அண்மை

ஹே ராம்: அழுகிப்போன ஆசிரியர்களால் விலகிப்போகும் வகுப்பறை - வருண் குமார்


நீலம் தனது வலையொளி (Youtube) பக்கத்தில் இயக்குநர் மார்டின் ப்ரஸாட் மற்றும் இயக்குநர் லெனின் பாரதி அவர்களின் 'ஹே ராம்' குறும்படம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. வாழ்த்துக்கள்.

சில நாட்களாக எந்த ஒரு காணொளி பார்ப்பினும் அதன் கீழுள்ள கருத்துரைகளையும் சேர்த்தே பார்த்து வருகிறேன். கருத்துரைகள் மேலே உள்ள காணொளியைவிட பலமடங்கு இன்றியமையாத தன்மையைக் கொண்டதாக இருக்கிறது. கருத்துரைகள் என்பது நம் மக்களின் சமூக அரசியல்சார் புரிதலை வெளிப்படுத்தும் வெளியாகச் செயல்பட்டு வருகிறது. அவ்வகையில் இக்குறும்படத்தின் கருத்துரைகளில் சிலர் 2+2=5 என்ற மற்றொரு குறும்படத்தைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.

2+2=5 என்ற குறும்படம் பாரசீக மொழியில் பாபக் அன்வாரி (Babak Anvari) என்பவரின் இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இரண்டு குறும்படமும் ஒரே மாதிரியான அடிக்கருத்தைக் கொண்டதாக அமைந்துள்ளதைக் காணலாம்.

ஹே ராம்-இல் "1948 ஜனவரி 30 காந்தி இறந்தார்" என்ற பிழையான கூற்று போதிக்கப்படுகிறது. மாணவர் ஒருவர் "காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார்" என்று கூறுவதுதானே சரி என்று கேள்வி எழுப்ப, அங்கு ஆசிரியரின் அதிகாரம் செயல்படத் தொடங்குகிறது. ஒரு மாணவர் சுட்டுக் கொல்லப்படுகிறார். இது ஒருவகையான பாசிச வன்முறையாகும். இதே போல்தான் 2+2=5 என்ற குறும்படத்தின் காட்சிகளும் அமைந்துள்ளது.

ஹே ராம் மற்றும் 2+2=5 ஆகிய இரண்டு படங்களும் தங்கள் சமகால அரசியல் தன்மையில் இருந்து எடுக்கப்பட்ட படங்களாகும். இருப்பினும், இரண்டு படங்களிலும் ஆசிரியரின் பாத்திரம் ஒரு சர்வாதிகார தன்மையில் படைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தங்கள் நிலையை ஒரு அதிகாரி தன்மையில் கையாளுவது, தங்களை மையமாக கொண்டு மாணவர்களை விளிம்புநிலைக்குத் தள்ளும் தன்மையிலானதாகும்.

வகுப்பறைச் சூழல் ஆசிரிய - மாணவ நல்லுறவுடன் நடப்பதே சிறந்தது என்ற கொள்கையில் இருந்து இவர்கள் தள்ளி நிற்கிறார்கள். பெரும்பாலான ஆசிரியர்கள் முந்தைய தலைமுறை உளவியலைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். சுருக்கமாகக் கூறினால் மரபைக் கடைப்பிடிக்கும் பேர்வழிகள். பிற்போக்குத் தன்மையாளர்கள்.

இங்கு பல வகுப்பறைகள் வெறும் போதனைக் கூடங்களாகச் செயல்படுகின்றன. சில கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் கூட இன்னமும் ஆசிரியர் வகுப்பறைக்குள் வந்தாலோ முடிந்து சென்றாலோ எழுந்து நிற்கும் அவலங்கள் நடக்கின்றது என்பது நாம் அறிந்ததே. ஆசிரியர் கேள்விக்குப் பதில் சொல்லும்போது அமர்ந்துகொண்டே பதில் சொல்வது, வலது கைக்கு மாற்றாக இடது கையைத் தூக்குவது, குறுக்கிட்டு கேள்வி கேட்பது போன்ற செயல்களை இம்மாதிரியான ஆசிரியர்கள் மாரியாதை குறைவான செயல்பாடுகள் என்று கருதுகின்றனர்.

இம்மாதிரியான செயல்முறை மாணவர்களின் மனநிலையில் ஒருவிதமான அடிபணிதல் கருத்தாக்கத்தை உருவாக்குகிறது. மரியாதை என்ற பெயரில் நடக்கும் ஒருவகை ஒடுக்குமுறையை நாம் அறிவதில்லை. மேலைநாடுகளில் இந்த மரபார்ந்த ஆசிரிய மாணவ வணக்க முறைமைகள் இல்லை. இந்தியாவில் இந்த மரபிலிருந்து மீறி செயல்படும் மாணவர்கள், தண்டனைக்கோ எச்சரிக்கைக்கோ உள்ளாக்கப்படுகின்றோம்.

உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரிய மாணவ உறவு என்பது அறிவுசார் உரையாடலாக அமைய வேண்டும். இங்கு பல ஆசிரியர்கள் பாடம் நடத்தி முடித்தபின் 'புரிந்ததா' என்பதற்கு மாணவர்களின் 'ம்ம்' என்பதை உரையாடல் என்று கணக்கில் எடுத்துக்கொள்வார்கள் போல.

ஆசிரியர்கள் தாங்கள் முன்னாள் தயாரித்த உரை குப்பைகளைக் கொட்டுவதே அவர்களின் நோக்கமாகக் கொண்டுள்ளனர். தாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு மாணவர்கள் சரியாகப் பதில் கூறினாலும் அவர்களைக் குழப்ப நிலையில் வைத்துவிட்டு தங்கள் தயாரிப்புகளை மீண்டும் கொட்டத் தொடங்குகின்றனர். இதிலும் மோசமானது பாட புத்தகத்தை அப்படியே படிப்பது. பள்ளிக்கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை கற்பித்தல் முறையில் இந்தப் பிழைத் தொடர்ந்து வருகிறது. மாணவர்கள் கேள்வி கேட்பதோ, தாங்கள் படித்ததைக் கூறி சரி பார்த்துக்கொள்வதோ, ஆசிரியர் தவறாகக் கூறினால் அதைக் கேள்வி கேட்பதோ இங்கு பல ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

இவைகள் ஆசிரியர்களின் சர்வதிகார தன்மையினால் மாணவர்கள் மீது ஏவப்படும் அடக்குமுறைகள். கண்காணிப்பாளரான ஆசிரியர் பார்வையில் இருந்து சிறிது பிசகினாலும் சுட்டுக்கொல்லப்பட வேண்டியதுதான். பெருங்கதையாடலான ஆசிரியர்களின் அதிகாரத்தாலும் அடக்கும் குரல்களாலும் குறுங்கதையாடலான மாணவர்களாகிய நம் குரல் நசுக்கப்படுகிறது.

என்றைக்குப் போதனைகள் அறிவுசார் உரையாடல்களாக மாற்றமடைகிறதோ அன்று ஆசிரிய மாணவ உறவு என்பது மையம் விளிம்பற்றத் தன்மையாக மாறும்.

இதை மாற்றுவதற்கு ஆசிரியர்கள் எப்படி தங்களது அதிகாரங்களைக் கைவிடவேண்டுமோ அதுபோல மாணவர்கள் தங்கள் இருப்பைத் தெரிவிக்க சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

1. நாளைய பாடங்களை முந்தைய நாளே படித்துச் செல்வது.
2. உரையாடச் சொல்லும் ஆசிரியர் வகுப்பிலாவது உரையாடல் நிகழ்த்துவது.
3. தவறோ சரியோ உரையாட வேண்டும்.
4. வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது.
5. தயக்கம் இருப்பினும் ஆசிரியரைத் தனியாக அணுகி சந்தேகம் களைவது.

வகுப்பறையில் சந்தேகம் கேட்பதே சிறந்தது. மற்ற மாணவர்களும் இப்படிபட்ட கேள்விகள் கூட எழுமா என்று அதற்கான விடைகளையும் அறிவர்.

இந்தப் பதிவு படத்தின் பார்வையில் இருந்து சற்றுத்தள்ளி இருந்தாலும் மாணவர்கள் பார்வையில் ஆசிரியர் எப்படி தெரிகின்றனர் என்பதே.

தங்களுடைய இருப்பைக் கைப்பற்றுவது என்பது அதிகாரத்தைச் சிதைப்பதாகும். மையமிழந்த தன்மையை உருவாக்குவது என்பது அதிகார வர்க்கத்திற்கும் விளிம்பு நிலைக்குமான ஒரு சமரசக் கோட்டைப் போடுவது போன்றது. மீண்டும் எந்த ஒரு நிலையையும் அதிகாரத்தை நோக்கி நகர விடாமல் இரண்டும் ஒன்றோடொன்று பின்னி நடப்பதே சிறந்ததாக இருக்கும்.

வருண் குமார்

கருத்துரையிடுக

புதியது பழையவை