Trending

சிறுகதை: மலரும் முள்ளும் - ஜெ மாரிமுத்து

 

சிறுகதை மலரும் முள்ளும்

"மலர் அக்கா! உங்க வீட்டுக் கன்னுக்குட்டியப் பாருங்க! ரோட்டுல துள்ளிக்கிட்டு இருக்கு."

குரல் வந்த திசையில் எட்டி பார்த்தாள் மலர்விழி.

அட நம்ம எதிர்த்த வீட்டு செண்பகம்.

"செத்த நேரம் பால ஊட்டட்டும்னு விட்டா இப்ப ரோட்டுக்கு போயிடுச்சா" என்று நினைத்தவள் வீட்டிலிருந்தபடியே கொல்லையில் இருந்த கணவனுக்கு குரல் கொடுத்தாள்.

"இந்த பாருங்க மாமா! கன்னுக்குட்டி ரோட்ல வெளையாடுதாம். கொஞ்சம் புடிச்சு கட்டுங்க" வேகமாக ஓடினார் மலரின் கணவர் தியாக சுந்தரம்.

"என்ன அக்கா நானும் பார்க்குறேன். வீடெல்லாம் ஒட்டடை அடிச்சு கழுவியாவுது. கொட்டுலு கொல்லையெல்லாம் சுத்தம் பண்ணியாவுது. போகி வருதா இல்ல பொரட்டாசிதான் வருதா? தெரியாமத்தான் கேட்கிறேன். என்றாள் செண்பகம்.

"இல்ல செண்பகம் வர்ற ஞாயித்து கெளம என்னோட ரெண்டு அண்ணனும், தம்பியும் குடும்பத்தோட வீட்டுக்கு வராங்க. அப்படி வாரப்ப "என்னடா இவ இப்படி வூட்ட வச்சிருக்கான்னு" நெனச்சுடக் கூடாது பாரு. எங்க அண்ணன் தம்பி யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க. அதுக கட்டிகிட்டதுங்க ஒன்னு சொல்லிட கூடாதுல்ல"

"என்ன விசேஷம்? "

"எங்க அப்பாரு சொத்து ஒன்ன விக்கப் போறாங்களாம். அதுக்கு என்னோட கையெழுத்து வேணுமாம். எனக்கு ஒரு பாகம் கொடுப்பாங்க போல தெரியுது. அதுக்குதான் பேச வராங்க"

"வர்றவங்ககிட்ட பதினஞ்சு வயசாயியும் மூளை வெளங்காம இருக்கானே ஒம் மவன் சீனு அவனுக்கு ஒரு தொகை எழுதி வெக்கச் சொல்லு"

"எங்க அப்பாவோட, எத்தனையோ சின்ன சின்ன இடங்களையெல்லாம் வித்து தின்னப்ப எல்லாம் நான் ஒருத்தி இருப்பதே நெனப்புல இல்ல. இப்ப உள்ள சட்டம் பொம்பள புள்ளைக்கும் பங்கு கொடுக்கனும்னு சொல்லுதாம். அதான் என்ன தேடி வராங்க"

விக்கப் போற சொத்து உங்க ஊருலேயே இருக்கா?

பஸ் ஸ்டாப் ஓரமா ஒரு பத்து ஏக்கர் விவசாய நெலம் கிடக்கு. அத பிளாட் போட்டு விக்கிறவங்க 70, 80 லட்சத்துக்கு கேட்குறாங்களாம். வெளையிற மண்ண விக்க எப்படித்தான் இவங்களுக்கு மனசு வருதோ?

"சரி சரி அக்கா ஏமாந்துடாதே"

"வரட்டும் என்ன பேசுறாங்கன்னு பார்ப்போம்"

மலரோட அப்பா பத்து வருடத்துக்கு முன்பே ஆஸ்துமாவுல இறந்துட்டார். அம்மா லட்சுமி. கணவனுக்கு இருந்த இருமல் சளி அவளையும் விடவில்லை. வசதி வாய்ப்பு இருந்ததால் எப்படியோ பிள்ளைகளை வளர்த்து விட்டாள்.

லட்சுமியோட ஒரே கவலை, தான் இருக்கும் போதே மலரை, ஒரு நல்லவன் கையில் ஒப்படைத்துவிட வேண்டும் என்பதுதான்.

லட்சுமியோட கணவர் இறந்த பிறகு, அக்காவுக்கு ஒத்தாசையா தம்பி தியாக சுந்தரம் அக்காவோட இருக்க ஆரம்பித்தான். மலரும் தனக்கு எது வேண்டும் என்றாலும் மாமாவிடம்தான் கேட்பாள். அவனும் அதை ஆசையாக வாங்கி கொடுப்பான்.

பேனா, பென்சில், புக், சாக்லெட் என்று எல்லாமே தியாக சுந்தரம்தான் வாங்கி கொடுப்பான். கோவிலுக்கு போகவேண்டுமானாலும் சரி, சினிமாவுக்கு போக வேண்டுமானாலும் சரி மாமாவோடுதான் போவாள் மலர்.

தனது உடல்நிலை மோசமான போது மலரை அழைத்த லட்சுமி "நீ மாமாவையே கல்யாணம் பண்ணிக்க" என்றாள்.

"என்னம்மா சொல்ற நான் மாமாவை மாமாவாதான் பார்க்கிறேன். என் புருஷனா பார்க்கல" என்றாள்.

"அப்படி இல்லடி! எவனோ ஒருத்தன் ஒன்ன எப்படி வைச்சுருப்போனா என்று நான் கவலைப் பட்டுகிட்டு சாவறதுக்கு, என் தம்பிக்கிட்ட ஒப்படைச்சீட்டேன்னா நான் நிம்மதியா சாவேன். என் தம்பி ஒன்ன கண்டிப்பா நல்லபடியா பார்த்துப்பான்" என மலரின் கையை பிடித்து கெஞ்சினாள்.

அம்மாவைத் தவிர வேறு உலகம் தெரியாத மலர் அவளின் கடைசி ஆசையை ஏற்றுக் கொண்டாள்.

மலரின் தோழி செல்வி கூட "சொந்த ரத்தமான தாய் மாமாவை கல்யாணம் செஞ்சுகிட்டா பொறக்குற புள்ள ஊனமா பொறக்குமாம்" என்று எச்சரித்தாள்.

அவள் சொன்னதும் பின்பு உண்மையாகி போய்விட்டது.

முதலில் பொறந்த சீனு கால் கை ஊனமாக பிறக்கவில்லையே தவிர குறையோடு பிறந்துவிட்டான். அவன் குறையாக பிறந்தவன் என்பதே லட்சுமிக்கு இரண்டு வருடம் கழித்துதான் தெரியும்.

தானாக விளையாடுவான். பசிக்கிறது என்று சொல்ல தெரியாது. அம்மா ஊட்டி விட்டால் மட்டுமே சாப்பிடுவான். யார் கூப்பிட்டாலும் காதில் விழாது. யார் எதை சாப்பிடக் கொடுத்தாலும் சாப்பிட மாட்டான்.

அவனுக்கு அடுத்துப் பிறந்தவளுக்கு எந்த பிரச்சனையுமில்லை.

இரண்டு பிள்ளைகள் பிறந்த பிறகு அவர்களது தாம்பத்ய வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. மலருக்கு, தியாக சுந்தரம் மீது கணவன் என்ற ஈர்ப்பு இல்லாவிட்டாலும் மாமா என்ற பாசம் குறையவில்லை.

மலர் கணவனை அழைத்தாள்,

"மாமா நீங்க பாய் கறி கடையில போய் ஞாயித்து கெளம 3 கிலோ கறிக்கு சொல்லி வச்சுட்டு வந்துடுங்க. எங்க அண்ணன்களுக்கு ஆட்டுக்கறின்னா ரொம்ப பிடிக்கும்"

"ஏய் மலரு! என்ன வெளயாடுறியா? கறி வெல என்னன்னு உனக்கு தெரியுமா? 700 ரூபாய். மூனு கிலோன்னா 2100 ரூவா. வயலுக்கு உரம் வாங்கவே காசில்ல. நான் ஒன்னு சொல்றேன் கேளு. நம்ம கிட்ட உள்ள ஆட்டுக்குட்டி ஒன்ன வெட்டிக்குவோம்"

"உங்களுக்கு என்ன பைத்தியமா? புள்ள மாதிரி வளர்த்த குட்டிய நான் தர மாட்டேன். டவுனுக்கு போயிட்டு வந்தா கால கட்டிக்கிற குட்டிய கொல்ல பார்க்குறீங்களா?"

"அப்ப ஒன்னு செய்வோம். நாம அத வெட்ட வேணாம். அந்த குட்டிய பாய் கிட்ட தூக்கி கொடுத்துட்டு மூனு கிலோ கறி மட்டும் வாங்கிக்குவோம்".

மலருக்கு மனசே இல்லை. இருந்தாலும் வேறு வழி இல்லை.

ஞாயிற்றுக்கிழமை.

கூட மாட வேலை செய்ய செண்பகத்தை மலர் காலையிலேயே வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டாள்.

வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. மூன்று குடும்பங்களும் இரண்டு கார்களில் வந்து இறங்கினார்கள். அண்ணன், அண்ணி, தம்பி, பிள்ளைகள் என எல்லோரையும் ஒரு சேர பார்த்ததில் மகிழ்ச்சி தாங்கவில்லை மலருக்கு.

"வாங்க வாங்க" வாய் நிறைய வரவேற்று எல்லோரையும் அமர வைத்தாள்.

ஆப்பிள், ஆரஞ்ச், ஸ்வீட்டுகள், பழங்கள் என வரிசையாக பத்து தட்டுகளில் கொண்டு வந்து வைத்தார்கள். மலருடைய நிச்சயதார்த்தத்தில் கூட அண்ணன்கள் இவ்வளவு வரிசை வைக்கவில்லை.

சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு பிறகு பெரிய அண்ணன் மெல்ல பேச்சைத் தொடங்கினார்.

"மலரு! உனக்கு எல்லாம் தெரியும்னு நினைக்கிறேன். போன வருசம் பயறு உளுந்து ஸ்டாக் வச்சு அதிக லாபம் பாக்குலாம்னு இருப்பு வச்சேன். மழையில மாட்டிக்கிட்டதுல எல்லாம் பூச்சி அடிச்சு உளுத்து போயிட்டு. ஒன் அண்ணி நகைய வச்சு வாங்குன பத்து லட்சம் கடனைக் கூட அடைக்க முடியல. பயறுல விட்ட காச, இந்த வருசம் பயறு யாவாரம் பண்ணித்தான் எடுத்தாகனும். அதுக்கே இருபது லட்சம் வேணும்.

தம்பி முருகேசு பொண்ணு.. நீட்டுல மார்க் கொறஞ்சு போனாலும், பாஸ் ஆயிட்டா. டாக்டருக்குதான் படிப்பேன்னு அடம்புடிக்கிறாளாம். தனியார்ல டாக்டருக்கு படிக்க 40 லட்சமாவது வேணும்.

சின்னவனோடு வேலை பார்க்கிற எல்லா வாத்தியாரும் வீடு கட்டிட்டாங்கலாம். இவன் இன்னும் கட்டுலயாம். அதனால அவனுக்கு வீடு கட்ட 30 லட்சம் வரை தேவைப்படுது. அதனால்தான் அந்த 10 ஏக்கர் நிலத்தை வித்து, பிரிச்சுகலாம்னு முடிவு செஞ்சோம். அதற்கு நீ ஒரு கையெழுத்து போடனும்" என்றார்.

"என்ன அண்ணா நீ ஒன்னும் பேசாம இருக்க" என்று முருகேசனை பார்த்து கேட்டாள் மலர்.

"இல்ல மலரு! கொரானாவுக்கு முன்ன அந்த எடத்த ஒரு கோடி வரைக்கும் கேட்டாங்க. அப்ப கொடுத்து இருந்தா ஒனக்கும் ஒரு பத்து லட்சத்த கொடுத்துட்டு ஆளுக்கு முப்பது எடுத்திருப்போம். ஆனா இப்ப ரியல் எஸ்டேட் தொழிலே படுத்திட்டு. இப்ப 60, 70 லட்சம் போவதே பெரிய காரியமா இருக்கு. அதனால்தான் உனக்கு கொடுக்க முடியல."

"கல்யாணம் ஆகி 16 வருஷமாச்சு இதுவரை உங்ககிட்ட ஏதாவது உதவி கேட்டிருப்பேனா? இந்த புள்ளயப் பாருங்க. இன்னை வரைக்கும் நான் சோறு ஊட்டி விடுறேன். அவன கட்டிக்க நாளைக்கு ஒருத்தி வருவாளா? வந்தாலும் நான் பாத்துக்கிற மாதிரி பாத்துக்குவாளா?

அவ பேருல ஒரு தொகையை போட்டு வச்சா, அதுக்கு ஆசைப்பட்டாவது ஒருத்தி வருவா. அதுக்கு என்னிடம் கொஞ்சம் காசு பணம் வேணாமா? நான் உங்க காச ஒன்னும் கேட்கல. எங்க அப்பாவோட காசதான் கேட்கிறேன். நீங்க ஒரு கோடிக்கு வித்துக்குங்க. சரிபங்கு நான் கேட்கல. ஒரு பத்து லட்சம் எம்புள்ள பேருல எழுதி வைங்க".

பெரிய அண்ணனுக்கு கோபம் வந்துவிட்டது,

"இந்த பாரு மலரு! புரியாம பேசாதே. ஒன்னோட கல்யாணத்துக்கு பதினஞ்சு வருசத்துக்கு முந்தி அஞ்சு ஏக்கர் தேங்காய் கொல்லைய வித்துத்தான் கல்யாணம் செஞ்சோம். அப்ப அது ஒரு லட்சம். அத விக்காம இருந்தா இன்னைக்கு இருபது லட்சம். உனக்குதானே செஞ்சோம். ஓம் புள்ள பொறந்தானே அதுக்கு நாங்கதானே ஒரு லட்சம் ஆஸ்பத்திரி செலவு செஞ்சோம். வருசா வருசம் வருச வைக்கிறோம். உன்ன அம்போன்னு விட்டோமா? என்ன கொற வச்சோம் சொல்லு?

"ஒன்னோட பொன்னு ஒன்ன என் புள்ளக்கு கொடுக்கிறேன்னு வாக்கு கொடு. நான் கேட்குற பத்து லட்சம் எனக்கு வேணாம்" இறங்கி வந்தாள் மலர்.

அண்ணன் தம்பிகள் மூவரும் தனியாக போய் பேசிவிட்டு வந்தார்கள்.

"நாங்க இப்படி சொல்றோம்னு வருத்தப்படாதே. உனக்கு கையெழுத்து போட பத்து லட்சம் தர்றோம். ஆனா நாளைக்கு அம்மா வூடு, அப்பா வூடுன்னு எங்க வீட்டுப் பக்கம் வந்து நிக்கப்படாது. எங்களால இதுக்கு மேல கொடுத்து அழ முடியாது. சரியா?" அதட்டும் குரலில் சொன்னார் பெரிய அண்ணன்.

ஓவென பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்துவிட்டாள் மலர்.

"அவசரம் வேணாம். நீ பொறுமையாக யோசிச்சு நாங்க போறதுக்குள்ள ஒன் முடிவ சொல்லு"

"இதுல யோசிக்க என்ன இருக்கு. உனக்கு வேணா நான் வேண்டாம போகலாம். எனக்கு நீங்க வேணும். நான் பொறந்த இடத்துக்கு போகனும், வரனும். எம் புள்ளங்களுக்கு மாமா வேணும். இத்தன உறவோடு பொறந்துட்டு அனாதையா ஏன் நான் சாகனும்?. எனக்கு ஒங்க பத்து லட்சம் வேணாம். எங்க கையெழுத்து போடனும் சொல்லு. நான் போட்டுத்தறேன். அப்பா! ஏம்பா என்ன விட்டுட்டு சீக்கிரமா செத்து போனீங்க."என்று வாய்விட்டு அழுதாள் மலர்.

அந்த பாவிகளுக்கு ஈவு இறக்கம் வரவில்லை. கையோடு கொண்டு வந்த பத்திரத்தில் கையெழுத்து வாங்கினார்கள். ஏதோ பானிபட்டு போரில் வென்றது போல் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்கள்.

கறிக்குழம்பு வாசனை வீடு முழுவதும் பரவியது. செண்பகத்துக்கு துணையாக தியாக சுந்தரமும் சமையலுக்கு உதவியதால் சீக்கிரம் சாப்பாடு தயார் செய்யும் வேலை முடிந்தது.

"மா" என்று மாடு அழைக்கும் ஓசை கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள் மலர்.

"அய்யய்யோ காலையிலிருந்து மாடு கன்னுகளுக்கு கயனி வக்க மறந்துட்டேனே" ஓடி போய் எல்லா மாட்டுக்கும் கழுநீர் பானையில் இருந்து எடுத்து வந்து கஞ்சி வைத்தாள்.

திரும்ப வரும்போது வாசலில் சீனு ஒரு பிளாஸ்டிக் டப்பாவை உருட்டி விளையாடி கொண்டு இருந்தான். வேகமாக ஓடி கொஞ்சம் ரசம் சாதத்தை பிசைந்து கொண்டு வந்து அவனுக்கு ஊட்டிவிட்டாள்.

சின்னவளை பற்றி கவலை இல்லை. அவளுக்கு பசிக்க ஆரம்பித்துவிட்டால் எங்கிருந்தாலும் ஓடி வந்து அம்மாவைக் கட்டிக் கொள்வாள்.

ஒரே நேரத்தில் இலை போட்டு எல்லோருக்கும் சாப்பாடு வைத்தார்கள். மலர், செண்பகம், தியாக சுந்தரம் மூவரும் பரிமாறினார்கள். வாழ்க்கையில் இப்படி ஒரு ருசியான சாப்பாட்டை சாப்பிட்டது இல்லை என்று எல்லோரும் புகழ்ந்தார்கள்.

தியாக சுந்தரம் வெற்றிலை பெட்டியை தூக்கி முன்னே வைத்தார். சிலர் போட்டுக் கொண்டார்கள்.

சிறிது நேரத்தில் எல்லோரும் புறப்பட்டார்கள். வாசலில் கார் நிற்கும் இடம் வரை வந்து வழியனுப்ப வந்தாள் மலர்.

"நீங்க எல்லாம் சேர்ந்து வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோசம். எல்லோரும் இந்த மாதிரி அடிக்கடி எங்க வீட்டுக்கு வரனும்" என்றாள் மலர்.

"உனக்காக இல்லாட்டியும் உங்க வீட்டு கறி குழம்புக்காவது நாங்கள் அடிக்கடி வருவோம்" என்றார் பெரிய அண்ணன். மலரைத் தவிர எல்லோரும் சிரித்தார்கள்

செண்பகம் தன் வீட்டு பிள்ளைகளுக்கு கொஞ்சம் குழம்பு சாதம் எடுத்துக் கொண்டு மலரிடம் சொல்லிக்கொண்டு வீட்டுக்கு போக மலரைத் தேடினாள்.

மலர் அறையில் கொஞ்சம் சாதத்தை வைத்து மோர் ஊற்றி சாப்பிட்டு கொண்டு இருந்தாள்.

"ஏன் அக்கா நீ கறி கொளம்பு ஊத்தி சாப்பிடலயா?"

"இல்ல செண்பகம். எனக்கு இந்த குழம்ப பார்க்கிறபோது காலையில பாய் கிட்ட பிடிச்சு கொடுத்த என்னோட ஆட்டுகுட்டிதான் நெனப்புல வருது. அதான் மோர் ஊத்தி சாப்பிடுறேன்"

"ஆறு மாசம் வளர்த்த ஆட்டுக்குட்டிக்காக நீ ஆயாசப்படுற, பதினைஞ்சு வருசம் கூட பொறந்து வளர்ந்த பொறப்புங்க, ஒன்ன தூக்கி எறிஞ்சிட்டு போயிட்டாங்க"

"இல்ல செண்பகம் என்ன பெத்த அப்பா, அம்மாதான் அவங்களயும் பெத்து இருக்காங்க. அதனால அவங்க மேல எனக்கு கோபம் இல்ல. அவங்களுக்கு அந்த ஆண்டவன் கொடுத்த அறிவு அவ்வளவுதான். அந்த கடவுள், அறிவ அவங்களுக்கு கொடுக்கிறப்ப நிச்சயம் என்னை தேடி வருவாங்க"

செண்பகம் புறப்பட்டதும், மாடுகளுக்கு வைக்கோல் வைக்கவும், மேய்ந்துவிட்டு வந்த ஆடுகளை பிடித்து கட்டவும் புறப்பட்டாள் மலர்.

ஜெ மாரிமுத்து

இவரது பிற பதிவுகளைப் படிக்க > இங்கே தொடவும்

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு