Trending

தமிழ்நாட்டிற்காக உயிர் கொடுத்த தியாகிகள்

 

தமிழ்நாட்டிற்காக உயிர் கொடுத்த தியாகிகள்

முன்னுரை


தமிழ்நாடு எனும் இத்திரு பெயர் நமக்கு எளிதில் கிடைத்த ஒன்றல்ல. இப்பெயருக்கு பின்னால் பலரது கண்ணீரும் செந்நீரும் இருப்பது பலருக்கு தெரியாததே. இந்திய விடுதலைக்கு போரிட்ட நம் வீர தியாகிகளை போற்றம் நமது தாயகம் மொழிப்போர் தியாகிகளை மறந்து போனது வருத்தமே. 


தமிழ்நாட்டிற்காக உயிர் கொடுத்த தியாகிகள் இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை எதிர்த்து மாண்டது போலே வீரசுவர்க்கம் எய்தியவர்கள் அல்லர். அவர்களின் மரணம் அன்னை தமிழுக்காக, இம்மாநில கலாச்சார பெருமைக்காக, என்றுமுள நமது இனப்பற்றுக்காக நேர்ந்தது. அம்மானிதர்களை போற்ற எழுதப்படுவதே இக்கட்டுரை


சங்கரலிங்கனார்


விருதுநகர் மாவட்டம் மண்மலை மேடு கிராமத்தை சேர்ந்தவர் தான் சங்கரலிங்கனார். 1895 ஆம் ஆண்டு  கருப்பசாமி, வள்ளியம்மை தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.  கல்விக்கண் கொடுத்த காமராஜர் படித்த "சத்ரிய வித்ய சாலா" பள்ளியில்தான் இவரும் படித்தார். நாடார் குலத்தில் பிறந்ததால் வணிகத்தில் ஈடுபட்டார். காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு உப்பு சத்தியாகிரகம் நடந்த தண்டி யாத்திரையில் கலந்து கொண்டவர். காந்தியத்தை கடைப்பிடிக்கும் அரிய சில மனிதர்களுள் இவரும் ஒருவர்.


காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் மக்களுக்கு விரோதமாக காங்கிரஸ் நடந்து கொண்ட போது,  துணிவாக எதிர்த்தவர் சங்கரலிங்கனார்.


அதனால்தான் பூரண மதுவிலக்கு, தீண்டாமை, இரயிலில் இரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு பிரிவினை, போன்றவற்றை எல்லாம் இவர் எதிர்த்தார்.


மொழிவாரி மாநிலம்


அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில், ஆந்திராவின் பெரும்பகுதியும், கர்நாடகாவின் பெல்லாரி போன்ற பகுதிகளும், கேரளாவின் மலபார் போன்ற பகுதிகளும் இணைந்து இருந்தன.


மெட்ராஸ் மாகாணத்துக்கு தமிழ் பேசும் ஒருவர் முதல்வராக முடியாத  நிலை இருந்தது.


சென்னையை சேர்ந்த தெலுங்கை தாய் மொழியாக கொண்ட பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் 1952 ஆம் ஆண்டு ஆந்திராவை சென்னையிலிருந்து தெலுங்கர்கள் வாழும் பகுதியை பிரித்து தரக்கோரி 56 நாள் உண்ணாவிரதம் இருந்து உயிரை விட்டார். அவரது மரணம் காரணமாக எழுந்த எழுச்சியில் 1953 ஆம் ஆண்டு தெலுங்கு பேசும் மக்களுக்காக ஆந்திர மாநிலம் உருவானது. 1956 ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.


பின்னர் ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்றவை  மொழிவாரியாக உருவாகி, உருவான நாளை அங்கெல்லாம் விழாவாக கொண்டாட ஆரம்பித்தார்கள். எல்லோரும் எடுத்துக் கொண்ட பிறகு மிச்சம் மீதி இருந்த பகுதி மெட்ராஸ் மாகாணமாக தொடர்ந்தது.


உண்ணமலே இறந்த தியாகி


இதைக்கண்டு ஆத்திரம் கொண்ட சங்கரலிங்கனார், மெட்ராஸ் மாகாணம் என்பதை தமிழ்நாடு என மாற்ற வேண்டும் என்பது உள்பட பன்னிரண்டு கோரிக்கைகளோடு விருதுநகர் தேசபந்து திடலில் 1956 ஆம் வருடம் ஜுலை 27 அன்று உண்ணாவிரதம் தொடங்கினார். பொட்டி ஸ்ரீராமுலு போல ஒரு உயிர் போனால்தான் இதற்கு ஒரு நிலையான தீர்வு கிடைக்கும்  என நம்பினார். அதும் யாருக்கும் இடையூறு தராத வண்ணம் தன் வீட்டு வாசலிலேயே சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார்.


உண்ணாவிரதம் இருந்து அவர் உடல் நலிவடையத் தொடங்கியதும் தமிழக மக்களிடையே ஒரு எழுச்சி ஏற்பட்டது.


அப்போதைய தமிழக தலைவர்களான அண்ணா, ம பொ சி, ஜீவா, கக்கன், இராஜாஜி, காமராஜர் போன்றவர்கள் அவரை சந்தித்து உண்ணாவிரத்தை முடித்து கொள்ளும்படி கோரினார்கள். கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே உண்ணாவிரதத்தை முடிப்பேன் உறுதியாக கூறிவிட்டார் சங்கரலிங்கனார்.


சங்கரலிங்கனாரின் கோரிக்கைகள், மாநில அரசின் வரம்புக்கு அப்பாற்பட்டவை என காமராஜர் தனது இயலாமையை தெரிவித்துவிட்டார் 


மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் அரசும் மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசும் அசைந்து கொடுக்கவில்லை


உணவையே தொடாத சங்கரலிங்கனார் தன் லட்சியத்தில் பின்வாங்காது, 76 நாட்கள் உண்ணாதிருந்து அக்டோபர் 13 1956 அன்று உயிர் துறந்தார்.


காங்கிரஸ் கட்சிக்காரர் என்றாலும், தன் கோரிக்கையை ஏற்காத காங்கிரஸ் கட்சியை நம்பாமல், தான் மரணம் அடைந்தவுடன் தனது உடலை அடக்கம் செய்யும் பொறுப்பை, மாயாண்டி பாரதி என்ற கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரிடம் ஒப்படைத்தார்.


உயிர் போனாலும் அவர் மூட்டிய தீ அணையவில்லை.


திமுகவும் ம.பொ.சியின் தமிழரசு கழகமும் இப்பிரச்சினையை கையில் எடுத்தன.


சங்கரலிங்கனாரின் 12 கோரிக்கைகள்


தியாகி சங்கரலிங்கனார் இந்த 12 கோரிக்கைகளே முன்வைத்தே சாகும் வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்


  • மொழிவழி மாநிலம் அமைத்தல் வேண்டும்
  • சென்னை இராஜ்ஜியம் என்பதை மாற்றி ‘தமிழ்நாடு’ எனப் பெயரிடுதல் வேண்டும்.
  • இரயிலில் ஒரே வகுப்பில் அனைவரும் பயணம் செய்தல் வேண்டும்.
  • வெளிநாட்டு விருந்தினர்களுக்கு நடனம் முதலான ஆடம்பரங்களை விலக்கி, சைவ உணவு அளித்தல் வேண்டும்.
  • அரசுப் பணியில் உள்ளவர்கள் அனைவரும் கதர் அணிதல் வேண்டும்.
  • ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அரசியல் தலைவர்கள் சாதாரண மக்களைப் போல் வாழ்தல் வேண்டும்.
  • தேர்தல் முறையில் மாறுதல் செய்தல் வேண்டும்.
  • தொழிற் கல்வி அளிக்கப்பட வேண்டும்.
  • இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும்.
  • விவசாயிகளுக்கு 60 விழுக்காடு வரை விளைச்சலில் வாரம் அளித்தல் வேண்டும்.
  • மத்திய அரசு இந்தியை மட்டும் பயன்படுத்தக் கூடாது.
  • பொது இடங்களில் ஆபாசமாக நடந்து கொள்வதைத் தடுத்தல் வேண்டும்


உயிர்நீத்த தியாகிகள்


வடக்கெல்லை பாதுகாப்புக் குழு 1952இல் அமைக்கப்பட்டது. அதன் தலைவர் ம.பொ.சிவஞானம் ஆவார். செயலாளர் தளபதி கே.வினாயகம் இவர்கள் ஒன்று சேர்ந்து பல போராட்டங்களை நடத்தினார்கள். 144 தடையை மீறி ம.பொ.சி., கே. வினாயகம், மங்கலங்கிழார் உள்ளிட்டோர் 25.06.1953 அன்று கைதாகிச் சிறை சென்றனர்.


வடக்கெல்லை மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையிடைக்கப்பட்ட திருவாலங்காடு பி. கோவிந்தசாமி இராஜமுந்திரி சிறையிலும், பழனிமாணிக்கம் தடியடியிலும் பரிதாபமாக இறந்தார்கள். அவர்களது இறப்புக்கு அர்த்தம் கிடைக்க ம.பொ.சி அவர்கள் தீவிரமாக போராட்டத்திற்கு துணிந்தார்.


முடிவுரை


ம.பொ.சிவஞானம் தமிழ்நாடு எனும் பெயரை அறிவித்த பிற்பாடு தமிழகத்தில் 'தமிழ்நாடு' எனும் பெயருக்கான எழுச்சி பீடுகெழ எழுந்தது. இதில் ம.பொ.சி வடக்கு எல்லை போராட்டத்தில் ஈடுபட்ட சித்தூர் வழக்கறிஞர் கே.வினாயகம் போன்றோர்கள் 144 தடையே மீறி போராடியதால் சிறை சென்றார்கள். ஆனால் ஏனைய பிற தமிழரசு கட்சியனர் தடியடிக்கு உள்ளானார்கள்.


திராவிட கட்சியினரும் தமிழரசு கட்சியினருக்கு பேராதரவாக இருந்து தடியடி முதல் சிறை வரை அனைத்து விஷயங்களிலும் பாகுபாடின்றி பங்கினை பெற்றனர்.


திருவாலங்காடு பி. கோவிந்தசாமி இராஜமுந்திரி சிறையிலும், தடியடியினாலே பரிதாபமாக இறந்த பழனிமாணிக்கமும் உண்ணாமலே இறந்த சங்கரலிங்கனாரும் தமிழ்நாட்டிற்காக உயிர் கொடுத்த தியாகிகள் பட்டியலில் எவ்வித சந்தேகமும் இன்றி சேர்க்கப்படுகிறார்கள்.


இவர்களாலே இன்றைய நம் தமிழ்நாடு உன்னதமான போக்கினை கொண்டு உயர்வான புகழினை கொண்டு விளங்குகிறதென பெருமைபட கூறிக்கொள்ளலாம்

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு