அண்மை

கா.சிவத்தம்பி: தனித்தமிழ் இயக்கத்தின் அரசியற் பின்னணி நூல் மதிப்புரை - தீசன்


தமிழ்நாட்டில் மொழியை மையமிட்ட அரசியல் என்பது காலனியக் கால விளைபொருளாக, ஆங்கிலேய ஆய்வு முறைகளின் பகுதியாக வரப்பெற்றது. தமிழில் கலக்கப்பெற்ற பிறமொழிச் சொற்களை நீக்குவது என்பதோடு நில்லாமல் தமிழ்ப் பண்பாட்டில் இணைக்கப்பட்டிருக்கும் பிற பண்பாடுகளைக் களைவதும் தவிர்க்கமுடியாதபட்சத்தில் அதற்கான எதிர்பண்பாட்டு மரபை உருவாக்குவதுமான ‘பண்பாட்டுப் புரட்சி’யை ஏற்படுத்திய இயக்கமாகவும் தனித்தமிழ் இயக்கத்தைக் கூறலாம். பண்பாட்டு உருவாக்கம், மொழி மீதான பற்றை ஏற்படுத்துதல், வட்டாரப் பண்பாடுகளை ஒருங்கிணைத்தல் முதலிய செயல்பாடுகள் இந்தியா போன்ற பன்மீய தேசிய உருவாக்க சாத்திய சூழல் உள்ள நாடுகளுக்கு அவசியத் தேவை. இந்தியப் பண்பாட்டு மரபு மொழி, மெய்யியல், அரசியல் முதலிய தளங்களில் மக்களை ஒன்றுபடுத்துதல் என்பதாக ஒற்றை தேசியப் போக்கைப் பின்பற்றி இருப்பதை வரலாற்றில் விளங்கலாம். அதற்கு எதிரான ஒவ்வொரு மாநில தேசிய அடையாளமும் இந்திய தேசிய பண்பாட்டோடு இயையாமல் விலகி இருப்பது ஒரு தனித்துவமான சிந்தனைமுறையுள்ள மக்கள் தொகுதியை உருவாக்கும். தனித்தமிழ் இயக்கம் இத்தகைய அறிவு மரபைத் தோற்றுவித்தது. இந்திய தேசியவாதம் பிராமணர்களை மையமாகக் கொண்டு மொழி, மெய்யியல், அரசியல் தளங்களைக் கட்டமைத்தபோது தமிழ் தேசியம் பிராமணரல்லாதோர் இயக்கமாக வளர்ந்தது. பிராமணர் நீக்கப்படும்போது பிராமணிய சிந்தனைமுறைக்கும் இடமற்று தமிழர்களுக்கான மெய்யியல் தேடல் உருவாவதற்கான அடிப்படை இங்கிருந்தே துவங்குகிறது எனலாம். இந்தத் தனித்தமிழ் இயக்கம் வெறும் மொழிப்புரட்சி இயக்கமாக மட்டும் இல்லை. மொழியானது அனைத்து அதிகார நிறுவனங்களையும் காக்கும் அரணாக இருப்பதால் மொழியில் ஏற்படும் மாற்றம் சமூகத் தளங்களில் சில அசைவுகளை ஏற்படுத்திப் பார்க்கிறது. அந்த வகையில் இந்தத் தனித்தமிழ் இயக்கம் சமூக-பண்பாட்டு விசயங்களில் ஏற்படுத்திய மாற்றங்களை மார்க்சிய வரலாற்றுப் பொருள் முதல்வாத அணுகுமுறையில் ஆய்கிறது இந்நூல். அக்டோபர் 1979, சென்னை புக் ஹவுஸ் வெளியீட்டில் 76 பக்கங்களுடன் இந்நூல் வெளிவந்திருக்கிறது. கா.சிவத்தம்பி அவரது எல்லா ஆய்வு நூல்களையும் போல இந்த நூலிலும் கருத்து (Concept), சான்று, கருத்தையும் சான்றையும் பொருத்துதல் எனும் முறைமையையே கையாண்டிருக்கிறார்.

தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்

பண்பாடு பற்றிய பிரக்ஞையைப் பெறுவது நாட்டின் உருவாக்கத்தோடு தொடர்புடையது. தமிழக சமூக அமைப்பை ஆராய்ந்த ஆந்திரே பெற்றாய்ல் என்பவர் தமிழ்நாட்டு மக்களை பிராமணர், பிராமணரல்லாதோர், ஹரிஜனங்கள் என்று மூன்றாகப் பகுத்திருக்கிறார். பிராமணரல்லாதோர் எனும் கருத்து தனித்தமிழ் இயக்கத்தில் பெற்றிருந்த பொருண்மைக்கும் இந்தப் பகுப்பிற்கும் நெருங்கிய தொடர்புண்டு. பிரமணரல்லாதோர், எனும் சொல் சமூகத்தில் பிராமணரைத் தவிர்த்த நிலக்கிழமையுடைய இடைநிலைச் சாதியினரை மட்டுமே குறிப்பதாக இருந்தது. இதனால் தனித்தமிழ் இயக்க அரசியல், இடைநிலைச் சாதி அரசியலின் பகுதியானது. தனித்தமிழ் இயக்கத்திலிருந்து கிளைத்து வளர்ந்த பண்பாட்டு அரசியல் இயக்கங்கள் உருவாக்க விழைந்த நாடு, பிராமணியம் நீக்கப்பெற்ற இடைநிலைச் சாதியர்களின் நாடாகவே இருக்க முடியும். இன்றுவரை விளிம்புநிலை மக்களின் பண்பாடு சமூக-பண்பாட்டுத் தளங்களுக்குள் அகப்படாமல் இழிவுப்படுத்தப்படுவதோடு ஒரு முழுமையான அரசியல் செயல்பாடாக உருவெடுக்க முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கிறது. தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் பிராமணியம் நீக்கப்பெற்றதாகக் கூறுவதும் முழுமையுடையதாக இல்லை. சமய நம்பிக்கைகளைக் கைவிடாத இடைநிலைச் சாதிக்காரர்களால் உருவாக்கப்படும் மரபு, தமிழில் கலப்புற்ற பிற பண்பாட்டு மரபை நீக்குவதாக அதற்கு எதிரான இன்னொரு மரபைப் புனைந்தது. கடவுள் கொள்கை ஆரியப் பண்பாட்டுடன் இணக்கம் கொள்வதை உணர்ந்து கடவுள் கொள்கையற்ற தமிழ்ப் பண்பாட்டை உருவாக்குவதற்கான நிலைப்பாட்டைப் பின்னைத் தோன்றிய திராவிடர் கழகங்கள் அடைந்திருந்தன. தமிழ்ப்பண்பாட்டு இயக்கம் அடிப்படையில் ஒரு மொழி இயக்கமாக இருந்தாலும் பிராமணப் பண்பாட்டுக் காலனிய நீக்கத்திற்கான தொடக்கநிலைகளைக் கொண்டிருந்ததால் அதுவொரு அரசியல் இயக்கமாக உருவெடுக்கும் சாத்தியப்பாடுகளைப் பெற்றிருந்தது.

தமிழர் மதக் கட்டமைப்பு

பிராமண எதிர்ப்பியக்கம் தமிழ் நிலத்தில் வேதமரபிற்குட்பட்டிருக்கும் தமிழ்ப் பண்பாட்டை விடுவிக்கும் பண்பாட்டு மீட்பு வாதமாக வளர்ந்த வேளையில் தான் தமிழர் மதம் பற்றிய சிந்தனைகள் எழுந்துள்ளன. தமிழர் மதம் பற்றிய தமிழியக்கங்களின் ஆய்வுகளில் தமிழர் நெறியாக சைவசித்தாந்தம் கொள்ளப்படுவதைப் பார்க்க முடிகிறது. சைவசித்தாந்தம் வேதமரபை ஏற்றுக் கொண்டநெறியாக இருக்கும்போது அதற்கு மறைமலையடிகள் சொல்லும் சமாதானம் வித்தியாசமானது. அதாவது, வேதங்கள் அனைத்தும் தொடக்கத்தில் தமிழிலே எழுதப்பட்டதாகவும் பின்னர் அவை சமற்கிருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார். சமற்கிருதத்தில் சொல்லப்பட்ட வேதநெறி அடிப்படையில் தமிழ்நெறியே என்பது அவர்தம் கருத்து. சைவசித்தாந்தம் நூற்றாண்டு காலமாக நிலக்கிழமைக்கு ஆதரவான மெய்யியல் நிலைப்பாட்டைக் கொண்டது. பிராமணரல்லாத நிலக்கிழார்களின் பாரம்பரியமான சடங்கியல் மற்றும் கருத்தியல் நடப்பாக சைவசித்தாந்தம் இருந்ததால் தமிழ்ப் பண்பாடு உருவாக்கத்தோடு மிக எளிமையாக இணையும் வாய்ப்பை அது (சைவ சித்தாந்ததம்) பெற்றிருந்தது. சைவசித்தாந்த மரபிற்கும் காலனிய கிறித்தவ மரபிற்குமான தொடர்பை கா.சிவத்தம்பி விளக்குகிறார். பிராமணிய நீக்கம் என்பதில் இருவரது அரசியலும் இணைந்திருந்தன. இதனால் வட்டாரப் பண்பாட்டு முதன்மை ஆங்கிலேயர் இடத்திலும் பிராமணர் அல்லாதோர் இடத்திலும் பார்க்க முடிகிறது. ஆனால் இந்திய சமூகச் சூழலுக்கு உள்ளிருந்தே கவனிக்கப்படும் வட்டாரப் பண்பாட்டு முதன்மை வெளிப்படையாகவே சாதியைக் கொண்டிருந்தது. ஆனால் ஆங்கிலேயரிடத்தில் இருந்து வந்தவை கலப்பினப் பண்போடு இருப்பதைக் காணலாம். இந்தியப் பண்பாட்டிலிருந்து நீங்கிய சிந்தனைமுறையிலிருந்து உருவாக்கப்படும் வட்டாரப்பண்பாட்டிற்கும் உள்ளிருந்தே எழுப்பப்படும் மரபிற்குமான இணைவு விலகலைத் தனியே ஆராயலாம்.

மறைமலையடிகள் பாதிரிமார்கள் மீது நல்லெண்ணம் கொண்டிருந்தார். பாதிரிமார்கள் இங்கு வராதுபோயிருந்தால் இங்கு கல்வி வளர்ந்திருக்காது என்பது அவரது சொற்பொழிவில் இருந்து நமக்குக் கிடைக்கின்றது. ஜி.யு.போப் அவர்களும் திருவாசகத்தை மொழிபெயர்த்து சைவசித்தாந்தம் கிறித்தவ மெய்யியலோடு இணையும் இடங்களைச் சுட்டிக்காட்டுகிறார். அத்தோடு தமிழர்களின் தொன்மையை விளங்க சைவசித்தாந்தமே சாட்சி என்றும் கூறுகிறார். கிறித்தவ பாதிரிமார்களின் நடவடிக்கைகளால் தமிழர்கள் தாம் ஒரு புராதானமான நாகரிகத்தின் வாரிசுகள் எனும் உணர்வைப் பெற்றார்கள் என்று சிவத்தம்பி கூறியிருப்பதன்வழி தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்திற்கும் கிறித்தவ மரபிற்குமான அரூப பாலத்தைப் பார்க்கலாம்.

வர்க்க வேறுபாடும் உட்பூசலும்

பிராமண எதிர்ப்பியக்கத்தினுள்ளாக வர்க்க மோதல்கள் இருந்தன. இந்திய இயங்கியலில் ஒருமித்த கருத்துத் தொகுதிக்குள்ளாக அமையும் வர்க்க வேறுபாடே வெவ்வேறு சிந்தனை முறைகளை உருவாக்குகின்றது. தனித்தமிழ் பற்றிய ஓர்மை இந்திய தேசிய இயக்கத்தின் பகுதியாக, சுப்பிரமணிய சிவா, பாரதியார், வ.உ,சிதம்பரனார் போன்றோர்களால் முன்னெடுக்கப்பட்டபோது பிராமணிய சிந்தனைமுறையிலிருந்து இயக்கப்படும் காங்கிரஸ் இவர்களை ஒன்றுபடுத்தி இருந்தது. நிலக்கிழமையுள்ள பிராமணர்கள் உற்பத்தியிலிருந்து தங்களை நீக்கிக்கொண்டவர்கள். ஆனால் இத்தகைய வடிவம் நிலக்கிழமையுள்ள பிராமணரல்லாதோருக்குக் குறிப்பாக வேளாளருக்கு நேரடியாகக் கிடைக்கப்பெறவில்லை. பிராமணர் என்பது பல்வேறு குலக்குழுக்களையும் பிராமணரல்லாதோர் ஒரே சமூக மதிப்புடைய பல்வேறு இனக்குழுக்களை ஒன்றிணைக்கும் கருத்தியலாக உருவாவதற்கும் இந்த உற்பத்தி உறவு காரணமாயிருக்கிறது. இவ்வாறு இணைவுண்ட இனக்குழுக்களும் நிலக்கிழமையல்லாத இனக்குழுக்களைப் பிரிக்கும் வாய்ப்பைக் கொண்டிருந்தது. இதுவே தென்னிந்திய நலவுரிமைச் சங்கமாக வளர்ந்து பின்னர் திராவிடர் கழகம் ஆனது எனலாம். தனித்தமிழ் இயக்கத்துள் இருந்த இந்த சாதிய வர்க்க உட்பூசலை அ.மாதவையர் சுதேசமித்திரன் இதழில் தேனருவித்தீரம் எனும் கட்டுரையில் எழுதி இருக்கிறார்.

திராவிட இயக்கமும் தனித்தமிழும்

தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் தொடக்கத்தில் சைவசித்தாந்த நிலைபாட்டையே கொண்டிருந்தது. பி. தியாகராஜர் சைவ சித்தாந்த மகா சமாஜத்திலும் இருந்தார். பிராமணர்களை எதிர்ப்பது, அரசு பதவிகளில் பிராணரல்லாதோரை ஏற்றுவது என்பது அடிப்படை வேட்கையாக இருந்தது. மக்கள் மத்தியிலும் இவர்களது அரசியல் செயல்பாடு, போராட்டவடிவம் முதலியவை கொண்டு ஜமீன் கட்சி என்று ஜஸ்டிஸ் கட்சியைச் சொல்லும் வழக்கம் இருந்தாக சிவத்தம்பி காட்டுகிறார். 1922ல் காங்கிரஸை விட்டு விலகிய பெரியார் 1926 முதற்கொண்டு தனது சுயமரியாதை வாதத்தை முன்வைக்கத்தொடங்கி இருந்தார். ஆத்திகமும், கடவுள் நம்பிக்கையும் சைவ வைணவ நம்பிக்கையும் பிராமணர்க்கே உரியன என்றும் தமிழர்க்கு சாதியில்லை மதமில்லை என்பதான பிரச்சாரம் பெரியாரால் முன்னெடுக்கப்பட்டது. பெரியாரின் இந்தச் சிந்தனைமுறை தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தினரிடையே பெரும் அதிர்வை உண்டாக்கியிருந்தது. திரு.வி.க., மறைமலையடிகள் போன்றோரால் சுயமரியாதை இயக்கம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. தனித்தமிழ் இயக்கம் பிராமணரல்லாதோர் இயக்கத்தின் முதற்கட்டமாகவும் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் அதன் அடுத்த கட்டமாகவும் பார்க்கலாம். இந்த இயக்கம் தனித்தமிழ் இயக்கத்தினரால் அடையமுடியாத விளிம்புநிலை மக்களையும் உள்ளடக்கியப் பண்பைப் பெற்றிருந்தது. கடவுள் மறுப்புக் கொள்கை தமிழ்ப் பண்பாட்டிலிருந்து நீக்கி வைக்கப்பட்ட மக்களுக்கான பண்பாட்டு மீட்புவாதமாகப் பெரியாரால் முன்னெடுக்கப்பட்டபோது தமிழர் மதம், தமிழர் மெய்யியல் பற்றிய சிந்தனைகள் வேறுவிதமான விளக்கங்களைப் பெற்றன. பெரியாருடைய ஆய்வுமுறைகள் தமிழ்ப் பண்பாட்டை தொல்காப்பியம், சங்க இலக்கியம் முதலியவற்றில் இருந்து மீட்டெடுப்பதாய் இல்லை. நிகழ்காலத்தன்மைக்கே அவரது எழுத்துகள் முன்னுரிமைத் தந்தன. தொன்மையின் ஊடாக உருவாகும் பண்பாட்டில் சாதியும் பெண்ணிழிவும் மிக்கிருந்ததால் பெரியார் அவற்றைக் கடுமையாக விமர்சித்தார். பழம்மரபுகளைப் போற்றும் அல்லது புதுப்பிக்கும் இயக்கங்களுடன் முற்றிலுமாக முரண்பட்டிருந்தார். தனித்தமிழ் இயக்கம் கண்டடைந்திருந்த மொழியால் கட்டமைக்கும் பண்பாடு எனும் ஆய்வுமுறையைப் பெரியாரும் தொடர்ந்திருப்பதை அவரது எழுத்துகள் காட்டுகின்றன. ஆங்கிலம் சமற்கிருதம் போன்ற மொழிகளில் கடவுள் என்ற உணர்வைக் கடத்த தனி வார்த்தை இருந்திருப்பதைச் சுட்டி தமிழில் அவ்வாறு இல்லை என்றும் அதேபோல கடவுள் மறுப்பாளரைச் சுட்ட இருக்கும் தனி வார்த்தையும் தமிழில் இல்லை என்கிறார். இதனால் கடவுள் பற்றிய எண்ணம் ஏற்பட தமிழ் நிலத்தில் அவசியம் ஏற்படவில்லை என்பதாக பெரியாரின் கருத்தாக்க ஏரணம் அமைகின்றது. வரலாற்றுநிலையில் தமிழர்க்குத் தரப்பட்ட கடவுள் குறித்தான சிந்தனைகளும் அல்லது இயற்கைவழிப்பட்ட ஓர் தெய்வ மரபும் மொழியில் ஒரு உணர்வாகத் தோன்றாததைப் பெரியார் சுட்டிக்காட்டுகிறார் என்பதாக இதை நாம் விளங்கலாம். சைவசித்தாந்தப் பின்னணியை உடைய தனித்தமிழ் இயக்கம் இக்கருத்தில் முற்றாக வேறொரு நிலைப்பாடைக் கொண்டிருந்தது. இந்த இடத்திலிருந்தே தனித்தமிழ் பற்றிய சிந்தனையும் மழுங்கத்தொடங்கி இருக்கின்றன. திராவிடர் கழகத்தினர் ஒரு கலப்பினப் பண்பிலான மொழிப்பண்பாட்டைக் கட்டமைக்க முயன்றனர். தனித்தமிழ் இயக்கம் அத்தகைய கலப்பினப் பண்பிற்கு எதிரான மெய்யியலைக் கொண்டிருந்தது. கலப்பினப் பண்பு மொழித் தூய்மைவாதத்திற்கு எதிரான போக்கையும் கொண்டிருந்ததால் எளிய மக்களையும் திராவிட கருத்தால் அடையமுடிந்தது. தனித்தமிழ் இயக்கமும் ஒரு மூடுண்ட தொகுதியாக இராது அனைவரையும் உள்ளடக்கிய தமிழ் அறத்தை மையமாகக் கொண்ட கலப்பினவாதத்தை ஆதரித்திருந்தால் இன்றைக்கு வேறுவிதமான ஒரு அரசியல் சூழல் நமக்குச் சாத்தியப்பட்டிருக்கும். படிப்படியாகத் திராவிடர் கழகத்திற்கும் தனித்தமிழுக்குமான உறவரிப்பு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோற்ற காலத்தில் சுத்தமாக அற்றுப்போனதாக சிவத்தம்பி குறிப்பிடுவது முக்கியமானதாகும். அரசியல் இயக்கம் வெகுஜனப் பட்டதாக இருக்கவேண்டும்போது தனித்தமிழ் மாதிரியான மொழித்தூய்மைவாத இயக்கங்கள் மக்களை இணைப்பதற்கு, தொடர்புபடுத்துவதற்குப் பெருந்தடையாக இருக்கும். திராவிடர் கழகம் தனித்தமிழ் இயக்கத்தின் பண்பாட்டு உருவாக்கவாதத்தை ஏற்றுக்கொண்டதே அன்றி மொழித்தூய்மையை ஏற்கவில்லை. ஆனால் திராவிடர் கழகம் சமூகத் தேவையைக் கருதிற்கொண்டு பெண்விடுதலை, சாதி மறுப்பு, கடவுள் மறுப்பு என விளிம்புநிலை மக்களை ஒன்றிணைத்தது. திராவிட முன்னேற்றக் கழகம், தனித்தமிழ் இயக்கத்தின் பண்பாட்டு மீட்புணர்வோடு திராவிடர் கழகத்தின் சமயச் சார்பற்ற பகுத்தறிவு நிலைப்பாட்டைத் தமிழ்ப் பண்பாடாகக் கட்டமைக்க விழைந்தது. ஆனால் அரசியல் அதிகாரத்தைத் தக்க வைக்க பொதுபுத்திக் கருத்துகளோடு ஒன்றுவது நவீன முதலாளித்துவ காலத்தின் வருகை இவையெல்லாம் இதுவரை சமைந்து வந்த மொழியரசியல், கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு முதலிய விடுதலை கருத்துகளை தி.மு.க. மழுங்கடித்ததைத் தான் தற்கால சமூகத்தின்வழி அறிகின்றோம்.

முடிவுரை

தேசியம் உருவான தேசங்களில் தேசியத்தின் வன்முறை குறித்து ஆய்வு நடப்பதற்கும் தேசிய உணர்ச்சி அற்ற அல்லது பன்மீய தேசியச் சூழல் உள்ள நாடுகளில் தேசிய உருவாக்கம் குறித்தான ஆய்வு நடப்பதற்கும் உள்ள சமூக-அரசியல் சூழல்களை உணர முடிகின்றது. அந்த வகையில் இரட்டை தேசிய உணர்ச்சி ஒரே நேரத்தில் எழுந்த காலமாகத் தமிழ் தேசிய உருவாக்கக் காலம் அமைகின்றது. இன்றைக்குத் தமிழ்ப் பண்பாடாக நாம் பேசும் கூறுகள் அனைத்தும் காலனியக் கிறித்தவ சமயத்தாராலும், தனித்தமிழ் இயக்கச் சிந்தனைப் பள்ளியில் இருந்து கிளைத்த திராவிடப் பண்பாட்டாலும் கட்டமைக்கப்பட்டவை. கா. சிவத்தம்பி தமிழ்ப் பண்பாடு எனும் உணர்வுருவாக்கத்திற்கு அடிப்படையான சமூக அரசியல் பண்பாட்டுச் சூழல்களை இந்நூலுள் ஆராய்கிறார். தனித்தமிழ் இயக்கம் தோற்றம் பெற்றதற்கான சமூகவியல் சூழல்களை ஆராயும்போது பிராமணர்கள் அடைந்த சலுகைகளை அத்தகைய பாதுகாப்புச் சூழல் இருந்தும் பெறமுடியாத ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் ஒத்தக்கருத்துடையோராய் ஒன்றிணைந்து தாமும் அத்தகைய சமூக மதிப்பைப் பெறவேண்டி முன்னெடுக்கும் அரசியல் நிகழ்த்துதலாக நோக்கும் இவ்வணுகுமுறை தமிழ்ப் பண்பாடு, தமிழ் மெய்யியல், தமிழினவுணர்வு முதலிய பெருமித வாதங்களை அடிநிலைகளாக்குகின்றது. இதன்வழி மேற்பரப்பு வெளிப்படையாக நிலவுடைமை இடைநிலைச் சாதியினரின் முன்னேற்றம் முதன்மை செய்யப்பட்டிருக்கின்றதைக் காணலாம். தமிழ் தேசிய உணர்வு மொழியால் மக்களை ஒருங்கிணைப்பதாய் இருந்தாலும் இங்கே முன்னமே கெட்டிதட்டிப்போயுள்ள சாதிய, வர்க்க, பாலின கருத்தாக்கங்களை நீக்காமல் மக்களுக்குத் மொழிவழி தேசிய உணர்வை ஊட்டமுடியாது என்பதையே தனித்தமிழியக்க உட்பூசலும் இயக்கச் செயல்பாடும் நமக்குக் காட்டுகின்றன. இந்தியாவிலும் தமிழகத்திலும் தேசிய உணர்ச்சி முழுமையாகத் தோன்ற தடையாக இருப்பது சாதி உணர்ச்சி மட்டுமே. தேசிய உணர்ச்சியும் இங்கு சாதிய உணர்வில் இருந்து எழுப்பப்பட்டிருப்பதை நாம் இந்திய தேசிய உருவாக்க இயங்கியலாகக் கருத இடமளிக்கிறது. சாதிய, வர்க்க, பாலின உணர்வைக் கடக்க வைக்கும் மொழிவழி தேசிய உருவாக்கத்தைத் தமிழின் வரலாற்றின் வழியே கண்டடைய முடியுமா? எனும் கேள்வி இன்றைக்கு நமக்குள் எழுப்பிக் கொள்ளவேண்டிய கேள்விகளில் ஒன்றாகும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை