Trending

தமிழ்நாடு உருவான வரலாறு

தமிழ்நாடு உருவான வரலாறு



{tocify} $title={Table of Contents}


தமிழ்நாடு உருவான வரலாறு


உலகில் வேறு எந்த நிலப்பரப்புக்கும் இல்லாத பெயர் சிறப்பு நம் தமிழ்நாட்டிற்கு உண்டு. மக்கள் தொகையில் இரண்டாம் இடம் பிடித்த நம் 'இந்தியா' கூட பெயரில் 'நாட்டை' கொண்டிருக்கவில்லை. ஆனால் அதன் அங்கத்தில் ஒன்றான தமிழகமோ பெயரளவிலே 'நாட்டினை' பெற்றுள்ளது. ஆனால் 1956 முதல் 1967 வரை இவ்வரலாற்றை பதிப்பிக்க நம் தலைவர்கள் கொடுத்த விலை கொஞ்சமில்லை.


புறக்கணிப்பும், போராட்டமும், சோகங்களும், தியாகங்களும் தமிழ்நாட்டிற்கு புதிதல்ல. கலைஞர் கருணாநிதியின் மரணத்திற்கு ஆறு அடி நிலம் பெற திமுக அரசு எத்தனை போராட வேண்டி இருந்ததோ அதேபோல் மெட்ராஸ் மாகாணம் தன் பெயரை மாற்றி கொள்ள பல அரிய இழப்புகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.


தமிழ்நாடு உருவான வரலாறு வெறும் மூன்று வார்த்தைகளில் அடங்கும் காலவோட்ட கதை அல்ல. கண்ணீரினாலும் அவலங்களாலும் போர் கொடிகளாலும் மரணங்களாலும் எழுதப்பட்ட அழுகையின் அத்தியாய தொகுப்பு ஆகும். இவைகள் அனைத்தும் அம்மாதியாகிகளின் குருதிக்கு காணிக்கையாக்க படுவன.


மெட்ராஸ் பிரெசிடென்சி


வெள்ளைக்கார ஆட்சியின் போது நாம் வாழும் தமிழ்நாட்டின் பெயர் 'மெட்ராஸ் பிரெசிடென்சி' ஆகும். இந்த மெட்ராஸ் பிரெசிடென்சி கீழ் தான் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் இருந்தது.


1953 அக்டோபர் மாதம் ஆந்திர மாநிலம் தனியானது. 1956ஆம் ஆண்டு மொழியின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. கன்னடம் பேசும் கர்நாடகமும் கவின் மலையாளம் கொஞ்சும் கேரளமும் தனி மாநிலங்களாயின. அந்த சமயத்தில் தான் 'மெட்ராஸ் பிரெசிடென்சி' 'மெட்ராஸ் ஸ்டேட்' அதாவது மெட்ராஸ் மகாணம் ஆனது.


அதைத் தொடர்ந்தே 'மெட்ராஸ் ஸ்டேட்' எனும் பெயர் 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்ற வேண்டும் என்ற புதிய சிந்தனை வேரூன்றியது


ம.பொ.சிவஞானம்


1955 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதியே ஞானவானர் ம.பொ.சிவஞானம் அவர்கள் 'தமிழ்நாடு' எனும் பெயரை நாம் கொள்ளல் வேண்டுமென்பதை அறிவித்திருந்தார்கள்.


வெள்ளையர்களை விரட்டியடிக்க இந்தியாவுக்கு எவ்வாறு அகிம்சையும், ஆயுதமும் அவசியமானதோ அதே போல் தமிழ்நாட்டிற்கும் அப்போது சிவஞானத்தின் ஞானம் தேவையானது. 


ம.பொ.சி-யின் அவ்வொற்றை முழக்கம் தீயானது. தாய்நில பற்று கொண்டோர் அனைவரும் கூட்டமாயினர். அடுத்த சில மாதங்களிலேயே, இன்னும் சொல்லப்போனால் ம.பொ.சி 'தமிழ்நாடு' என்ற பெயரை சொன்ன இரண்டே மாதத்திலேயே 1956 பிப்ரவரி 20 ஆம் தேதி மாநிலம் முழுவதும் அனைத்து கட்சிகளின் சார்பாகவும் முழு கடை அடைப்பு போராட்டமும், வேலை நிறுத்தமும் நடந்தேறியது.


தமிழ்நாட்டு மக்களின் அனல் தெறிக்கும் மொழிப்பற்றை எல்லா ஊடகங்களும் பேசலாயின. தமிழ்நாடு பெயருக்காக விடாபிடியான போராட்டங்களும் சட்டமன்ற விவாதங்களும் நிகழ்ந்த வண்ணமே இருந்தது. மாகாண சட்டமன்றத்தில் மாநில புனரமைப்பு மசோதா கொண்டுவரப்பட்டும் விவாதம் நடந்தது.


இருந்தும், 'எந்த பயனும் இல்லை'


சங்கரலிங்கனார் உயிர் தியாகம்


இதைக்கண்டு ஆத்திரம் கொண்ட சங்கரலிங்கனார், மெட்ராஸ் மாகானம் என்பதை தமிழ்நாடு என மாற்ற வேண்டும் என்பது உள்பட பன்னிரண்டு கோரிக்கைகளோடு விருதுநகர் தேசபந்து திடலில் 1956 ஆம் வருடம் ஜுலை 27 அன்று உண்ணாவிரதம் தொடங்கினார். பொட்டி ஸ்ரீராமுலு போல ஒரு உயிர் போனால்தான் இதற்கு ஒரு நிலையான தீர்வு கிடைக்கும்  என நம்பினார். அதும் யாருக்கும் இடையூறு தராத வண்ணம் தன் வீட்டு வாசலிலேயே சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார்.


உண்ணாவிரதம் இருந்து அவர் உடல் நலிவடையத் தொடங்கியதும் தமிழக மக்களிடையே ஒரு எழுச்சி ஏற்பட்டது.


அப்போதைய தமிழக தலைவர்களான அண்ணா, ம பொ சி, ஜீவா, கக்கன், இராஜாஜி, காமராஜர்  போன்றவர்கள் அவரை சந்தித்து  உண்ணாவிரத்தை முடித்து கொள்ளும்படி கோரினார்கள். கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே உண்ணாவிரதத்தை முடிப்பேன் உறுதியாக கூறிவிட்டார் சங்கரலிங்கனார்.


சங்கரலிங்கனாரின் கோரிக்கைகள், மாநில அரசின் வரம்புக்கு அப்பாற்பட்டவை என காமராஜர் தனது இயலாமையை தெரிவித்துவிட்டார் 


மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் அரசும் மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசும் அசைந்து கொடுக்கவில்லை.


உணவையே தொடாத சங்கரலிங்கனார் தன் லட்சியத்தில் பின்வாங்காது, 76 நாட்கள் உண்ணாதிருந்து அக்டோபர் 13 1956 அன்று உயிர் துறந்தார்.


காங்கிரஸ் கட்சிக்காரர் என்றாலும், தன் கோரிக்கையை ஏற்காத காங்கிரஸ் கட்சியை நம்பாமல், தான் மரணம் அடைந்தவுடன் தனது உடலை அடக்கம் செய்யும் பொறுப்பை, மாயாண்டி பாரதி என்ற கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரிடம் ஒப்படைத்தார்.


உயிர் போனாலும் அவர் மூட்டிய தீ அணையவில்லை.


திமுகவும் ம.பொ.சியின் தமிழரசு கழகமும் இப்பிரச்சினையை கையில் எடுத்தன.


சங்கரலிங்கனாரின் 12 கோரிக்கைகள்


தியாகி சங்கரலிங்கனார் இந்த 12 கோரிக்கைகளே முன்வைத்தே சாகும் வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்


  1. மொழிவழி மாநிலம் அமைத்தல் வேண்டும்
  2. சென்னை இராஜ்ஜியம் என்பதை மாற்றி ‘தமிழ்நாடு’ எனப் பெயரிடுதல் வேண்டும்.
  3. இரயிலில் ஒரே வகுப்பில் அனைவரும் பயணம் செய்தல் வேண்டும்.
  4. வெளிநாட்டு விருந்தினர்களுக்கு நடனம் முதலான ஆடம்பரங்களை விலக்கி, சைவ உணவு அளித்தல் வேண்டும்.
  5. அரசுப் பணியில் உள்ளவர்கள் அனைவரும் கதர் அணிதல் வேண்டும்.
  6. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அரசியல் தலைவர்கள் சாதாரண மக்களைப் போல் வாழ்தல் வேண்டும்.
  7. தேர்தல் முறையில் மாறுதல் செய்தல் வேண்டும்.
  8. தொழிற் கல்வி அளிக்கப்பட வேண்டும்.
  9. இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும்.
  10. விவசாயிகளுக்கு 60 விழுக்காடு வரை விளைச்சலில் வாரம் அளித்தல் வேண்டும்.
  11. மத்திய அரசு இந்தியை மட்டும் பயன்படுத்தக் கூடாது.
  12. பொது இடங்களில் ஆபாசமாக நடந்து கொள்வதைத் தடுத்தல் வேண்டும்


தமிழ்நாடு என எழுதலாம்


1960 ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.எஸ்.சின்னதுரை அவர்கள், தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தார். இந்த தீர்மானம் 1961ஆம் ஆண்டு ஜனவரி 30அம் தேதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விவாதத்தின் மீது பேசிய நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் அவர்கள், “மெட்ராஸ் ஸ்டேட் என்று சொல்லப்படும் இடத்தில் தமிழ்நாடு என எழுதலாம்” என்ற அறிவிப்பை வெளியிட்டார். தீர்மானம் வெளியான  மறுநாளே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் அவர்கள், “தமிழ்நாட்டு அரசின் வரவு-செலவினை சமர்ப்பிக்கிறேன்” என்று குறிப்பிட்ட போது தமிழகமே மகிழ்ந்தது.


பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய தமிழ்நாடு


திமுக 1957 ஆம் வருடம் மே 7 ஆம் தேதி திமுக  தமிழக சட்டமன்றத்தில் மெட்ராஸ் மாகாணம் என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்றும் தீர்மானத்தை கொண்டு வந்தது. ஆனால் அத்தீர்மானத்துக்கு 42 வாக்குகளே கிடைத்தது. காங்கிரஸின் 127 எதிர்ப்பு  வாக்குகளால் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.


பின்னர் 1961 ஆம் ஆண்டு ஷோஷலிஸ்ட் உறுப்பினர் பி.சின்னத்துரை கொண்டு வந்த, தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானமும் காமராஜரால் விவாதத்துக்கே எடுத்துக் கொள்ளப்படவில்லை.


1961ல் பாராளுமன்றத்தில் மேற்கு வங்க கம்யூனிஸ்ட் உறுப்பினர் பூபேஸ் குப்தா மெட்ராஸ் மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர் மாற்றும் தீர்மானத்தை கொண்டு வந்தார்.


அதில் கலந்து கொண்டு உரையாற்றிய அண்ணா சிலப்பதிகாரம்,மணிமேகலை, பரிபாடல், தொல்காப்பியம் போன்ற இலக்கியக் காலம் தொட்டே தமிழகத்துக்கு தமிழ்நாடு என பெயர் வழங்குவதை ஆதாரத்துடன் ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.


"வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்" என்ற தொல்காப்பிய வரிகளையும் "இமிழ் கடல் வேலியை தமிழ் நாடாக்கின" என்ற சிலப்பதிகார பாடலையும் எடுத்துக் காட்டினார்.


"மெட்ராஸை தமிழ் நாடாக்கி என்ன சாதிக்க போகிறீர்கள்" என காங்கிரஸார் கேட்டவுடன் "பார்லிமென்டை லோக்சபாவாக்கி என்ன சாதித்தீர்கள்" என அண்ணா கேட்டார். 


"பிரசிடென்டை இராஷ்டிரபதி என மாற்றி என்ன பலனை கண்டீர்கள்" என அண்ணா கேட்டார்.


"மாநிலத்தின் தலைநகராக உள்ள ஊரின் பெயர்தான் மாநிலத்தின் பெயராக அமைய வேண்டும்" என வாதிடப்பட்டபோது "அப்படியானால் கேரளாவுக்கு ஏன் திருவனந்தபுரம் என்றும் ஆந்திராவுக்கு ஹைதாராபாத் என்றும் கர்நாடகாவுக்கு பெங்களூர் என்றும் ஏன் பெயர் வைக்கவில்லை" என அண்ணா கேட்டார்.


காங்கிரஸ் அமைச்சர் ஆர் வெங்கட்ராமன் எழுந்து "மெட்ராஸ் மாகாணத்தை  தமிழ்நாடு என ஒப்புக்கொண்டால் மெட்ராஸ் பெயரில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் காலாவதி ஆகிவிடும்" என்றார். அதற்கு அண்ணா "கோல்டு  கோஸ்ட்" என்ற நாடு தனது பெயரை "கானா" என்று மாற்றிக்கொண்டதே! கானா மீது இந்தியா போட்ட ஒப்பந்தங்கள் ஏன் காலாவதி ஆகவில்லை" என அண்ணா கேட்டார்.


பார்லிமென்டை "லோக்சபா" என்றும் கவுன்சில் ஆப் ஸ்டேட்ஸ் என்பதை "இராஜ்யசபா" என்றும் பெயர் மாற்றிய உங்களால் "தமிழ்நாடு" என பெயர் மாற்ற முடியாதா? என பிரதமர் நேருவை பார்த்து நேருக்கு நேராக கேட்டார் அண்ணா.


ஆனால் அந்த தீர்மானமும் பின்னர் 1964ல் திமுக அரங்கண்ணலால் கொண்டு வந்த தீர்மானமும் தோற்கடிக்கப்பட்டது.


“அரசியலமைப்புச் சட்டத்தில் மாநிலத்தின் பெயரை குறிப்பிடும்போது தமிழ்நாடு என மாற்றி அமைக்கப்பட வேண்டுமென உறுதியாக கருதுவதுடன், அரசியலமைப்பில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள மாநில அரசு நடவடிக்கை எடுக்க பேரவை பரிந்துரைக்கிறது” என்றார் பேரறிஞர் அண்ணா. இதனை வரவேற்றுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காங்கிரஸின் கருத்திருமன், “தமிழ்நாடு – மெட்ராஸ் ஸ்டேட் என்று பெயர் இணைந்திருக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து பேசினார். தீர்மானத்தின் போது நிறைவுறையாற்றிய பேரறிஞர் அண்ணா, “எதிர்காலத்தில் வரும் தலைமுறையினர், நமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் நெடுங்காலத்திற்குப் பிறகு அமர்ந்து பேசுகிற வேளையில் பெருமையோடு சொல்லிக்கொள்ளும் நிகழ்வாக தமிழ்நாடு பெயர் மாற்ற நிகழ்வு அமையும்” என்று பீடுபட மொழிந்தார்..


பின்னர் தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானத்தை நிறைவேற்ற அனுமதி கோரினார். அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் காங்கிரஸால் பலமுறை தோற்கடிக்கப்பட்ட தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானம் பேரறிஞர் அண்ணா ஆட்சி அமைந்த பிறகு 1968 ஜுலை 18 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பேரவைத் தலைவர் ஆதித்தனார் அனுமதியுடன் அண்ணா "தமிழ்நாடு" என மூன்று முறை கூற "வாழ்க" என்று உறுப்பினர்கள் வின்னதிர முழக்கமிட்டார்கள்.


தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானம் நாடாளுமன்றத்தில் 1968 நவம்பர் 23 அன்று நிறைவேறியது.


1969 ஜனவரி 14 பொங்கல் முதல் அதிகாரபூர்வமாக மெட்ராஸ் மகாணம் பீடுகெழு சிறப்புடன் தமிழ் கூறும் நல்லுலகமான தமிழ்நாடானது.


முடிவுரை


ம.பொ.சிவஞானம், உயிர் தந்த தியாகி சங்கரலிங்கனார் பேரறிஞர் அண்ணா போன்றோர்களின் பெரும் முயற்சியனால் தமிழ்நாடு உருவான வரலாறு பெயரளவில் மட்டுமல்லாமல் கலை, கல்வி, அறிவியல், சமூகம் என அனைத்து துறையிலும் பெரும் வளர்ச்சியினை கொண்டுவிளங்குகிறது. இந்தியாவின் பிற பெரும் மாநிலங்களை தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது அறிஞர் அண்ணா வழி வந்த அரசுகள் நமது தமிழக வரலாற்றை எத்தனை சீர்பெரும் மாநிலமாக மாற்றியுள்ளது என்பதை அறியலாம். 

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு