Trending

வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம்

வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம்


"எம்மதமும் சம்மதமே" என்ற சொற்றொடரை அடிக்கடி நீங்கள் கேட்டிருக்கலாம். இதை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார் தெரியுமா?


அவர்தான் வள்ளலார்


இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர், தமிழகத்தில், சைவமும், வைணவமும் தழைத்தோங்கி வளர்ந்தாலும், அவர்களுக்குள் யார் பெரியவர் என்பதிலேயே, தர்க்கங்களும், வாதங்களும், பிரதிவாதங்களுமாய் அவர்களது காலம் போய் கொண்டு இருந்தது. மக்களைப்  பற்றிய சிந்தனை அவர்களிடத்தில் இல்லை.


மக்களிடையே, சாதி வேறுபாடுகளும், வறுமையும், ஆண், பெண் ஏற்றத்தாழ்வுகளும், வேர்விட்டு வளர்ந்து கொண்டே  இருந்தன. அதை மாற்ற எந்த மதமும் தீவிர முயற்சி எடுக்கவில்லை.


பத்தொன்பதாம் நூற்றாண்டில்  பசியினாலும், பட்டினியாலும்,  நோயினாலும், இயற்கைக்கு மாறான வழியில் மாண்டவர்கள் மட்டும் இரண்டு கோடி பேருக்கும் மேல்.


வேளைக்கு ஒரு கவளம் சோறு கிடைக்காமல் பட்டினியால், உடல் மெலிந்து சாவது என்பது எவ்வளவு பெரியக் கொடுமை.


வசதி வாய்ப்புக் கொண்ட நிலச்சுவான்தார்கள் ஒரு பக்கம், ஒரு வாய் சோற்றுக்கே, வழியில்லாத வறியவர்கள் இன்னொரு பக்கம்.


ஈவு, இரக்கம் போன்ற ஈகை குணம் மட்டும்  மனிதரிடத்தில் இருந்துவிட்டால் இந்த நிலை தோன்றுமா? என முதன் முதலில் சிந்தித்தவர்தான் வள்ளலார்


அக்காலத்தில் இந்து மதத்தில் காணப்பட்ட, சாதிகள் எனக் கூறப்படும்  வருணப்பாகுபாடுகளை "பிள்ளை விளையாட்டு" எனவும் சாத்திரங்கள் கூறும் பாகுபாடுகளை "குப்பைகள்" எனவும் கூறி சமுதாய சீர்த்திருத்தங்களை துணிவுடன் செயல்படுத்தியவர் வள்ளலார்.


அயோத்திதாச பண்டிதருக்கும் பெரியாருக்கும் முன்னோடி வள்ளலாரே.


சிதம்பரம் அருகே உள்ள மருதூரில், ராமையா பிள்ளை சின்னம்மை தம்பதியருக்கு 1823 ஆம் ஆண்டு ஐந்தாவது மகவாக பிறந்தவர்தான், திருவருட்பிரகாச வள்ளலார் என பிற்காலத்தில் போற்றப்பட்ட இராமலிங்க அடிகளார் அவர்கள்.


தமிழகத்தின் முதல் பகுத்தறிவுவாதி எனவும் அவரைக் கொள்ளலாம். ஒரு ஆன்மீக வாதியை, திராவிட இயக்கங்கள் கொண்டாடுவதில் இருந்தே அவருடைய செயல்களை நாம் உணரலாம்.


சன்மார்க்க சங்கம்


வட நாட்டில் இராஜாராம் மோகன்ராய், சுவாமி தயானந்தர், இராமகிருஷ்ணர், விவேகானந்தர் போன்றோர் தோன்றினாலும் அவர்கள் உயர் சாதியில் பிறந்தவர்கள். அறிவுரைக் கூறக் கூட சாதிப் பார்த்த காலமாக அது இருந்தது.


சாதாரண வேளாளர் குலத்தில் பிறந்த அடிகளாருக்கு பள்ளிப்படிப்பில் நாட்டமில்லை.


ஆனால் பத்து வயது முதலே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாயிரங்களை ஓதாமலே உணர்ந்து ஓதியவர் வள்ளலார்.


 "சிவநேச வெண்பா" என்ற தலைப்பில் நூறு வெண்பாக்களை இலக்கணச் சுத்தமாக அவர் எழுதியதை பார்க்கும் போது, வள்ளலார் தானாக எதையும் எழுதவில்லை, அந்த ஒளி வடிவ இறைவரே, அவரை ஆட்கொண்டு எழுத வைத்தார் என உணர முடியும்.


அதனால்தான் வள்ளலார், "கற்றதும் நின்னிடத்தே! கேட்டதும் நின்னிடத்தே" என ஓதாமல் உணர்ந்திட ஒளியளித்த அருட்பெருஞ்சோதியாக இறைவரை நோக்கிக் கூறுகிறார்.


சைவ சமயத்தில் தோன்றிய வள்ளலார், கந்தக் கோட்டத்து முருகனையையும், தில்லை நடராஜரையும் போற்றி எத்தனையோ விருத்தங்களை எழுதியவர்தான்.  இளமைக் காலத்தில்  அப்பரையும், சம்மந்தரையும், சுந்தரரையும், மாணிக்க வாசகரையும் வாழ்த்தி எத்தனையோ பாடல்களை படித்தவர்தான்.


ஆனாலும் தான் சார்ந்த சைவ சமயத்தில்  பெண்ணுரிமையோ சாதி ஒற்றுமையோ நடைமுறையில் இல்லை என உணர்ந்தார் வள்ளலார். மனித குலத்தின் ஏற்றத்தாழ்வுகள் அவர் நெஞ்சில் முள்ளாக குத்தியது. அதனால் மதங்களுக்கு மாற்றாக வள்ளாலார்  "சமரச சத்திய சுத்த சன்மார்க்க சங்கம்" என்ற அமைப்பை நிறுவினார்.


சன்மார்க்கம் என்றால் என்ன?


வேறொன்றுமில்லை! சத் என்றால் உண்மை, மார்க்கம் என்றால் வழி. சுத்த அறிவை அடையும் உண்மையான வழி என்று பெயர். 


சன்மார்க்கத்தின் நோக்கம், "ஒத்தாரும் உயர்ந்தாரும், தாழ்ந்தாரு மெவரும், ஒருமையுளராகி உலகியல் நடத்தல் வேண்டும்" என்பதே ஆகும் என வள்ளலார் குறிப்பிடுகிறார்.


"அப்பா! என் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்.

ஆருயிர்க்கெல்லாம் நான் அன்பு செய்தல் வேண்டும்" என இறைவரிடம் வள்ளலார் வேண்டுகிறார்.


சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தின் தடைகள் என்றால், சமயமும், மதமும் வருணமும்தான். மதத்தின் பெயரால் பிழைப்பு நடத்தியவர்களுக்கு, சன்மார்க்க வழிமுறைகள் கேடாக இருந்தது.


ஆகவே அவர்கள் வள்ளலாரை எதிர்த்தார்கள். ஆதினங்களையும், மடாதிபதிகளையும் புகழ்ந்து பொருள் ஈட்டி பிழைப்பு நடத்திய புலவர்களுக்கு, மனிதரை பாட மாட்டேன் என உறுதியுடன் இருந்த வள்ளலாரை எப்படி பிடிக்கும்? 


சுத்த சன்மார்க்க சங்கத்தில், வீதியில் செல்வோர் எல்லோரும் சேர்ந்துவிட முடியாது. பிற உயிருக்கு தீங்கிழைக்காத ஜீவகாருண்ய ஒழுக்கம் உள்ளவர்களே சேரலாம்.


இன்று ஒரு அரசியல் கட்சியில், "குடிப்பழக்கம் உள்ளவர்கள் சேரமுடியாது" என ஒரு நிபந்தனை விதித்தால் எல்லோரும்  சேர முடியுமா?


சன்மார்க்கத்தைக் கடைபிடித்து, உயிர்க்  கொலை செய்து உண்ணாது, உயிர்களிடத்து அன்பு, கருணை, தயை காட்டி நற்குணத்தோடு வாழ்வோரை அகவினத்தார் என்கிறார் வள்ளலார்.


பொருளதவி செய்தாலும், அன்னதானங்கள் செய்தாலும், ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைபிடிக்காதவர்களைப் புறவினத்தார் என்கிறார்.


விபூதி, குங்குமம் உள்ளிட்ட மதச்சின்னங்கள் அணிய தேவையில்லை என்பது சன்மார்க்கம். செத்த பிறகு மனிதனுக்கு செய்யும் எட்டு, பதினாறு, கருமாதி போன்ற சடங்குகள் தேவையில்லை என்பது சன்மார்க்கம். விதவைப் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை பார்த்து, கணவன் இறந்த பிறகு பெண்கள் தாலியை கழட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று முதலில் கூறியது சன்மார்க்கம். சன்மார்க்கம் இங்கு வள்ளல்பிரானுக்கு ஆகுபெயராய் வந்தது.


எளிமை தான் சன்மார்க்கம்


திருமண வைபவங்களுக்கு, வாண வேடிக்கை, யானை ஊர்வலம் போன்ற  ஆடம்பரங்களை விடுத்து, உணவு தேவை உள்ளவர்களுக்கு, ஒரு வேளை வயிறாற உணவளிக்க வேண்டினார்.


இறைவரைக் காண கோவிலுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நோயாளிகளுக்கு நோய் தீரவும், பசித்தவர்களுக்கு பசி தீரவும் உதவி செய்தாலே இறையை அடையலாம் என  தன்னை நாடியோரிடம் கூறினார். நோயில் வீழ்ந்தவருக்கு, ஆறுதல் கூறும் நாலு  நல்வார்த்தைகள் கூட பர உபகாரம்தான்.


மக்களைத் திருத்தவே இறைவர் தன்னை அனுப்பியதாக வள்ளலாளர் கூறுகிறார்.


சாதிகளில் உழன்ற மக்கள் வள்ளலார் சொல் கேளாத போது "கடை விரித்தேன்,  கொள்வாரில்லை!  கட்டி விட்டேன்" என்று வேதனைப்பட்ட நிகழ்வும் நடந்ததுண்டு.


"அகத்தே கறுத்துப் புறத்துவெளுத்து

இருந்த உலகர் அனைவரையும்

சகத்தே திருத்திச் சன்மார்க்க

சங்கத்து அடைவித்திட அவரும்

இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந்து

இடுதற்கு என்றே எனையிந்த

யுகத்தை இறைவன் வருவிக்க 

உற்றேன் அருளைப் பெற்றேனே".

என்றும் உரைக்கின்றார் வள்ளலார்.


"சாகாதவனே சன்மார்க்கி" என்பார் வள்ளலார். "என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம்தானே" என்றும் கூறுவார் வள்ளலார்.


வாழ்விற்கு வழிகாட்டும் சன்மார்க்கம்


"சன்மார்க்கத்தை கடைபிடிப்போர் மரணமில்லா பெருவாழ்வு வாழ இயலும்" என உறுதியாக நம்பினார்.


இதை அவர் ஏதோ பேச்சோடு பேச்சாக சொல்லவில்லை. அதற்கான வழியையும் காட்டுகிறார்.


ஏழு பிறவிகள் அடங்கிய மனித பிறவியில் அன்புருவம், அருளுருவம், இன்புருவம் அடைந்தால் மரணமில்லா வாழ்வு கிடைக்கும்.


யானை முதல் எறும்பு ஈறாக, அனைத்துயிர்க்கும் அன்பு காட்டல், பர உபகாரம், இச்சையின்றி நுகர்தல், ஜெப தபஞ்செய்தல், தெய்வம் பராவல், பிற உயிர்க்கிரங்கல், பாடிப்பணிதல், பத்தி செய்திருத்தல், ஆண்மக்கள், பெண்மக்கள் யாவரிடத்தும் ஜாதி, மதம், சூத்திரம், கோத்திரம், குலம், சாஸ்திர சம்பந்தம், தேசமார்க்கம் பாராது தாழ்ந்தோர் உயர்ந்தோர் பேதம் நீங்கி மணம் முழுதும் அன்பால் உருகும் உடல் பெற்றோர், அன்புருவில் இருந்து அருளுருவுக்கு மாறலாம்.


அருளுருவிலிருந்து பொன்னுடலாக தேகம் மாறும். தோலெல்லாம் குழையும், எலும்புகள் உருகும், இரத்தம் இறுகும், மூவகை மூளைகள் மலர்ந்து  உடலில் அமுதம் ஊற்றெடுக்கும், அழுக்கில்லை, வியர்வை இல்லை, முகம் மலரும், சாந்தம் ததும்பிடும், உடல் பொன்னிறமாகும். இவ்வாறு ஆண்டவனின் அருளுருவம் பெற்றவர்கள், உடலுக்கு மரணமில்லாமல் இறைவனோடு கலக்கலாம்.


சுத்த தேகம், பிரணவ தேகமாகி, ஞான தேகம் பெற்றவர்கள், உடல், காற்றாலே, புவியாலே, கனலாலே, புனலாலே, கதிராதியாலே, கூற்றாலே, பிணியாலே, கொலை கருவியாலே அழியாது எனவும் எடுத்துரைக்கின்றார்.


இவையெல்லாவற்றுக்கும் அடிப்படை அப்பழுக்கில்லாத தூய்மையான அன்புள்ளம் ஒன்றே. அன்பே இறைவரின் திருவடியை அடையும் வழியாகும்.


அதனால்தான் சத்தியத்  தருமச் சாலையை வடலூர் மக்களின் கருணையோடு அவரால் 1867ஆம் ஆண்டு தொடங்க முடிந்தது.


இன்றளவும் பசிப்பிணிக்கு மருந்தாக அச்சத்திரம் செயல்படுகிறது.


அதனால் உலகின் இயற்கையை புரிந்து கொள்ளும் சுத்த அறிவை அடைய, விக்ரக வழிபாடோ, காணிக்கைகளோ, கடாவெட்டுகளோ தேவையில்லை. உள்ளம் நிறைந்த கருணை பார்வையோடு உலக உயிர்களுக்கெல்லாம் தொண்டு செய்து கிடப்பதே வள்ளலாரின் சன்மார்க்கமாகும். இதுவே நான் அறிந்த வரை நன்மார்க்கமாகும்.


மேலும் வள்ளலார் பற்றிய தகவல்களுக்கு இவற்றைக் காண்க


1. வள்ளலார் கண்ட ஆன்மநேய ஒருமைப்பாடு

2. வள்ளலாரின் ஜீவகாருண்யம்

3. வள்ளலார் கண்ட தெய்வக் கொள்கை

4. வள்ளலாரின் கொள்கைகள்

5. ஜீவகாருண்ய ஒழுக்கம்

6. தைப்பூசம் தரும் ஞானம்

2 Comments

  1. சிறப்பு.
    வள்ளலார் சமத்துவவாதி தான்.

    மனிதர்களிடையே சமத்துவத்தை வேண்டும் பொழுது உலகில் உள்ள அனைத்திற்குமான சமத்துவத்தை தேடியது சிறப்பே ஆகும்.

    ReplyDelete
    Replies
    1. எல்லோரும் உயிர்நேயத்தை சமத்துவத்தின் இறுதிநிலை என்பார்கள். வள்ளலார் தான் உயிர்நேயமே சமத்துவ எண்ணத்தின் துவக்கம் என்றார்.

      Delete
முந்தைய பதிவு அடுத்த பதிவு