Trending

பேருந்ததிகாரம் - தீசன்

 

பேருந்ததிகாரம்

இப்போதெல்லாம் பேருந்தில் அடிக்கடி பயணித்துக் கொண்டிருக்கிறேன். வெவ்வேறு ஊர் மக்கள் ஒன்றுக்கூடும் அந்தப் பெட்டியிலும் வழக்கம்போல் ஆணதிகாரம் மேலோங்கி இருப்பதைக் கண்டு, 'இந்த பெண்ணியம் எல்லாம் படித்த மேட்டுக்குடிப் பெண்களுக்கு மட்டுந்தான் போலும்' என நொந்துக் கொண்டேன். அவ்வாறு ஆணதிகாரத்திற்கு வழிவிடுவதைத் தான் பெண்கள் பண்பாடு என்று நினைக்கிறார்கள் ஆனால் ஆண்களுக்குப் பண்பாடு பற்றிய கவலை இல்லை. பெண்கள் பண்பாட்டை மீறி விடுவார்களோ என்ற ஒரே கவலைதான் அவர்களுக்கு. 


உண்மை சொல்கிறேன், இந்தப் பண்பாட்டுக் கூச்சல்களை ஒரேடியாக ஒழித்துக்கட்ட வாய்ப்பு இருந்தால், அதுதான் என் வாழ்க்கையாக இருக்கும்.


இப்போது, பேருந்தில் நான் கவனித்த அநீதியைச் சொல்கிறேன். நீங்களும் இவைகளைக் கவனித்து இருக்கக்கூடும். கொஞ்சம் அசைப்போட்டுப் பார்த்தால் விளங்கும்.


ஆண்கள் எப்போதும் இரண்டு சீட் மட்டும் போடப்பட்டிருக்கும் வலதுப்பக்க வரிசையைப் பிடித்துக் கொள்வார்கள். அதெப்படி எனில், பேருந்தில் ஏறி தனக்கான இருக்கையைப் பிடிக்கும் ஒரு ஆண் தனக்கான ஒரு டிக்கெட்டை எடுப்பதாலேயே, தன்னருகில் அமரவிருக்கும் இன்னொரு ஆணுக்கான டிக்கெட்டையும் சேர்த்தே எடுக்கிறார். காரணம், நம் பண்பாடு அதைத்தானே சரியென்கிறது. ஆணுக்கு அருகில் ஆண்தான் அமர வேண்டும். பெண்ணுக்கு அருகில் பெண்தான் அமரவேண்டும். அப்படி ஆணுக்கு அருகில் ஒருபெண்ணும், பெண்ணுக்கு அருகில் ஒரு ஆணும் அமரவேண்டுமாயின் அவர்கள் கல்யாணமானவர்களாகத்தான் இருக்க வேணும் அல்லது அண்ணன் தங்கையாக / அக்கா தம்பியாகத்தான் இருக்க வேணும். இந்த விதிக்குள் அடங்காத ஆண்-பெண் ஒருசேர அமர்ந்திருப்பின் பேருந்தில் உள்ள எல்லோராலும் கண்காணிக்கப்படுவார்கள். பண்பாட்டுப் பெரியோர்களால் சபிக்கவும் படுவார்கள்.


ஒருமுறை இரண்டு சீட் மட்டும் இருக்கும் பகுதியில் சன்னலோரத்தில் கல்லூரி மாணவன் ஒருவன் உக்காந்திருந்தான். பக்கத்து சீட் காலி. அச்சமயம் பேருந்தில் பெரிய பையை முதுகில் சுமந்துக்கொண்டு பள்ளி மாணவி ஒருத்தி டிக்கெட்டை வாங்கிவிட்டு உக்கார இடமிருக்கிறதா என அங்குமிங்கும் நோட்டமிட்டாள். பள்ளியில் இருந்து நிறுத்தம்வரை ஓடிவந்த களைப்பு நன்றாகத் தெரிந்தது அவள் முகத்தில். ஒரே வியர்வை, இரைப்பு. 


அந்த ஒருசீட் தான் பாக்கி இருந்தது. அதிலும் ஒருத்தன் உக்காந்திருந்ததால் அவளால் அங்கு உக்கார முடியவில்லை. அடுத்தடுத்த நிறுத்தத்திலே அந்த இடமும் வேறொரு ஆணால் நிரப்பப்பட்டது. இடம் கிடைத்தும் கடைசிவரை அவளால் உக்காரவே முடியவில்லை. நின்றுகொண்டேதான் வந்தாள். 


இதே சூழ்நிலையில் ஒரு பெண் அமர்ந்திருக்கிறாள் என்று வைத்துக்கொள்வோம், அவளருகில் ஒரு ஆண் வந்து அமர்ந்தால் என்னவாகும்?


உடனே பெண் எழுந்துவிடுவாள் அல்லது மனத்திற்குள்ளே யாராவது பார்த்தால் என்ன ஆகும்? இவர் ஏன் என்னருகில் அமர்ந்தார்? இவர் நல்லவரா? பேசாமல் நாம் எழுந்துவிடுவோமா? என யோசித்துக் கொண்டே வருவாள் அல்லது எப்படி என்னைக் கேட்காமல் என்னருகில் உக்காரலாம் என்று துணிச்சலாக கேட்கும் பெண்களும் இருக்கலாம்.


இப்போது நன்றாக யோசித்துப் பாருங்கள், இந்தப் பண்பாடு யாரை ஏமாற்றுகிறது? ஏனொரு அமைதியான சுதந்திரமிக்க சமத்துவம் நிறைந்த பேருந்துப் பயணத்தை இந்த பண்பாட்டால் தரமுடியவில்லை? அப்படிப்பட்டப் பண்பாடு இங்குத் தேவை தானா?


ஒவ்வொரு பேருந்து பயணத்தின் போதும் பெண்கள், உக்காந்தால் பெண்களுடன் தான் உக்காருவோம் இல்லையேல் இடமிருந்தாலும் நிற்போம் என்று வம்படியாக நிற்கிறார்கள். ஆண்கள் அவ்வாறு அடம்பிடிப்பதில்லை. அவர்கள் யாருடன் வேண்டுமானாலும் உக்காருவார்கள். ஆனால் மிகக்கச்சிதமாக பெண்களை இந்த பண்பாட்டுக் குழிக்குள் தள்ளிவிட்டு அவர்கள் தலைமேல் நிற்போர் ஆண்களே.


ஆணுடல்களைச் சுதந்திர உடல்களாகவும் பெண்ணுடல்களை பண்பாட்டைப் பேணிக் காக்கும் புனித உடல்களாகவும் கட்டமைக்கும் முக்கிய வேலையைக் குடும்ப நிறுவனம் ஆற்றுவதே பொதுவெளியில் பேருந்து பயணத்தில் இப்படியாக எதிரொலிக்கிறது.


உண்மையில் பெண்கள் யாரைப் பார்த்தும் பயப்படவில்லை. ஆண்கள்தான் ஆண்களைப் பார்த்து பயப்படுகிறார்கள். தங்கள் வீட்டுப் பெண்களைச் சமூகத்து ஆண்களிடமிருந்து காக்கவே ஆண்கள் படாதபாடு படவேண்டி உள்ளது. 'ஆண்' என்ற ஒன்று எப்படிப்பட்டது? என்பது ஆண்களுக்கு நன்றாகத் தெரிவதாலே 'குடும்பம்' என்ற அமைப்புவழி பெண்களை அச்சுறுத்தி வைத்திருக்கிறார்கள். அந்த குடும்ப அமைப்பு பெண்ணுடல்களின் மீது செலுத்தும் சர்வாதிகாரத்தின் சிறு சிறு வடிவம் தான் பேருந்தில் ஆண், பெண் தனித்தனியே இருக்க வேண்டும் என்ற விதி. வகுப்பறையில் ஆண், பெண் சேர்ந்து உக்காந்து படிக்கக்கூடாது என்ற விதி. இன்னும் அடுக்கினால் வழியே மாறிவிடுவோம்.


இந்த நிலையை மாற்ற பெண்கள் துணிச்சலாக முன்வரணும். சும்மாயில்லை, டிக்கெட்டுக்கு பணம் தந்து இருக்கிறீர்கள். இடமும் இருக்கிறது. அப்பறம் என்ன? எவன் அருகில் இருந்தால் என்ன? ஏதும் செய்துவிடுவார்களோ என்று பயப்படுகிறீர்களா? பண்பாட்டுப் புருஷன் எனக்கூறி ஊரை ஏமாற்றுபவன்தான் நாட்டில் அதிகம். நன்றாக கவனித்துப்பாருங்கள், எந்த பண்பாட்டுக் கூறும் ஆண்களின் சகஜ வாழ்க்கையைப் பாதிக்கும்படி இருக்காது. பெண்களை அடிமை செய்தவற்கென்றே உருவாக்கப்பட்ட பண்பாடு எப்படி ஆண்களைப் பாதிக்கும்?


"உண்மைதான் 

என் உடலைப் போலல்ல

உன்னுடையது

பறைசாற்றிக் கொள்வதில்

வெளிப்படையாக இருப்பதில்"


என்ற சல்மாவின் வரிகள்தான் ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு சமூகத்தின் எல்லா பண்பாட்டுக் கூறுகளையும் தாங்குவதாய் ஏற்பதாய் கடத்துவதாய் பெண்ணுடல்கள்தான் இருக்கும். ஆணுடல் அவற்றை நன்றாகப் பயன்படுத்தி அதிகாரம் செய்யும். ஆனால் பெண்கள் நீங்கள் தான் அத்தகையப் பண்பாடுகளை கடைப்பிடித்துக் காத்து வருகின்றீர். அந்த பண்பாட்டு மாயைகளை ஒழித்துக்கட்டும் நேரம் வந்துவிட்டது. அவற்றை மீறத் தயாராகுங்கள். பண்பாட்டை மீறுங்கள். 


பெண்ணையும் ஆணையும் எல்லோரையும் சமத்துவமாக பேருந்தில் இருத்தி பயணம் செய்ய வைப்பதுதான் நமது இலக்கு. அதற்கு ஏதும் சிக்கல் ஏற்படுமாயின் பாதிக்கப்பட்டோர் பக்கம் சமூகநீதி நிற்கும். நீங்களே கொஞ்சம் சிந்தியுங்கள், இடமிருந்தும் நிற்பதால் யாருக்கு நட்டம்? உங்கள் உடல்மீது ஏற்றி வைத்திருக்கும் புனிதத்துவ கருத்தாக்கத்தை ஒழிக்க நல்லவழி இது. நீங்கள் ஒன்னும் ஆணுக்கு குறைந்தவர்கள் இல்லை. ஆண்களுக்கு அருகில் உக்காரவே கூடாது நின்றே தான் வரவேண்டும் என்ற எண்ணத்தை பெண்கள் விட்டொழிக்க வேணும். சமமென்று உக்காருங்கள். 


ஆண்களும், அருகில் அமர தயக்கப்பட்டு நிற்கும் பெண்களுக்கு ஏதும்கூறி இடம் தாருங்கள். இதைப்பற்றி ஆண்களிடத்தில் என்னசொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை. பொதுவாக ஆண்களைப் பற்றியான பெண்களின் அபிப்பிராயம் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதற்கு பேருந்து பயணமே சான்று. 45 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்குத் தான் எல்லா நோயும் வருகிறது. இதில் அவர்கள் தினமும் இருக்கை இருந்தும் நின்றே வருவது நலமா?


இவற்றையெல்லாம் தினம்தினம் கண்டு வருகையில் அவ்வளவு வருத்தமாக உள்ளது. பெண்ணியம் முதலில் நகர வாழ்வில் இருந்து அந்நியப்பட்டு இருக்கும் கிராமப்பெண்களுக்குத்தான் போய்சேர வேண்டும். உக்கார இடம் கேப்பதற்கே இவர்கள் இவ்வளவு செய்யவேண்டுமெனில் பழங்குடிப் பெண்களின் நிலையினை நினைத்துப் பாருங்கள். 


கொஞ்ச நாள் முன்பு பேருந்தில் ஒரு அக்கா என்னிடம் வந்து, 'இடம்மாறி உக்காந்துகிறீயா?' என்றார். நான், 'பரவாயில்லை நீங்க இங்கேயே உக்காருங்க' என்று என் பக்கத்து சீட்டைக் காட்டினேன். அது இரண்டு பேர் மட்டும் உக்காரும் சீட்டு. அவர் என்னருகில் உக்கார மறுத்து கொஞ்ச நேரம் கம்பியைப் பிடித்துக் கொண்டே நின்றார். பிறகு மீண்டும் என் சீட்டருகே வந்து, 'எனக்கு கால் ரொம்ப வலிக்குது… நீ இங்க உக்காந்திருக்குறதால நா இப்போ நிக்க வேண்டிதா இருக்கு' என்றார். சரியென்று எழுந்து அவருக்கு அந்த சீட்டைத் தந்தேன். சரியான கூட்டம். இடம்மாறி உக்காரவும் வேறு இடம் இல்லை. கால் வலியின் காரணத்தால் என்னை எழுப்ப வேண்டும் என்பதற்காகவே சும்மா 'இடம் மாறி உக்கார்' என்று சொல்லியிருக்கிறார். 


அவர் அந்த சீட்டில் அமர்ந்த உடனே தன் இரு கையையும் பக்கத்து சீட்டில் ஊன்றிக் கொண்டார். நிற்கும் நானோ அல்லது பிற ஆண்களோ அவர் அருகில் உக்காந்துவிடுவோமோ என்று பயந்திருப்பார் போலும். வலியக்க முன்னிற்கும் ஒரு பெண்ணை அழைத்து தன்னருகே உக்கார வைத்தார். அப்போதுதான் அவருக்கு நிம்மதியே வந்திருக்கும்.


இந்த நிகழ்விலிருந்து அந்த அக்கா, குடும்பம் என்ற அமைப்பாலும் சமூகத்தாலும் ஆணாதிக்க உளவியலாலும் எவ்வளவு பெரிய வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார் என்பது எனக்கு விளங்கியது. உங்களுக்கும் விளங்க வேண்டும் என்பதற்கே இக்கட்டுரை.


தீசன்

6 Comments

  1. மரபுவழிப்பட்டு ஆண் என்ற ஆதிக்க மனநிலையோர்க்கும், கலாச்சாரக் காப்பாளர்களும் கும் செருப்படி வழங்கிய கட்டுரை.இன்று பெண்களைப் படிக்க வைத்தாலும் இதில் எத்தனை பெண்கள் சுயமாக சிந்திக்கும் நிலையுடையோராக உள்ளனர் என்பது ஐயத்திற்குரியது.பெண் முன்னேற்றம் ,சமத்துவம் என்பதைத் தாண்டி மீண்டும் அவர்களை திருமணம் என்ற அமைப்பாலே அடிமையாக்குகின்றனர்.பேருந்து பயணத்தில் இதுபோன்ற நிலைமைகள் கட்டமைக்கப்பட்ட வை.அதைக் கட்டுடைக்கும் பெண்கள் விமர்சனத்திற்கு உரியவர்கள். பள்ளி மாணவியோ, பருவப் பெண்ணோ, பல் விழுந்த பாட்டிகளோ பேருந்து பயணத்தில் ஆண் என்ற அதிகார வர்க்கத்தினர்க்கு அடிபணிந்தே போகின்றனர்.இதனை மாற்ற வேண்டுமெனில் குடும்பம் என்ற அமைப்பை தான் முதலில் குறிவைக்க வேண்டும்.மேலும் பேருந்து பயணத்தில் நிகழும் பாலியல் சீண்டல்கள் எனக்கு இந்த வரிகளைத் தான் நினைவுப்படுத்துகின்றன.

    அவர்கள்
    தங்கம் தான்
    உரச வேண்டாம்

    இதுபோன்ற சமூக கட்டுப்பாடுகளை மீறி ஒரு பெண் வெளியே வரும்பொழுது தான் சமத்துவம் என்பதன் கருத்தாக்கங்கள் நிலைபெறும்.

    ReplyDelete
    Replies
    1. அதிகாரம் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது - ஃபூக்கோ

      Delete
  2. சமத்துவம் வேண்டுமெனில் பெண், ஆண் என்ற கட்டமைப்பை உடைத்தாக வேண்டும்.

    பண்பாடு என்பது முழுக்க பெண்ணின் உடலை வைத்தே பேசப்படுகிறது.

    எப்போது அவள் தன் உடலை சுதந்திர படுத்துகிறாளோ, அப்போதே அனைத்து விதமான சுதந்திரங்களையும் வாங்கிக் கொள்வாள்.

    பெண்களுக்கு பெண்தான் முதல் தடையாக இருக்குமாறு இப்பண்பாடுள்ளது.

    எப்பொழுதும் ஒரு ஆணால் பெண்ணை அடக்க முடியாது என்பது என் கருத்து .

    வெளித்தோற்றம் அவ்வாறாக இருக்கலாம்.
    உண்மையில் எந்த உயிரும் சக உயிருக்கு அடங்காது என்பதும் என் கருத்து.

    ReplyDelete
    Replies
    1. எச்ச உம்மையால் தப்பித்தீர். இருந்தும் கடைசி கருத்து எனக்கு ஏற்புடையதாய் இல்லை.

      கருத்தாக்கத்தில் கூட பாருங்களேன்

      வலி 'அவன்' தான் வாழ்வான்

      Delete
  3. சிட்டியில் இந்த பிரச்சனை இல்லை. தியேட்டரில் இந்த பிரச்சனை இல்லை. கிராமப்புறங்களில் இந்த வேற்றுமை உள்ளது. சுற்றி உள்ளவர்களை கண்டு இந்த சமூகம் பயப்படுகிறது. காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும். இன்னும் சொல்லப் போனால் எல்லா ஊருக்கும் ஷேர் ஆட்டோ வந்தால் சரியாகிவிடும்.

    ReplyDelete
  4. "ஆண்கள்தான் ஆண்களைப் பார்த்து பயப்படுகிறார்கள்"- 👌

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு