Trending

கூட்டுறவே நாட்டுயர்வு கட்டுரை

 

கூட்டுறவே நாட்டுயர்வு கட்டுரை


முன்னுரை


"மனிதன் ஒரு சமூகப் பிராணி அவன் கூடி வாழும் இயல்புடையவன்" என்று கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில் கூறுகிறார். அவர் கூறுவது போல் மனிதன் சிங்கத்தை போல் தனித்து வாழாமல் யானையைப் போல் சேர்ந்து வாழ்வதையே விரும்புகிறான். சேர்ந்து வாழ்வதே சிறந்த வலிமை. தனிமனிதன் சமுதாயத்துக்காகவும் சமுதாயம் தனி மனிதனுக்காகவும் விட்டுக் கொடுத்து ஒற்றுமையாக வாழ்வதுதான் கூட்டு வாழ்க்கையாகும். மக்களால் மக்களுக்காக மக்களே சமூகத்துக்கு ஊடான உறவினை ஏற்படுத்தி கொள்வதே கூட்டுறவு. அந்த அடிப்படை அழிந்து விடாமல் பாதுகாக்கும் நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்டது தான் கூட்டுறவு இயக்கம் கூட்டுறவினால் நாட்டுயர்வு ஏற்படும் என்பது பற்றி இக்கட்டுரையில் காண்போம்.


கூட்டுறவு இயக்கத்தின் குறிக்கோள்


தனிப்பட்ட ஒருவன் எல்லாராலும் எல்லாரும் தனிப்பட்ட ஒருவனாலும் வாழ்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதுவே கூட்டுறவு இயக்கத்தின் கொள்கையாகவும் இருக்கிறது. 


Each for all, All for Each


என்பதுதான் கூட்டுறவு இயக்கத்தின் குறிக்கோள் ஒருவன் எந்த செயலையும் மற்றவர் ஒத்துழைப்போடு செய்வதால் மிக எளிதாகவும் விரைவாகவும் சிறந்த முறையில் செய்து முடிக்க முடியும் தனி மரம் தோப்பாகாது என்பர் எனவே தனி மனிதனாக ஒரு செயலில் இறங்குவதை காட்டிலும் பலர் கூட்டுறவுடன் அதனை செய்ய முற்படும் போது அது சிறந்த பலனை தருகின்றது பாரதியார் கூடி தொழில் செய் என்று கூறி கூட்டுறவின் அவசியத்தை அறிவுறுத்துகின்றார்.


கூட்டுறவு இயக்கத்தின் தோற்றம்


கூட்டுறவு இயக்கம் முதன் முதலில் ரெய்பிசன் என்னும் ஜெர்மானியரால் 19ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது. உழவர்கள் கடும் வட்டிக்கு கடன் வாங்கி அறுவடை ஆனவற்றை கொடுத்துவிட்டு கால் வயிற்று கஞ்சிக்கும் வலி இல்லாமல் வருந்துவதை கண்ட ரெய்பிசன் அவர்களை எல்லாம் ஒன்று சேர்த்து கூட்டுறவு இயக்கத்தை உருவாக்கினார். உழவர் கடன் சுமையிலிருந்து மீண்டனர் அவர்களது பொருளாதார நிலையும் உயர்ந்தது. இன்று உலகெங்கும் இத்தகைய கூட்டுறவு இயக்கங்கள் தோன்றி நாட்டை உயர்த்தி வருகின்றன. கூட்டுறவினால் விளையும் நன்மைகளை அறிந்து நம் நாட்டிலும் 1904 ஆம் ஆண்டு முதல் கூட்டுறவு கழகங்கள் தோன்றி சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றன.


கூட்டுறவின் கொள்கைகள்


1995 ஆம் ஆண்டு அனைத்துலக கூட்டுறவு ஒன்றியத்தால் ஒப்புகொள்ளப்பட்ட கொள்கைகள்


  • மக்களாட்சி முறையில் அமைந்த நிர்வாகத்தின் கீழ் இயங்குதல்
  • உறுப்பினர்களே நுகர்வோர்களும், அவர்களிடமிருந்து பொருளாதார உதவி பெறுதல்
  • தானாக சுயதொழில் மேம்படுத்தி மக்களுக்கு உதவுதல்
  • தொழிற்பயிற்சி அளித்தல், கல்வி வழங்கள் போன்ற சேவைகளை செய்தல்
  • அனைத்து கூட்டுறவு சங்கங்களிடையேயான உறவை மேம்படுத்துதல்
  • சமூக மேம்பாட்டுக்காகவே உழைத்தல்


கூட்டுறவு இயக்கத்தின் பயன்கள்


கூட்டுறவு முறையில் விற்பவரே நுகர்வோர் ஆகவும் இருப்பதால் லாபத்திற்கு அதிக முக்கியத்துவம் தராது. தரமான பொருட்களை குறைந்த விலையில் மக்கள் பெற முடிகிறது.


சிறு துளி பெரு வெள்ளம்


என்பதுபோல பலருடைய உழைப்பும் முதலீடும் சேர்வதால் தொழிலும் லாபமும் வளர்கின்றன. எறும்புகள் ஒன்று கூடினால் ஒரு பெரிய யானையை இழுத்துச் சென்று விடும் என்பார்கள். அதுபோல பலர் ஒன்று கூடும் போது எவ்வளவு பெரிய செயலையும் எளிதாக செய்து முடிக்க முடிகிறது. ஜெர்மனி, டென்மார்க், போலந்து போன்ற மேலை நாடுகள் கூட்டுறவின் மூலம் தான் இன்று மிக உன்னத நிலையை அடைந்துள்ளன. நம் நாட்டிலும் இப்போது சிறிய விவசாயிகள் முதல் பெரிய விவசாயிகள் வரை தங்கள் நிலத்தில் விளையும் பொருட்களை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பதால் சரியான அளவுக்கும் தரத்துக்கும் ஏற்ற பணம் எவ்வித தரகும், பிடித்தமும் இல்லாமல் பெறுவதோடு கடன் மற்றும் உர மானியம் போன்ற நல்ல சலுகைகளையும் பெறுகின்றார்கள்.


கூட்டுறவு இயக்கம் வளர வழி


கூட்டுறவு இயக்கத்தைப் பற்றி தெரியாத சரிவர புரிந்து கொள்ளாத ஏழை விவசாயிகள் தான் இன்னும் நம் நாட்டில் அதிகம். அவர்களுக்கு கூட்டுறவு இயக்கத்தினால் விளையும் நன்மைகளை எடுத்துக்கூறி அவர்களது ஐயத்தை போக்குவது தான் கூட்டுறவு இயக்கத்தினர் ஆற்ற வேண்டிய பணியாகும். கூட்டுறவு இயக்கத்தில் உறுப்பினராகி பணத்தையும் பலனையும் பெற்றுக் கொண்டவர்கள் அதனை உரிய காலத்தில் முறையாக திருப்பி செலுத்த வேண்டும். அத்தகைய கடமை உணர்வுடன் செயல்பட்டால் தான் இவ்விழக்கம் சிறப்பான வளர்ச்சியை பெறும்.


முடிவுரை


சிறுக முதல் இடு

உழைத்துப் பெருக்கிடு

பகிர்ந்து உண்டிடு

மகிழ்ந்து வாழ்ந்திடு


இதுதான் கூட்டுறவின் தத்துவம் கூட்டுறவில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவரும் இதில் நம்பிக்கை வைத்திட வேண்டும். இதற்கு கை கொடுத்து உதவிட வேண்டும். இவ்வியக்கத்தில் இணைந்துள்ள எல்லோரது கைகளும் ஒன்றை ஒன்று குலுக்கி கொள்வதுதான் கூட்டுறவின் சின்னம். கூட்டுறவு என்றாலே நமது உயர்வு நாட்டு உயர்வு என்று நம்மை அறியாமல் நாம் கூறும் நிலை உருவாக வேண்டும். இயக்கப் பணியாளர்களின் கரங்கள் பொதுமக்களுக்காக நீட்டப்பட வேண்டும். பொதுமக்களும் தங்கள் கரங்களை அவர்களுக்கு நீட்டிட வேண்டும். இந்த இரு கைகளின் ஆனந்த குலுக்கல்களில் தான் இந்நாட்டின் புது வாழ்வு மலரும் என்பதில் ஐயமில்லை.


🔴 கட்டுரை PDF Download


Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு