"தாத்தா, தா தா, த் ஆ"
தரையில் தவழ்ந்து, தாத்தாவை நிமிர்ந்து பார்த்து, மழலை மொழியில் அழைக்கும், தனது பத்து மாத பேரனைப் பார்த்ததும், சிவானந்தம் பிள்ளைக்கு கவலைகள் எல்லாம் சிறிது நேரம் மறந்துவிட்டது.
தனது செல்ல மகள் அமுதாவிற்குப் பிறந்த செல்லப்பிள்ளை. அவனை அப்படியே தூக்கி நெஞ்சோடு அணைத்து, கொஞ்சியபடியே சீனி டப்பாவைத் திறந்து, அவன் வாயில் கொஞ்சம் வைத்தார் சிவானந்தம். அதற்காகவே அவரை அழைத்தது போல, பையன் அமைதி ஆகிவிட்டான். சிவானந்தம் பிள்ளை ஒரு வேலி நிலத்துக்குச் சொந்தக்காரர். நாற்பது ஆண்டுகளாக அவருக்குத் தெரிந்த தொழில் சாகுபடிதான். ஆனால் சில ஆண்டுகளாகவே விவசாயம் வாய்க்கும் வயிற்றுக்குமே சரியாக உள்ளது. அவர் கையில் உள்ள குழந்தையை வாங்கிக்கொள்ள மகள் அமுதா அருகில் வந்தாள்.
"அப்பா அறுவடை முடிஞ்சதும், நான் எங்க வீட்டுக்குப் போகலாமா?"
"அதற்குதானே அம்மா வீட்டுக்கும், வயலுக்கும் நாலு மாதமா, நடையா நடக்குறேன். நீ நெனச்சபடி நல்லதே நடக்கும். எதற்கும் கவலைப்படாதே."
வளைகாப்புப் போட, பிள்ளை வயிற்றுக்காரியாக, தாய் வீடு வந்தவள்தான் அமுதா. பிள்ளை பிறந்த பிறகும், அவளை அழைத்து செல்ல, கணவர் வீட்டிலிருந்து யாரும் வரவில்லை.
"பதினாறுக்கு, பிள்ளைக்கு காப்பும் செயினும் மோதிரமும் போட்டால்தான் மருமகளை அழைக்க வருவோம்" என மாமியார் பிடிவாதமாகச் சொல்லிவிட்டார். சிவானந்தமும் வெட்கத்தை விட்டு பேசிப் பார்த்தார், "சம்மந்தியம்மா, ஒன்னும் மனசுல நெனச்சிக்காம, தாயையும் புள்ளையையும் வீட்டுக்கு அழைச்சிட்டு போங்க. இந்த வெள்ளாமையில, புள்ளைக்குப் போட வேண்டியத கண்டிப்பா நான் போட்டுடுறேன்"
"அய்யா உங்க பேச்ச, ஓடம்போக்கிலதான் எழுதனும். கல்யானத்துக்கு இருபத்தஞ்சு பவுனு பேசி, இருபது பவுன மட்டும் போட்டு, திறமையா, பொண்ண அனுப்புன ஆள்தானே நீங்க"
"அந்த அஞ்சு பவுனதான், கடன் வாங்கி போட்டு முடிச்சுட்டேனம்மா"
சிவானந்தம் பேசியது எதையும் அவர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. நல்ல இடம் என்று எல்லோரும் சொன்னதால்தான், அமுதாவைக் கட்டிக் கொடுத்தார்.
மாப்பிள்ளை, நகை அடகு கடை வைத்துள்ளார். அப்பா இல்லை, அம்மா மட்டும்தான். பணத்துக்குப் பஞ்சம் இல்லை. அம்மா வளர்ப்பு என்பதால், நல்லது கெட்டது தெரியாமல், அம்மா சொல்வதே வேதம் என்று வளர்ந்துவிட்டார் மாப்பிள்ளை. பெரிய இடம்தான், ஆனால் இவ்வளவு சின்னத்தனமாக இருப்பார்கள் என்று சிவானந்தம் நினைக்கவில்லை. நாள் முழுவதும் பணத்தையும், பவுனையும் பார்த்துக் கொண்டிருந்தாலும், பணத்தாசை தீரவில்லை.
இதிலே வேதனையில் தவிப்பது அமுதாவின் அம்மா அன்னபூரணிதான். "பணத்துக்கு அல்லாடும் கணவருக்காக கவலைப்படுவதா, இல்லை வாழாவெட்டியாய் வந்து கிடக்கும் மகளை நினைத்து கவலைப்படுவதா" என்று வேதனைப்படுவாள்.
"அடுக்களையில், அரிசிப்பானையில், ஐம்பது பவுன், அறுபது பவுன் என்று ஒரு காலத்தில் அலட்சியமாக வைத்திருந்தேன். விவசாயம், விவசாயம் என்று எல்லா நகையும் வித்து திண்ணாச்சு. அப்ப கிராம் முன்னூறுக்கு வித்த தங்கத்த, இன்னைக்கு, பத்தாயிரம் கொடுத்துள்ள வாங்க வேண்டியிருக்கு. எம் பொண்ணுக்கு, இரண்டு பவுன் கூட போட முடியாத பாவியாகிவிட்டேனே" என புலம்புவாள். அமுதாவின் பிரச்சனையை முடிக்க, நாளை அறுவடைக்குத் தேதி குறித்து விட்டார் சிவானந்தம்.
கடந்த ஐந்து மாதமாக, வீட்டுக்கும் வயலுக்கும் இருநூறு தடவையாவது நடந்திருப்பார். ஒரு களை கண்ணில் பட்டாலும் அதைப் பிடுங்கி எறிந்தால்தான் அவருக்கு நிம்மதி.
பச்சை பிள்ளையைப் போல், பயிரைப் பார்த்து பார்த்து வளர்த்தார்.
அறுவடை செய்ய ஆட்கள் தயார் செய்ய, கீழத்தெரு ரெத்தினத்தை வீட்டுக்கு வர சொல்லி இருந்தார். அவரிடம் அறுவடை வேலையை ஒப்படைத்தால் கச்சிதமாக முடித்துவிடுவார்.
அவர் சொன்னால் கேட்பதற்கு, ஆட்களும், நடவாட்களும் தயாராக இருப்பார்கள்.
ஆனால் அவர் சொன்னபடி இன்று வரவில்லை. முப்பது வருடத்துக்கு முன்பெல்லாம்,
வயல் வேலை செய்யும் ஆட்கள் வீட்டிலேயே கெடயாய் கிடப்பார்கள். இப்போது காலம் மாறிவிட்டது.
ரெத்தினத்தை எதிர்பார்த்து காத்திருந்த போது, அழையாத விருந்தாளியாக பக்கத்து தெரு நண்பர் முருகையா பிள்ளை வீட்டுக்கு வந்தார். "என்னப்பா, அங்கவஸ்திரமெல்லாம் போட்டுகிட்டு எங்க கிளம்பிட்ட?”
"நாளை அறுக்கலாம்னு இருக்கேன். அதான் ரெத்தினத்தை, பத்து மணிக்கு வர சொன்னேன். இன்னும் வாரான். அவன பார்த்துகிட்டுதான் உட்கார்ந்து கிடக்கிறேன்"
"இந்தக் காலத்திலும், இவனுகங்களையெல்லாம் நம்பிக்கிட்டு உட்கார்ந்து இருக்கியே. உனக்குத் தெரியாததல்ல, நானும் ஒன்னப்போல, ஒரு வேலி நெலத்துல சாகுபடி செஞ்சு, வரவு செலவு செஞ்சவன்தான். இன்னக்கி எல்லாத்தையும் ரியல் எஸ்டேட்காரனுங்கள்ட பல லட்சத்துக்கு வித்துட்டு நிம்மதியா இருக்கேன்.
மாடு கண்ண பாக்குறது, வயல் வரப்ப பாக்குறதுன்னு எத்தனையோ வருஷமா, மாடா வேல பாத்தியே எவ்வளவு காசு சேர்த்து வச்சிருக்க? போன மாசம் ஒன்னோட பேரப்பிள்ளை, உடம்பு சரியில்லாம போனப்ப கூட, ஆயிரம் ரூபா வேணும்னு, என் வீட்டு வாசல்லதான நின்ன. பல லட்ச ரூபாய்க்கு நெலத்த வச்சுகிட்டு, ஆயிரம் ரூபாய்க்கு ஏன் கையேந்தி நிக்கனும்? எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு போறியா"
"இல்ல முருகா, இந்த வயலுல வெளஞ்சததான், இத்தனை வருஷமா சாப்பிட்டு வளர்ந்திருக்கோம். சின்ன வயசுல, சோறு போட்ட அப்பா அம்மாவ, வயசாயிட்டுன்னு ஒதுக்கித் தள்ள முடியுமா? அது போலதான் இந்த நெலமும். எல்லாரும் சொகுசா இருக்கனும்னு, நிலத்தை பிளாட் போட்டு வித்தா, மக்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்வாங்க? அப்புறம் அரிசிக்கே, அசலூர் காரன நம்பிக் கெடக்கனும். அந்தப் பாவத்தை நாம செய்யலாமா? திங்கிற சோத்த குடுக்குற மண்ணை விக்கிறதும் ஒன்னுதான், பஞ்சம் வந்துட்டுன்னு பெத்த புள்ளய விற்கிறதும் ஒன்னுதான்"
"அதுக்கு சொல்லுல சிவானந்தம், அந்தக் காலத்துல விவசாயம்னா, சோறு போட்டாலே, நாள் முழுக்க வேலை செய்ய ஆளுக இருந்தாங்க.
வெளஞ்ச நெல்லைக் கூட பத்தாயத்துல கொட்டி வச்சு, மாசா மாசம் கொஞ்சம் எடுத்து, அவிச்சு, காய வச்து, மில்லுல அரைச்சு, அரிசியாக்கி, வருஷம் முழுக்க உட்கார்ந்து சாப்பிடுவோம். அடுத்த வருஷ வெத நெல்லுக்கு கூட, குதிர்ல, கோட்டையா கட்டி வச்சு, தெளிச்சு, நட்டுடுவோம். இப்ப அப்படியா? வெத, வெதக்கவே சொசைட்டி காரர்களையும், பைனான்ஸ்காரர்களையும் நம்பிக் கெடக்க வேண்டியிருக்கு.
"சொசைட்டிலதான் அறுபத்தஞ்சு வயசாச்சுன்னு, எனக்கு லோன் கொடுக்கலயே. மன்னார்குடி சேனாதிபதிதான் எந்தக் கையெழுத்தும் இல்லாம அம்பதாயிரம் தூக்கி கொடுத்தாரு."
"அது மட்டுமா மழை, வெள்ளம், புயலு, காத்துன்னு பயிர, பொறந்த குழந்தைய, ராப்பகலா கண்முழிச்சு பார்க்குற தாய் மாதிரி, பார்க்கனும். லாட்டரி, சூதாட்டம் மாதிரி ஆயிட்டுப்பா விவசாயமும். நாமதான் புத்திசாலித்தனமா இருக்கனும்" பேச்சு முடியாமலேயே முடிந்து விட்டது.
ரெத்தினம் வராததால், அவரைத் தேடி கீழத்தெருவுக்கே, பொடி நடையாக நடந்தார் சிவானந்தம்.. அவர் இதுவரை அங்கு சென்றதில்லை. தூர வரும்போதே, சிவானந்தத்தை, ரெத்தினம் மனைவி அஞ்சலை பார்த்துவிட்டாள்.
அவளுக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. அவசரம் அவசரமாக வீட்டுக்குள் இருந்த, பிளாஸ்டிக் சேரை எடுத்து வந்து, புடவை முந்தானையால் நன்றாகத் துடைத்து,
"வாங்க அய்யா வாங்க அய்யா" என வாய் நிறைய வரவேற்றாள்.
"எங்க தாயி ரெத்தினம்?"
"நேத்து முச்சூடும் நாளைக்கு, அய்யா வீட்டுக்கு போகனும்னு சொல்லிக்கிட்டுத்தான் இருந்தாரு. ஆனால் ராத்திரி சாப்பிட்ட பாழாய் போன சாராயத்தால, எழுப்பினாலும் எழும்பாம, இன்னும் படுத்தே கிடக்றாரு. வேலை செஞ்சு, உடம்பு வலின்னு குடிச்சது போயி, இப்ப வேலைக்கு போகாமலேயே குடிக்க ஆரம்பிச்சிட்டாரு.ப் என்ன செய்ய, என் தலையெழுத்து."
வீட்டுக்கு வந்த முதலாளிக்கு, என்ன கொடுப்பது, ஏது கொடுப்பது, அப்படி கொடுத்தாலும், அவர் அதை வாங்கிக் கொள்வாரா என்று அஞ்சலை யோசித்து கொண்டிருக்கும்போதே, "கொஞ்சம் தண்ணீ இருந்தா கொடு புள்ள" என்று வாங்கிக் குடித்தார் சிவானந்தம்.
முதலாளியின் குரல் கேட்டு பதறி அடித்து எழுந்து, கொல்லையில் முகம் கழுவி வெளியில் ஓடி வந்த ரெத்தினம், "அய்யா, என்ன மன்னிச்சிடுங்க. நேத்து கொஞ்சம் ஓவரா போச்சு. நாளை கருக்கல்ல, முப்பது பேரோடு வயலுக்கு வந்திடறேன். நீங்க போங்க "என்று அனுப்பி வைத்தான்.
வெயிலோடு வெயிலாக, வீடு வந்து சேர்ந்தவுடன், அலை பேசி மணி அடித்தது. அழைத்தது மன்னார்குடி பைனான்ஸ்காரர் சேனாதிபதிதான்.
"அய்யா, நாளை நம்ம வயல் அறுவடை என்று கேள்விப்பட்டேன்.
சந்தோஷம். நாளை மதியம் வருகிறேன்"
"அறுவடை என்பதே, கொஞ்சம் முன்னதான் முடிவாச்சு. அதற்குள்ள உங்களுக்கு சேதி கிடைச்சிருச்சா? பெரிய ஒற்றர் படையே வச்சிருப்பீங்க போல இருக்கே. அறுவடை முடிய நாளை சாயந்தரம் ஆகும். அதனால நீங்க, மறுநாள் வாங்க. வாங்குன கடனைக் கொடுக்காம எங்க போகப் போறோம்."
"ஏன் சாயந்தரம் ஆகுது. அதான் கதிர் அறுக்க, கதிர் அடுக்க, நெல்லு தூத்த,
வைக்க அடுக்கி கட்டுப் போட, எல்லாத்துக்கும் மெஷினு வந்துட்டே.
காச தூக்கி எறிஞ்சா, மதியமே காரியம் ஆகப்போவுது. களத்துலயே, நெல்ல எடை போட்டு, சென்டர் ரேட்டுக்கு காசு கொடுக்க, ஆள் ரெடியா இருக்கு."
"மெஷினு வச்சா மூனு மணி நேரத்துல வேலை முடிஞ்சுடும். வாஸ்தவந்தான். ஆனா மூனு தலைமுறையா, இருபது, முப்பது குடும்பத்துக்கு, நம்மால் முடிஞ்ச வேலை கொடுத்து, வாழ்ந்துட்டோம். ஒருத்தர் சாப்பிடுற காச, பத்து பேருக்குப் பிரிச்சு கொடுத்தா, நமக்குதானே புண்ணியம்.”
"நீங்க பழைய ஆளு. நான் உங்கக்கிட்ட பேச முடியாது."
சிவானந்தம் மறுநாள் நாள் காலை, நான்கு மணிக்கே எழுந்து,
கிணற்றில், தண்ணீர் எடுத்து, குளித்து, சாமி மாடத்தில் நின்று, கடவுளை வணங்கி, விபூதியை அள்ளி பூசிக்கொண்டார்.
அன்னபூரணி, காபி கொண்டு வந்து, தருவாள் எனக் காத்திருந்த போது, அமுதாவே ஒரு தட்டில், சூடாக இரண்டு தோசைகளை, தேங்காய் சட்னியோடு, கொண்டு வந்து வைத்தாள்.
"சாப்பிட்டு விட்டு போங்கப்பா. வயலுல சாப்பிட முடியுமோ முடியாதோ. மயக்கம் வந்தா, என்ன செய்வீங்க? வயசு ஆகுதுல்ல" என்றுமில்லாத வகையில் அவள் முகம் பளிச்சென்று இருந்தது. கணவனை நாளை காணப்போகிறோம், என்ற உற்சாகம் அவள் முகத்தில் தெரிந்தது. அதைப் பார்த்ததும் சிவானந்தத்தின் கண்கள் கலங்கின.
"என்ன இருந்தாலும் உன் புருஷன் செஞ்சது தப்புதாம்மா."
"அவங்க மேல என்னப்பா தப்பு இருக்கு. அவங்களா இருபத்தஞ்சு பவுன் வேணும்னு கேட்டாங்க. நீங்கதானே நல்ல இடம் கிடைக்காதுன்னு, பவுன ஏத்தி விட்டீங்க. அப்புறம் அதுல கொறஞ்சா கேட்க மாட்டாங்களா?
மனுஷனுக்கு நாக்கும், வாக்கும் முக்கியம்னு நீங்க தானே சொல்வீங்க.
போன வருடமே, நான் உண்டானது தெரிஞ்சும், ஒரு காப்பு கூட தயார் செய்யாதது யார் தப்பு?
சிவானந்தம் எதையும் மறுத்து பேசவில்லை. "நான் வச்சுக்கிட்டாம்மா, இல்லைன்னு சொன்னேன். என்னோட நெலம இப்படி. உன் மேலேயும் எந்தத் தப்பும் இல்ல. நம்ம நாட்டுல, எந்த பொண்ணுதான், புருஷன விட்டுக் கொடுத்து பேசியிருக்காங்க"
களத்து மேட்டுக்கு வந்துவிட்டார் சிவானந்தம். விடிவதற்கு முன்பே நெல்லை அறுத்து, கட்டுப் போட்டுவிட்டார்கள் ரெத்தினத்தின் ஆட்கள். களத்தில் கொஞ்ச நேரம் காய வைத்து, கதிர்களை, அடிக்க ஆரம்பித்தார்கள். காற்றுள்ள திசையில், முறங்களைப் பிடித்து, நெல் வேறு, பதர் வேறாகத் தூற்ற ஆரம்பித்தனர் ஒரு குழுவினர்.
கவனித்துப் பார்த்த பயிரல்லவா? கொத்து, கொத்தாய் நெல்மணிகள்.
எதிர் பாராத விளைச்சல். சேனாதிபதியும் வந்து விட்டார். கூடவே களத்தில் நெல் எடுத்து, பணம் பட்டுவாடா செய்பவர்களும், வந்துவிட்டார்கள்.
கூலி பிரிப்பு தொடங்கியது. குல தெய்வத்துக்கு மூன்று மரக்கால், மாரியம்மனுக்கு மூன்று மரக்கால், எல்லை அம்மனுக்கு மூன்று மரக்கால், சித்திரை திருவிழாவிற்கு மூன்று மரக்கால், தலையாரிக்கு மூன்று மரக்கால் என அளந்த பிறகு காலை முதல் வேலை பார்த்த முப்பது பேருக்கும், ஆளுக்கு பத்து மரக்கால் வீதமும், நெல் அளக்கப்பட்டு அளிக்கப்பட்டது. மீத நெல் சணல் சாக்கில், பிடிக்கப்பட்டது. நூறுக்கும் மேற்பட்ட மூட்டைகள் கிடைத்தன.
நெல் கொள்முதலுக்கு வந்தவர்கள், நெல் மூட்டைகளைப் பெற்றுக்கொண்டு, ஐநூறு ரூபாய் கட்டு மூன்றையும், சில நூறு ரூபாய் நோட்டுகளையும் சிவானந்தத்திடம் கொடுத்து விட்டு, லாரியில், நெல்லை ஏற்றிக் கொண்டு புறப்பட்டார்கள். சேனாதிபதியும் அவர் கொடுத்த தொகை ஐம்பதாயிரத்தை வட்டியுடன் பெற்றுக்கொண்டு, நன்றி கூறி புறப்பட்டார்.
சிவானந்தம் களத்து மேட்டில் உட்கார்ந்து விட்டார். கையில் இருப்பதோ ஒரு லட்சம். ஊருக்குத் தான் அது பெரிய காசு. இரண்டு பவுன் நகை வாங்க, இன்னும் அரை லட்சம் வேண்டும். நீண்ட நேரம் யோசித்தும் முடிவு ஒன்றும் தெரியவில்லை. வீட்டுப் பக்கம் போகவே, அச்சமாக இருந்தது.
அமுதா முகத்தில் எப்படி விழிப்பேன். அவருக்குத் தெரிந்த ஒரே வழி சேனாதிபதிதான். அவரை போனில் தொடர்பு கொண்டார். "தம்பி! தப்பா எடுத்துக்காதீங்க. மதியம் கொடுத்த ஐம்பதாயிரம், திரும்பவும், எனக்குத் தேவைப்படுது. அதைக் கடனா கொடுத்து உதவனும்"
"என்ன அய்யா, எப்பவும் சம்பா நடவுக்கு வாங்கி, அறுவடையில கொடுப்பீங்க. இப்ப என்ன அவசரம்?"
சேனாதிபதியின் கேள்விக்கு, அமுதாவின் பதிமூன்று மாத வாழ்க்கை போராட்டத்தை சுருக்கமாகச் சொல்லி முடித்தார்.
"தம்பி மன்னார்குடியில்தான் நகை வாங்கலாம்னு இருக்கேன். அதனால அந்தி நேரத்தில் உங்க வீட்டுக்கே வருகிறேன். இல்லைன்னு மட்டும் சொல்லிடாதீங்க."
"யாரு போனுல" சேனாதிபதியின் அம்மா மகனிடம் கேட்டார்.
"மாவூர்ல பெரிய மிராசுதாருமா. நம்மிடம் கடன் வாங்கி இன்றுதான் முடிச்சார். அவர் பொண்ண கட்டிக் கொடுத்த இடத்துல, புள்ள பதினாறுக்கு, நகை போடலேன்னு டார்ச்சர் கொடுக்கிறாங்களாம். அதனால ஐம்பதாயிரம் கடனா கேட்கிறார்"
"நீ என்ன செய்யப் போற"
"இது ஒரு பொண்ணோட, வாழ்க்கை பிரச்சனை என்பதால், கொடுத்து உதவலாமுன்னு இருக்கேன். அவர் நல்ல மனுஷன். கண்டிப்பா திரும்ப வந்துடும்."
இரவு ஏழு மணி. சேனாதிபதி வீட்டுக்கு சிவானந்தம் வந்துவிட்டார்.
அம்மாவும் பிள்ளையும் அன்போடு வரவேற்றார்கள். வரலட்சுமி காபி கொண்டு வந்து கொடுத்தார்.
அதோடு, பேப்பரில் சுற்றிய ஐம்பதாயிரத்தை அவர் கைகளில் கொடுத்தார்கள். அந்தப் பொட்லத்தைத் தொட்டவுடன், அதில் உள்ள தொகை அவர் கண்களுக்குத் தெரியவில்லை, அமுதாவின் மலர்ந்த முகம்தான் தெரிந்தது. "அம்மா, பொதுவாக வட்டித் தொழில் செய்பவர்கள், கொஞ்சம் கறாராக இருப்பார்கள். ஆனால் உங்கள் பிள்ளை மனிதாபிமானம் உள்ளவராக உள்ளார். முதலில் சம்பா மட்டும்தான் போடுவேன். இந்த வருடம் குறுவை, சம்பா, தாளடி எல்லாம் போட்டு உங்கள் கடனை முதல்ல முடிச்சுடுறேன். விவசாயம் சரி இல்ல. நான் நெனச்சபடி, சாகுபடி இருந்திருந்தா, கடனே வாங்கி இருக்க மாட்டேன்."
"அய்யா, விவசாயம் சரி இல்லன்னு தயவு செய்து, இன்னொரு தடவ சொல்லாதீங்க. எல்லாக் கதையும் பையன் சொன்னான். இருபது மா நெலத்துல, பத்து மா மட்டும்தான் நட்டுருக்கீங்க. அதுவும் கடன் வாங்கி, அந்தக் கடனை கொடுத்த பிறகும், உங்களுக்கு ஒரு லட்சம் மிஞ்சியிருக்கு. நாலு மாச உழைப்புக்கு இது போதாதா? மண் உங்கள வாழத்தான் வைக்கும். மண்ணோட மதிப்பு தங்கம் மாதிரி ஏறிகிட்டுத்தான் இருக்கும்"
நீங்க செஞ்ச ஒரே தப்பு, பெரிய இடம், பெரிய இடமுன்னு, ஒரு பொண்ணோட அருமை தெரியாத இடத்துல, உங்க பொண்ண கொடுத்ததுதான். அம்மாவ விட்டுட்டு, அப்பாவ விட்டுட்டு, குடும்பத்த விட்டுட்டு, பொறந்த ஊரை விட்டுட்டு, யாரென்றே தெரியாத குடும்பத்துக்கு வந்து, வேலைக்காரியா, சலவைக்காரியா, சமையல்காரியா, எல்லா வேலையும் செய்யுற பெண்ண, புகுந்த வீட்டு கஷ்டங்களை, பொறந்த வீட்டுக்குத் தெரியாம, கணவனையும், மாமியாரையும் தாங்கி பிடிக்கிற ஒரு பெண்ண, கேவலம் இரண்டு பவுன் நகைக்காக, விரட்டி அடிக்கிறாங்க என்றால் இதைவிட மோசமான குடும்பம் இருக்க முடியமா?
ஏழைப் பையனாக இருந்தாலும், ஒரு ஒழுக்கமான பையனுக்கு, படித்த பையனுக்கு, மனைவியைத் துணையா நினைத்து அன்பு செலுத்துகின்ற பையனுக்கு, உங்கள் பெண்ணைக் கொடுத்திருந்தா, இந்த நிலை உங்களுக்கு வந்திருக்குமா? இப்படி கடனாளி ஆகி இருப்பீங்களா? எல்லா வசதி படைச்சவங்களும், செய்யுற தப்பைத்தான், நீங்களும் செஞ்சிருக்கீங்க. பெரிய இடமுன்னு சொல்ற பணக்கார வீடுகளுலதான் தற்கொலைகளும் நடக்குது.
"நீங்க சொல்றது உண்மைதாம்மா. அமுதாவை அவங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போறப்ப, இதப் பத்தி பேசறேம்மா.
"பழைய தலைமுறையைத் திருத்துறது கஷ்டம். புதிய தலைமுறைக்கு எல்லாம் தெரியும். நீங்க மாப்பிள்ளைக்கிட்ட பேசுங்க. அதுவும் உங்க பெண்ணிடம் சொல்லி பேச சொல்லுங்க.
முள்ளு மேல சேலைய போட்டுட்டீங்க. அது சேதாரம் ஆகாம பாத்துக்குங்க.
(தினமலர் டிவிஆர் நினைவு சிறுகதைப் போட்டி 2025ல் மூன்றாம் பரிசு பெற்ற கதை)
