங்கள் தடையை மீறி சிறை புகுவதற்கு முடிவு செய்துவிட்டதாக அறிகிறேன். அது தேவையற்ற முயற்சி. அந்த முயற்சியைக் கைவிட்டு, உடனே சென்னை வந்து என்னைப் பார்க்கக் கோருகிறேன்" இது வடக்கு எல்லைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த சமயத்தில் ம.பொ.சி-க்கு மூதறிஞர் ராஜாஜி எழுதிய கடிதம். ராஜாஜியின் கடிதத்தினை ம.பொ.சி அவர்கள் நிராகரித்தார்கள்.


ம.பொ.சி அவர்கள் தமிழகத்தின் எல்லையாக நேருவுக்கு எழுதிய கடிதத்தில் தொல்காப்பியத்தின் பானம்பரனார் எழுதிய சிறப்புப்பாயிர வரிகள் மேற்கோள் காட்டப்பட்டு இருந்தன,


'வடவேங்கடம் தென்குமரி

ஆயிடைத் தமிழ் கூறும் நல் உலகம்'


இவ்வரிகளை அடிப்படையாக கொண்டே ம.பொ.சி தமிழக எல்லையினை நிர்ணயித்தார். ஆனால் அவை நினைத்தபடி அமையவில்லை. வடக்கெல்லையான திருப்பதி ஆந்திர பகுதியாக பிரிக்கப்பட்டது.


இதற்காக வடக்கெல்லை பாதுகாப்புக் குழு 1952இல் அமைக்கப்பட்டது. அதன் தலைவர் ம.பொ.சிவஞானம் அவர்கள் ஆவார். செயலாளர் தளபதி கே. வினாயகம். இவர்கள் சேர்ந்து வடக்கு எல்லை மீட்புக்காக பல போராட்டங்கள் நடத்தினார்கள். 144 தடையை மீறி ம.பொ.சி., கே. வினாயகம், மங்கலங்கிழார் உள்ளிட்டோர் 25.06.1953இல் கைதாகிச் சிறை சென்றனர். அப்போதே ராஜாஜி அவர்கள் ம.பொ.சிக்கு கடிதம் எழுதினார்கள்.


வடக்கெல்லை மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையடைக்கப்பட்ட திருவாலங்காடு பி. கோவிந்தசாமி இராஜமுந்திரி சிறையிலும், பழனிமாணிக்கம் தடியடியிலும் மாண்டனர்.


தலையைக் கொடுத்தேனும் தலைநகரை மீட்போம்


வடக்கு எல்லை பொருத்தவரையில் அது மீட்பு போராட்டமாகத் தான் இருந்தது ஆனால் தலைநகர போராட்டம் உரிமை போராட்டமாக ஆனது.


சென்னையை ஆந்திராவின் தலைநகராக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து 82 நாள் உண்ணாவிரதம் இருந்து ஸ்ரீராமலு அவர்கள் மரணமானது இப்போராட்டத்திற்கு முதல் காரணமாகும். இதன் பிறகே ஆந்திராவுடன் சென்னை இணைக்கப்படுவது குறித்தான பேச்சுகள் அதிகமானது.


ம.பொ.சி போன்ற பெருந்தலைவர்களால், 'தலையைக் கொடுத்தேனும் தலைநகரை மீட்போம்' எனும் அனல் தெறிக்கும் வீர முழக்கம் இளைஞர்கள் மத்தியில் வெகுவாக பரவியது.


சென்னை தமிழக தலைநகராகத் தான் வேண்டுமென்று அண்ணா, பெரியார், காமராசர் போன்ற பெருந்தலைவர்களும் தொடர்ந்து கூறினார்கள்.


தமிழக முதல்வாராக இருந்த ராஜாஜி அவர்கள், சென்னையை தமிழக மற்றும் ஆந்திராவின் இருமாநில தலைநகராகவோ அல்லது ஆந்திர தலைநகராகவோ நேரு அறிவித்தார் எனில் நான் முதலமைச்சர் பதவியிலிருந்து பதவி விலகுவேன் என்று பரபரப்பான அறிக்கையை வெளியிட்டார்.


முடிவாக `ஆந்திரத்தின் தலைநகரானது ஆந்திரத்திற்குள்ளாகவே தேர்வு செய்யப்படும் ' என்று நேரு அறிவித்தபின் போராட்டம் ஓய்ந்தது


முடிவுரை


பேரறிஞர் அண்ணா 'தமிழ்நாடு' என்னும் பெயர் சூட்டிய போது தமிழகமே அந்நாளினை கொண்டாடியது. அண்ணா 'தமிழ்நாடு' என முழங்கிய போதெல்லாம் சட்டமன்றமே 'வாழ்க' என எதிரொலித்தது.


அதன்பிறகு பேரறிஞர் அண்ணா சொன்னதன் சுருக்கம், 'தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனும் பெயர் சூட்டுவதில் நாங்கள் முக்கிய புள்ளிகளாக தெரிந்தாலும் மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பில் இருந்து 'தமிழ்நாடு' என்னும் பெயர் சூட்டுவது வரையான அனைத்திற்கும் தமிழரசு கட்சி தலைவர் ம.பொ.சி அவர்களே மூல காரணம் ஆவார்.


25 ஆண்டுகளுக்கு மேலாக எழுந்த இந்த தொடர் சிந்தனை ஆக்கத்தில் மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் ம.பொ.சி பங்கு அளவிடமுடியாததாகிறது.

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு