மனித இனங்களை உள்ளபடி விளக்குகின்ற (Ethnological) காட்சிசாலை சமீப காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுமத்ரா இணைப்பு வளையத்தில் கிடைத்த மனித குரங்கின் பாதி எலும்புக்கூடு இங்கும் ஆராய்ச்சி செய்தால் கிடைக்கும் என்பது ஓரளவு நிச்சயம். கல்லால் ஆன நினைவு சின்னங்களும் இல்லாமல் போய்விடவில்லை. கற்கருவிகளை ஏறக்குறைய எங்கேயும் தோண்டி எடுக்கலாம். ஏரி கரையில் வாழ்ந்தவர்கள் குறைந்தபட்சம் நதிக்கரையில் வாழ்ந்தவர்களாவது ஒரு காலத்தில் ஏராளம் இருந்திருக்க வேண்டும் குகை மனிதர்களும் இலை தழைகளை உடுத்திக் கொண்டிருப்பவர்களும் இன்னும் இருக்கிறார்கள். காட்டில் வாழ்ந்து வேட்டையாடுகின்ற ஆதிவாசிகளும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றும் இருக்கிறார்கள்.
இவர்களைத் தவிர பல்வேறு சரித்திர கால இனங்களும் வாழ்கின்றன. நீக்ரோ கலப்புடைய கோலாரியர், திராவிடர், ஆரியர் இவர்களுடன் இதுவரையில் தெரிந்த இனத்தினர் எல்லோரும், இதுவரையில் நன்றாக அறியப்படாத இனத்தினர் பலரும் அவ்வப்போது மோதி கலக்கின்றனர். பலவித மங்கோலிய கலப்பினத்தினர் மங்கோலியர், தாத்தாரியர், ஆரியர் என்று மொழியியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்ற ஆரியர், பாரசீகர், கிரேக்கர், யுஞ்சி, ஹூணர், சின், சிதியர் போன்ற இனத்தினர் கூடிக் கலந்து ஒன்றாகிவிட்டனர். மற்றும் யூதர், பார்சி, அரேபியர், மங்கோலியர் முதல் இதுவரை எந்த இனத்தோடும் கலவாதிருக்கின்ற வைக்கிங்களின் சந்ததியினர் ஜெர்மனிய காட்டுத் தலைவர்களின் சந்ததியினர் ஆகிய இன அலைகள் கொந்தளித்தும் பொங்கியும் போராடியும் அடிக்கடி உருமாறியும் தலைதூக்கி ஓங்கியும் பரவியும் சிறிய இனங்களை விழுங்கியும் மீண்டும் வலியிழந்தும் நிற்கின்ற மனித கடல் இதுதான் - இந்திய வரலாறு.
இயற்கையின் வெறியாட்டத்திற்கு இடையே, தங்களுக்குள் போராடிக் கொண்டிருந்த இனங்களில் ஒன்று ஒரு வழியைக் கண்டுபிடித்தது அது தன் ஈடற்ற பண்பாட்டின் வலிமையால் இந்திய மக்களின் பெரும்பாலானோரைத் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது.
அந்த உயர்ந்த இனத்தினர் தம்மை ஆரியர்கள் அதாவது பிரபுக்கள் என வழங்கினர். இன்று சாதி என்று கூறப்படுகின்றதே அந்த வர்ணாசிரமம் அவர்கள் கண்டுபிடித்தது தான். தெரிந்தோ தெரியாமலோ ஆரியர்கள் தங்களுக்குப் பல சலுகைகளை ஏற்படுத்திக் கொண்டார்கள் என்பது உண்மைதான். ஆனாலும் அவர்களது ஜாதி முறை வளைந்து கொடுப்பதாகவே இருந்தது. சில வேளைகளில் தாழ்ந்த இனங்கள் மேலோங்கி வளர்கின்ற அளவுக்குக் கூட அது வளைந்தது.
செல்வத்தின் வழியிலோ வாழ்வின் வழியிலோ இல்லாமல் அறிவின் வழியில் அதாவது ஆன்மீகத்தால் தூய்மை செய்யப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட அறிவின் வழியில் இந்தியா போகுமாறு அந்த இனம் கொள்கை அளவிலேனும் வழி செய்தது. ஆரியர்களின் மிக உயர்ந்த ஜாதியான பிராமண ஜாதியே இந்தியாவில் முதல் ஜாதியாக இருக்கிறது.
ஆரியர்களின் சமுதாய முறை பிற நாட்டு முறைகளுக்கு மாறுபட்டது போல் தோன்றினாலும் கூர்ந்து கவனித்தால் இரண்டு அம்சங்களைத் தவிர மற்ற வகையில் மாறுபடாமல் இருப்பது புலப்படும்.
முதலில் மற்ற நாடுகள் ஒவ்வொன்றிலும் வாள் பிடிக்கும் சத்திரியர்களுக்கே முதல் மரியாதை. ரோமில் உள்ள போப் கூட தாம் ரைன் நதிக்கரை கொள்ளைக்காரன் ஒருவனின் வழி வந்தவர் என்று கூறிக் கொள்வதிலேயே பெருமை கொள்வார். ஆனால் இந்தியாவில் மிக உயர்ந்த மரியாதை அமைதியின் இருப்பிடமானவர்களுக்கு சாந்தமானவர்களுக்கு பிராமணர்களுக்கு இறை மனிதர்களுக்கு அளிக்கப்படுகிறது. பேரரசன் கூட தான் முற்காலத்தில் காட்டில் வாழ்ந்த ஒரு ரிஷியின் வம்சத்தில் தோன்றியவன் என்று கூறிக் கொள்வதில் பெருமை அடைவான். அந்த முனிவரோ தனக்கென்று எதுவும் இல்லாதவராக தம் அன்றாட தேவைகளுக்குக் கூட கிராம மக்களின் ஆதரவை நாடுபவராக இவ்வுலகம் மற்றும் மறுஉலக வாழ்வின் பிரச்சனைகளுக்கான விடைகளைக் கண்டுபிடிப்பதற்காகத் தம் வாழ்நாள் முழுவதும் முயன்று கொண்டிருப்பவர்.
இரண்டாவது அம்சம் அளவுகோலில் உள்ள வேறுபாடு. பிற நாடுகளில் சாதி நியதி தனிநபரையே அளவுகோலாகக் கருதுகிறது. செல்வம், அதிகாரம், அறிவு, அழகு இவை போதும் ஒருவர் பிறப்பின் மூலம் சமூகத்தில் தான் பெற்ற இடத்தை விட்டு எந்த மேல் நிலையையும் அடையலாம். இங்கே ஒரு சாதி சமூகத்தைச் சேர்ந்த அனைவருமே அளவுகோலாக இருக்கின்றனர். இங்கும் ஒருவன் தாழ்ந்த ஜாதியிலிருந்து அதைவிட உயர்ந்த ஜாதிக்கு அல்லது எல்லாவற்றிலும் உயர்ந்த ஜாதிக்கு உயரும் வாய்ப்பு இருக்கிறது. பிறர் நலம் கருதும் தன்மை பிறந்த இந்த நாட்டில் தான், தன்னைப்போலவே தன் ஜாதியில் உள்ள அனைவரையும் முன்னேறுமாறு ஒருவன் கட்டுப்படுத்தப்படுகிறான்
இந்தியாவில் உன் செல்வம், அதிகாரம் அல்லது வேறு எந்த தகுதியின் காரணத்தைக் கொண்டும் நீ உன் ஜாதியைப் பின்னால் விட்டுவிட்டு உயர்ந்த ஜாதியினரைப் போல் வாழ்ந்து விட முடியாது. இந்த செல்வத்தையும் அதிகாரத்தையும் மற்ற பலன்களையும் நீ பெறுவதற்கு உதவியாக இருந்தவர்களைப் புறக்கணித்துவிட்டு அவற்றிற்குப் பிரதியாக அவர்களுக்கு வெறுப்பை மட்டும் கொடுப்பது என்பது முடியாது. நீ உயர் சாதியினரைப் போல் வாழ விரும்பினால் முதலில் உன் சாதியினர் அனைவரையும் உயர்த்த வேண்டும். அதன் பிறகு முன்னேற்ற பாதையில் உன்னை எதுவும் தடுத்து நிறுத்தாது.
இந்தியாவின் சிந்தனைக்கு எட்டாத காலத்தில் இருந்து இந்த முறை நடந்து வருகிறது. ஆரியர்கள், திராவிடர்கள் என்ற சொற்கள் மற்ற எந்த நாட்டை விடவும் இந்தியாவில் தான் மொழியியல் பொருளில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. மண்டை ஓட்டின் அமைப்புகளைக் கொண்டு வேறுபாடு செய்வது சரியான ஆதாரம் இல்லாத முறையாகும்.
அவ்வாறே பிராமணர்கள், சத்திரியர்கள் போன்ற பெயர்களும் சமுதாயம் முன்னேற்றத்தின் சிகரத்தை அடைந்த பின் அந்த உயர்ந்த நிலையை காப்பாற்றிக் கொள்வதற்காகப் பிற ஜாதியினருடன் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்காக அது எல்லா வகையிலும் முயல்கிறது என்றாலும் தாழ்ந்த ஜாதிகளில் இருந்தோ அயல்நாட்டில் இருந்தோ வருகின்ற புதிய நெருக்கடியால் அது மாறிக் கொண்டே இருக்கிறது. அவ்வாறு மாறிக் கொண்டிருக்கின்ற சமுதாயத்தின் பல்வேறு நிலைகளே பிராமணர், சத்திரியர் போன்ற சொற்களால் உணர்த்தப்படுகின்றன.
வாளின் வளத்தைப் பெற்றிருப்பது சத்திரிய ஜாதி. அறிவு பலத்தைப் பெற்றிருப்பது பிராமண ஜாதி. பண பலத்தைப் பெற்றிருப்பது வைசிய ஜாதி ஆகிறது.
தங்கள் மாபெரும் இலட்சியத்தை அடைந்து விட்ட வகுப்புகள் புதிதாக வந்து சேர்ப்பவர்களுடன் கலக்காமல் ஒதுங்கி வாழ்கின்றன. இதற்காகத் தங்களுள் பல உட்பிரிவுகளை ஏற்படுத்திக் கொள்கின்றன. ஆனால் காலப்போக்கில் இவை எல்லாம் கலந்து ஒன்றாகி விடுகின்றன என்பது என்னவோ உண்மை. இது நம் கண் முன்னரே இந்தியா முழுவதிலும் நடந்து கொண்டிருக்கிறது.
முன்னேற்றம் அடைந்த ஒரு வகுப்பு சலுகைகளைத் தனக்கே உரியதாக வைத்துக் கொள்ள இயல்பாகவே முயலும். ஆகவே உயர் ஜாதியினர் குறிப்பாக பிராமணர்கள் அரசர்களின் உதவி பெறுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்போதெல்லாம் தாழ்ந்த வகுப்பினரின் அத்தகைய விருப்பத்தை நசுக்க முயல்கின்றனர். வாளைப் பயன்படுத்தக் கூட அவர்கள் தயங்குவதில்லை. ஆனால் அவர்கள் வெற்றி பெற்றார்களா என்பது தான் கேள்வி. உங்கள் புராணங்களையும் உப புராணங்களையும் குறிப்பாக, பெரியதான புராணங்களில் உள்ள காண்டங்களையும் கவனமாக ஆராய்ந்து பாருங்கள் நால்புறமும் என்ன நடக்கிறது என்று கவனியுங்கள். உங்கள் கண் முன் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் பாருங்கள். அப்போது அந்தக் கேள்விக்குரிய விடை கிடைக்கும். நம்மிடையே பல ஜாதிகள் இருந்தாலும் ஒரு ஜாதியின் உட்பிரிவுகளுக்குள் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டிய தற்கால திருமண முறை இருந்தாலும் இது எங்கும் பரவி இருக்கும் முறை அல்ல. நாம் உண்மையில் ஒரு கலப்பு ஜாதியினரே.
ஆரியர் தமிழர் என்ற சொற்களுக்கு மொழியியலின்படி என்ன பொருள் இருந்தாலும் இந்திய மக்களின் உட்பிரிவுகளில் உயர்ந்தவையான இந்த இரண்டும் வெளிநாட்டிலிருந்து மேற்கு எல்லை வழியாக வந்து சேர்ந்தவை என்பதை ஒப்புக்கொண்டாலும் பழங்காலத்திலிருந்து இந்த இரண்டையும் வேறுபடுத்துவது ரத்த வேற்றுமை அல்ல மொழி வேற்றுமையே. வேதங்களில் தஸ்யுக்களின் அழகற்ற உடல் அமைப்பைப் பழிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்ற அடைமொழிகளில் ஒன்று கூட பெருமை வாய்ந்த தமிழ் இனத்திற்குப் பொருந்தவில்லை. ஆரியர், தமிழர் இருவரிலும் அழகிய தோற்றம் யாருடையது என்று ஒரு போட்டி ஏற்படுமானால் அறிவுள்ள எந்த மனிதனும் தன் முடிவைக் கூற முன்வர மாட்டான்.
பிறப்பிலேயே சிறப்பு வாய்ந்தவர்கள் என்று எந்த ஜாதியினர் பெருமை அடித்துக் கொண்டாலும் அது வெறும் கற்பனை. மொழி வேறுபாடுகளின் காரணமாக கர்வம் தென்னிந்தியாவைப்போல் வேறு எந்த பகுதியிலும் இல்லை என்பதை வருத்தத்துடன் கூற வேண்டி இருக்கிறது.
இன்றைய பிராமணர் போன்ற பல்வேறு ஜாதியினர் எவ்வாறு தோன்றினார்கள் என்பதை ஆராயாமல் விட்டது போலவே தென்னிந்தியாவில் நிலவுகின்ற இந்த சமூக கொடுமைகளைப் பற்றி எல்லாம் வேண்டுமென்றே நான் எதுவும் கூறவில்லை. சென்னை மாகாணத்தின் பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாதவர்களுக்கு இடையே தீவிரமாய் வேற்றுமை உணர்ச்சி உள்ளதை இங்கு குறிப்பிடுவது மட்டும் நமக்குப் போதும்.
கடவுள் மனிதனுக்குக் கொடுத்தருளிய மிகப்பெரிய சமுதாய அமைப்புகளில் இந்தியாவின் ஜாதிமுறையும் ஒன்று என்று நாம் நம்புகிறோம். தவிர்க்க முடியாத குறைபாடுகளும் அன்னியர் செய்த கொடுமைகளும் இவற்றிற்கு மேலாக பிராமணர் என்ற பெயருக்கு எந்த தகுதியும் இல்லாத பல பிராமணர்களின் மலை போன்ற அறியாமையும் ஆணவமும் சேர்ந்து அற்புதமான இந்த ஜாதி முறையை, உரிய பலன் அளிப்பதற்கு வேண்டிய நியாயமான வளர்ச்சியைப் பல்வேறு வழிகளில் தடை செய்கிறது. அந்த அமைப்பு (ஜாதி) பாரத நாட்டில் ஏற்கனவே அற்புதங்களை விளைவித்துள்ளது. இனியும் இந்திய சமுதாயத்தை அதன் குறிக்கோளுக்குக் கொண்டு செல்லவே செய்யும்.
தூய்மையை ஒத்த தூய்மையான கடவுளைப் போல் நல்லவர்களான பிராமணர்கள் நிறைந்த ஓர் உலகத்தைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற இந்தியாவின் குறிக்கோளைத் தென்னிந்திய பிராமணர்கள் மறந்துவிடக்கூடாது என்று அவர்களை வேண்டிக் கொள்கிறோம் இத்தகைய உலகம் ஆரம்பத்தில் இருந்தது என்று மகாபாரதம் கூறுகிறது எனவே அத்தகைய உலகம் இறுதியிலும் இருக்கும்.
பிராமணன் என்று உரிமை கொண்டாடுகின்ற யாரும் முதலில் அந்த ஆன்மீகத்தைத் தன்னிடம் வெளிப்படுத்துவதன் மூலமும் பிறகு பிறரை அந்த நிலைக்கு உயர்த்துவதன் மூலமும் அதை நிரூபிக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டால் அவர்களுள் பலர் வீண் பெருமை அடிப்பதும் புலனாகும். இந்த வீண் பெருமை பிறப்பிலேயே கூட பிறந்த சோம்பேறித்தனம் இவற்றை வெறுப்பூட்டும் விதண்டாவாதத்தினால் நம் நாட்டு, வெளிநாட்டு அறிஞர்கள் யாரானாலும் சரி ஏற்றுக்கொண்டு தலையாட்டினார்களானால், அவர்கள்தான் இந்த பிராமணர்களால் பெரிதும் விரும்பப்படுவார்கள்.
பிராமணர்களே! இது மரணத்தின் அறிகுறி, எச்சரிக்கை! எழுந்திருங்கள்! உங்களைச் சுற்றியுள்ள பிராமணர் அல்லாதவர்களை உயர்த்துவதன் மூலம் உங்கள் மனித தன்மையைக் காட்டுங்கள். உங்கள் பிராமணத்தன்மையைக் காட்டுங்கள். நீங்கள் தலைவர்கள் என்ற முறையில் அல்ல. மூடக்கொள்கை, கீழை மேலைநாட்டு ஏமாற்றுத் தன்மைகள் என்ற புழுக்கள் நிற்கின்ற இறுமாப்பு என்ற அழகிய புண்ணுடன் அல்ல. பணியாளன் என்ற உணர்வுடன் இதைச் செய்யுங்கள். ஏனெனில் வேலை செய்ய தெரிந்தவனுக்கே ஆளத் தெரியும்.
பிராமணர் அல்லாதவர்களும் ஜாதிப்பகை என்னும் நெருப்பைக் கிளறி விடுவதில் தங்கள் ஆற்றலைச் செலவிட்டு வருகிறார்கள்.
பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் இது எந்த விதத்திலும் பயன்படாது. இதில் இந்த சாதிப்பகை என்னும் நெருப்பில் நெய்யை விடுவதற்கு இந்து அல்லாத ஒவ்வொருவனும் ஆர்வத்துடன் காத்திருக்கிறான்.
இத்தகைய ஜாதி சண்டைகளால் ஓரடி கூட முன்னால் எடுத்து வைக்க முடியாது. ஒரு தடையைக் கூட நீக்க முடியாது. இந்த ஜாதி பகை என்னும் தீ கொழுந்து விட்டு எறிய தொடங்கினால், முன்னேற்றங்கள் அனைத்தும் தடைப்படும் அந்தத் தடை பல நூற்றாண்டுகள் கூட நீடிக்கலாம்.
அது புத்த மதத்தினர் அரசியலில் செய்த முட்டாள்தனங்களை மீண்டும் செய்வது போல் ஆகிவிடும்.
முட்டாள்தனமாக இந்த ஆரவாரங்களுக்கும் வெறுப்புகளுக்கும் இடையில் பண்டிதர் டி. சவுரிராயன் ஒரு நியாயமான அறிவுள்ள பாதையைக் கடைப்பிடித்து வருவது மகிழ்ச்சி தருகிறது. அருமையான ஆற்றலை, அறிவற்ற பொருளற்ற சச்சரவுகளில் வீணாக்குவதற்குப் பதிலாக மேலைநாட்டு மொழியியல் வேகத்தால் ஏற்பட்டுள்ள குழப்பத்தை விளக்குவதற்கும் தென்னிந்தியாவில் உள்ள ஜாதி பிரச்சனையை மிகவும் நல்ல முறையில் அறிவதற்கும் ‘சித்தாந்த தீபிகை’ என்னும் பத்திரிக்கையில் தமிழருடன் ஆரியர் கலப்பு என்னும் தலைப்பில் கட்டுரைகள் எழுதி அதன் மூலம் அவர் முயன்று வருகிறார்.
பிச்சை எடுப்பதால் யாரும் எதையும் பெற்றதில்லை. நமது தகுதிக்கு உரியதை மட்டுமே நாம் பெறுகிறோம். தகுதி பெறுவதற்கு முதற்படியாக இருப்பது விருப்பம். தகுதியால் நமக்கு உரியது என்று நமக்கு நாமே உணர்வதை தான் நாம் விரும்ப வேண்டும். அந்த விருப்பம் தான் வெற்றியாக முடிகிறது. ஆகவே ஆரியர்களைப் பற்றி கூறப்படுகின்ற கொள்கையில் உள்ள குறைபாடுகளையும் அந்தக் கொள்கையால் விளைந்துள்ள தீமைகளையும் அமைதியோடு அறவே நீக்க வேண்டியது அவசியம்.
குறிப்பாகத் தென்னிந்தியாவின் நன்மைக்கு மிகவும் அவசியம். ஆரிய இனமே தோன்றுவதற்கு காரணமான மிகச்சிறந்த தாய் இனங்களாக விளங்கியவற்றுள் ஒன்று தமிழினம். அத்தகைய புகழ்படைத்த தமிழர்களின் பழம் பெருமையை அறிவதால் விளைகின்ற நியாயமான நன்மதிப்பை ஏற்படுத்த வேண்டுவது மிகவும் அவசியமாகிறது.
ஆரியர் என்ற சொல்லைப் பற்றி மேல்நாட்டு கொள்கைகள் எப்படி கூறினாலும் நமது சாஸ்திரங்களில் காணப்படுகின்ற விளக்கத்தை நாம் உறுதியாகப் பற்றி கொண்டிருக்கின்றோம். அதாவது இந்து என்று இப்போது நாம் குறிப்பிடுகின்ற அனைவரையுமே ஆரியர் என்ற சொல் குறிப்பிடுகிறது. வடமொழி பேசும் இனம், தமிழ் பேசும் இனம் என்ற இந்த இரண்டு இனங்களால் ஆன கலப்பினமே ஆரிய இனம். இந்துக்கள் அனைவரும் வேறுபாடற்ற ஆரிய இனத்தினரே.
சூத்திரர்கள் ஆரியர் அல்ல என்று சில ஸ்மிருதிகள் கூறுவது அபத்தம். ஏனெனில் அன்றும் சரி இன்றும் சரி சூத்திரர் என்பவர்கள் ஆரியர் ஆவதற்காகக் காத்து நிற்பவர்கள். ஆரியர் ஆவதற்கு பயிற்சி பெற்றுக் கொண்டிருப்பவர்கள். பண்டிதர் சவுரிராயன் ஈடுபட்டிருப்பது சிரமமான பணி. அத்துடன் வேதங்களில் உள்ள பெயர்கள் மற்றும் இனங்களைப் பற்றி அவர் சாதாரணமாகக் கூறி செல்கின்ற பல விளக்கங்களை நாம் ஒப்புக்கொள்ளவில்லை. இருந்தாலும் இந்திய நாகரீகத்தின் தந்தை வடமொழிப் பேசும் இனம் என்றால் அதன் தாயாகிய தமிழினத்தின் கலாச்சாரத்தைச் சரியானபடி ஆராய்ந்து அறிவதற்கான ஆரம்ப வேளையை அவர் மேற்கொண்டு இருப்பதற்காக நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்.
ஆதிகாலத்து தமிழர்கள் தான் அக்காடோ சுமேரிய இனத்தைச் சார்ந்தவர்கள் என்ற கொள்கையை அவர் தைரியமாக முன்னணிக்குக் கொண்டு வருவதும் மிகுந்த மகிழ்ச்சிக்கு உரியது. எல்லா நாகரீகங்களுக்கும் முன்னோடியாக விளங்கிய பெரிய நாகரீகத்தின் ரத்தம் நம் உடலில் ஓடிக்கொண்டிருப்பதற்கு நாம் பெருமிதம் கொள்கிறோம். அந்த தமிழர்களின் தொன்மையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ஆரியர்களும் செமிட்டிக்குகளும் வெறும் குழந்தைகளே.
எகிப்தியர் குறிப்பிடுகின்ற பண்ட் நிலம் நமது மலபார் நாடு தான். அது மட்டுமல்ல எகிப்தியர்கள் முற்றிலுமாக மலையாள நாட்டைவிட்டு வெளியேறி கடல் கடந்து சென்று நைல் நதியின் முகத்துவாரம் வழியாக வடக்கிலிருந்து தெற்கே சென்று குடியேறினர்; அவர்கள் தங்கள் பண்டைய இடத்தை, பாக்கியவான்களின் நாடு என்று கருதினார்கள் என்பதை நாம் குறிப்பிட விரும்புகிறோம்.
இந்த முயற்சி சரியான வழியிலேயே செல்கிறது. தமிழர்களின் மொழிகளையும் சமஸ்கிருத இலக்கிய தத்துவ மத நூல்களில் காணும் தமிழ் அம்சங்களையும் இன்னும் நன்றாக ஆராய்வதான விளக்கமான பொறுப்புமிக்க வேலைகள் தொடரும் என்பது நிச்சயம். தமிழ் மரபு சொற்களைத் தாய் மொழியாகப் பயில்பவர்களை விட வேறு யார் இந்தப் பணிக்குத் தகுதியானவர்கள்?
வேதாந்திகளாக, துறவிகளாக இருக்கும் நாங்கள் சமஸ்கிருதம் பேசிய வேதகால முன்னோர்களைப் பற்றி பெருமிதம் கொள்கிறோம். அறிந்த நாகரீகங்களில் மிகப் பழமையான நாகரீகத்தினரான தமிழ் பேசிவந்த முன்னோர்களைப் பற்றி பெருமைப்படுகிறோம். இவ்விரு இனங்களை விட மிகப் பழமையான காட்டில் வாழ்ந்து வேட்டையாடி திரிந்த நம் கோலாரிய முன்னோர்களைப் பற்றி பெருமைப்படுகிறோம். முதலில் தோன்றிய மனிதர்களும் கற்கருவிகளைப் பயன்படுத்தியவர்களுமான முன்னோர்களைப் பற்றி பெருமைப்படுகிறோம். பரிணாமவாதம் உண்மை என்றால், நமது மிருக முன்னோர்களைப் பற்றியும் பெருமைப்படுகிறோம். ஏனெனில் அவர்களே மனிதனை விட காலத்தால் முந்தியவர்கள். உணர்வுள்ள உணர்வற்ற பொருட்களால் ஆன பிரபஞ்சம் முழுவதற்கும் ஆதி புருஷர்களாக இருப்பதற்கு நாம் பெருமைப்படுகின்றோம். பிறந்து, வேலை செய்து துன்பப்படுவதற்காகப் பெருமைப்படுகின்றோம். வேலை முடிந்தபின் இறப்பதற்கும், மன மயக்கமே இல்லாத உலகத்தை அடைந்து அங்கு நிலையாகவே இருக்கப் போவதற்கும் அதைவிட அதிகமாகப் பெருமைப்படுகிறோம்.
விவேகானந்தர்

சித்தாந்த தீபிகை கட்டுரைகளை தென்றல் இதழ் வெளியிட்டால் நலம் பல பயக்கும்
பதிலளிநீக்குவிவேகானந்தர் மீது நல்லெண்ணம் நம்மவர்கள் பலருக்கு உண்டு. வருணாசிரமத்தைப் பற்றியும் இந்துமதம் பற்றியும் அவர் கொண்டிருந்த கருத்துகள் பெரிதாக நமக்குக் காட்டப்படவில்லை. அவரின் எழுச்சியூட்டும் சில வார்த்தைகளை மேலோட்டமாகக் காட்டுவதன்மூலம் இவற்றை மறைத்திருக்கிறார்கள். சாதி இருப்பு மக்களை ஒன்றிணைப்பதற்கே எனும் வித்தியாசமான தருக்கத்தை இந்தக் கட்டுரையில் அவர் சொல்லியிருக்கிறார். அதாவது இந்தியாவில் சாதி இருப்பதால்தான் நமக்குத் தனிநபர் முன்னேற்றம் என்றவொன்றே இல்லை என்றுகூறி அதற்குப் பெருமையும் பட்டுக்கொள்கிறார். எனில் பார்ப்பனர்கள் முன்னேறி இருக்கிறார்களே? என்ற கேள்வியை முன்வைத்தால் அவரிடம் பதிலிருக்காது. அதற்கு எதிராகப் போராடிய பிராமணரல்லாதார் இயக்கத்தை அறியாமையால் தோன்றிய இயக்கமாகத்தான் இதில் குறிப்பிடுகிறார். மொழியியல் வெறுப்பு வேறு. இத்தனை அறிவு வறுமைதானா இந்தியத் தத்துவத்தின் அடையாளமாய் ஒளிர்ந்தது...?
பதிலளிநீக்கு