Trending

சிறுகதை: எங்கிருந்தாலும் வாழ்க - ஜெ மாரிமுத்து

 

எங்கிருந்தாலும் வாழ்க - ஜெ மாரிமுத்து

இரவு மணி பன்னிரெண்டையும் தாண்டி விட்டது. முத்துக்குமாருக்கு தூக்கம் வரவில்லை.

தூக்கம் வராததற்கு காரணம், அவரது மகன் துரைபாண்டிதான். சென்னையில் ஒரு கட்டிட கட்டுமான நிறுவனத்தில் இன்ஜினியராக இருக்கிறான்.

திருவாரூரில் உள்ள பூர்வீக விட்டை விற்று விட்டு, தனது தந்தையை தன்னோடு வந்து இருக்க சொல்கிறான்.
முத்துக்குமார் கணக்கு வாத்தியராக முப்பது ஆண்டுகள் ஒரு தனியார் பள்ளியில் வேலை பார்த்துவிட்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒய்வுப் பெற்றவர்.

எப்போது தூங்கினாரோ தெரியவில்லை, காலையில் 7 மணிக்கு, தொலைபேசி மணி ஒலி கேட்டு கண் விழித்தார் முத்துக்குமார்.

துரை பாண்டிதான் அழைத்திருக்கிறான்.

கொல்லைக்குச் சென்று பல்துலக்கிவிட்டு மகனுக்கு போன் செய்தார்.

"என்னப்பா? காலையிலேயே போன் அடிச்சுருக்க"

"அது சரி, நீங்க ஏம்பா உடனே போன எடுக்கல. உடம்பு நல்லா இருக்குல்ல?"

" நைட்டு தூங்க ரொம்ப லேட்டாயிட்டு, எப்ப தூங்கினேன்னு  எனக்கே தெரியல. அஞ்சு மணிக்கே முழிச்சிடுவேன். இன்னக்கி வாக்கிங்கும் போச்சு"

"அதனால்தான் சொல்றேன். எங்க கூட வந்திருங்க. அம்மா, கூட இருந்தாகூட நான் கவலைப்பட மாட்டேன்."

"அவளதான் பாவி பயலுக கொன்னுட்டாங்கலே, அவ இருந்தா எனக்கு ஏன் இந்த நெலம?"

"நாள் முழுவதும் உங்களுக்காக  கவலைப்பட்டுகிட்டு இருக்க முடியாது. என்னோட ஃபிரென்ட் அசோக், திருவாரூர்ல ரியல் எஸ்டேட் பண்றான். நம்ம வீடு ஏழு லட்சம் வரைக்கும் போகும்னு சொன்னான்."

"நீ அவ்வளவு தூரம் விசாரிச்சிட்டியா? நாலு தலமுறையா வாழ்ந்த வீடய்யா இது. 


கணக்கு வாத்யார் வீடுன்னா, சின்ன புள்ளக் கூட நம்ம வீட்டைக் காட்டும். விதைய கொல்லையில தூக்கி போட்டா போதும், செடியா முளைக்கும். அத விக்க சொல்றியே"

"நீங்க என்னோட வந்துட்டா, இந்த வீட்ட யாரு பார்த்துக்குவா? அதனால்தான் வித்துடுவோம்னு சொல்றேன்."

"நீயே வீட்ல இரண்டு புள்ளங்கள  வச்சுகிட்டு வாடகை வீட்ல இருக்க. நானும் ஏன் உனக்கு பாரமா இருக்கனும்?"

"அப்பா பெரியவனை ஒரு  லட்சம் கட்டி, ஆறாம் வகுப்பில் நாமக்கல் ஹாஸ்டல்ல சேர்த்து விட்டுட்டேன். இப்ப நாங்க மூணு பேருதான். ஒன்னும் பிரச்சனையில்லை.

"பச்ச புள்ளய வெளியூர்ல படிக்க வச்சிருக்கேன்னு சொல்றியே. அப்பா, அம்மாவ, நெனச்சு அந்த புள்ள மனசு என்ன பாடுபடும்?  சரி, வாடகை எவ்வளவு ஆகுது?

"அறுபது ஆயிரம் சம்பளத்துல இருபது ஆயிரம்  வாடகைக்கு போயிடும். ஆனா நுங்கம்பாக்கம் ஏரியாவிலே இது ரொம்ப கம்மி. அதுமட்டுமல்ல எங்க கம்பெனி கட்டுன வீடுதான் இது. மூனாவது மாடியில உள்ள அப்பார்ட்மென்ட் என்றாலும் டபுள் பெட்ரூம்.

இன்னைக்கு இதோட வெல ஒரு கோடி. ஆனா எங்க முதலாளி, எனக்கு 80 லட்ச ரூபாய்க்கே தரேன்னு சொல்றாரு.  இனிஷியல் அமவுன்டா ஒரு அஞ்சு லட்சம், ஆறு லட்சம் கொடுத்துட்டா மீதி டியூவில் கட்டி கொள்ளலாம். இருபது ஆயிரம் வாடகைக்கு பதிலா,  இன்னும் பத்து சேர்த்து முப்பதாயிரம் கட்டுனா இருபத்தஞ்சு வருசத்துல வீடு சொந்தமாகிடும்.

இருபத்தஞ்சு வருஷத்துல இந்த எண்பது லட்சம், எண்பது கோடி ஆகிடும்."

"மாசம் முப்பது ஆயிரமா? எப்படி கட்டுவ?"

"அதனால்தான் தேவிய ஜவுளிக்கடையில சேர்த்துவிடலாம்னு இருக்கேன். அதுல பதினஞ்சு ஆயிரமாவது  கிடைக்கும்."

துரைபாண்டி பேச பேச, முத்துக்குமாருக்கு தலை சுத்த ஆரம்பித்துவிட்டது.

"அடுத்து நான் பேசுறப்ப நல்ல முடிவா சொல்லுங்கப்பா"

போன் பேசுமுன்பு இருந்த கவலையை விட பேசிய பின்பு அதிகமாகிவிட்டது.


"சார் நான் மணி வந்திருக்கேன்" என்று கதவைத் தட்டினான் பக்கத்துல சிறிய ஹோட்டல் ஒன்றை நடத்தும் மணி. படிப்பு வராவிட்டாலும் முத்துக்குமாரிடம் படித்தவன் மணி.

வழக்கமாக முத்துக்குமாருக்கு காலை டிபன் அவன்தான் கொடுப்பான். இட்லி, தோசை, பூரி என ஏதாவது கொடுப்பான். எவ்வளவு கொடுத்தாலும் இருபது ரூபாய் மட்டும்தான் வாங்கிக் கொள்வான்.

பெண் ஒன்று, ஆண் ஒன்று என,  சந்தோசமாக வாழ்ந்த குடும்பம்தான் முத்துகுமார்  குடும்பம்.  மனைவி அன்னபூரணி. துரைபாண்டிக்கு அடுத்து பிறந்தவள் அகிலா.

துரைபாண்டியை படிக்க வைத்தது போல, அகிலாவையும் படிக்க வைத்து, பெரிய இடத்தில் சென்னையில் கட்டி கொடுத்தார் முத்துக்குமார். மாப்பிள்ளை தங்கமானவர்.

மனைவி மீது உள்ள பாசத்தால், மாப்பிள்ளை, தலைப்பிரசவத்துக்கு கூட அகிலாவைத் தாய் வீடுக்கு அனுப்பாமல் பிரைவேட் ஆஸ்பிடலில் சேர்த்தார். அன்னபூரணியும் பெண்ணைப் பார்த்துக் கொள்ள பத்து நாள் முன்பே மாப்பிள்ளை வீட்டுக்கு சென்றுவிட்டாள்.

ஆஸ்பிடலில் சேர்த்த, நான்காவது நாள் பக்கம் பக்கமாக கையெழுத்து வாங்கினார்கள்.  யாரையும் பார்க்க உள்ளே விடவில்லை. வலி வரவில்லை என்று தாமதமாக போனதால் பனிக்குட நீரை குழந்தை குடித்துவிட்டதாம். கர்ப்பப்பையில் அசைவு இல்லையாம். ஆப்ரேஷனுக்கு மயக்க மருந்து கூடுதலாக போனதால் தாய்க்கும்  நினைவு திரும்பவில்லை.

கடைசியில் நான்கு லட்ச ரூபாய் பில் போட்டு இரண்டு உயிரற்ற உடல்களைத்தான் கொடுத்தார்கள்.
பெண்ணை பறி கொடுத்த  அதிர்ச்சியில் அன்னபூரணி  மயங்கி விழுந்தவள்தான், அதே ஆஸ்பத்திரியில் மூன்று நாள் கோமாவில் இருந்து உயிரை விட்டாள்.

மாலை 5 மணி இருக்கும். முத்துக்குமாரோடு வேலை பார்த்த தமிழ் வாத்தியார் கணேசன் வந்தார். முப்பது வருட நண்பர்.
"என்னப்பா காலையில வாக்கிங் வரல"
"அதான் முன்பே  சொன்னேனே துரைபாண்டி பிரச்சன"
"சரி வா நடந்துகிட்டே பேசலாம்"
வழக்கமாக ஓய்வுபெற்ற வயதானவர்கள்,  பெரும்பாலும் வாக்கிங் போகும் இடம் திருவாரூர் தியாகராஜர் கோவில்தான். கோவில் ஐவேலி, கமலாலய குளம் ஐவேலி என்பார்கள்.  மூன்று பெரிய பிரகாரத்தையும்,  ஒரு முறை சுற்றி வந்தாலே போதும் ஒரு மணி நேரம் ஆகிவிடும். நல்ல நிழலும், தூய காற்றும் உடலுக்கு புத்துணர்ச்சியைக்  கொடுக்கும்.

"என்ன முத்துக்குமாரு மதியம் என்ன சாப்பாடு செஞ்சீங்க"

"நான் எங்கே சாப்பாடு செஞ்சு கிழிக்கப் போறேன்.  தோசை  வட்டமா வர்ரதுக்கே ஒரு மாசமாச்சு. அன்னபூரணி போன பிறகு, எல்லாம் போச்சு. பார்த்து பார்த்து செய்வா. உடம்பு முடியலன்னா, நாம் சொல்லாமலேயே, தெரிஞ்சுகிட்டு கஞ்சி வச்சு தருவா. கருக்கு வச்சு தருவா.  குழந்தை மாதிரி என்ன பார்த்துகிட்டா.
புள்ள, பொண்ணு, புருஷன்னு ஓடிக்கிட்டே இருந்தா. கடைசியில் உயிர் போன போது, பக்கத்துல  கூட நிக்காத பாவியாயிட்டேன்"
துண்டால் முகத்தை மூடிக்கொண்டு அழுதார்.

"சரி விடுங்க! பொண்டாட்டியும் இல்லாம போச்சு. பொண்ணும் இல்லாம போச்சு. அந்த புள்ளக்காவதான் இனி  நீங்க வாழ்ந்தாகனும். அவன் உங்களோடு வர முடியாது. நீங்க அவனோடு சேர்ந்துக்கிறதுதான் நல்லது. ஒங்கள பிரியறது எங்களுக்கே கஷ்டம்தான். என்ன செய்யிறது?. மெட்ராஸ் வரேன்னு துரைகிட்ட சொல்லிடுங்க"

நீண்ட நேரம் கணேசனுடன் பேசியதில் முத்துக்குமார் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.

துரைபாண்டிக்கு போன் செய்து "ஒன்னோட ஆசைப்படியே செஞ்சுக்கப்பா" என்று சொல்லிவிட்டார்.

வெள்ளிக்கிழமைதான் சொன்னார், திங்கள்கிழமை வீட்டுக்கே ரெஜிஸ்ட்ராரை அழைத்து வந்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கிவிட்டான் துரைபாண்டி.

வீடு கைமாறிவிட்டது. வாங்கியவனும் ரியல் எஸ்டேட்காரன்தான். பேக் நிறைய கொண்டுவந்த ஜநூறு ரூபாய் நோட்டுகளை முத்துக்குமார் முன்பு அள்ளி போட்டார்கள்.

"இனிமேல் எல்லாமே என் பிள்ளைதான். அவன் கையில் கொடுங்கள்" என்றார் முத்துக்குமார்.

எல்லாம் முடிந்தது. அடுத்த திங்கள் கிழமை  சென்னை வர, இரயிலில் டிக்கெட் போட்டுக் கொடுத்துவிட்டு துரைபாண்டி சென்றுவிட்டான்.

செவ்வாய்க் கிழமை காலை எக்மோரில் முத்துக்குமார் இறங்கினார். இரயிலில் பர்த்தில் வந்ததால் உடம்பு வலி ஒன்றும் இல்லை. ஜங்ஷனுக்கே காரில் வந்து துரைபாண்டி அப்பாவை அழைத்து வந்துவிட்டான்.

வீடு வந்து விட்டது. ஒரே பில்டிங்கில் முப்பது வீடுகள். மூன்றாவது மாடிக்கு செல்ல லிப்ட். பத்து நிமிடமாவது காத்திருந்தால்தான் லிப்டில் இடம் கிடைக்கும்.

மருமகள் தேவி புன்னகையோடு மாமாவை வரவேற்றாள். பேத்தி சஞ்சனாவை தூக்கி கொஞ்ச பார்த்தார் முத்துக்குமார். அவள் தாத்தாவை, புதிய மனிதரை பார்ப்பது போல அம்மாவின் சேலைக்குள் மறைந்தாள்.

"மாமா! இதுதான் உங்க ரூம். கட்டில், மெத்தை, டைனிங் டேபில், எல் இ டி டிவி, ஏர்கண்டிஷனர் எல்லாம் வாங்கி விட்டோம். சாப்பிட்டு விட்டு, பேப்பர், புத்தகம், படிச்சிகிட்டு நீங்க நிம்மதியாக இருக்க வேண்டும். இது தான் எங்கள் ஆசை."

முத்துக்குமாருக்கு கண்ணீர் வந்துவிட்டது.

"ஏன் மாமா அழறீங்க"

"உங்க அத்தை நெனப்பு வந்துட்டும்மா. நீங்க இப்படி இருக்குறத பார்க்க அவளுக்கு  கொடுத்து வக்கலேயே."

இரண்டு பேரும் வேலைக்கு போவதால் பெரும்பாலும் ஸ்விகி, சொமாடோ போன்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில்தான் ஆர்டர் கொடுக்கிறார்கள்.

மதிய சாப்பாடு என்ன வேண்டும் என்று முத்துக்குமாரிடம் கேட்டு, துரைபாண்டி ஆர்டர் போட்டுவிட்டு சென்றுவிடுவான்.  சரியான நேரத்துக்கு டெலிவரி பாய் வந்துவிடுவான். பெரும்பாலும் தயிர் சாதம்தான்.

"மூனு மாடி ஏறி இந்த தயிர்சாதத்தை கொடுக்கிறியே! பாவம்பா நீ. அது சரி, இந்த தயிர்சாதம் பாக்கெட் எவ்வளவு"

"சாதாரணமா நூறு ரூபா சார். இன்னக்கு ஆஃபர் இருக்கு எண்பது ரூபா"

"அஞ்சு ரூவா மோருக்கும், அஞ்சு ரூவா  சோறுக்கும் எண்பது ரூபாயா? "

"சார் ஊருக்கு புதுசா? இருநூறு ரூபாய் விக்கிற ஹோட்டலும் இருக்கு" சிரித்துக்கொண்டே சென்றான் டெலிவரி பாய்.

ஒரு நாள் வீட்டில் இருப்பதே, ஒரு வாரம் ஜெயிலில் உள்ளது போல இருந்தது முத்துக்குமாருக்கு.

முத்துக்குமாருக்கு ரூமுக்குள் அடைந்து கிடப்பது சுத்தமாக பிடிக்கவில்லை. ஆர்டர் போட்டு வாங்கி சாப்பிடுவதும் பிடிக்கவில்லை.

மறுநாள் துரைபாண்டியிடம்,
"ஊருல தினமும் வாக்கிங் போய் பழகிடுச்சுப்பா. நாளையிலேருந்து கொஞ்சம் காலார நடந்துட்டு வரேன்"

"அப்பா! நீங்க சொல்றது வேடிக்கையா இருக்கு. மெட்ராஸ் என்ன பொட்ட கிராமமா? முதல்ல உங்களால மூனாவது மாடியில் இருந்து கீழே இறங்க முடியமா? 

கொஞ்சம் அசந்தாலும் டிராஃபிக்ல தட்டி எறிஞ்சுடுவான். அதெல்லாம் சரியா வராது. ரூமுக்குள்ளேயே எட்டு போட்டு வாக்கிங் போங்க"

முத்துக்குமார் பதில் ஏதும் சொல்லவில்லை.


மறுநாள் எல்லோரூம் வேலைக்கு போன பிறகு லிப்ட்காரனிடம் சொல்லி கீழே இறங்கி கொஞ்ச தூரம் நடக்க தொடங்கினார். கூட்டத்தில் புகுந்தவர், எங்கெங்கேயோ போய்விட்டார். திரும்ப வீட்டுக்கு போகலாம் என்றால் வழிபுரியவில்லை. இவர் இருக்கும் இடம் கூட சொல்லத் தெரியவில்லை.
நல்லவேளை கையில் போன் இருந்தது. துரை பாண்டிக்கு போன் செய்து விஷயத்தை சொன்னார். அவர் நிற்கும் இடத்தை அடையாளம் கண்டு இருபது நிமிடத்தில் டூ வீலரில் அழைத்து வந்துவிட்டான்.

வீட்டுக்கு வந்தவுடன் அவன் முகம் மாறியது.

"வெளியிலே போகக்கூடாதுன்னு அன்னக்கே சொன்னேன, கேட்டிங்களா? இப்ப என்னாச்சு தெரியுமா? இரண்டு மணி நேரம்  போச்சு. இரண்டு மணி நேரம் சைட்ல இல்லேன்னா, ஆயிரம் ரூபாய் சம்பளத்திலே புடிச்சுருவாங்க. உங்களால எனக்கு ஆயிரம் ரூபா லாஸ். இனிமேலாவது சொன்ன பேச்ச கேளுங்க"

துரைபாண்டி இவ்வளவு கோபமாக பேசி பார்த்ததில்லை. அதனால் அவன் மனம் வருத்தப்படும்படியாக நடந்து கொண்டோமே என முத்துக்குமார் வருந்தினார்.


ரூமுக்குள்ளே அடைந்து கிடக்கும் முத்துக்குமாருக்கு, ஒரே துணை அவருடைய பட்டன் போன்தான். அடிக்கடி நண்பன் கணேசனோடு பேசுவார்.

ஒரு நாள் கணேசன், "முத்துக்குமாரு! நம்மோடு வாத்தியரா வேலை செஞ்ச ஞான முருகன் பொண்ணு கல்யாணம் அடுத்த வெள்ளிக்கிழமை. உன் அட்ரஸ் கிடைக்காதனால என்னையே போன்ல சொல்ல சொன்னார். எனக்கும் உன்ன பார்க்குனும்போல இருக்கு."

சொந்த ஊரைப் பற்றி பேசினதுமே உடம்பு முழுக்க சிலிர்த்தது முத்துகுமாருக்கு.

துரைபாண்டி வந்ததுமே,

"துரை, நம்ம தமிழ் வாத்யார் பொண்ணுக்கு வர்ற வெள்ளிக்கிழமை கல்யாணமாம். முப்பது வருஷம் கூட இருந்தவரு. நான் அவசியம் போகனும். ஒரு ஆயிரமாவது மொய் செய்யனும். டிரெய்ன் டிக்கட், ரிட்டன் டிக்கெட் எல்லாம் ஏற்பாடு செஞ்சு கொடு."

அப்பா பேச பேச பிள்ளைக்கு கோபம் தலைக்கேறியது.

"அப்பா திருவாரூரே வேணாம்னுதானே எல்லாத்தையும் வித்துட்டு வந்தோம்?  

இப்ப ஆயிரம் மொய் வச்சா, அந்தப் பணம் நமக்கு எப்ப திரும்ப வரும்?. இன்னும் இருபது வருஷத்துக்கு நம்ம வீட்டிலேயும் எந்த தேவையும் இல்லை. சும்மா இல்லாம ஏன் எதாவது வெட்டியா செலவ உண்டாக்குறீங்க?

இரண்டாயிரம் எக்ஸ்ரா கிடைப்பதால், ஞாயிற்றுக் கிழமை கூட லீவு எடுக்காமல் உழைக்கிறேன். வீட்ல உள்ள எல்லா பொருளுமே தவணையில் எடுத்ததுதான். டெய்லி ஒரு ஈஎம்ஐ வருது. என் சூழ்நிலையையும்  புரிஞ்சிகிட்டு பேசுங்க. கிரிடிட் கார்டு டைம்  ஒரு நாள் லேட்டானாலும், இரண்டாயிரம் அழ வேண்டும். காசோட அருமை உங்களுக்கு தெரியவே இல்ல. வேணும்னா இருநூறு ரூபா டிடி எடுத்து அனுப்பிடலாம்"

ஏழு லட்ச ரூபா வீட்டை விற்று, மகனிடம் கொடுத்த முத்துக்குமாருக்கு அவனுடைய வார்த்தைகள் முள்ளாக குத்தியது.

கல்யாணத்துக்கு போகவில்லை. அவருடைய அறையில் எத்தனையோ வசதிகள் இருந்தும், ஒவ்வொரு நாளையும் ஓட்டுவது, ஒரு யுகத்தை கடப்பது போல இருந்தது. கோவில் யானைக்கு தினமும் தேங்காய், பழம் கிடைத்தாலும், அது அலைந்து திரிந்த காடு போல ஆகுமா?

பேத்தியும் தாத்தாவிடம் எதுவும் பேசுவதில்லை. அவள் கையில் செல்போன் இருந்தால் போதும். அம்மாவும் தேவையில்லை, அப்பாவும் தேவையில்லை. ஏன் சாப்பாடு கூட தேவையில்லை.

காலம் ஓடிக்கொண்டிருந்தது. அடுத்த பிரச்சனையும் தமிழ் ஆசிரியர் மூலமாகத்தான் வந்தது.

பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைத்த தமிழ் ஆசிரியர், திடீரென இறந்து விட்டார். கணேசன் மீண்டும் போன் செய்தார், "கல்யாணத்துக்குதான் வரவில்லை. சாவுக்காவது வந்து சேரு" என சொல்லி போனை வைத்துவிட்டார்.

முத்துக்குமாருக்கு அழுகை அழுகையாக வந்தது.

"துரைபாண்டி!  தமிழ் வாத்தியார் போய் சேர்ந்துட்டாரான்டா. நான் போயே ஆவனும் உடனே டிக்கெட் போடு"

"அப்பா!  நான் சொல்றேன்னு கோபப்படாதீங்க. தினமும் லட்சம் பேர் பொறக்குறாங்க. லட்சம் பேர் சாவுறாங்க. எல்லாத்துக்கும் போக முடியுமா? பக்கத்து தெருவிலேயா செத்துப் போனாரு? ஒரு மாலைய வாங்கி போடுவதற்கு? திருவாரூரையே முடிச்சாச்சு. இன்னும் ஏன் இப்படி இருக்கீங்க?"

சரி இன்னைக்கு போறீங்க அடுத்த வாரம் ஒருத்தர் செத்தாருன்னா, அப்புறம் அதுக்கும் கிளம்புவிங்களா?

"முப்பது வருஷம் ஒன்னா கூட இருந்தவருப்பா"

"சரி முப்பது வருஷ நண்பரு நீங்க போனதும் கண்ணு முழிச்சு எழுந்து உட்காரப் போறாரா? சரி உங்களுக்கே சாவு வந்தா திருவாரூர் முழுக்க தெரண்டு சென்னைக்கு வரப் போவுதா?"

இவனிடம் பேசி பயனில்லை. துரைபாண்டி மீது முதல் முறையாக வெறுப்பு வந்தது.

எல்லோரும் வேலைக்கு போன பிறகு வீட்டை பூட்டினார். சாவியை பக்கத்து வீட்டுக்காரனிடம் கொடுத்தார். கோயம்பேடு வந்து திருவாரூர் பஸ்ஸில் ஏறி அமர்ந்து விட்டார்.

அறைக்குள்ளேயே கிடந்து சோர்ந்து போன உடல், சொந்த மண்ணை மிதித்ததும் ஆயிரம் வாட் பல்பு போல பிரகாசிக்க தொடங்கியது. நேராக சாவு வீட்டுக்கு  நடந்தே போய் தன் நண்பனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

காரியம் முடிந்தது. கணேசனிடம் தன் சென்னை வாழ்க்கை முழுவதையும் கூறி அழுதார்.

"எனக்கு சென்னைக்கு போகவே விருப்பமில்லை கணேசா"

"ஒன்று செய்வோம். என் வீட்டு கொல்லையிலே, எங்கப்பா காலத்துல கட்டுன ஒரு மாட்டுக் கொட்டில் இருக்கு. அந்தக் காலத்துல மாட்டுக்கே, வீடு போல ஷெட் போட்டு, நாலு ஃபேன் போட்டு, எங்க அப்பா பார்த்துகிட்டாரு. என் மனைவி வந்த பிறகு மாடெல்லாம் வித்தாச்சு.

அத சுத்தம் செஞ்சு தரேன் அங்க தங்கிக்க. அங்கேயே டியூஷன் கிளாஸ் ஆரம்பிப்போம். கணக்கு சொல்லிக் கொடுக்க இங்கே ஆளே இல்ல."

கணேசனை அப்படியே இறுக கட்டி பிடித்து கொண்டார் முத்துக்குமார். ஆறு மாதத்துக்கு பிறகு அன்றுதான் நிம்மதியாகத் தூங்கினார்.

வீட்டில் அப்பாவை காணவில்லை என்றதும், சாவுக்கு போயிருப்பார் என்பது துரைபாண்டிக்கு புரிந்துவிட்டது.

போன் செய்து பார்ப்போம் என செல்லை எடுத்த போது, வேகமாக வந்து தேவி தடுத்துவிட்டாள்.
"நீங்க ஒன்னும் அவருகிட்ட  பேச வேணாம். சொல்லாம கூட போயிருக்காருன்னா திமுருதானே?. தேரு எங்க வேணும்னாலும் சுத்தட்டும், கடைசியில நிலையடிக்குதான வந்தாகனும்" என்றாள்.

இரண்டு நாளாகியும் அப்பா சென்னைக்கு வரவில்லை என்றதும் பதட்டமாகி போன் செய்தான் துரைபாண்டி.

"அப்பா என்ன இன்னும் வீட்டுக்கு வரல."

"இல்லப்பா!  இன்னும நான் அங்க வர மாட்டேன். இங்கேயே டியூஷன் சென்டர் ஆரம்பிச்சிட்டேன். நீ நல்லா இருந்தா உன்னோட தங்கலாம். உன் வீட்டில் உள்ள எல்லா பொருளும்  நீ சம்பாரிச்சது இல்ல. ஏன் அந்த வீடே நீ  சம்பாரிச்சதுல்ல. எவனோ கடன்காரன் கொடுத்தது.

ஒரு மணி நேரம் வேலைக்கு போகாட்டியும், ஆயிரம் ரூபா சம்பளத்தைப் புடிக்கிற கம்பெனில வேல செய்யுற. ஒன் உடம்புக்கு ஒன்னு ஆகி, ஒரு மாசம் போவாட்டி, உனக்கு சம்பளம் கூட கொடுக்க மாட்டாங்க. அப்ப யாரு உனக்கு ஈ எம் ஐ கட்டுவா?

இருப்பதை கொண்டு வாழ கத்துக்கல. புள்ளப் பாசம்னா  என்னன்னே உனக்குத் தெரியல. இரண்டாயிரம் சதுர அடிய ஏழு லட்சத்துக்கு வித்துட்டு, கொல்லையும் இல்லாத, வாசலும் இல்லாத வீட்ட, எண்பது லட்சத்துக்கு வாங்குற. குடும்பத்த நடத்த வேண்டிய மருமகள வேலைக்கு அனுப்பிவிட்டு யாரோ ஆக்குன சாப்பாட்ட வாங்கி சாப்பிடுற. கிரிடிட் கார்டு, டெபிட் கார்டுக்கு கொடுக்கிற மரியாதைய கூட பெத்த புள்ளங்களுக்கு கொடுக்கல.

இந்த ஊருல எனக்கு வீடு இல்ல. ஆனா எனக்கு தங்குவதற்கு  இடம் கொடுக்க ஆள் இருக்கு. இருபது ரூபாயில ஒரு வேள சாப்பாட்ட முடிச்சுருவேன். நல்ல காத்து இருக்கு. நல்ல மனுஷங்க இருக்காங்க.

ஏசி அறைக்குள்ள அடஞ்சு கிடக்குறதும் ஒன்னுதான். சமாதியில பொணமா கிடக்குறதும்  ஒன்னுதான். ஏசி அறை கொடுக்காத நிம்மதியை எனக்கு மாட்டுக் கொட்டில் கொடுக்குது. அது போதும் எனக்கு.

என்ன, எல்லோருக்கும் கணக்கு சொல்லி கொடுத்தேன். உனக்கு நான் போட்ட கணக்கு தவறாகி விட்டது.

எங்கிருந்தாலும் நீ நல்லா வாழனும்பா, ஏன்னா நீ சந்தோஷமா இருந்தால்தான்,  நான் சந்தோஷமா இருக்கமுடியும்."

மகனின் பதிலுக்கு கூட காத்திருக்காமல், போனை வைத்துவிட்டார் முத்துக்குமார்.


ஜெ மாரிமுத்து

2 Comments

  1. கிராமத்து வாசனை நிரம்பிய சுவாரசியமான வரிகள்.

    22.12.2023 அன்று என்னோடு திருவாரூரிலிருந்து மதுரை வரும் வழியில் ஒரு பாட்டி பேசியது இப்போது ஞாபகம் வருகிறது.

    எல்லாவற்றையும் குழந்தைகளுக்காக தருவது அம்மாவின் போதாத நிலை அதை இன்றளவும் தவிர்க்க முடியவில்லை.

    சிறுபான்மையாக அப்பாக்களும் உள்ளனர்.

    தன் மனைவியின் மரணத்தை ஒரு ஆண் அவனது செளகரியமான வாழ்க்கையினூடாகத் தான் தெரிந்து கொள்வான் என்பதில் இக்கதை ஒரு சான்று.

    இறந்த மனைவிக்கு அவ்வரில்லை. மகளுக்கும் அவ்வாறில்லை.
    தன்னுடைய கணவனின் வம்சாவளிக்காக அவள் விட நேர்ந்தது.

    தன் மகளென இவள் துக்கத்தில் உயிரிழந்தால்...

    மருமகளோ வீட்டு வேலையை செய்யாமல் வெளியே வேலை செய்றாளென ஒரு ஆணிற்கு கோவம்.


    இந்த குடும்ப அமைப்பு எவ்வாறெல்லாம் பெண்களைப் பகடைகாயாய் பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்திவிட்டு இறந்த பின் கவலைக் கொள்வது போல் நாடகமாடுகிறது.


    இச்சமுதாயம் வேற்றுமையில் ஒற்றுமை தான்.

    வேற்றுமையில் தான் ஒற்றுமையாக உள்ளது

    ReplyDelete
  2. நான்கு சுவரில் அடைப்பட்டு கிடக்க ஆணால் மூடியாத போது பெண்ணால் எவ்வாறு முடியும்.

    இக்கதையில் வரும் முத்துக்குமாருக்கு ( அதாவது ஒரு ஆண்) இருக்கும் இடம் பிடிக்க வில்லை என்றதும் தனக்கு பிடித்த இடத்தை நோக்கி சொல்கிறார்.

    அவரது மகன் துரைப்பாண்டி பணத்தேவையின் பொருட்டு அவரயும் அவனது மனைவியினை பயன்படுத்திக் கொள்கிறான்.

    இவரும் இங்கு பாதிபில் இருக்க ஒரு ஆணுக்கு மட்டுமே அதிலிருந்து விடுபட வாய்ப்பு கிடைக்கிறது.

    அவள் என்னானாள்....

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு