Trending

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்

 

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற  உத்தமர்தம் உறவு வேண்டும்

இராமலிங்க சுவாமிகளுக்கு அப்போது ஒன்பது வயது. ஒன்பதாவது வயதிலே தான் அவரை பள்ளிக்கு அனுப்பினார் அண்ணன் சபாபதி அவர்கள்.


தம்பி தமிழ் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் பெரும் வித்தகனாக வரவேண்டும் என்பது அவரது ஆசை.


மகாவித்துவான் காஞ்சிபுரம் சபாபதி முதலியாரிடம் இராமலிங்க சுவாமிகளை அண்ணன் சபாபதியார் அழைத்து சென்றார்.


"வா..வா… சபாபதி! பார்த்து ரொம்ப காலமாகுது.. நலந்தானே!"


"தில்லையம்பலந் திருவருளால் மிக்க சௌக்கியம் சுவாமிகளே"


"அப்பறம் என்ன சேதி?"


"தம்பி இராமலிங்கத்திற்கு கல்வி காலம் வந்தாயிற்று.. நீங்க இலக்கிய இலக்கணம் தெரிவிச்சா பையன் என் போல் ஒரு உரையாளனாகிடுவான்.. "


"சுபிட்ச்சமா சொல்லிடலாம்.. பையன் முகத்திலே அருள் தெரியுறது… நான் பாத்துகிறேன் சாபாபதி… நீ போய் வா"


"வந்தனம் சுவாமி! இந்த குரு தட்சணைய மட்டும் நீங்க மறுக்காம ஏத்துகனும்" என்று கூறிக்கொண்டே அண்ணன் சபாபதி வெற்றிலை பாக்கு வாழைப்பழத்தோடு இரண்டு ரூபாயையும் வைத்து ஒரு தட்டை நீட்டினார்.


குரு சபாபதி அவர்களும் அதை நன்றியுடன் பெற்றுக்கொண்டார்.


"சுவாமிகளிடம் இன்னொரு வேண்டுகோள்"


"சொல் சபாபதி.."


"தம்பிக்கு இதுவரை நான் ஏதும் சொல்லி கொடுத்ததில்லை.. வெளியுலக நடப்பே தெரியமா வளர்ந்த பிள்ளை.. பையன் எப்படி பாடம் படிக்கிறான் என்று பார்க்க ஆசை"


"அதற்கென்ன சபாபதி.. நன்றாக பார்" என்று கூறிய குரு சபாபதியார் மாணவர்களுக்கு வகுப்பை தொடங்கும்படி உத்தரவிட்டார்.


மாணவர்கள் அனைவரும் மெல்ல எழுந்து தங்களது தினசரி துதியை பாடத்தொடங்கினார்கள்


ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்

வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்

போகாத இடந்தனிலே போக வேண்டாம்

போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்

வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்

மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.


இராமலிங்கர் அமைதியாய் நின்றார்.


அதை கவனித்த குருக்கள் பேசத்தொடங்கினார், "இராமலிங்கம் இன்று தான் நீ இந்த கூடத்திற்கு வந்திருக்கிறாய் அதனால் துதி சொல்லாமல் இருப்பது பரவாயில்லை, நாளையிலிருந்து நீயும் துதியை பாடிய பின்னர் தான் நூலை வாசிக்க வேண்டும்.. சரியா?"


இராமலிங்கர் மீண்டும் அமைதியாகவே நின்றார்.


"என்ன இராமலிங்கம்? ஏன் இந்த அமைதி?"


"சுவாமிகளே.. இந்த துதியில் நாம் யாரை வணங்குகிறோம்?" இராமலிங்கர் கேட்டார்.


"மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே என்று அப்பன் முருகனைத்தான் வணங்குகிறோம் பிள்ளாய்"


"குருவே.. இறைவனை பற்றி பாடும் பாடலில் வேண்டாம்.. வேண்டாம்.. என்று முடிவது போல் எதிர் பத சொற்களை பயன்படுத்தலாமா?"


குரு சபாபதி ஒரு கணம் யோசித்தார்.


"சரி.. நீ வேண்டும் வேண்டும் என்று முடிவது போல்தான் ஒரு பாடலை செய்யேன்"


ஒன்பதே வயதான இராமலிங்கம் கொஞ்சம் கூட தாமதிக்காதவனாய் ஆசிரியர் சொன்ன மறுகணமே மடை திறந்த வெள்ளம் போல் பாடத்தொடங்கினான்.


ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற

உத்தமர்தம் உறவு வேண்டும்

உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்

உறவு கலவாமை வேண்டும்

பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை

பேசா திருக்க வேண்டும்

பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்

பிடியா திருக்க வேண்டும்

மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை

மறவா திருக்க வேண்டும்

மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற

வாழ்வுனான் வாழ வேண்டும்

தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்

தலமோங்கு கந்த வேளே

தண்முகத் துய்யமணி யுண்முகச்

சைவமணி

சண்முகத் தெய்வ மணியே

_________________________


இந்த கதை உண்மை தான் ஆனாலும் குறிப்பிட்ட வயது மற்றும் காலத்தால் முரண்பட்டது.


நான் இந்த கதையை இங்கு சொல்லக்காரணம் வள்ளலாரின் திருவருளோடு இந்த சீர்பாட்டிலொரு சிறு மாற்றத்தை கொண்டு வரவே.


வள்ளலார் தன் சிறுவயதிலே ஒரு பள்ளியின் துதிப்பாடலை மாற்றியவாறு நானும் இப்பாடலை ஆன்மீக எண்ணம் உள்ள எல்லோருக்குமானதாய் மாற்ற விரும்புகிறேன்.


"மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்" என்ற வரியினால் இப்பாடல் பெண்களுக்கு உபயோகமில்லாமல் போகிறது. 


"வாழ்வுனான் வாழ வேண்டும்" எனும் போது, தனக்காக மட்டுமே இறை பிரார்த்தனை செய்வது போலும் ஆகிறது. இப்பாடலை மதங்கள் கடந்த கூட்டு வழிபாட்டு பாடலாக்குவதே என் விருப்பம்.


அதோடு "தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர் தலமோங்கு கந்த வேளே தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி சண்முகத் தெய்வ மணியே" என்ற வரிகளால் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை பாடும் நிலையினையே எல்லோராலும் பெற முடிகிறது.


இதை மாற்றி மதங்கள் கடந்த ஆன்மீக அருளை பெறவும், எல்லா தெய்வ முன்னிலையிலும் இசையோடு பாடும் வண்ணம் ஒரு சிறு மாற்றத்தினை தந்திருக்கிறேன். பாடி பார்க்கவும்


ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற

உத்தமர்தம் உறவு வேண்டும்

உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்

உறவு கலவாமை வேண்டும்

பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை

பேசா திருக்க வேண்டும்

பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்

பிடியா திருக்க வேண்டும்

மருவு மெய்யாசையை மறக்கவே வேண்டும் உனை

மறவா திருக்க வேண்டும்

மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற

வாழ்வுனாம் வாழ வேண்டும்

உருவமிகு பெறுவினும் உள்ளகோட்டத்துள் வளர்

வளமோங்கும் தெய்வ தேனே

உன்னகத் துய்யவழி என்னகச் செய்யுமினி

தண்அகத் தெய்வ அணியே


ஈசதாசன்

👇 இன்றைய இதழை முழுமையாக படித்திடுங்கள் 👇
தென்றல் இதழ் 41

4 Comments

  1. வள்ளலார் இன்று இருந்தால் மாற்றத்துக்கு அனுமதி கொடுத்து இருப்பார்.என்ன இருந்தாலும் அவர் சின்ன பிள்ளையாக இருந்த போதுதானே எழுதினார். அதனால் அதிலும் குறைய காண முடியாது.

    ReplyDelete
  2. பாடலை முழுமையாக மாற்றி அமைக்காது. மூலப்பாட்டிற்க்கு தீது செய்யாமல் சில வரிகளை மாற்றியதே சிறப்பு.

    ReplyDelete
  3. "உன்னகத்துய்யவழி..
    என்னகச்செய்யுமினி..
    தண்ணகத்தெய்வ அணியே..!"

    நாடிநரம்புகளில் அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை ஆறாக குளமாக பெருக்கெடுத்த தொரு தமிழ்மாணவன் இயற்றிய வரி..

    தாசனின் சீடனாதலால் தீசனுக்கு இந்த மாதிரி வார்த்தைகள் வந்துவிழுகின்றன..

    ReplyDelete
  4. arutperunjodhi thanipperunkarunai

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு