முன்னுரை
‘இனிமையும் நீர்மையும் தமிழெனலாகும்’ என்ற பிங்கல நிகண்டிற்கு முன்னதாக ‘தாதின் அனையர் தண் தமிழ்க் குடிகள்’ என்றது பரிபாடல். தமிழ் நிலத்தை அதன் மொழி இயல்பை ஆய்ந்த வீரமாமுனிவர், கால்டுவெல், ஜார்ஜ் எல்.ஹார்ட் முதலிய மேனாட்டார் அனைவரும் தமிழர் சால்பை மென்மையோடு பொருத்தி மகிழ்ந்தனர். உணவும் நீரும் உடலை ஆக்குவது போல மொழியும் தண்ணளியும் தமிழரை யாக்கியது என்பதற்கு அவர்கள் ஆய்வே சான்று. இதனால் தானோ என்னவோ பண்பாட்டை, ‘உள்ளத்தின் செம்மை’ என்று வரையறுத்தார் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர். ஒரு மொழிநிலத்தின் பண்பாட்டை அறிய வேண்டுமாயின் அம்மொழியின் வளத்தினை ஆய்ந்தாலே போதுமானது. தொல்காப்பியம் தமிழ் நிலத்தின் மிக தொன்மையான இலக்கண பனுவல். இருந்தும் அதுவே முதல்பனுவல் ஆகிவிடாது. தொல்காப்பியர் தன்னூல் முழுவதிலும் ‘என்ப, என்மனார் புலவர்’ எனும் சொற்களைத் தொடர்ச்சியாகக் காட்டுகிறார். இந்நூல் அளவைச் சான்றே தொல்காப்பியருக்கு முன்னதாகவே பல இலக்கணிகள் தமிழ் நிலத்துள் இருந்ததைக் காட்டுகிறது. “எள்ளில் இருந்து எள்நெய், இலக்கியத்தில் இருந்து இலக்கணம்” என்பது தொன்னோர் வழக்கு எனில் தொல்காப்பியருக்கு முன்னதாக பல இலக்கணங்கள் இருப்பின் அதற்கும் முன்பாகப் பல்வேறு இலக்கியங்கள் இருப்பதும் தெளிவு. இவ்வாறு ஏட்டால் வரையறை செய்யவியலாத தன்னேரிலாத தமிழ் மரபு காலத்தேவையைக் கருதிற் கொண்டு விட்டும் வளர்த்தும் பரிணமித்து வந்த பண்பாட்டை, “தமிழர் பண்பாட்டின் தொன்மையும் தொடர்ச்சியும்” எனும் தலைப்பினால் ஆய்வதே இக்கட்டுரை.
தமிழர் பண்பாடு - அறிமுகம்
பண்பாடு எனும் சொல் பண்ணுதல் எனும் வினையை அடியாகக் கொண்டு பிறப்பதாகவும் அதன் தன்மை திருத்தப்பட்ட, சீர்செய்யப்பட்ட, பண்பட்ட என்பதாகவும் உள்ளது என்கிறார் தேவநேயப்பாவாணர். தமிழரின் அறம் தன்னலம் நோக்காது ஏரணக்கண் கொண்டு எல்லோர் நலனையும் நோக்குகிறது. இதை நற்றிணையின்,
மரம்சா மருந்தும் கொள்ளார் (நற். 226)
எனும் பாடல்வழி உணரலாம். அதாவது, தான் வாழ்வதற்காக என்று ஒரு சிறு மரத்தையும் கொல்லத் தயங்குவர் தமிழர். தமிழரின் பண்பாடு மேலை நாட்டவரின் தனிமனித இயக்கம் போன்றில்லாமல் குழுவாழ்வின் மாட்சிமையை உரைப்பது. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பு, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், அறம் செய்ய விரும்பு எனும் மொழிகள் இதற்குத் தக்க சான்றாகும். தமிழில் கூறப்பட்ட அறம் யாவும் தனிமனித நிலையிலிருந்து இயங்கி பல்லோர் வாழ்விற்கு நலம் பயப்பதாய் அமையும் வகையில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது தமிழ் புலமை மரபே உலக நலனைக் கருதிற் கொண்டு இயங்கி இருக்கின்றது. இத்தகைய பீடு வேறு எவ்விலக்கிய மரபிற்கும் வாய்க்காது.
ஆழ நோக்கினால் தமிழரின் விருந்தோம்பல் பண்பு 19 ஆம் நூற்றாண்டின் வள்ளலார் வரையிலும் எதிரொலிக்கிறது. தமிழ் மெய்யியல் ஆய்வாளர் ந.முத்துமோகன் அவர்கள் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே எனும் சங்க இலக்கியக் குரல் தமிழரின் தொன்மை இயல்பான விருந்தோம்பலில் இருந்து வருகிறது என்கிறார். இதனால் தான்,
அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும் (நற். 142)
நடுயாமத்தில் விருந்தினர் வரினும் இன்முகத்தோடு அவர்களை வரவேற்கும் பண்பும்
பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளீரோ எனவும் (குறுந். 118)
விருந்தினர் பலர் புகும் வாயிலை அடைக்கும் முன் வேறு யாரும் வெளியே உள்ளீரா என வினவி அடைக்கும் பண்பும் தமிழர்க்கே உரித்தாகிறது.
இவ்வாறாகப் பிற மக்களைப் பேணும் விதமாக அமைந்திருக்கும் தமிழர்தம் பண்பாடு உணவு மரபு, நம்பிக்கை மரபு, சடங்கியல் மரபு என்று பல்வேறு விதமாக சங்க காலந்தொட்டு தற்காலம் வரையிலும் பரிணமித்து வந்திருக்கிறது. இவ்வறிவு மரபின் தொடர்ச்சி ஏரணத்தோடும் தேவையுடனும் இன்றைய நவீன காலத்தில் பண்பாட்டு தொடர்ச்சியாகவும் எச்சங்களாகவும் திரிபுகளாகவும் நிலைபேறாக்கம் ஆகியிருக்கின்றன.
உணவுப் பண்பாடு
மெய்தெரி வகையின் எண்வகை உணவின் (தொல். பொருள். 623) என்று தொல்காப்பியர் தமிழர் உணவை எண் வகையாய் பகுப்பார். இந்நூற்பிற்கு உரையாத்த இளம்பூரணர் ‘கோதும்பை’ எனும் கோதுமை பண்டத்தையும் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. காரணம், உணவு வெறும் பசியாற்றுப் பண்டம் மட்டுமன்று. அது ஒரு சமூகத்தின் பருவமுறையை, தகவமைப்புமுறையை, அறிவுமுறையை வெளிப்படுத்துவதாக உள்ளது. மாந்தவியல் அறிஞர் குறிப்பிடுவது யாதெனில், “மனிதனோடு தொடர்புடைய நீண்டநாள் உடலியல் கூறு - பசி”. இந்தப் பசியை ஆற்றுப்படுத்த ஒவ்வொரு நிலவியல் மனிதர்களும் அவ்வவ் நிலம், சூழல் முதலியவற்றைக் கருதிற் கொண்டு உணவுற்பத்திச் செய்தனர். இதையே குடபுலவியனார், உணவெனப் படுவது நிலத்தொடு நீரே (புறம். 18) என்றார். உணவுற்பத்தி வெறும் தொழில் என்பதோடு நில்லாமல் காலமாற்றத்தைக் கொண்டாடுதல், உணவுப் பெருக்கத்திற்குக் காரணமான மழை, வெயில், மண் முதலிய நிலைத்திணைகளை வணங்குதல், விளைச்சலை எண்ணி மகிழ்தல், வதுவை முதலிய சடங்குகளில் எதிரொலித்தல் ஆகிய பண்பாட்டு ஊடாட்டத்தையும் காட்டின. உணவின் இப்பண்பாட்டு நடக்கை மொழிச்சூழலாலும் காலச்சூழலாலும் தமிழர்களின் வாழ்வில் ஓர் அங்கமாய் மாறின. அவ்வாறு பரிணமித்து வந்த உணவுப் பண்பாட்டைத் தமிழர் செவ்வினி இலக்கியமாய் இலக்கணமாய் பதிவித்துக் காத்தனர்.
உலகில் முதன்முதலாய் ‘தாளிப்பு’ எனும் உணவாக்கமுறை கண்டறியப்பட்டது தமிழ் நிலத்திலே என்பார் மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர். “கடுகு, கறிவேப்பிலை முதலியன தூவி ஆவின் நெய்யின் தாளித்தும், முதன் முதற் குழம்பு காய்ச்சப் பெற்றது தமிழகத்திலேயே” என்று தனது பண்டைத் தமிழ் நாகரீகமும் பண்பாடும் எனும் நூலில் பதிவுச் செய்கிறார். இதற்குச் சான்றாய் சங்க இலக்கியத்தில்,
சுவைக்கு இனிது ஆகிய குய்யுடை அடிசில் (புறம். 127)
நெய் உற பொரித்த குய் உடை நெடும் சூடு (புறம். 397)
முதலிய சான்றுகள் கிடைக்கின்றன. உணவு வெறும் உணவாக மட்டுமில்லாமல் பண்பாடாக இருக்கின்றது என்கிறார் மாந்தவியல் ஆய்வாளர் பக்தவத்சல பாரதி. குய் எனும் தாளிப்பு உணவாக்கமுறை சங்க காலத்திலிருந்து தற்காலம் வரை நடைமுறையில் இருப்பதோடு மட்டுமின்றி அதனோடு தொடர்புடைய சுவையோம்பல், ஆபேணல், நறுமணப் பொருட்சேர்த்தல், பொரித்தல் முதலியவையும் தொன்மை பண்பாட்டின் தொடர்ச்சியாகிறது.
உணவுப் பண்பாடு பசியாற்றியாக மட்டுமின்றி நீண்ட காலத்தரவுக் கடத்தியாகவும் இருக்கிறது என்பதை தொ. பரமசிவனார் ஆய்வின் வழி உணரலாம். அவர், “தமிழர்களின் வீட்டு அமைப்பில் வீடு எந்தத் திசை நோக்கி அமைந்திருந்தாலும் சமையலறை வீட்டின் வடகிழக்கு அல்லது தென்மேற்கு மூலையில் அமைக்கப்படுகிறது” என்கிறார். இதை அவர் தமிழ்ப் பண்பாட்டின் அசைவியக்கமாகவே குறிப்பிடுகிறார். பல்வேறு பண்பாட்டு இடையீட்டோடு நகரமயமாகும் இச்சூழலிலும் அடுக்களை முறையில் தமிழர்கள் இத்திசை வெளியையே பயன்படுத்தி வருவது பண்பாட்டின் தொடர்ச்சியாகிறது.
இடம், செய்முறை இவற்றோடு உணவு நம்பிக்கை அடிப்படையிலும் பண்பாட்டைக் கடத்தி வருகின்றது. அதில் உப்பு எவ்வாறு உணர்வுத்தளத்தோடு இன்றும் இயங்குகிறது என்பதை மாந்தவியல் ஆய்வர்கள் விவரிப்பர். அதைக்காட்டிலும் தமிழர்களின் நீண்ட கால மரபாக விழவின் உணவும், இறப்பின் உணவும் இருப்பதை ஆயத்தெளியலாம். இன்றும் கிராம விழவுகளில் விருந்தாளிகளுக்குப் படைக்கப்படும் உணவில் பாகற்காய், அகத்திக்கீரை முதலிய கசப்பான பொருட்கள் சேர்க்கப்படுவதில்லை. அகத்திக்கீரை இறப்போடு தொடர்புடைய கீரையாகப் பார்க்கப்படுகிறது. கணவன் இறந்த பின் வாழும் மகளிர் புளியிட்டுக் காய்ச்சிய கீரை வகையினை உண்டுவாழ்வதாகவே சங்க இலக்கியம் (புறம். 246) குறிப்பிடுவது இங்கு கவனிக்கத்தக்கது. வதுவை முதலிய சடங்கின் போது மனத்திற்கும் மகிழ்ச்சியளிக்கும் விதமாய் உணவு பரிமாறப்பட்டன. இதை,
உழுந்துதலைப் பெய்த கொழுங்களி மிதவை
பெருஞ்சோற்று அமலை நிற்ப (அகம். 86)
எனும் பாடல்வழி உணரலாம்.
தமிழர் மரக்கறி உணவில் எவ்வாறு நிலவியல் தகவமைப்பிற்கேற்ற உணவினைத் தேர்ந்தெடுத்தனரோ அதேப்போல் புலால் உணவிலும் நிலவியற் சூழலைக் கருதிற்கொண்டனர். பண்டு காலந்தொட்டு இன்றுவரை தமிழர் உணவுப் பண்பாட்டில் புலால் உணவுகளாக, கோழி, காட்டுக்கோழி, வெள்ளாடு, செம்மறியாடு, மீன், நண்டு முதலியவை முதன்மைப் பெறுகிறது. அதிலும் இன்றும் தொடர்ந்து வரும் வழக்கமான ஊனை உப்புக்கண்டம் போடும் வழக்கம் சங்க காலந்தொட்டே வழக்கில் இருந்தமையை கே.கே.பிள்ளை குறிப்பிடுகிறார்.
புலவு மீன் உணங்கல் படு புள் ஓப்பி (நற். 331)
கொழு மீன் உணங்கல் படு புள் ஓப்பி (அகம். 20)
எனும் சங்கப்பாக்கள் இதை உறுதி செய்கின்றன. உப்புக்கண்டம் போடும் உணவாக்க முறை கிழக்காசிய நாடுகளுக்கே உரித்த முறைமையாகும். தமிழில் உணங்கல் எனும் சொல் வற்றலிறைச்சியைக் குறிக்கும். யப்பானியத்தில் ‘உணகி’ எனும் சொல் அதேப் பொருளைத் தருவதாகத் தமிழ் யப்பானிய ஆய்வாளர் கனகராசு குறிப்பிடுகிறார். சேகரிப்பு, நீண்ட காலத்துப் பயன்பாடு, கடல்சார் பண்பாடு முதலிய வழக்காறுகளைக் கொண்டிருக்கும் பண்பாட்டிற்கே உரித்த உணவு நடைமுறையாகவும் இஃதுள்ளது. இந்நடப்பு ஈராயிரமாண்டு கடந்து இன்றும் தொடர்ந்து வருவது தமிழரல்லாத அனைவருக்கும் நிச்சயம் வியப்பை நல்கும்.
நம்பிக்கைசார் பண்பாடு
உலகில் எவ்வினம் வெகுநீண்ட காலத்து மரபினைக் கொண்டுள்ளதோ அவ்வினம் நம்பிக்கை சார்ந்த பல கருத்தாக்கங்களை உருவாக்கியிருக்கும் என்பது மாந்தவியல் பார்வை ஆகும். தமிழர் நெடுங்காலமாகவே தனிநபர் நம்பிக்கையினைப் பெரிதும் போற்றினர். இதனை அகத்தொகை நூல்களிலும் காப்பியங்களிலும் பெரிதும் காணலாம். இதில் முக்கியப் பங்கினைப் பறவைகள் பெறுகிறது. சகுனம் பார்த்தல் என்று தற்காலத்தில் வழங்கும் சொல்லாடல் ‘நிமித்தம் காண்டலாக’ சங்கப்பாடல்களில் இருந்து அறிய முடிகிறது. இதையே தொல்காப்பியர்,
நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும் (தொல். பொருள்.88)
என்கிறார். நிமித்தம் பார்த்து சொல்பவரை ‘நிமித்திகர்’ என்றும் வழங்குவர். தமிழ் நிலத்துள் புதுப்புள் வருவதும் பழம்புள் போவதும் தீநிமித்தமாகக் கருதப்பட்டது. (புறம். 20) மன்னரிடம் கொடை பெற வேண்டி இராப்பொழுதில் பயணமேற்கொள்ளும் கூத்தரிடமும் பாணரிடமும் வழிப்போக்கர்கள், “இனிதாக உறங்கி, விடிந்த பின்பு, பறவைகளின் ஓசையைக் கேட்டுச் செல்லுங்கள்” என்று மொழிவதை மலைபடுகடாம் (448) விவரிக்கிறது. இங்கும் பறவை நன்நிமித்தத்தின் குறியீடாய் இருப்பது குறிக்கத்தக்கதாகும்.
சங்க காலத்தில் இருந்தே ‘காக்கை’ நன்நிமித்தத்தின் குறியீடாகப் பார்க்கப்பட்டது. காக்கை கரைதல் விருந்தினர் வருவதை உணர்த்தும் நற்சகுனமாக இன்றும் தொடர்வதைக் காணலாம். இதை,
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே (குறுந். 210)
எனும் கூற்றின் வழி மெய்ப்பிக்கலாம். நன்நிமித்தம் எனும் மனித மைய பார்வை மட்டுமின்றி எல்லா உயிர்க்கும் உணவிட்டு உண்ணும் பகுத்துண்டு பல்லுயிர் காக்கும் பேரறம் தமிழர் வாழ்வின் பகுதியாய் இருப்பதையும் இப்பாட்டு உணர்த்தும். சொல்லால் நிமித்தம் பார்க்கும் விரிச்சி கேட்டலாயும் எதிர்வரும் புள், விலங்கு கண்டு புறப்படுதலாயும் இன்றும் வழங்கும் இப்பண்பாட்டின் மாட்சிமை யாதெனில், நினைத்த காரியம் தடையேற்படினும் தான் புறப்பட்ட நேரத்தையும் சகுனத்தையும் தமிழர் பழிப்பரேயன்றி ஒருபோதும் மறுத்த மனிதரைப் பழிக்க மாட்டர். இதையே புறநானூறு,
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர்ப் பழியலர் (புறம். 204)
என்கிறது. இங்குதான் தமிழின் நனிநாகரிகம் எத்தனை நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்டுள்ளதோ? என வியக்கிறோம்.
மறுபிறப்புக் குறித்த நம்பிக்கையும் தமிழர் மெய்யியல் பண்பாட்டோடு தொடர்புடையது. இதுவும் நீண்ட கால வரலாற்றுத் தொடர்ச்சியையும் சடங்கியல் கூறுகளையும் உள்ளடக்கி உள்ளன. இன்றும் தமிழகத்தில் பெரும்பான்மையோர்க்கு உயிர், ஆன்மா மற்றும் மறுபிறப்புக் குறித்த நம்பிக்கைகள் உண்டு. இளங்கோவடிகள் சிலம்பின் உண்மைகளாக உணர்த்துவதில், ஊழ்வினை உறுத்து வந்தூட்டும் என்பதும் இதன்பாற்பட்டதே. கண்ணகி கோவலனின் முற்பிறப்பு வரலாறும் அதன் தொடர்ச்சியாகச் சிலப்பதிகாரமும் அமைத்திருப்பதை அதன்வழி அறியலாம். தமிழர் ஒருவருக்கு ஏற்படும் காதல் என்பதே பாலது ஆணையாலே நிகழ்கிறது என்பதை நம்பினர். இதையே தொல்காப்பியம்,
ஒன்றே வேறே என்று இரு பால்வயின்
ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்,
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப (தொல். கள. 90)
என்கிறது. பாலது ஆணை ஊழ்வினை பயனாய் நிகழ்கிறது என்றும் பின்னைய இல்லற வாழ்வும் முற்பிறப்பின் பயனே என்றும் தமிழர் உறுதியாய் நம்பினர். இதையே தலைவியின் குரலாய் குறுந்தொகை பதிவு செய்கிறது.
இம்மை மாறி மறுமை யாயினும்
நீஆ கியர்என் கணவனை
யான்ஆ கியர்நின் நெஞ்சுநேர் பவளே (குறுந். 49)
‘இப்பிறவியில் தான் நான் உன் நெஞ்சு நேர்பவளாக இருக்க முடியவில்லை. அடுத்தப் பிறவியிலாவது உன் நெஞ்சிற்கு உகந்தவளாக நான் ஆக வேண்டும்’ என்கிறாள். இதைத் தான் வள்ளுவர், எழுமை எழுபிறப்பு (107) என்றும் வாழ்நாள் வழியடைக்கும் கல் (38) என்றும் மொழிகிறார். ‘அடுத்த ஜென்மத்திலாவது’ என்று மொழிநிலையில் இன்றும் இப்பண்பாட்டின் தொடர்ச்சி இருப்பதைக் காணலாம்.
உடலியல் கூறுகளும் நம்பிக்கை சார்ந்த பண்பாட்டினுள் அடங்குகிறது. இன்றும் தமிழர்கள் கண் துடித்தலைச் சகுனமாய் பார்க்கும் நம்பிக்கையினை உடையோரே ஆவர். அதும் இடக்கண் துடித்தல் நன்மைக்கும் வலக்கண் துடித்தல் தீமைக்குமான அறிகுறிகளாய் இன்றும் கிழக்கு மற்றும் தெற்கு மாவட்ட கிராமங்களில் வழக்கில் இருப்பதைக் காணலாம். இதைப் பொது ஆண்டு. 2 என்று அறியப்படும் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் பதிவு செய்துள்ளார்.
கண்ணகி கருங்கணும், மாதவி செங்கணும்
உள் நிறை கரந்து, அகத்து ஒளித்து, நீர் உகுத்தன
எண்ணு முறை இடத்தினும் வலத்தினும் துடித்தன (காதை 5, வரி 237 - 239)
பிரிந்த கணவனை மீண்டும் அடையப் போவதால் கண்ணகிக்கு இடக்கண்ணும், கோவலனைப் பிரியப் போவதால் மாதவிக்கு வலக்கண்ணும் துடிப்பதாய் இளங்கோவடிகள் காட்டிருப்பது இன்றும் வழக்கில் இருக்கும் நம்பிக்கைசார் பண்பாட்டின் தொன்மையைக் காட்டுகிறது. தும்மல் வருவது பிறர் நம்மை நினைப்பதன் அறிகுறி என்பதும் வள்ளுவர் காலத்தில் இருந்தே தொடர்ந்து வரும் வழக்கமாய் இருக்கிறது. இதை
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று. (1318)
எனும் குறள்வழி அறியலாம். இப்படியாக நம்பிக்கைசார் பண்பாடு தமிழ்நிலத்துள் நீண்ட கால தொன்மை மரபைக் கொண்டுள்ளதைக் காணலாம்.
சடங்கியல் பண்பாடு
“சமூக - குடும்ப வாழ்க்கையில் குறிப்பிட்ட பண்பாடு மற்றும் நாகரிக தளங்களில் ஒவ்வொரு மனிதனின் பங்கு, பாத்திரம், உறவுமுறை, கடமை, உரிமை முதலானவற்றை அநிச்சைச் செயலாக ஆழ்மனரீதியில் கட்டமைப்பதற்கான கருத்துவகைப்பட்ட குறியீட்டு வினைகளை ஆற்றுவதில் சடங்குகளுக்கு முக்கிய இடம் இருக்கிறது” என்பார் ஆய்வாளர் ராஜ் கௌதமன் அவர்கள். சடங்குகளை அறிவுக்குப் புறம்பானவை, உண்மைக்குப் புறம்பானவை என்று கூறும் முத்திரை பார்வையை அவர் மறுத்தார். காரணம், சடங்குகள் ஏதோ ஒருவிதத்தில் பண்பாட்டின் உண்மையினைத் தனிமனித இருப்பின் அவசியத்தை உணர்த்துவதாய் இருக்கிறது என்பதே அவரின் ஆய்வாகும். “அறிவியலை உண்மை என ஏற்றுக்கொண்டு, கலை இலக்கியத்தை வெறும் கற்பனை, புனைவு என்று ஒதுக்குகின்ற கருத்தியல் போக்குத்தான் சடங்குகளை மூடநம்பிக்கை என்று ஒதுக்குகிறது” என்று முடிவாகக் கூறுவார். சடங்குகளில் இருக்கக்கூடிய அநிச்சை உருவாக்கம் தான் பண்பாட்டின் தொடர்ச்சியாக இன்றும் கடத்தப்பட்டு வந்துகொண்டு இருக்கிறது.
தமிழர் திருமணச் சடங்கு சமூகச்சூழலைப் பொருத்து மங்கல நாணைப் பயன்படுத்தி பெருவிழா போன்றும் அல்லது பூச்சூடுதலோடு பெண்ணகத்திலே குறைந்த உறவினர்களோடு நடப்பது போன்றுமான தரவுகள் நமக்குக் சங்கப்பாக்களில் கிடைக்கின்றன. இது இன்று பலதரப்பட்ட வடிவங்களில் திரிந்து காணப்படுகின்றன. ஆனால் திருமணத்திற்கு முந்தைய பண்பாட்டு நடக்கையான “பெண் பார்த்தல்”, “பரிசம் போடுதல்” முதலிய நிகழ்வுகள் சங்க காலந்தொட்டு இன்றுவரை நடைமுறையில் இருப்பது வியப்பைத் தருவதாகும்.
சங்க காலத்தில் பெண் பார்க்க வரும் ஆண் வீட்டார் தன் வீட்டின் பெரியோருடன் வருவது வழக்கமாய் இருந்திருக்கிறது. பெண் வீட்டாரும் அவர்களை, ‘நீங்கள் வந்த நாள் நன்னாள்’ என்று அன்போடு வரவேற்கும் முறையும் இருந்திருக்கிறது. இதை,
தண்டுடைக் கையர், வெண்தலைச் சிதவலர்
நன்றுநன்று என்னும் மாக்களோடு
இன்று பெரிது என்னும் ஆங்கணது அவையே (குறுந். 146)
எனும் குறுந்தொகை பாடல்வழி உணரலாம். பெண் கேட்க வரும்போது எல்லாம் நன்மையாக முடியட்டும் என்பதைக் கருதிற் கொண்டே பெரியோர் ‘நன்று நன்று’ என்று அடுக்கி மொழிவர் என்பர் உரையாசிரியர்கள்.
இன்று பரிசம் போடுதல் எனும் நடைமுறை வழக்கம் தமிழர் பண்பாட்டில் மிகவும் தொன்மையான தழையாடை மரபில் இருந்து வருகிறது என்பார் மாந்தவியல் ஆய்வாளர் பக்தவத்சல பாரதி அவர்கள். “ஆதியில் தழையாடை பரிசப் பொருட்களில் ஒன்றாகவே இருந்திருக்கிறது. இன்றும்கூட திராவிடப் பகுதியில் பழமைச் சமூகங்களில் பரிசம் போடும் போது புடவை கொடுப்பது மரபாக இருக்கிறது. அன்றைய தழையாடை இன்று நூலாடையாக உருமாறியுள்ளது. வெற்றிலை பாக்கு மாற்றிக் கொள்ளுதல், கைத்தாம்பூலம் செய்தல் போன்ற சடங்கு முறைகளிலும்கூட இலையானது இன்று திருமணத்தை உறுதி செய்யும் பொருண்மைக் கூறுகளாக இருப்பதைக் காண்கிறோம்” எனும் அவரின் ஆய்வு முடிவு தழையாடை மரபின் பண்பாட்டுத் தொடர்ச்சியைக் காட்டுகிறது.
சங்கப் பாக்களில் இருந்து தமிழர்களின் பல்வேறு ஆடை மரபுகளைக் காணமுடிகிறது. இருந்தும் தழையாடையைத் தனியே குறிப்பிடக் காரணம், அவ்ஆடை இலைகளால் கோர்த்து செய்யப்பட்டதோடு பாலது ஆணையான் இணைந்த காதலர்கள் களவுகாலத்தின் போது தலைவன் தலைவிக்கு அளிக்கும் கையுறையாகவும் (பரிசு) இருக்கின்றது. இதை ஆய்வுச் செய்து காண்கையில் இத்தழையாடை மரபு காதலை உறுதிப்படுத்திக்கொள்ள தரும் கையுறையாகவும் தற்காலத்தில் பரிச நிகழ்வின் போது மணமகளுக்குத் தரப்படும் கூறை புடவை மரபோடும் ஒத்துள்ளது. “கூறை என்பது புதிய புடவையாகும். இது தழையுடைக்கான பதிலியாகும்” என்று தனது இலக்கிய மானிடவியல் எனும் நூலில் பக்தவத்சல பாரதி பதிவு செய்கிறார். இதை உறுதிப்படுத்தும் விதமாக,
எக்கர் ஞாழல் மலர் இல் மகளிர்
ஒண் தழை அயரும் துறைவன்
தண் தழை விலை என - நல்கினன் நாடே (ஐங். 147)
எனும் பாடல் அமைகிறது. இதில் தலைவி விரும்பி உடுத்திக்கொள்ளும் தழையாடைக்கு ஈடாகத் தலைவன் நாட்டையே நல்கினான் என்று உயர்வுப்படுத்தி சொல்லி இருப்பது தலைவியைத் தலைவன் நிச்சயம் மணம்புரிவான் எனும் உறுதியினை வெளிப்படுத்துகிறது. இதுவே தற்காலத்தில் கூறை புடவை தருவதன் பண்பாட்டுப் பொருளாகவும் அமைந்திருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக சங்க காலத் திருமணச் சடங்கியல் முறையும் பிள்ளை பெற்ற ஈன்றணுமை காலச் சடங்கியல் முறையும் தற்கால நடைமுறைகளோடு பெரிதும் பொருந்துகின்றன. கிராம வழக்கில், பிள்ளை பெற்ற தாய்மார்களைப் ‘பச்ச உடம்புக்காரி’ என்று கூறி பதினாறு நாட்கள் பிள்ளையோடு தனித்திருக்க வைப்பர். இதையே தொல்காப்பியம்,
புதல்வற் பயந்த புனிறுசேர் பொழுதின் (தொல். பொருள். 144) என்று குறிப்பிடுகிறது. புலிப்பல் தாலிப் புதல்வற் புல்லி (குறுந். 161) எனும் பாடல்வழியும் குழந்தைகளுக்கான அணிகலன் முறைகளும் தொன்மை பண்பாட்டின் தொடர்ச்சியாய் எதிரொலித்து வருவதைப் பார்க்க முடிகிறது.
மரபு வழக்கங்கள்
இக்காலத்திலிருந்து என்று குறிப்பிட்டுக் கூறாமல் பண்டு காலந்தொட்டே தொடர்ச்சியாய் பரிணமித்து வந்த வழக்கங்களை மரபு வழக்கங்களாய் குறிப்பிடலாம். இதில் நடுகல் வழிபாடு இன்ன காலம் என்று கூறமுடியாதளவிற்குத் தொன்மை உடைத்தாகும். புலிமான் கோம்பை கல்வெட்டு பொ.ஆ.மு. 2 ஆக உறுதி செய்யப்பட்டது ஆகும். இந்தியாவிலே மிகவும் தொன்மையான இக்கல்வெட்டு தற்கால முன்னோர் வழிபாட்டு மரபோடு மிகவும் தொடர்புடையதாக இருக்கிறது.
கல்
பேடு தீயன் அந்தவன்
கூடல் ஊர் ஆகோள்
எனும் செய்தியைத் தருவதாய் இக்கல்வெட்டு உள்ளது. இதை ஆய்வு செய்த கல்வெட்டியல் ஆய்வாளர்கள், ‘கூடல் ஊரில் நடந்த ஆகோள் போரில் இறந்த வீரனுக்காக எடுக்கப்பட்ட வீரக்கல் தான் இது’ என்பதை உறுதி செய்தனர். தமிழ்ப் புறத்திணையில் வெட்சித் திணையான ஆநிரை கவர்தல் - மீட்டலை உறுதி செய்வதாய் அமைகிறது இக்கல்வெட்டு. அத்தோடு தொன்மையான முன்னோர் வழிபாட்டை உணர்த்துவதாகவும் இக்கல்வெட்டு உள்ளது. சங்க காலத்தில் அல்லது அதற்கு முன் நடுகல்லைத் தவிர வேறு தெய்வங்கள் எங்களுக்கு இல்லை என்று கூறும் குரல் மிக உறுதியாக இருந்தது. இதை,
கல்லே பரவின் அல்லது
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே (புறம். 335)
என்று குறிப்பிடுகிறது. இதனால் புலிமான் கோம்பை வீரக்கல் முன்னோர் வழிபாட்டை உணர்த்தும் கல்லாவது தெளிவு செய்யப்படுகிறது. இன்றும் தென் மாவட்ட மற்றும் கொங்கு பகுதியில் பல்வேறு கிராமங்களில் நடுகற்கள் வழிபடு கற்களாக இருப்பதை சுப்புராயலு போன்ற கல்வெட்டாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதேப்போல் அணிகலன் மரபிலும் சிலம்பு மிகத் தொன்மையான வரலாற்றைப் பெறுகிறது. தமிழர் பண்பாட்டில் மணமாகாதப் பெண்கள் தம் காலில் ஒருவகை சிலம்பை அணிந்திருந்தனர். மணமான பின் பெண் வீட்டில் இச்சிலம்பைக் கழட்டும் சடங்கு நடைபெறும். இதற்குச் ‘சிலம்பு கழி நோன்பு’ என்று பெயர். சிலப்பதிகாரத்து கண்ணகி மட்டும் இதற்கு விதிவிலக்காக மணமான பின்னும் காலில் சிலம்பு அணிந்திருந்தாள். சிலம்பு கழி நோன்பைப் பற்றி சங்க இலக்கியம் பல்வேறு இடங்களில் குறிப்பிடுகிறது,
நும் மனைச் சிலம்பு கழீஇ அயரினும்,
எம் மனை வதுவை நல் மணம் கழிக (ஐங். 399)
சிலம்பு கழி நோன்பு தான் புகுந்த வீட்டில் நடந்தேறிவிட்டது. வதுவை சடங்காவது நம் வீட்டில் நடக்கட்டுமே என்று உடன்போக்கில் சென்ற மகளை எண்ணி தாய் வருத்தத்துடன் சொல்வதாக அமைகிறது இப்பாடல். இச்சடங்கு பெண் வீட்டில் நடக்க வேண்டுமென்பது மரபு வழக்கமாகும். ஆனால் திருமணத்திற்கு வீட்டார் உடன்படாத போது தலைவி தலைவனோடு உடன்போக்கில் செல்கின்றாள். இதனால் சிலம்பு கழி நோன்பு தலைவன் அகத்திலே நடந்துவிடுகின்றது. இன்றும் மரபாக வாழும் பல்வேறு குடும்பத்தினர் திருமணத்தைப் பெண் வீட்டில் அல்லது ஊரிலே நடத்தும் பழக்கமுடையவராய் இருத்தல் இங்கு நோக்கத்தக்கது. அத்தோடு பிள்ளை பேற்றின் போதும் பெண் வீட்டாரே தாயையும் சேயையும் ஓம்பும் வழக்கம் இன்றும் இருத்தலை இத்தோடு இணைத்துப் பார்க்கலாம். பெண்ணின் திருமண சடங்குகள் மற்றும் பிள்ளை பேற்று சடங்குகள் பெண் வீட்டிலே நடக்க வேண்டும் எனும் மரபு வழக்கம் சங்க காலந்தொட்டு வழங்கி வருதலை இதிலிருந்து உணரலாம்.
முடிவுரை
இக்கட்டுரை தமிழர் பண்பாட்டின் தொன்மையையும் தொடர்ச்சியையும் செவ்வியல் இலக்கிய இலக்கண தரவுகளின் அடிப்படையில் கண்டு ஆய்ந்து விளக்கி இருக்கிறது. இலக்கியங்களைப் பண்பாட்டு மூலங்களாகக் காண்பதற்காக இடையிடையே தமிழாய்வாளர்களின் குறிப்புக்களும் அணுகுமுறைகளும் காட்டப்பட்டுள்ளன. இன்னும் மடலேறுதல், வெறியாடல் முதலிய இலக்கியக்கூறுகளும் பண்பாட்டு வெளியில் விரவி, திரிந்து, பரிணமித்து இருக்கலாம். அவற்றைத் தமிழ் நிலத்துள் வாழும் பழங்குடி மரபினரிடையே கண்டடையலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகிறது. தமிழர்தம் பண்பாடு உலகாயதர்களாலும் சமணர்களாலும் பௌத்தர்களாலும் பல்லவ பாண்டிய சோழ முதலிய மன்னர்களாலும் தெலுங்கு மொழி மரபைத்தழுவிய விஜய நகர நாயக்கர்களாலும் மராத்திய மரபைச் சேர்ந்த மன்னர்களாலும் இன்னும் பல்வேறு நாட்டை சேர்ந்த வணிக மரபினர்களாலும் ஊடாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது. இத்தனை இடையீடு இருந்தும் தமிழர் பண்பாட்டின் பல்வேறு கூறுகள் சங்க காலந்தொட்டு இன்றுவரை நிலவுகிறது எனின் அவைகளின் காலத்தேவையே அதன் நிலைபேறாக்கத்திற்கான காரணமாகும். சமூகத்திற்குத் தேவையான பண்பாட்டு மரபுகள் ஒருபோதும் அழிந்துவிடுவதில்லை. அரிஸ்டாட்டில் சொல்லும் ‘மரபிற்கு முன்னான முன்மரபு’ போல அவை தன்னை எச்சங்களில் இருந்து, திரிபுகளில் இருந்து வெளிப்படுத்திக் கொள்கின்றன. உலகத்தின் பல்வேறு இடங்களில் இன்று பெயர்ந்திருக்கும் தமிழ்ப் பண்பாடு உலகம் உள்ளளவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். வாழும்.
