அண்மை

தேசியவாதம் எனும் சாதியப் பெருமிதப் பெருந்தீங்கு - தீசன்

Noam Chomsky the great intellect

Nationalism is among the most dangerous ideologies / தேசிய வாதம் இருப்பதிலேயே மிகவும் ஆபத்தான கருத்தியல்களில் ஒன்று. நோம் சோம்ஸ்கியின் இந்தக் கூற்று உலகளாவிய ஒட்டுமொத்த தேசிய உணர்விற்கு எதிரானதாகவும் அதேசயத்தில் தேசியவாதத்தின் மோசம் என்ன என்னும் கேள்வியையும் நமக்குள் உண்டாக்குகிறது. இந்திய தேசிய உணர்வாளர்களை நாம் வெளிப்படையாக இல்லையென்றாலும் (வெளிப்படையாகவும்) குறிப்பாகவும் சாதியவாதிகள் என்று எளிதில் கண்டறிந்துவிடலாம். தேசிய உணர்வைப் பற்றிய அறிவியக்கம் இதில் முக்கிய பங்காற்றுகிறதனால் அதன் அறிவுத்தோற்றம் (Epistemology) தெரியாமல் அவற்றின் வன்முறை புலப்படாது.

நாவலந்தீவு எனும் இப்பெருநிலத்தில் இந்திய/ இந்து எனும் உணர்வுப்பிறப்பு அல்லது ஆக்கம் (ஆக்கம் என்பது சரியாக இருக்கும்) புறக்காரணிகளின் சமூக உந்துதலால் உருவானது. கிழக்கு வளியை நன்கு பயன்படுத்தி வந்த மேலையர் இந்நிலத்து மனிதர்களைக் கறுப்பர்கள் என்றும் அரைநிர்வாணர்கள் என்றும் அசிங்கமானவர்கள் என்றும் அடையாளப்படுத்தினர். பின்பு அங்கேயே பகட்டான, ஆடை அணிகலன்களுடன் கூடிய உடல்களையும் காணும்போது ஒரு குழப்பம் அவர்களுக்கு வந்திருக்கும். சாதி பற்றிய அறிவு இல்லாமையே இந்தக் குழப்பத்திற்குக் காரணம். மிகவும் சிக்கலான இந்த சமூக அமைப்பு ஓர் ஒழுங்காக இந்திய மனங்களுக்கு எளிதில் விளங்கும். தோல் மற்றும் உடை இரண்டும் வெறும் தோலாகவும் உடையாகவும் மட்டும் இல்லை என்பதை இங்கு நாம் மேலைப் பண்பாட்டு மேலாண்மைவழி உணர்ந்துகொள்ள வேண்டும்.

இந்த சமூக இணக்கம்தான் கறுப்பர்களால் உருவான வெள்ளைதேசியவாதமாக வடிவங்கொள்கிறது. கறுப்பர்களுக்கு அப்போது தேசியம் இல்லை என்பதை நினைவில் கொள்ளவும். (இந்திய நிலம் எனும் சொல்லே அத்தகைய உருவாக்கம் நடைபெறாதபோது இருந்த நிலப்பரப்பைக் குறிக்க பெருந்தடையாக உள்ளது.) காலனிய எழுச்சி அல்லது ஆளுகை தீவிரமடையும்போதுதான் சமூகத்தில் கெட்டிப்பட்டிருந்த ஏதோ ஒன்று விலகுவதான உணர்வு இங்குள்ள சாதி உடைமைக்காரர்களுக்கு அதாவது ஆளும் சாதியினருக்குப் புலனாகிறது. வெள்ளைதேசியத்திற்கு இங்கிருந்த சாதியதேசியமெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. இந்திய பிரம்மம் உடல்களை எப்படி இழிவாகக் காணுமோ அதைக் காட்டிலும் வெள்ளை பிரம்மம் மோசமானதாக இருந்தது. அதற்கு சமத்துவத்துவத்தில் விருப்பம் இல்லையானாலும் சாதிபற்றிய அக்கறையில்லை. இது இங்கிருந்த உழைப்பற்ற சோம்பேறி பார்ப்பன உடல்களைக் குத்தியது. பிரம்ம வாதத்தின் அல்லது அத்வைத எழுச்சியின் இரண்டாம் அத்தியாயம் இத்தகைய இடத்தில்தான் தொடங்குகிறது. தமிழில் அதன் உபபொருள்தான் பாரதி. (அதனால்தான் அவர் மகாகவி).

பிரம்மவாதத்தின் இன்னொரு பெயராக அதேசமயத்தில் வேறொரு கருத்தியலைப் போல கொண்டாடப்பட்டது தான் இந்தியதேசியவாதம். பகவத்கீதை ஒரு நல்ல சாட்சி இதற்கு. கீதையின் மையமே உடல்கள் முக்கியமில்லை என்பதுதான். பாரத உருவாக்கமே ஒரே லட்சியம். அதில் யார் அழிந்தாலும் பரவாயில்லை. கடமையைச் செய்க. பலன் எதிர்பாராதே (கிடையாது). இந்தப் பிரதி, மகாவீரர், புத்தர் போன்ற சத்திரியர்கள் பார்ப்பனர்களுக்கு எதிராக இனக்குழுக்களைத் திரட்டியதற்கும் இரத்தவுறவுகளைப் போற்றியதற்கும் கிடைத்த அழிவுப் பரிசு. மனித உடல்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஒருபக்கம் பௌத்தமும் சமணமும் அதிகார இருப்புகளை இடம் மாற்றின. பார்ப்பனர்களின் அதிகாரம் வலுவிழக்கப்பட்டு சத்திரியர்களின் கை மேலோங்கும்போதுதான் பார்ப்பனர்களால் பார்ப்பன-சத்திரியர்கள் உருவாக்கப்படுகிறார்கள். இதுதான் பரசுராமராகவும் துரோணாச்சாரியாகவும் அசுவத்தாமனாகவும் இந்திய தொன்மத்தில் எழுதப்படுகின்றது.

இங்குதான் பகவத்கீதை ஒரு முக்கியமான பங்கைப் பெறுகிறது. பகவத்கீதை சந்தேகத்திற்கிடமின்றி ஒரு பிற்சேர்க்கை. அதோடு மட்டுமல்லாமல் பாண்டவர்கள் கௌரவர்கள் எனும் ஒட்டுமொத்த பதினெட்டு அக்ரோணி சேனையினரும் கௌதம புத்தர் எனும் ஒரே ஒரு மனிதரை எதிர்ப்பதற்காகத் திரண்டது என்பதாக நம்மை மறுவாசிப்பு செய்யவைத்தது அந்நூல். புத்தரின் சமாளிக்கமுடியாத அந்தப் பேரறிவிற்கு முன்பாக இவர்களின் சாதிய சிற்றறிவு எழுப்பிய சூழ்ச்சியின் படிமம்தான் கிருஷ்ணன். சூழ்ச்சியால் பேரறிவையும் ஒருகணம் ஆட்டிவைக்க முடியும் என்பதற்கு அவன் ஒரு உருவகம். கிருஷ்ணனின் குரல் அதிகாரத்தை இழந்துகொண்டிருக்கின்ற பார்ப்பனர்களின் குரலாகவும் சூழ்ச்சி விளங்காத ஒரு அப்பாவி அல்லது பார்ப்பனிய விரும்பியாக அர்ஜுனனும் பாண்டவர்களும் ஏன் கௌரவர்களும்கூட நமக்குத் தெரிகிறார்கள். யார் இதில் பார்ப்பனியத்திற்கு எதிரானவர்கள்? யாருமில்லை. அதனால்தான் கிருஷ்ணனின் உதவி பாண்டவர்களுக்கும் அவனது நாராயண சேனையின் உதவி கௌரவர்களுக்கும் கிடைக்கிறதோ! எனில் இந்த இரண்டு அணியும் யாரை எதிர்க்கிறது என்றால், இந்த லட்சோபலட்ச பார்ப்பனிய கருத்தியல் சைன்யம் மொத்தமும் கௌதம புத்தர் எனும் ஒரே ஒரு மனிதருக்கு இப்படி நடுங்கிகொண்டிருப்பதைத் தான் பகவத்கீதை காட்டுகிறது.

பங்காளிச் சண்டையை ஒரு பொழுதுபோக்கு கதையாகக் கொண்டிருந்த இனக்குழுச் சமூகங்களிடமிருந்து தத்துவச் சண்டையாக வேறுபடுத்தும் வேலையைத்தான் பகவத்கீதை செய்திருக்கிறது. இதேவேலை தான் வெள்ளைதேசியத்திற்கு எதிரான இந்தியதேசியமாகவும் பின்னாளில் பல்வகை வடிவங்களாக நிகழ்ந்தன. பகவத்கீதை, பழங்குடிப் புலம்பல்களிலிருந்து கருத்துத்திருட்டுச் (Plagiarism) செய்யப்பட்ட பெருங்கதையாடலாய் ஆக்கப்பட்ட கதையொன்றின் மறுவாசிப்பு. முன்பு சத்திரியர்களால் எவ்வாறு பார்ப்பனர்கள் தங்களது அதிகாரத்தை இழந்தபோது பிரதிகள் மறுவாசிப்புக்கு உள்ளானதோ அதேபோல காலனிய காலத்தில் பாரதமும் கீதையும் வெள்ளைதேசியத்திற்கு எதிரான மறுவாசிப்பிற்கு உள்ளானது. இந்த இடம்தான் இந்தியா எனும் உணர்விற்கும் இந்துவியல் உருவாக்கத்திற்கும் அடித்தளமாகும்.

இந்திய மக்களின் முதன்மைப் பொதுமைப்பண்பு சமயத்தோடு இருத்தல். சமயமில்லாத, அதிகாரப்பூர்வமாக சமயமற்ற மனிதர்களை இந்தியாவில் காணமுடியாது. எனவே வெள்ளைக்கு எதிரான அடையாள உருவாக்கத்தில் பெரும்பங்காற்றப்போவது சமயம்தான் என்பதைப் பார்ப்பனர்கள் நன்கு விளங்கி இருந்தனர். இதுவரை பூசல்களோடும் தனித்தனி அடையாளங்களோடும் இருந்த பல்வகை தத்துவங்களாகக் காணப்படும் சமயங்களை இந்துவியலாக உருமாற்றும் அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டது. சாதியும் பிரம்மமும்தான் நம்மிடம் இருந்த ஒரே சுதேசிப்பொருட்கள். அதனால் வெள்ளைதேசியத்திற்கு எதிரான இந்துவியலை உருவாக்கும் பொறுப்பை இவை ஏற்றுக்கொண்டன. இதனால் சாதியை ஏற்ற, பிரம்மம் அல்லது எவ்வடிவ இறைத்தன்மையையும் ஏற்ற தத்துவங்கள் எல்லாம் ஒன்றாக ஒருங்கிணைக்கப்பட்டது.

பிரம்மவாதம் சற்றே கொஞ்சமாகத் தன்தூய்மை இழப்பை இங்கு சகித்துக்கொண்டிருக்க வேண்டும். என்ன செய்வது, கூளத்தை மலத்தை சங்கர சங்கரவென்று வணங்கினால்தானே நம்புவார்கள்! ஒருபக்கம் சாதியம் இன்னொரு பக்கம் அதற்கு முற்றெதிரான பிரம்ம தத்துவம். இது இரண்டையும் ஒன்றாக்கிப் பார்த்த விளையாட்டுதான் இந்தியதேசியவாதம். இந்தியா என்ற நாடு இந்து எனும் சமய உருவாக்கத்தின் பகுதி. இந்து சமய உருவாக்கம் வருண ஏற்பு மக்களின் தொகுதியால் ஆனது. இந்தக் கருத்தியல் அடித்தளமாகும்போதுதான் இந்தியதேசிய உணர்வு அல்லது பெருமிதம் என்பது ஆதிக்க சாதியினரின் இடைநிலைச்சாதியினரின் நிலவுடைமையாளர்களின் பண்பாடாக வெளிப்படுகிறது. தேசியவாதம் மேலோட்டமாக ஒற்றுமையை வலியுறுத்துவதாகவும் சமூக நல்லிணக்கக் காரணியாகவும் தோற்றங்கொண்டு உடல்களைப் படிநிலையாக்கம் செய்து அப்படிநிலையாக்கலே சரியென்னும் உளநிலையையும் தருகிறது.

பெரியாரியம் அம்பேத்கரியம் இத்தகைய சூழலை நன்கு அம்பலப்படுத்தின. ஆனால் பின் இது தேசியவாதத்தால் ஆங்கிலேய அடிவருடிகள் என விமர்சிக்கப்பட்டது. பார்ப்பன மலத்தின்னிகளாக இருப்பதற்கு ஆங்கிலேய அடிவருடிகளாக இருப்பது எவ்வளவோ மேல் எனும் எதிர்வாதமும் வந்தது. இத்தகைய சூழலில்தான் நாம் பின்-காலனித்தைப் பற்றி இப்போது பேசுகிறோம். ஆயிரம் வருடத்திற்கு மேலான பார்ப்பன இந்து காலனியத்திற்கு இடையில் வெள்ளையர்களின் காலனியுமும் வந்து இரட்டை ஒடுக்குதலாக ஆனது சூத்திரர்களுக்கு. அதேசமயத்தில் கல்வி, மருத்துவம், சுயமரியாதை பற்றிய விழிப்புணர்வையும் காலனியம் தராமல் இல்லை. இந்தக் கலப்பினப் பண்பே தொடர்ந்திருக்கலாம் என்று எண்ணவேண்டிய அளவிற்குத் தற்காலப் போக்குகள் உள்ளன. இருந்தாலும் நாம் பின்-காலனியம் பேசுகிறோம்.

தேசியவாதமே இத்தகைய காலனிய நீக்க ஆய்வுகளுக்கு அடிப்படை எனும்போதே அதன் வன்முறைத்தன்மையை நாம் உணரத்தான் வேண்டும். தேசியம் ஆபத்தானது. மனித உடல்களை உடல்களாக அதற்குக் காணத்தெரியாது. மனிதர்களை மனிதர்களாகப் பார்க்காது நிலயெல்லைகளாக கருத்தியல் எல்லைகளாக மாற்றும் பண்பைத் தேசியம் தன் அடிப்படை புலன்முறையாகக் கொள்கிறது. எந்தவொரு தேசிய உணர்வும் பெருமிதமற்றோ இன்மையைத் தன்னடையாளமாகக் கொள்வதையோ (சமணத்தைப்போல) ஊக்குவிப்பதில்லை. தன்நிலப் பெரும்அடையாளமாகவே உடல்களை மாற்றி இழிவுகளை மூடிமறைக்கின்றது தேசியம். இயற்கையின் கடல்களையும் மலைகளையும் காடுகளையும் தன்சொந்த சாதனைப்போல பெருமித அரணாகக் காட்டிக்கொள்ளும் தேசியம், ஏன் தினம்தினம் நடக்கும் தற்கொலைகளையும் பாலியல் வல்லுறவுகளையும் ஆணவக்கொலைகளையும் மலத்தொட்டியில் இறங்கி மடியும் பணியாளர்களையும் தன் அடையாளமாகக் காட்டிக் கொள்வதில்லை?

பெருமிதங்களுக்கு மகிழ்வுகளுக்கு துய்ப்புகளுக்கு எதிரான பண்பே உண்மையில் மனித அறமாக இருக்க முடியும். மனிதர்க்கு மனிதர் ஒடுக்கிக் கொள்வதன் மூலமே உருவாகும் இத்தகைய உணர்வுகளை அதன் அறிவுத்தோற்றமுறைகளை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிப்பதன் மூலம் மனிதர்கள் துன்பங்களிலிருந்து விடுதலைப்பெற முடியும். அதே சமயத்தில் இந்த நிலைப்பாடு தேசியத்திற்கு எதிரானதாகவும் தேசத்துரோகியாகவும் நம்மைச் சித்திரிக்கலாம். சூத்திரர்களாகச் சொல்லப்படும் ஒடுக்கப்பட்ட மக்கள் காலந்தோறும் பெருமிதமற்ற துய்ப்பற்ற இத்தகைய உளநிலையை அனுபவித்ததாலேயே அவர்களால் எளிமையாக தேசியவாதமென்னும் பெருந்தீங்கினுள் அகப்படாமல் இருக்கமுடிந்தது.

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை வடிவம் நுகர்வியத்திற்குள் அகப்படுவதாக இருப்பதுபோன்று இருத்தல் தன்னடையாள நிறுவலின் அரசியல் புனைவே ஒழிய நுகர்வில் கரைவதாக இருக்க முடியாது. வன்முறைக்கு எதிரான எதிர்வன்முறை குறிப்பிட்ட சமூகத்திற்குள்ளாகவே பல உள்முரண்களை உண்டாக்கலாம். அம்பேத்கரின் பௌத்த ஏற்பு, நுகர்வில் கரைந்து அழித்தலுக்கு எதிரான நுகர்வைக் கரைத்து அழித்தலாகும். அதனால் தேசியத்திற்கு எதிரான நுகர்விய எதிர்ப்பு ஒட்டுமொத்த சாதிய வர்க்க பாலின ஏற்றத்தாழ்வுகளை அதன் பகுதிகளாகக் கொண்டு சிதைக்கிறதை நாம் உணரவேண்டும்.

The best weapon against an enemy is another enemy – Friedrich Nietzsche

தேசிய கருத்தியல் உருவாக்கப்படும்போதே அதற்கான எதிர்கருத்தியல்களும் உருவாக்கப்படுகின்றது. வெள்ளைதேசிய ஆளுகைச்சூழலில் உண்டாக்கப்பட்ட இந்துவியல் தன் பிரதான எதிரியாக ஆங்கிலேய கருத்தியலை முன்வைக்காமல் இசுலாமியர்களை முன்வைத்ததுதான் அதன் சாமர்த்தியமான அரசியல் நிகழ்த்துதல் ஆகும். இந்தக் கருத்துதான் ஒட்டுமொத்த இந்தியர்களையும் இசுலாமியர்களுக்கு எதிரான இந்துக்களாக இணைக்கவல்ல பிரம்மாஸ்திரமாகச் செயல்பட்டது. வெள்ளையர்கள் முதன்மைப்படுத்தப்படாதது ஒருவகையில் அக்கால கிறித்தவர்களுக்குப் பாதுகாப்பாகவும் அமைந்தது. கிறித்தவ சாதி ஏற்பு, இந்துவியலுக்கு சமாதானம் சொன்னதும் ஒரு காரணம். காந்தி இந்த இடத்தை நன்கு விளங்கி இருந்தார். இது அவரது வணிக மரபு சொல்லித்தந்த சமரசத் தந்திரத்தாலும் உண்டாகியிருக்கலாம். காந்திக்கு இந்திய தேசிய கட்டமைப்பைக் குறித்தும் இதனால் பாதிக்கப்படப்போவது இசுலாமியர்களே என்பது குறித்தும் நன்கு விளங்கியிருந்தது. அதனால்தான் அவரது ஒவ்வொரு கட்டுரைகளிலும் உரைகளிலும் இசுலாமியர்களை உள்ளடக்கிய இந்துவியலை உருவாக்க முயல்கிறார். இதை இந்திய தத்துவ மரபில் சமர்த்வயம் என்பர். உபநிடதங்களில் இருந்த முரண்கூற்றுகளை ஓட்டைகளை பிரம்ம சூத்திரம் சமர்த்வயம் செய்து அதையொரு முழுமையான அத்வைத பிரதியாக ஆக்கியது. காந்தியும் பார்ப்பன – இந்து – வருண கொள்கைகளுக்கு முழுமையாகத் தன்னை எழுதி வைத்திருந்தாலும் அதற்கு முரணான வருண மரபை ஏற்காத சில நூற்றாண்டு கால வரலாற்றை மட்டுமே நம்பும் இசுலாமியர்களை வெறுக்காத்துபோல் அவர் காட்டிக்கொண்டார். இராமராஜ்யமோ தர்மபாரதமோ அவர்களுக்குத் தேவையில்லை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எல்லாம்வல்ல இறைவன் இந்த உலகையே ஆளுகிறான். ஆனால் இந்துக்களுக்கோ உலகமே பாரதம் மட்டும்தான் பாவம்.

காந்தியின் இந்த நிலைப்பாடு வன்முறை செய்துகொண்டே மௌன அஞ்சலியும் உடன் செய்வதுபோலிருக்கிறது. தேசிய உருவாக்கம் வன்முறையானது என்பதை உணர்ந்த காந்தி அதைத் தேவை என்றும் கருதினார். இதனால் பலர் சாகவேண்டி வரலாம் என்பதுகூட அவருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் நடந்ததோ வேறு, காந்தியின் சமர்த்வயத்தைக் காட்டிலும் இந்துவியலின் விஷத்தன்மை வேகமானதாக இருந்தது. காந்தி கொடுத்துக்கொண்டிருந்த நீண்டகால விஷத்தை ஆலகால விஷமாக மாற்றி அவருக்கே ஊட்டிப்பார்த்தது இந்துவியம். காந்தியின் மரணத்திற்குப் பின்பாக சமய இணக்க வெறுப்பும் வருண இழிவுகளின் இறுக்கங்களைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை. வரலாற்று நெடுகிலும் தேசியம் மரணத்தை எழுதியிருக்குமே ஒழிய அறத்தையும் மனிதப் பொதுமையையும் பேசியதாக இல்லை. அப்படி ஒரு தேசியத்தால் இருக்கவும் முடியாது.

தீசன்,
15-08-2025

கருத்துரையிடுக

புதியது பழையவை