Trending

சங்க இலக்கியக் குறுந்தொகைப் பாடல்களின் கூற்றில் இடம்பெற்றுள்ள பண்பாட்டு அரசியல்

சங்க இலக்கியக் குறுந்தொகைப் பாடல்களின் கூற்றில் இடம்பெற்றுள்ள பண்பாட்டு அரசியல்


{tocify} $title={உள்ளடக்கம்}

முன்னுரை


தொல்காப்பியர் நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் எனக் கூறுவதால் தமிழகப்பாடல் மரபு உலகியல் வழக்கோடு புனையப்பட்ட கலைவடிவந்தான் என்பதில் ஐயமின்றுப் போகிறது. இலக்கியங்கள் தோன்றுவதையதன் சமூகவியல் பின்புலத்திலிருந்து நோக்கும் போது படைப்பாளரின் ஊர், சமயம், பால் அன்னபிறவும் படைப்பு வெளிவந்த காலமும் அதைப் பெருவழக்காய் பயன்படுத்தோவரது சமூகவியல் நடப்புக்களும் அக்கால அரசு மற்றும் அதிகார அமைப்புகளுமே அப்படைப்பின் மீதான சார்புப் பொருளைத் திணித்து வைக்கின்றன. இவ்வாறாக இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னதாக எழுதப்பட்ட சங்க இலக்கியத்திற்கு மரபுரீதியாக பின்னே தரப்பட்டக் கூற்றுகள் விதி மீறலை இயல்பாய்க் கொண்ட கவிதையின் உணர்வுத் தளத்தில் இருந்து விலகி ஆண் மைய சமூக விதிகளுக்கு உட்பட்டதாய் அமைந்துப் போயின. இதனால் சில கூற்றுகள் கவிதைக்குப் பொருத்தமற்றதாகவும் பொருள் மயக்கத்திற்கு காரணமாகவும் அமைவதோடு சுயசிந்தனையை மழுங்கடிக்கும் அதிகாரமாகவும் செயல்படுகிறது. அதைக் குறிப்பிட்ட சில குறுந்தொகைப் பாடல்வழி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.


கூற்றின் மீதான பார்வை


கவிதை எவ்வளவு வரிகள் இருக்கிறது என்பதைக் காட்டிலும் எத்தனை விரிந்த பொருள் தளத்தைக் கொண்டியங்குகிறது என்பதில்தான் அதன் உயிர்ப்புள்ளது. உதாரணமாக, திருக்குறளைச் சொல்லலாம். பலதரப்பட்ட சமயப் பார்வைகளையும் சமூக மாற்றங்களையும் கடந்துவந்த திருக்குறள் இன்று சமயங்களுக்குள் அகப்படாமையையும் தன்னியல்பாய் கொண்டுள்ளதைக் காண்கிறோம். இதனால் கவிதையின் வெற்றி வாசிப்புத்தளத்திலும் பொருட்படுத்தும் முறையிலும் மிக்கு இருப்பதை உணரலாம். (புதுத்திறனாய்வு) ஒருவகையில் இயற்றியோரல்லாது பிறரால் தரப்பட்ட சங்க இலக்கிய கூற்றுகள் இப்பன்முக வாசிப்பிற்குத் தடையாகவும் அமைகிறது. பாட்டின் சூழலை உணர்த்தும் கூற்று அச்சூழலைத் தாண்டிய உலகமில்லாமையை நம்முள் எழுப்பிவிடுகிறது. நாவல்களில் ஆங்காங்கே தரப்படும் படங்கள் எவ்வாறு தன்னறிவு நகர்விற்கு மதிப்பில்லாது செய்துவிடுகிறதோ அதுபோல கூற்றுகள் நம்மறிவுக்கான இடத்தைச் சுழியாக்கிவிட்டு பொருட்தளத்தைக் கிணற்றுத் தவளையாக்கி விடுகிறது. அதனால் சங்க இலக்கியங்களைத் திணையற்றுப் படிப்பது போன்றே கூற்றற்றுப் படிப்பதும் நம்மை ஆழமாக சிந்திக்க வைக்கும். இதற்கு மிகுந்த சங்க இலக்கிய வாசிப்புப் பயிற்சியும் உலகியலறிவும் அவசியமாகிறது. அதிலும் மரபாக வழங்கிவரும் பெரும்பாலானக் கூற்றுகளை மறுப்பதற்கிடம் இருக்காது. ஒருசில பாடல்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்டக் கூற்றுகள் முன்னமே சொல்லப்பட்டும் உள்ளன. சில பாடல்களுக்கு மட்டுமே தலைவி மீது ஏற்றி வைக்கப்பட்டுள்ள களவு, கற்பு விதிகளின் காரணமாகவும் தொல்காப்பிய விதிப்படி வேட்கை கிளத்தல் கிழத்திக்கு இல்லை ஆதலாலும் தலைவி கூற்று > தோழி கூற்றாயும் தலைவன் கூற்றாயும் மாற்றப்பட்டிருக்கும். இம்மாற்றத்தினுள் மிகப்பெரிய பண்பாட்டு அரசியலும் ஆணதிகாரப்போக்குமே ஒளிந்திருக்கிறது.


வேட்கை கிளத்தலில் நடந்த மாற்றங்கள்


சங்க கால சமூகத்தில் குடும்பத்தில் கணவனாயிருக்கும் ஆண், குடும்பத்துக்கு வெளியே காமக்கிழத்தி, காதற்பரத்தை முதலான பெயர்களில் பல பெண்களோடு பாலியல் சேர்க்கை கொள்வதிலிருந்து அவனைத் தடுக்கும் வழக்கமோ சட்டமோ கிடையாது. இத்தகைய மீறல்களை அன்றைய சமூகம் பொருட்படுத்தவில்லை. பாலியல் உறவுகள் ஒழுக்கக்கேடானவையாக அன்று பழிக்கப்படவில்லை. (பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும், பக்.17)


இதனால் காம வேட்கை ஆணுக்கு மிக்கும் பெண்ணுக்கு இல்லாமலும் இருந்தது என்றாகிவிடாது. பெண்கள் தங்களது காம வேட்கையை நேரடியாக தெரிவிக்க முடியாத சமூக அழுத்தமே பெண்ணுக்கான புலம்பல் மொழியையும் குறிப்பர்த்தங்களால் உணர்த்த வேண்டிய சூழலையும் (இறைச்சி, உள்ளுறை) உருவாக்கின. அதாவது பெண்ணின் காம வெளிப்பாடானது,


தன்னுறு வேட்கை கிழவன்முன் கிளத்தல்

எண்ணும் காலைக் கிழத்திக்கு இல்லைப்

பிறநீர் மாக்களின் அறிய ஆயிடைப்

பெய்ந்நீர் போலும் உணர்விற்று என்ப (களவியல், 28)


என்கிறார். இதன்வழி கிழவன் முன் காமத்தை வெளிப்படுத்துவது கிழத்திக்கு கிடையாது என்றும் அவ்வாறு வெளிப்படுத்துவதும் எவ்வாறு அமைய வேண்டுமாயின் மண்பானையில் ஊற்றி வைத்த நீர் அதன் புறத்தே கசிந்து தானே வெளிப்படுவது போல அவளது காமமும் வெளிப்பட வேண்டும் என்றும் காமத்தை மிக்கு வெளிப்படுத்துவதால் அப்பெண்டீரை மக்கள் எனக்கொள்ளாது மாக்கள் என்றதும் இக்குணம், பெண்டீர் இயல்பிற்கே முறையல்லாததால் பிறநீர் என்றும் கொண்டார். பிறநீர் மாக்கள் என்றது கைக்கிளை பெருந்திணைக்குரிய ஒழுகலாற்றினை உடையாரை. அவர் வேட்கை அன்பொடு புணர்ந்ததின்மையான் அவரை மாக்கள் என்றார் (தொல்காப்பியம் - ச.பாலசுந்தரம் உரை)


எக்காலத்து பெண் மொழியும் ஆளுமை நீங்கி எழுதப்படும் கவிதையும் இவ்வாறான விதிகளுக்குள் அகப்படுவதில்லை. இருந்தும் விதிகள் எதையும் தனக்குள் விழுங்கி வைத்துக்கொள்ள முயன்றுக் கொண்டே இருக்கிறது. 


பாலியல் நடத்தையை ஒழுக்கவியல் பிரச்சனைக்குரியதாக ஆக்கியது சங்க காலத்தில் நிகழவில்லை, சங்க கால இலக்கியத்திற்கு விதிகளை வகுக்க முயன்ற தொல்காப்பிய இலக்கண மரபுதான் பிரச்சனைக்குரியதாகிற்று (பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும் பக்.18)


இதனால் பின்னாளில் அமையப் பெற்றக் கூற்று மரபுகள், பாட்டாலே வெளிப்படையாகத் தெரியும் தலைவியின் மிக்க காமத்து மொழியையும் தலைவனது கொடுமையை நேரேச் சுட்டும் சுடுசொல்லையும் தோழி கூற்றாய் மாற்றின.


குறுந்தொகை 354


நீர்நீ டாடிற் கண்ணுஞ் சிவக்கும்

ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்

தணந்தனை யாயினெம் இல்லுய்த்துக் கொடுமோ

அந்தண் பொய்கை எந்தை எம்மூர்க்

கடும்பாம்பு வழங்குந் தெருவில்

நடுங்கஞர் எவ்வம் களைந்த எம்மே


எனும் இப்பாடல், "நீரில் நீண்ட நேரம் ஆடினால் கண் சிவக்கும். திரும்பத் திரும்பத் தேனை உண்டால் தேனும் புளிக்கும். முன்பு (களவில்) கடும்பாம்பு வழங்குந் தெருவில் நடுங்கஞர் களைந்தாய். இப்போது (கற்பு) பிரிவாயாயின் அதே கடும்பாம்பு அலையும் தெருவாகிய என் தந்தையின் வீட்டில் என்னை சேர்ப்பாயாக" எனும் பொருளைக் கொண்டுள்ளது. இப்பாட்டைத் தோழி கூற்றாய், 'பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனை நோக்கி, "நீ எம்மை விரும்பாயாயின் எம்மை எம் தந்தையின் வீட்டிற்கு அழைத்துச் செல்வாயாக" என்று கூறும் வாயிலாகத் தோழி வாயில் மறுத்தது" என்று உ.வே.சா பதிப்பித்துள்ளார் (உ.வே.சா. நூல்நிலையம் 2020) தமிழண்ணலும் இப்பாட்டை தோழி கூற்று என்றே ஆண்டுள்ளார் (கோவிலூர் மடாலயம் 2002)


பரத்தையரைத் திருப்பத் திரும்பத் தேடிச் சென்று புணர்ந்தும் புனலாடியும் இன்புற்று மகிழ்பவன் தலைவன். இருந்தும் அவனுக்கு அச்சிற்றின்பம் சலிக்கவில்லை. அவ்வாறு பரத்தையரைத் தழுவி இன்புற்று வரும் தலைவனை கண்டு, மீண்டும் மீண்டும் இப்படி செய்வாயெனில் என்னை என் வீட்டிலேயே கொண்டுபோய் விட்டுவிடு என்கிறாள் தலைவி. இதை எப்படி தோழி கூற்றாய் கொள்ள முடியும்? பெரும்பாலான குறுந்தொகைப் பாடல்களில் தோழி தலைவியின் துன்பத்தைத் தன் துன்பமாய் எண்ணுவதாலே தன்மைப் பன்மை சொற்களை (எம், எம்மை) பயன்படுத்துகிறாள் எனக் கொண்டு எளிதாக இதை கடந்துவிடலாம். இருந்தாலும் இம்மொழிகளால் நாம் கேட்க வேண்டிய கேள்விகள்,

  1. ஏன் அகப்பாடல் மரபில் தலைவியால் தன் கணவனது குறையை நேரேச் சுட்டிக்காட்ட இயலவில்லை?
  2. தன்மைப் பன்மை மொழிகளை கூற்று செய்தோர் ஏன் தோழி மொழியாகக் கொள்ள வேண்டும்?
  3. பெண்களை புலம்பலுக்கு உள்ளாக்கும் பரத்தையிற் பிரிவை தொல்லிலக்கணம் குற்றமெனக் கூறாதது ஏன்? 
  4. எனில் அப்பெண்களுக்கு தமிழ் சமூகமும் தமிழிலக்கணங்களும் கொடுத்த இடம் என்ன?

தமிழ் நிலப்பரப்பில் பெண்மைக்குரிய ஒழுக்க ஏற்பே புனிதத்துவக் கருத்தைத் தங்களைச் சுமக்கச் செய்ததோடு பாலியல் குறித்தான அறக்கவலையை ஏற்படுத்தியது


ஆண் நடத்தைக்கான வடிவமே இலக்கணம்


பெண்ணின் பாலியல் ஒழுக்கம் ஆணைச் சார்ந்தது. அவனால் இயக்கப்படுவதாக இருந்தது. ஆனால் ஆணின் பாலியல் ஒழுக்கம் அவனைப் பொறுத்தவரை ஒரு சொகுசு! பரத்தை என்னும் விலைமகள்/ பொதுமகளிடம் போகாத கணவனுக்குக் கூடுதலான புகழ். அதற்காக பரத்தையிடம் போகும் ஆணை ஒரு பரத்தன் என்று யாரும் பழிக்கவில்லை. ஆணின் பாலியல் ஒழுக்கம் அன்று பொதுவாக ஒத்துக் கொள்ளப்பட்ட ஒழுக்கவியலின் ஒரு பிற்சேர்க்கை (supplement) போலக் கருதப்பட்டது. ஆண், பெண் இருபாலுக்கும் பொதுவான பாலியல் ஒழுக்கம், விதிகள் சட்டங்கள் அன்று இல்லை. புதிய, மாறிய உடைமை நாகரிகத்திற்குத் தக்கவாறு தலைமைக்கு வந்துவிட்ட ஆண் நடத்தை குறித்த விளக்கமும் ஆணின் நோக்கு நிலையில் இருந்து செலுத்தப்படுதலும் - ஆண்களின் நடத்தைக்கு வடிவம் கொடுக்கும் விதமாகவும் வெளிப்பட்டன. அதாவது ஆண்களுடைய உரிமைகள், அதிகாரம், எஜமானத்துவம், சுதந்திரம் ஆகியவற்றைச் செயல்படுத்துகிற குறிப்பிட்ட நடத்தைகளே அவர்களுக்கு வலியுறுத்தப்பட்டன. (பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும் பக்.17)


இவ்வாறாகத்தான் கவிதையின் பொருட்தளத்தை மாற்றும் விதமாக கூற்றுகளும் எழுதப்பட்டது. அக்கூற்றுகள் ஆண்கள் தங்கள் அதிகார நிலையைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளத்துணை செய்ததோடு தன்னாளுமைக்கு வேண்டிய சொல்லாடல்களால் பெண் தன்மையை உருவாக்கி, ஆளுந்தன்மை (அதிகாரம் செலுத்தும் தன்மை) ஆண்மை என்றும் அவ்வதிகாரத்திற்கு அடங்கிப் பேணுந்தன்மையைப் பெண்மை என்றும் விதிகளாய் வெளிப்படுத்தியது. தொல்காப்பிய களவியல், கற்பியல் முழுதும் இது வெளிப்பட விளங்கும். எனவே தொல்காப்பியக் கூற்று மரபுகள் யாவும் ஆண்களின் நடத்தைகளுக்கு வடிவம் கொடுப்பதோடு மறைமுகமாக அவற்றைச் சரியென்றுமே கூறுகிறது. இவற்றிலிருந்து வாழ்விற்கான இலக்கணம் பெண்ணுக்குத் தான் எழுதப்பட்டது என்றும் சுதந்திரம் தான் ஆண்களுக்கான இலக்கணம் என்றும் சொல்லித் தெளிய வேண்டியதில்லை.


தோழி - எனும் உளவியல் வடிவம்


தலைவன் பொருள்வயிற் பிரிந்தவிடத்துத் தலைமகள் ஆற்றாமை கண்டும் தோழி கூற்று எழும். இவ்வகையான கூற்று குறுந்தொகையில் பலவகையில் இருந்தாலும் உள்ளார் கொல்லோ தோழி எனத் தொடங்கும் பாடல்கள் குறிப்பிடத்தக்கது. அவ்வாறானப் பாடல் குறுந்தொகையில் மூன்றுள்ளது. அதிலும் 16 மற்றும் 67 ஆவதுப் பாடல்கள் ஆராயத்தக்கன. இவ்விருப் பாடல்களிலுமே தலைவியின் ஆற்றாமையும் முதல்வரியும் ஒத்திருக்கும்.


உள்ளார் கொல்லோ தோழி? கள்வர்

பொன்புனை பகழி செப்பங் கொண்மார்

உகிர்நுதி புரட்டும் ஓசை போலச்

செங்காற் பல்லி தன்றுணை பயிரும்

அங்காற் கள்ளியங் காடிறந் தாரே (குறுந்.16)


இப்பாட்டைப் பலர் தோழி கூற்றாய் கொள்வர். தலைவி கூற்றாய் கொள்ள இடமிருப்பினும் பெரும்பாலானப் பாடல்களில் ஆற்றுவித்தல் தொழிலைத் தோழியே செய்கிறாள் என்பதால் இப்பாட்டைத் தோழிக்கூற்றாயும் எடுக்கலாம். "சிவந்த காலையுடைய ஆண் பல்லி தன் துணையாகிய பெண் பல்லியை ஆசையோடு அழைக்கும் அழகிய அடியையுடைய கள்ளிகள் உள்ள காட்டைக் கடந்து சென்ற தலைவர், அவ்வோசையைக் கேட்டதும் நம்மை நினைக்க மாட்டாரோ?" என்பது பொருள். இப்பாடலில் இடம்பெறும் பல்லி பயிரும் என்பதற்கு தமிழண்ணல் அவர்கள் "கூடுதற்கு அழைத்தல் என்றும் இதைக் கேட்டதும் தலைவனது காம உணர்வு தூண்டப்பட்டு தலைவி நினைவு வரும்" என்றும் குறிப்புப் பொருள் காட்டி இருப்பார். பொதுவாக இவ்வாறு உயிரினங்களின் அன்பு நடவடிக்கைகளைக் கொண்டு (இறைச்சி) தலைவன் தலைவியது காம வேட்கையை உணர்த்தும் பாடல்கள் தோழி கூற்றாய் வருகிறதைக் காணலாம். 


இதனால், தோழி என்பவள் தலைவியின் நனவிலிக்கு செயலாக்கம் தருபவளாகவும் தீராத ஆசைகளைத் தீர்த்து வைக்க முற்படுபவளாகவும் தலைவியது நெடுநாள் ஏக்கத்தை வெளிப்படுத்துபவளாகவும தலைவனும் தலைவியும் இணைந்தும் புணர்ந்தும் மகிழ்ந்து வாழ்வதில் பெருவிருப்பம் கொள்பவளாகவும் தெரிகிறாள். தோழியைக் குறியீடாகக் கொண்டு தலைவியின் உளவியல் வடிவமாகவும் அணுகலாம். வெறுமனே தலைவன் சென்ற சுரத்தின் கொடுமையை மட்டும் உணர்த்துகையில் தலைவியின் முன்னிலையில் தோழி உறைகிறாள். சான்று,


உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை

வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம்

புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்ளுகிர்ப்

பொலங்கல ஒருகா சேய்க்கும்

நிலங்கரி கள்ளியங் காடிறந் தோரே (குறுந்.67)


இதனால் இப்பாட்டைத் தலைவி கூற்றாகவே கொண்டிருப்பர். ஆனால் கடுமையான சுரத்திடைச் சென்ற தலைவரை எண்ணி தலைவியின் காம வேட்கையும் ஏக்கமும் மிகும் போது அது தோழியின் குரலாய் மாறுவதை குறுந்தொகை 16ல் பார்த்தோம். தலைவியின் மீது செலுத்தப்படும் பண்பாட்டு ஒழுக்க விதிகளும் பெண்மையை மீறிவிடாதத் தன்மையும் தான் புலவர்களை இவ்வாறு எழுதச் செய்கின்றன. இதனால் தலைவி கூற்று, தோழி கூற்று என்பதில் கவிதை மட்டும் இயங்கவில்லை சமூகக் கட்டமைப்பும் பால் கட்டமைப்பும் அதனுள் ஓடிக்கொண்டே இருக்கின்றன என்பதும் விளங்கும்.


முடிவுரை


> கவிதையைப் படித்த கணத்திலே கூற்றறியும் வகையான சங்க இலக்கிய வாசிப்பு பயிற்சி நமக்கு பன்முகத்தன்மைக் கொண்ட வாசிப்பை நல்கும். மஞ்சள் கண்ணாடிப் போட்டுப் பார்த்தால் உலகமும் மஞ்சளாகத்தான் தெரியும் என்பதுப் போலத்தான் கூற்றைக் கொண்டு கவிதையை அணுகுவதும். 


> பாலியல் நடத்தைகள் ஒழுக்கவியல் பிரச்சனைக்கு உரியதாய் சங்க காலத்தில் இல்லை. தொல்காப்பியம் போன்ற இலக்கணங்கள் ஆணதிகாரப் போக்கில் செய்த விதிகளே அவ்வாறன பாலியல் பற்றிய அறக்கவலையை உண்டாக்கின


> தொல்காப்பியத்தில் காட்டப்படும் கூற்று மரபுகள் ஆண்களின் நடத்தைக்கு வடிவம் கொடுப்பதாகவே உள்ளன. பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதான கூறுகளே இலக்கணத்தில் அதிகமாக உள்ளன.


> கூற்றுகள் வெறும் பாடலை மையமிட்டு மட்டும் உண்டாகிவிடவில்லை. அதற்குள் பண்பாட்டு அரசியல் மறைந்துள்ளது. பெண்களுக்கென உண்டாக்கப்பட்ட விதிகளும் பெண்களின் மீது திணிக்கப்பட்ட சொல்லாடல்களும் இதை சாத்தியமாக்கின. சுதந்திரமே ஆணுக்கான இலக்கணமாய் தொல்காப்பியம் சொல்கிறது.


> தோழி, சமூக நியதிகளால் கட்டுண்ட தலைவியின் காம வேட்கையை வெளிப்படுத்துபவளாகவும் தலைவியின் மன ஏக்கத்தை 'விரைவில் நடக்கும்' என்று ஆற்றுப்படுத்துபவளாகவும் ஒரு கனவுபோல்/ நனவிலியாக செயல்படுகிறாள் என்றும் முன்மொழியலாம். இதுவும் சமூகம் தலைவியின் மீது செலுத்திய அதிகாரத்தின் வெளிப்பாடே. 


இதனால் சங்க இலக்கியங்களில் அகப்பாட்டுக்களில் இடம்பெற்றிருக்கின்ற கூற்றுகள் சமூகவியல் நோக்கோடு மேலும் விரிவாக ஆராயப்படவேண்டும் என்ற முன்மொழிவும் இதனுள் அடங்கியுள்ளது.


தீசன்


துணைநூற் பட்டியல்


1.குறுந்தொகை மூலமும் உரையும், டாக்டர் உ.வே.சாமிநாதையர் (2020)


2.சங்க இலக்கியம் மூலமும் உரையும் (2), கோவிலூர் மடாலயம் (வர்த்தமானன் வெளியீடு)


3.தொல்காப்பியம் (தொகுதி - 3, பகுதி - 2) - ச.பாலசுந்தரம் உரை, பெரியார் பல்கலைக்கழகம்


4.பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும் - ராஜ் கௌதமன் (NCBH)


5.இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும் - க.பஞ்சாங்கம் (2016)

4 Comments

  1. நன்று.

    களவு காலத்தில் தான் தலைவி தலைவனுடன் பேசக்கூடாது. கற்பு காலத்தில் பேசத்தானே செய்கிறாள். ஆனால் திட்டுவதில்லை. அப்பாடலையும் அப்பாடலுக்கான உரைகளையும் நம்மால் மாற்ற இயலாது.. தவறாக உரைகளை தந்துள்ளார்கள் என்றும் அக்கால கட்டமைப்புகளை எடுத்து கூறுவதிலிருந்தும் ஒன்றும் மாறபோவதில்லை. ஆகையால் மாற்றத்திற்கு தேவையான உரைகளை எழுதுவதிலும், மாற்றமடைந்த சமத்துவத்தை புலப்படுத்தக் கூடிய கவிதைகளைப் பற்றியும் சிந்திப்போம்.


    ஆணாதிக்க வலையில் முழுமையாக சங்க பாடல்கள் சிக்க வில்லை என்பதற்கு தோழி கூற்றுகளும், பரத்தை கூற்றுகளும், காதற்பரத்தை, காமக்கிழத்தி கூற்றுகளுமே சான்று.
    இடையில் வந்த உரையாசிரியர்களால் எதும் ஆக போவதில்லை. சரியான உரைகள் இன்று தோன்றினால் அவை ஆழிந்து விடும் தானே.

    ReplyDelete
  2. அகப்பாட்டையும் களவியல், கற்பியலையும் கவனிக்கும் போது அதிகார கட்டமைப்பைத் தனதாக்க ஆண்கள் கூட்டம் முயன்றுள்ளதென்று விளங்கிக் கொள்ள விஷேச அறிவு வேண்டியதில்லை. "பரத்தையிடம் போகும் ஆணை ஒரு பரத்தன் என்று யாரும் பழிக்கவில்லை - ரா.கௌ" பொ.வேல்சாமி - பரத்தையர் பற்றி விளக்குகையில் ஆண்களைக் காட்டிலும் திறனாலும் கலைச் செயலாலும் மேம்பட்டு இருந்த பெண்ணினக் குழு என்பார். அவர்களின் திறனையும் சுதந்திரத்தையும் கண்டு பொறாமையாலும் வேட்கையாலும் தனது அதிகார எல்லைக்குள் கொண்டவர எண்ணிய ஆண்கள் அக்குழுமேல் நேரடி வன்மத்தைக் காட்டிடவில்லை. அவர்களைத் தன் வேட்கைக்கு இரையாக்கிக் கொண்டதோடு அவர்களது நிலைப்பாடு மேல் ஒரு சமூக மதிப்பிழப்பைச் செய்திருக்கின்றனர்.

    இதன் தாக்கம் இன்றுவரை நீங்கள் காணலாம். திரைப்படத்துறையில் பெண்கள் எவ்வாறு பார்க்கப்படுகிறார்கள்? மக்களுக்கு அவர்களது உடல் ஓர் நுகர்வுப் பொருளே. அதைக் கலை வடிவமாக அல்லாமல் தன் பாலியல் வேட்கையை மடைமாற்றும் உருவங்களாகவே அவர்கள் அவர்களுக்குத் தெரிகிறார்கள். Youtube Comment க்களை பார்த்தால் இக்கொடிவர்கள் சூழவா நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றும். இதைக்காட்டிலும் அந்த துறைரீதியாகவே எவ்வளவு adjustment க்களை அவர்கள் கடக்கவேண்டியுள்ளது? கதையுள் அவர்கள் எப்படியான காட்சிக்கு மட்டும் பயன்படுகிறார்கள்? ஒரு நல்ல பெண் கலைஞர் திடீரென்று எப்படி துறையிலிருந்து காணாமலே போய்விடுகிறார்.

    யோசித்தால் விளங்கும்.

    ஆனால் ஒரு தனிமனிதரைக் குறைக்கூற வேண்டுமானால் அச்சமூகத்தையும் நாம் சேர்த்தே குறைச்சொல்ல வேண்டும். இச்சமூகம் இன்னும் பாலியல் நடத்தையும், அதைச் சார்ந்த செயல்பாடுகளையும் ஒழுக்கவியல் பிரச்சனைக்குரிய விஷயங்களாகவே பார்க்கிறது. அதிலும் ஆணின் மீறல்கள் பெண்ணின் பழியாகவே பார்க்கப்படுகிறது. எனில் இந்த சமூகம் யாருக்கானதாய் உள்ளது?

    இதன் துவக்கம் எங்குள்ளது. காதற்பரத்தைக் கூற்றாலும், தோழி கூற்றாலும் அவர்கள் ஆணாதிக்க வலையில் சிக்கவில்லை என்று தெரிகிறது என்கிறீர்.

    பரத்தை என்னுமோர் குழு உருவாகக் காரணமே ஆணதிகாரம் தானே. பரத்தையை உருவாக்கினால் தான் குடும்பப் பெண்களையும் உருவாக்கமுடியும். தலைவி சொல்வதைத் தோழி சொல்வதாய் மாற்றுவதும் ஆண்களால் பெண்களுக்கென ஆக்கிவைக்கப்பட்ட பண்பாட்டின் வேலைதானே.

    எனில் இச்சமூகம் யாருக்கானதாய் உள்ளது. சமத்துவம் என்று கூறுவதே இங்கு சமத்துவமின்மையைத் தான் காட்டும். இங்கு ஒடுக்கப்படுவது பெண்கள் மட்டுமல்ல.

    சிறுவர்கள், திருநர், பால்புதுமையர், மாற்றுத்திறனாளிகள்.

    நாம் கட்டாயம் செயல்பட்டே ஆகவேண்டும். வெறும் உரைமாற்றத்தால் இந்த சமத்துவமின்மையை ஒழித்துவிட முடியாது.

    கோட்பாட்டுக்கல்வி பள்ளிக்குழந்தைகளைச் சென்றடைய வேண்டும்

    ReplyDelete
  3. ஒரு ஒரு காலகட்டத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உரையை எழுதுகிறார்கள். ஒருவர் கூறும் உரை அந்தப் பாடலுக்கு தீர்ப்பாகாது. எழுதியவர் என்ன நினைத்து எழுதினாரோ?

    இரண்டாயிரம் வருடம் வரை உள்ள ஒரு

    ReplyDelete
  4. இரண்டாயிரம் வருடம் வரை உள்ள ஒரு ஆசிரியரின் உரை வேறு ஒரு உரையாசியரால் அடுத்த ஆயிரம் ஆண்டுகளில் மாற்றப்படலாம். தொல்காப்பிய காலத்துக்கு அந்த விதிகள் பொருத்தமாய் இருந்திருக்கலாம். வழக்கங்களை விதிகள் என கொண்டால் வழக்கங்கள் இப்போது மாறிக் கொண்டுதானே இருக்கும். ஹை கோர்ட்டுக்கு அடுத்து சுப்ரீம் கோர்ட் உண்டல்லவா?

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு