Trending

வள்ளலார் கண்ட ஆன்மநேய ஒருமைப்பாடு

வள்ளலார் கண்ட ஆன்மநேய ஒருமைப்பாடு

வள்ளலார் கண்ட ஆன்மநேய ஒருமைப்பாடு எனுந்தலைப்பில் தரப்பட்டுள்ள இக்கட்டுரையின் கருத்துக்கள் யாவும் ம.பொ.சியின் வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு எனும் நூல்வழி பெறப்பட்ட கருத்துக்களே.

துவக்கவுரை


அருட்பிரகாச வள்ளலார், 'ஆன்மநேய ஒருமைப் பாட்டுரிமை' என்ற புதிய கோஷத்தை எழுப்பினார். அந்தக் கோஷத்தின் அடிப்படையில் உயிர்களிடையே சகோதர உணர்வை வளர்க்க முயன்றார். அடிகளாரின் குறிக்கோள் பலவாயினும், அவற்றுள் தலையாயது - மற்ற எல்லாக் குறிக்கோள்களையும் தன்னுள்ளே கொண்டு விளங்குவது ஆன்மநேய ஒருமைப்பாடு என்பதாகும். ''சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியம் ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை" என்று அடிகளாரே கூறுகின்றார்.


சன்மார்க்க நெறியிற் சாராதாரைத் 'துன்மார்க்கர்' என்றே கூறுவார் தாயுமானவர். இதனைச் 'சன்மார்க்க நெறியிலாத் துன்மார்க்கனேனையும் தண்ணருள் கொடுத் தாள்வையோ!" என்ற அவரது வாக்காலேயே அறியலாம். இங்குத் தாயுமானவர் வலியுறுத்துவது சித்தாந்த வேதாந்தங்கள் கலந்த சமய சன்மார்க்கமேயாம். வள்ளலார், சமயங்கடந்த 'சமரச சுத்த சன்மார்க்கம்' என்ற புதுநெறியையே போதித்தார்.


ஆன்மநேய ஒருமை


உயிர்கள் பலவகையான தேகங்களைப் பெற்று வாழ்கின்றன. அவற்றை, மனிதர் - மிருகம் பறவை ஊர்வன நீர்வாழ்வன தாவரம் எனப் பாகுபடுத்தியுள்ளனர் அறிஞர் பெருமக்கள். அவை அனைத்தும் பரமான்மாவால் படைக்கப்பட்ட ஜீவான்மாக்கள் என்பது சமயக்கொள்கை. அதனால், அந்த உயிர்களிடையே ஆன்மநேய ஒருமைப்பாடு காண்பதனைத் தம் கடமையாகக் கொண்டார் வள்ளலார். "உலகம், ஆதி பகவனாகிய இறைவனை முதலாக உடைத்து'' என்றார் திருவள்ளுவர். அந்த முதற் பொருளைத் தலைமையாகக் கொண்டு ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமைச் சமுதாயத்தைக் காண விரும்பினார் வள்ளலார். இதுபற்றித் தாம் இயற்றிய 'ஜீவகாருண்ய ஒழுக்கம்' என்ற நூலில், அடிகளார் தரும் விளக்கம் வருமாறு:


"சீவர்கள் எல்லாம் ஒரு தன்மையாகிய கடவுள் இயற்கை உண்மை ஏகதேசங்களாகிக் கடவுள் அருட் சக்தியால் பூதகாரிய தேகங்களில் வருவிக்கப் பட்டப்படியால் இச்சீவர்களெல்லாம் ஒருரிமை இனத்தவர்களே யாகும்."


"சீவர்கள் எல்லாம் ஒருதன்மையாகிய இயற்கை உண்மை ஏக தேசங்களாய்ச் சர்வ சக்தியுடைய கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டபடியால், ஓருரிமை உள்ள சகோதரர்களே யாவர்.''


மேலும் எடுத்துக் காட்டிய இரண்டு பகுதிகளும் ஒரே கருத்தை வலியுறுத்துவனவாக இருப்பினும், முன்னதில், உயிர்கள் அனைத்தையும் ஒரே இனமாகக் குறிப்பிடுகின்றார், பின்னதில், அந்த இன உரிமை பற்றிச் சகோதர ஒருமைப்பாடு இயற்கையாக இருப்பதை எடுத்துக் காட்டுகின்றார். 


வாயே பறையானது!


"உயிர்கள் அனைத்திடமும் அன்பு செலுத்த வேண்டும்" என்பது ஜீவகாருண்யம். அடிகளார் அதனினும் ஒருபடி மேலே சென்று தேக பேதங்களை மறந்தவராகி, உயிர்களை யெல்லாம் ஒரே இனத்தைச் சார்ந்தவையாகக் கூறுகின்றார். அது, ஆன்மநேய இனமாகும். அந்த அடிப்படையில் கருணையையே மதமாகக் கொண்ட ஒரு புத்தம் புதிய உலகை அமைக்க முயன்றார் வள்ளலார். அதனைத் தம் கண்ணாரக் கண்டு மகிழும் பேற்றினைத் தருமாறும் கடவுளைப் பிரார்த்தித்தார்.


"கள்ளவா தனையைக் களைந்தருள் நெறியைக் 

காதலித்து ஒருமையில் கலந்தே

உள்ளவாறு இந்த உலகெலாம் களிப்புற்று

ஓங்குதல் என்றுவந்து உறுமோ வள்ளலே அதுகண்டு அடியனேன் உள்ளம் மகிழ்தல்என் றோஎனத் துயர்ந்தேன் 

ஒள்ளியோய் நினது திருவுளம் அறிந்தது

உரைப்பதுஎன் அடிக்கடி உனக்கே"


"உலகத்திரளெலாம் மருவறக் கலந்து

வாழ்வதற்கு வாய்த்த தருணம் இதுஎன்றே 

வாயே பறையாய் அறைகின்றேன்."


என்னும் வரிகளில், தமது லட்சியச் சித்திரத்தைக் காட்சிப்படுத்துகின்றார் வள்ளற் பெருமான். 


அடிகளாரின் ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை, பேதங்களைக் கடந்த அல்லது பேதங்கள் அற்ற அபேத சித்தாந்தமாகும். ஆம், கடவுள் வேற்றுமை, வருண வேற்றுமை, சமய மத வேற்றுமை, சாதி வேற்றுமை ஆகியவற்றை யெல்லாம் அழித்தும்; மொழி, நாடு, நிற வேற்றுமைகளை யெல்லாம் கடந்தும் வளர்வது ஆன்மநேய ஒருமைப்பாடு. 


தெய்வம் பலப்பல சொல்லும் மூட நம்பிக்கைக்கு எதிரான சித்தாந்தம் ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை. ஆனால்,


"ஆறு கோடியாம் சமயங்கள்

அகத்தினும் அவைமேல்

வீறு சேர்ந்தசித் தாந்தவே

தாந்தநா தாந்தம்

தேறும் மற்றைய அந்தத்தும் 

சிவம் ஒன்றே அன்றி 

வேறு கண்டிலேன் கண்டிரேல்

பெரியர்காள் விளம்பீர்!"


எனப் பாருலகனைத்துக்கும் பறையறைந்து பாடுகின்றார் வள்ளலார். தெய்வம் ஒன்றுதான் உண்டு என்னும் உண்மையை உணராத மாந்தர்களைப் பார்த்து, "ஒன்றெனக் காணும் உணர்ச்சி என்றுறுமோ?" என்றும், 'ஒன்றே சிவம் என்று உணர்ந்து இவ்வுலகெலாம், நன்றே ஒருமையுற்று வாழி" என்றும் பாடினார். இங்கு அடிகள் 'சிவம்' என்பது உயிர்க்குலம் அனைத்துக்கும் பதியான பரம்பொருளை யாகும்.


அன்பே - அகிலமே கடவுள்!


வள்ளலார் சொல்லுங் கடவுள், நாம ரூப பேதங்களுக்கு அப்பாற்பட்டது. இதனை அடிகளாரே கூறக் கேட்போம்:-


''உண்மையில் 'கடவுள்' எனப்படுவது அகிலமாம் - அன்பாம். அஃது, உலகிலுள்ள எல்லா வற்றிலும் பரிபூரண சமாதானத்தையும் சமரச நிலையையும் ஏற்படுத்தி அவைகளை நிலை நிறுத்துகின்றது.''


முற்காலச் சான்றோர். 'அன்பே கடவுள்' என்றனர். அத்துடன் அகிலத்தையும் சேர்த்து, 'அன்பாம் அகிலமாம் கடவுள்' என்றார், உலக ஒருமைப்பாட்டினைக் காண விழைந்த வள்ளலார்.


உயிரினத்திடையே - குறிப்பாக, மனிதர்களிடையே ஒருமைப்பாட்டினை வளர்க்கத் தடையாக இருக்கும் எதனையும் தெய்வ சக்தியாகவோ, தெய்வ சம்மதமாகவோ ஏற்க மறுக்கிறார் வள்ளலார்.


இராமலிங்கர், உலகிலுள்ள எல்லா மதங்களையுமே வெறுத்தார்; அம்மதங்களைச் சார்ந்த மக்கள் அனைவரிடமும் ஒருமைப்பாடு காணவிழைந்தார். இஃது அவருடைய பொதுக் கொள்கை. ஆயினும் தமது கொள்கைக்கு ஆதரவு தேடும் முயற்சியை முதலில் இந்தியாவில் தோன்றி வளர்ந்த இந்து, சமண, பௌத்த சமயங்களிடையே மட்டும் மேற்கொண்டார். இஸ்லாம் - கிறித்துவ சமயங்களைப் பற்றி அவர் வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை. அதனால் இஸ்லாம், கிறித்துவ மதங்கள் அல்லாத இந்திய மதங்களை மட்டும் ஒன்று படுத்த விரும்பினார் என்று கருதுவதற்கில்லை. தமது கொள்கைக்கு இஸ்லாம் - கிறித்துவ மதத்தினரை ஈர்க்க விருப்பமிருப்பினும், அதனைக் காலத்தின் கையில் கடவுள் கையில் விட்டுவிட்டார் என்றே சொல்ல வேண்டும். ஆம்; கருத்துப் போர்க்கான களத்தைப் பெரிதாக்கிக் கொள்ள விரும்பாத ராஜதந்திரி வள்ளலார்.


ஆதிசங்கரர் கண்ட ஒருமை


ஒரு குழுவினருக்கு எதிராக இன்னொரு குழுவினர் ஒன்றுபடுவது ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை யாகாது. அதனைத் தற்காப்புணர்ச்சி என்றே சொல்ல வேண்டும். அடிகளார் ஒருமைப்பாட்டினை வற்புறுத்தியது, குறிப்பிட்ட ஒரு குழுவினருக்கு மட்டும் தற்காப்புத் தேடவன்று. 'ஒரே உலகம்' காண்பதற்கேயாம்.


ஆதிசங்கரர், இந்து சமயத்தின் உட்பிரிவுகளாக இருந்த அறுவகைச் சமயங்களிடையே ஒருமைப்பாடு காண முயன்றார்.


ஆதிசங்கரரின் சமய ஒருமைப்பாட்டு முயற்சி அவருடைய வெறுப்புக்கும் எதிர்ப்புக்கும் இரையான சமண, பௌத்த மதங்களுக்கு எதிராக - அந்த மதங்களின் தாக்குதலிலிருந்து வேத மதத்திற்குத் ததற்காப்புத் தேட இந்துக்களை எல்லாம் ஒன்றுபடுத்த எடுத்துக் கொண்ட முயற்சியேயாகும். வள்ளலாரின் குறிக்கோள் அதுவன்று. அவர், மதங்களே இல்லாத மனித சமுதாய ஒருமைப் பாட்டைக் காணவே பாடுபட்டார். ஒன்றுபட்ட அந்த மனித சமுதாயமும், ஒரே தெய்வ நம்பிக்கை கொண்டு, பிளவு பிரிவினை ஆகிய தீய சக்திகளிடமிருந்து விடுபட்டு, உயிர்கள் அனைத்திடமும் அன்பு செலுத்துவதாக இருக்க வேண்டுமென்றும் கனவு கண்டார். அதனாற்றான், 'இந்துநேய ஒருமைப்பாட்டுரிமை' என்றோ, 'மனித நேய ஒருமைப்பாட்டுரிமை' என்றோ சொல்லாமல் 'ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை' என்று கோஷித்தார். கோஷம் புதிதாயினும், அந்தக் கோஷத்தினுள்ளே அடங்கியிருக்கும் குறிக்கோள் உலகத்திற்குப் புதிதன்று.


முன்னோர் கண்ட தோல்வி


உலகில், மதாசாரியர்களாக தீர்க்கதரிசிகளாகக் கருதப்படுவோர் அனைவருமே உலகம் முழுவதையும் ஒரே நெறியின் கீழ்க் கொண்டுவர முயன்றவரே யாவர், ஆனால், காலம் அவர்களுள் ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்திப் பல மதங்களை ஏற்படுத்தி விட்டது. அதனால், ஒவ்வொரு நெறியும் அல்லது ஒவ்வொரு இயக்கமும், காலகதியில் தனித்தனி மதங்களாகி, அவற்றைத் தோற்றுவித்தவர்களின் ஒரே உலகக் கனவு பலிக்காமல் செய்துவிட்டது.


மதவாதிகளும் ஞானிகளுமேயன்றி, சக்ரவர்த்திகளும் உலகனைத்தையும் ஒரு குடைக்கீழ்க் கொண்டுவர முயன்று, அதிலே அவர்கள் தோல்வியடைந்தனர். அதன் விளைவாக, சாம்ராஜ்யங்கள் பலவாயின. உலக சாம்ராஜ்யம் காணச் சக்கரவர்த்திகளுள் சிலர் முயன்றதற்குத் தலைமைப் பதவியில் அவர்கள் கொண்டிருந்த ஆசையும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆயினும், ஒரே உலகப் பொதுமை உணர்வும் அவர்களுக்கு இருந்ததென்பதை நாம் மறப்பதற்கில்லை.


ஞானியர்களும் அரசர்களும் அடைந்த தோல்விகளுக்குக் காரணம், அவர்களது 'ஒரே உலக' முயற்சியானது ஆன்மநேய ஒருமைப்பாட்டுணர்வை அடிப்படையாகக் கொள்ளாததுதான். 


ஒரே உலக உணர்வுடன் தோன்றி மதங்கள் தங்களுக்குள்ளே போட்டியிட்டு, போராடத் தொடங்கி, தத்தம் உயிர்க் கொள்கையான உலக ஒருமைப்பாட்டிற்கே கேடிழைத்துவிட்டன. அந்தப் புனிதமான குறிக்கோள் என்றென்றுமே நிறைவேறாதபடி மதங்கள் தடைகளாகிவிட்டன. அதனாற்றான், மதங்களை அழித்தாலன்றி, ஆன்மநேய ஒருமைப்பாடு தோன்றுவதோ, உலகிலுள்ள மனிதர் அனைவரும் ஒரு குலமாய் ஒன்றுபடுவதோ சாத்தியமில்லை என்றார் சமரச சுத்த சன்மார்க்க சங்கத் தலைவரான வள்ளலார்.


மதங்கள் பலவாயிருப்பினும். குறிக்கோளில் ஒருமைப்பாடு இருப்பின், வள்ளலார் மதங்களை வெறுத்திருக்க மாட்டார். ஆனால், அவர் வாழ்ந்த காலத்தில், "போதித்த சமயமோ ஒன்று சொன்னபடி ஒன்று பேசாது,'' என்று தாயுமானவர் எடுத்துக் காட்டிய இழி தன்மையே நிலைத்திருந்தது. அதனால், மதங்களை யொழித்து, மனித குலத்திடையே ஒற்றுமை காண விழைத்தார்.


எம்மதமும் சம்மதம்


'எம்மதமும் சம்மதம்' என்பது அடிகளாரின் கொள்கை. இதனை,


"எம்மத நிலையு நின்னருள் நிலையில் இலங்குதல் அறிந்தனன்

எல்லாஞ் சம்மத மாக்கிக் கொள்கின்றேன்." 


என்ற அருட்பா வரிகளில் வெளிப்படுத்துகின்றார். இங்கு 'எம் மதம்' என்று அடிகளார் குறிப்பது மத ஸ்தாபனங்களையன்று: மத தத்துவங்களையே. இந்தக் குறிக்கோளுக்கிணங்க - சித்தாந்தம், வேதாந்தம், நாதாந்தம், கலாந்தம், யோகாந்தம், போதாந்தம் ஆகிய ஆறு அந்தங்களையும் ஒன்றுபடுத்தி, 'ஷடாந்தம்" என்றொரு சமரச சமஷ்டித் தத்துவத்தை உருவாக்கினார்.


ஆதிசங்கரர், இந்து மதத்தின் உட்பிரிவுகளான ஆக்னேயம், ஐந்திரம், கணாதிபத்தியம், சைவம், வைணவம், சாக்தம் ஆகிய ஆறு சமயங்களையும் ஒன்று படுத்தினார்; அது காரணமாக, 'ஷட்மத ஸ்தாபகர்' என்ற சிறப்புப் பெயர் பெற்றார். அவர் காலத்தில் இந்து மதமொன்றே இந்தியா முழுவதிலும் செல்வாக்குப் பெற்றிருந்ததால், அதன் உட்பிரிவுகளை ஒன்று படுத்துவதையே தேசிய ஒருமைப்பாட்டுப் பணியாக அவர் கருதியிருக்கக் கூடும்.


அவருக்குப் பல நூற்தாண்டுக்குப் பின் வாழ்ந்த வள்ளலார் காலத்தில், இஸ்லாம் - கிறித்துவ மதங்கள் இந்து மதத்தின் செல்வாக்கை ஊடுருவி, அந்த மதங்களைச் சார்ந்தவர்களால் நடத்தப்பட்ட அரசாங்கங்களின் துணையால், இந்தியாவில் நிலைத்துவிட்டன. ஆகவே, இந்து மதத்திற்குப் புறச் சமயங்களான சமண பௌத்த மதங்களையே யன்றி, இந்தியாவிற்கே புறச் சமயங்களான இஸ்லாம் - கிறித்தவ மதங்களையும் ஒன்றுபடுத்தி, உலக ஒருமைப்பாடு காண விழைந்தார், வள்ளலார்.


இஸ்லாம் - கிறித்துவம்


அடிகள், தமது ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமைக் கொள்கையை முதலில் இந்திய மதங்களிடையே மட்டும் பரப்ப முயன்றதற்கு முக்கிய காரணம். அந்தக் கொள்கைக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் நாடு இந்தியாதான் என்று அவர் நம்பியதேயாகும். இதனைச் சுவாமி விவேகானந்தரும் உறுதிப்படுத்துகின்றார். 


"எல்லாத் தேசங்களிலும் 'எல்லா மனிதர்களையும் தன்னுயிர்போல் நினை' என்ற உண்மை சொல்லப்பட்டிருக்கிறது. தாம் மனித உயிர்களுக்கும், மற்ற உயிர்களுக்கும் வித்தியாசம் காட்டுவதில்லை.


"ஏன் மற்ற உயிர்களைத் தம் உயிர்போல் நினைத்து அன்பு செய்ய வேண்டும்? இதற்குக் காரணம் மற்ற சாஸ்திரங்களில் கொடுக்கப்பட வில்லை. அதற்குக் காரணம் இங்குதான் இருக்கிறது. கடவுள் அரூபமாய் எல்லா உயிர்களிலும் இருக்கிறார். அதனால், எல்லா உயிர்களும் சமம்" (இந்தியப் பிரசங்கங்கள் : பக். 32.)


ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமைச் சித்தாந்தம், 'தெய்வம் ஒன்று' என வற்புறுத்துவதோடு, 'அத்தெய்வம் எல்லா உயிர்களிலும் இருக்கிறது' என்றும் சொல்கின்றது. மனிதர், மிருகம், பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்பன வெல்லாம் உடலைக் காரணமாகக் கொண்ட வேற்றுமைகளே, அந்த வேற்றுமைகளுக்கும் ஆன்மாவுக்கும் சம்பந்தமில்லை என்பது அடிகளின் கொள்கை.


புல்லாகி


உயிர்கள் அனைத்திலும் கடவுள் வியாபித்திருக்கிறார் என்ற உண்மையை உணராதவர், தம்மிடத்திலுள்ள கடவுள் தன்மையையும் உணரத் திறனற்றவராவர். இதனை,


'ஜீவகாருண்யம் ஆன்மாக்களின் இயற்கை விளக்கம் ஆதலால், அந்த இயற்கை விளக்கமில்லாத ஜீவர்களுக்குக் கடவுள் விளக்கம் அகத்திலும் புறத்திலும் வெளிப்படவே மாட்டார்.' ஜீவகாருண்ய ஒழுக்கம்-3.


என்ற அடிகளார் வாக்காலும் அறிகிறோம். 


பானுகவியின் தவறு


வள்ளலாரை வெறுத்த மருட்பாக் கட்சியினருக்கு எதிராக அருட்பாக் கட்சியினர் சார்பில் தாம் வெளியிட்ட "நியாய வச்சிர குடாரம்" என்ற நூலில்,


"எம்மதமும் சம்மதம் என்று பின்னையவர்களும் பிறரும் உரைப்ப தெல்லாம் வேதாகம பிரதிபாத்திய மதங்களையே யாம்,"


என்கிறார். அதன் ஆசிரியரான முத்தமிழ் சத்னாகரம் ப.தி.பானு கவியார். அதாவது, வேதங்களையும் ஆகமங்களையும் ஏற்றுக் கொண்ட மதங்களையே அடிகள் சம்மதமாகக் கொண்டார் என்கிறார். இஃது உண்மையானால், சமணம் - பௌத்தம் - கிறித்துவம் ஆகிய புறச்சமயங்கள், அடிகளார் காண விரும்பிய ஆன்மநேய ஒருமைப்பாட்டுச் சமுதாயத்திற்குப் புறம்பானவை யாகிவிடும். பானுகவியாரின் விளக்கம் அடிகளாரின் கருத்துக்குப் பொருந்துவதாக இல்லை. அருட்பாவுக்கு எதிராகப் போர்க் கோலங்கொண்ட சைவர்களைச் சமாதானப்படுத்தவே பானுகவியார் தவறான விளக்கம் தந்தார் போலும். அவருடைய கருத்து அடிகளாரின் கொள்கைக்கு மாறான தென்பதைக் கீழ்வரும் பாடல்களால் அறியலாம்.


"பெருகியபேர் அருளுடையார் அம்பலத்தே நடிக்கும்

பெருந்தகைஎன் கணவர்திருப் பேர்புகல்என் கின்றாய்

அருகர்புத்தர் ஆதிஎன்பேன் அயன்என்பேன் நாரா

யணன்என்பேன் அரன்என்பேன் ஆதிசிவன் என்பேன்

பருகுசதா சிவம்என்பேன் சத்திசிவம் என்பேன்

பரமன்என்பேன் பிரமம்என்பேன் பரப்பிரம்ம என்பேன்

துருவுசுத்தப் பிரமம்என்பேன் துரியநிறை வென்பேன்

சுத்தசிவம் என்பன்இவை சித்துவிளை யாட்டே"


"சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார் தமக்குச்

சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாய்

பிற்சமயத் தார்பெயரும் அவர்பெயரே கண்டாய்

பித்தர்என்றே பெயர்படைத்தார்க்கு எப்பெயர்ஒவ் வாதோ

அச்சமயத் தேவர்மட்டோ நின்பெயர்என் பெயரும்

அவர்பெயரே எவ்வுயிரின் பெயரும், அவர் பெயரே

சிற்சபையில் என்கணவர் செய்யும்ஒரு ஞானத்

திருக்கூத்துக் கண்டளவே தெரியும்இது தோழி'


இப் பாடல்களிரண்டும் தலைவி தோழிக்கு உரைக்கும் பாவனையில் அடிகளார் பாடியவை யாகும். முதல் பாடலில், அருகர் - புத்தர் என்னும் பெயர்களும் நாம் வணங்கும் ஆண்டவனுடைய பெயர்களே என்கிறார். ''அருகர் - புத்தர் என்பன புறச் சமயங்களின் தலைவர்கள் பெயராயிற்றே, அவை, இந்து ஆகம முறைப்படி வழிபடும் அம்பலத்தரசருக்குப் பொருந்துமா?" என்று தோழி கேட்டதாகப் பாவித்து, இந்தியாவின் புராதன சமயங்களின் தலைவர்களாகிய அருகர் - புத்தர் ஆகியவர்களின் பெயர்களேயன்றி, "பிற்சமயத்தார் பெயரும் அவர் பெயரே கண்டாய்" என்கிறார். அடிகள் 'பிற்சமயத்தார்' எனக் குறிப்பிடுவது, பிற்காலத்தில் இந்தியாவில் புகுந்து வளர்ந்து நிலைத்துவிட்ட இஸ்லாம் கிறித்தவ சமயங்களை யாகும். இதில் சிறிதும் ஐயமில்லை. ஆகவே, அடிகளார் 'எம்மதமும் சம்மதம்' என்றது, இஸ்லாம் - கிறித்துவ மதங்களுக்கும் பொருந்துவதாகும். "ஒருமையின் உலகெலாம் ஓங்குக" என்றுரைத்த அடிகளார். இஸ்லாம் - கிறித்தவ மதங்களை விலக்கி உலக ஒருமைப் பாடு காண விரும்புவாரா? - ம.பொ.சிவஞானம்


➤ இந்த கட்டுரையை PDF வடிவில் பெற இங்கே தொடவும்


மேலும் வள்ளலார் பற்றிய தகவல்களுக்கு இவற்றைக் காண்க

1. வள்ளலாரின் ஜீவகாருண்யம்

2. வள்ளலார் கண்ட தெய்வக் கொள்கை

3. ஞானத்தைத் தேடி 7 - ஜீவகாருண்யம்

4. வள்ளலாரின் கொள்கைகள்

5. தைப்பூசம் தரும் ஞானம்

6. பாரதியாரின் கற்பனையில் ஜீவகாருண்யம்

7. ஒருமையுடன் நினது திருமலரடி

8. ஜீவகாருண்ய ஒழுக்கம்

2 Comments

  1. சிறப்பு.
    ம. பொ. சியின் கருத்துக்களை இங்கு குறிப்பிட்டதற்கு நன்றி.

    வள்ளலார் பற்றிய செய்திகளையறிய வேண்டுமெனில் இதுபோன்ற கட்டுரைகள் சிறந்த முறையில் உதவும் என்று நினைக்கிறேன்.

    ஒவ்வொன்றிற்கும் எதிரான ஒன்று இருப்பதே விதி . அதற்கு இக்கட்டுரையில் ஆதிசங்கர் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறார்..
    இது போன்று அருட்பா மருட்பா பற்றிய செய்திகளையும் தந்தால் நன்மைப் பயக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக வெளியிடுவோம் சிவனி

      Delete
முந்தைய பதிவு அடுத்த பதிவு