அண்மை

ஜீவகாருண்யம் என்றால் என்ன? இராமலிங்க அடிகளார் சொன்னவை



பசியென்கிற நெருப்பானது ஏழைகள் தேகத்தினுள் பற்றி எரிகின்ற போது ஆகாரத்தால் அவிக்கின்றது தான் – ஜீவகாருண்யம்

பசியென்கிற விஷக்காற்றானது ஏழைகள் அறிவாகிய விளக்கை அவிக்கின்ற தருணத்தில் ஆகாரங் கொடுத்து அவியாமல் ஏற்றுகின்றதே – ஜீவகாருண்யம்

கடவுளியற்கை விளக்கத்திற்கு இடமாகிய ஜீவ தேகங்களென்கிற ஆலயங்கள் பசியினால் பாழாகும் தருணத்தில் ஆகாரங் கொடுத்து அவ்வாலயங்களை விளக்கஞ் செய்விப்பதே - ஜீவகாருண்யம்

கடவுள் இன்பத்தைப் பெறுகின்ற நிமித்தம் தேகங்களிலிருந்து குடித்தனஞ் செய்கின்ற ஜீவரது தத்துவக் குடும்ப முழுதும் பசியினால் நிலை தடுமாறி அழியும் தருணத்தில் ஆகாரங்கொடுத்து அக்குடும்ப முழுதும் நிலைபெறச் செய்வதே – ஜீவகாருண்யம்

பசியென்கிற புலியானது ஏழை உயிர்களைப் பாய்ந்து கொல்லத் தொடங்குந் தருணத்தில் அப்புலியைக் கொன்று அவ்வுயிரை இரட்சிப்பதே – ஜீவகாருண்யம்

பசியென்கிற கொடுமையாகிய தேள் வயிற்றிற் புகுந்து கொட்டுகின்ற போது கடுப்பேறிக் கலங்குகின்ற ஏழைகளுக்கு ஆகாரத்தால் அக்கடுப்பை மாற்றி கலக்கத்தைத் தீர்ப்பதே – ஜீவகாருண்யம்

நேற்று இராப்பகல் முழுதும் நம்மை அரைப் பங்கு கொன்று தின்ற பசியென்கிற பாபி இன்றும் வருமே! இதற்கென்ன செய்வோம்! என்று ஏக்கங்கொள்கின்ற ஏழை ஜீவர்களது ஏக்கத்தை நீக்குவது தான் – ஜீவகாருண்யம்

‘வெயிலேறிப் போகின்றதே! இனிப் பசியென்கிற வேதனை வந்து சம்பவிக்குமே! இந்த விதி வசத்திற்கு என்ன செய்வது’ என்று தேனில் விழிந்த ஈயைப் போல் திகைக்கின்ற ஏழை ஜீவர்களுடைய திகைப்பை நீக்குவதுதான் – ஜீவகாருண்யம்

இருட்டிப் போகின்றதே இனி ஆகாரங் குறித்து எங்கே போவோம்! யாரைக் கேட்போம்! என்ன செய்வோம்! – என்று விசாரத்தில் அழுந்திய ஏழை ஜீவர்களது விசாரத்தை மாற்றுவதே – ஜீவகாருண்யம்

நடந்து நடந்து காலுஞ் சோர்ந்து – கேட்டுக் கேட்டு வாயுஞ் சோர்ந்து – நினைந்து நினைந்து மனமும் சோர்ந்தது. இனி இப்பாவி வயிற்றுக்கென்ன செய்வோம்! என்று கண்ணீர் வடிக்கின்ற ஏழைகளுக்கு ஆகாரங்கொடுத்துக் கண்ணீரை மாற்றுவதே – ஜீவகாருண்யம்

‘பகற்போதும் போய்விட்டது – பசியும் வருத்துகின்றது – வேறிடங்களிற் போக வெட்கம் தடுக்கின்றது – வாய் திறந்து கேட்க மனம் வலிக்கின்றது – வயிறு எரிகின்றது – உயிரை விடுவதற்கும் உபாயந் தெரியவில்லை – இவ்வுடம்மை ஏன் எடுத்தோம்!’ – என்று மனமும் முகமும் சோர்ந்து சொல்வதற்கும் நாவெழாமல், உற்பாதசொப்பனங்கண்ட ஊமையைப்போல் மன மறுகுகின்ற மானிகளாகிய ஜீவர்களுக்கு ஆகாரங் கொடுத்து மானத்தைக் காப்பதுவே – ஜீவகாருண்யம்

நாம் முன்பிறப்பில், பசித்தவர்கள் பசிக் குறிப்பறிந்து பசியை நீக்கியிருந்தால், இப்பிறப்பில் நமது பசிக்குறிப்பறிந்து பசியை நீக்குவதற்குப் பிறிதொருவர் நேர்வர் – அப்போது அப்படி நாம் செய்ததில்லை. இப்போது நமக்கிப்படிச் ‘செய்வாருமில்லை’ என்று விவகரித்துக் கொண்டு தூக்கம் பிடியாமல் துக்கப் படுகின்ற ஏழை ஜீவர்களுக்கு ஆகாரங்கொடுத்துத் துக்கத்தை நீக்கி தூக்கம் பிடிக்க வைப்பதே – ஜீவகாருண்யம்

தேக முழுதும் நரம்புகள் தோன்றப் பசியினால் இளைத்து உயிரொடுங்கி மூர்ச்சி மூடிய காலத்தும் அயலாரைக் கேட்பது துணியாமற், கடவுளை நினைத்து நினைத்து – நெருப்பிற்படுத்து – நித்திரை செய்யத் தொடங்குவார் போல – அடிவயிற்றிற்கொடிய பசி நெருப்பை வைத்துப் படுக்கத்தொடங்குகின்ற விவேகிகளுக்கு ஆகாரங் கொடுத்து அந்தப்பசி நெருப்பை ஆற்றுவதே - ஜீவகாருண்யம்

நேற்றுப் பட்டினி கிடந்தது போல இன்றும் பட்டினி கிடப்பது எப்படி? நாம் பாலியவசத்தால் இன்றும் பட்டினி கிடக்கத் துணிவோமாயினும், பட்டினி சகியாத நமது ஏழை மனைவி வயிற்றுக்கு யாது செய்வோம்? இவள் பசியைக் குறிப்பதும் பெரிதல்ல, வார்த்திபதிசையால் மிகவுஞ் சோர்ந்த நமது தாய் தந்தைகள் இன்றும் பட்டினி கிடந்தால் இறந்து விடுவார்கள்! இதற்கென்ன செய்வோம்? பசியினால் அழுதழுது களைத்த நமது புத்திரர்களது சோர்ந்த முகத்தை எப்படிப் பார்ப்போம்? – என்று எண்ணி எண்ணிக், கொல்லன் உலையிலூத மூண்ட நெருப்பைப் போல், பசி நெருப்பும் – பயநெருப்பும் – விசார நெருப்பும் – உள்ளே மூண்டபடியிருக்க கன்னப்புடையில் கைகளை வைத்துக்கொண்டு கண்களில் நீர் கலங்க வருந்துகின்ற ஏழைகளுக்கு ஆகாரங்கொடுத்து வருத்தத்தை மாற்றுவதே – ஜீவகாருண்யம்

கண், கை, கால் முதலிய உறுப்புகளிற் குறைவில்லாதவர்களாகி ஆகாரஞ் சம்பாதிக்க சக்தியுள்ளவர்களும் பசியால் வருத்தி இதோ படுத்திருக்கின்றார்கள். குருடும், செவிடும், ஊமையும், முடமுமாக வருகின்ற நமக்கு ஆகாரம் எந்த வழியாற் கிடைக்கும்! பசி எப்படி நீக்கும் என்று தனித்தனியே நினைத்து நினைத்து துக்கப் படுகின்ற ஏழைகளுக்கு ஆகாரங்கொடு்த்துத் துக்கத்தை நீக்குவதே – ஜீவகாருண்யம்

பசியினால் வருந்துகின்றவர்கள் எந்தத் தேசத்தாராயினும் – எந்தச் சமயத்தாராயினும் – எந்த ஜாதியாராயினும் – எந்தச் செய்கையாராயினும் – அவர்கள் தேசவொழுக்கம், சமயவொழுக்கம், ஜாதியொழுக்கம், செய்கையொழுக்கம் முதலானவைகளைப் போதித்து விசாரியாமல் – எல்லா ஜீவர்களிடத்தும் கடவுள் விளக்கம் பொதுவாக விளங்குவதை அறிந்து பொதுவாகப் பார்த்து அவரவர் ஒழுக்கத்திற்குத் தக்கபடி, அவர்கள் பசியை நிவர்த்தி செய்விப்பதே – ஜீவகாருண்யம்

சன்மார்க்க ஒழுக்கத்திற்கு ஒத்த சத்துவ ஆகாரத்தால் பசி நிவர்த்தி செய்து கொள்ளத்தக்க மிருகம், பறவை, ஊர்வன, தாவரம் என்கின்ற உயிர்களுக்குப் பசி வந்தபோது, பசி நிவர்த்தி செய்விப்பதே – ஜீவகாருண்யம்

பசியை நிவர்த்தி செய்து கொள்ளத்தக்க புவன போக சுதந்திரங்களைப் பெறுதற்குரிய அறிவு இருந்தும் பூர்வகர்மத்தாலும் – அஜாக்கிரதையாலும், அச்சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ளாமல் பசியினால் வருந்துகின்ற ஜீவர்களுக்கு ஆகாரங் கொடுத்து அந்தப் பசி வருத்தத்தை நீக்கித் திருப்தியின்பத்தை உண்டு பண்ணுவதற்குக் காரணமாகிய ‘ஜீவகாருண்யம் என்கிற திறவுகோலைக்’ கொண்டுதான் மோட்சமாகிய மேல்வீட்டுக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே புகுந்து எக்காலத்தும் அழியாத இன்பத்தை அனுபவித்து வாழ வேண்டும். ஆகலின் ஜீவகாருண்யமென்கிற மோட்ச வீட்டுத் திறவுகோலைக் காலமுள்ள போதே சம்பாதித்துக் கொண்ட சமுசாரிகள் – சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கின்ற சாதன சகாயங்களை வேண்டாமல், எக்காலத்தும் அடையாத இன்பவீட்டை அடைந்து, அவ்வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு, உள்ளே புகுந்து, நித்திய முக்தர்களாய் வாழ்வார்கள்.

1.புண்ணிய பூமிகளை வலஞ்செய்தல் 2.புண்ணிய தீர்த்தங்களிலாடல் 3.புண்ணிய தலங்களில் வசித்தல் 4.புண்ணிய மூர்த்திகளைத் தரிசித்தல் 5.தோத்திரஞ் செய்தல் 6.ஜெபஞ்செய்தல் 7.விரதஞ் செய்தல் 8.யாகஞ் செய்தல் 9.பூஜை செய்தல் முதலிய சரியை கிரியைகளைச் செய்கின்ற விரதிகளும், பக்தர்களும், இருடிகளும் உணவை நீக்கி, உறக்கத்தைவிட்டு விடயச் சார்புகளைத் துறந்து, இந்திரியங்களை அடக்கி – மனோலயஞ் செய்து – யோகத்திலிருக்கின்ற யோகிகளும் – அளவிறந்த சித்தியின்பங்களைப் பெற்ற சித்தர்களும் நித்தியா நித்தியங்களை அறிந்து, எல்லாப் பற்றுகளையும் துறந்து, பிரமானுபவத்தைப் பெற்ற ஞானிகளும் – ஜீவகாருண்யம் என்கிற திறவுகோலைச் சம்பாதித்துக் கொள்ளாதவர்களானால் – மோட்சமென்கிற மேல்வீட்டிற்கு முன்னும் பின்னுமாக ஏறிச் சமீபத்திற் காத்திருந்து மீளவும் அத்திறவுகோலைச் சம்பாதிக்கத் திரும்புவர்களல்லது, கதவைத் திறந்து உள்ளே புகுந்து இன்பத்தை அடைந்து வாழமாட்டார்களென்று உண்மையாக அறியவேண்டும்.

இதனால், அறிவு விளங்கிய ஜீவர்களுக்கெல்லாம் ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடென்றும் அறியப்படும். அன்றியும், ஜீவகாருண்யவொழுக்கத்தை உடையவர்களாகி அருந்தல் பொருந்தல் முதலிய பிரபஞ்ச போகங்களை அனுபவிக்கின்ற சமுசாரிகளெல்லாம் சர்வ சக்தியுடைய கடவுளருளுக்கு முழுதும் பாத்திரமாவார்கள்.

1 கருத்துகள்

  1. பிறவி ஒரு சாபம் என்பதை பசியோடு வாழும் உயிரினங்கள் ஒவ்வொன்றும் உணரும்.
    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார்... என்ற வள்ளுவரின் குறளுக்கு,, வள்ளலாரை படித்த பின் இறைவன் என்றால் உணவை இறைபவன் என்றே பொருள் கொள்ள தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
புதியது பழையவை