
ராஜ் கௌதமன், சேரர் மனைவியர் வாழ்த்தும்; சேரர் – விறலியர் உறவும், பதிற்றுப்பத்து – ஐங்குறுநூறு: சில அவதானிப்புகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2018.
ஆய்வுச்சுருக்கம்
புறநானூற்றுப் பாடாண் திணை பாடல்களில் வேந்தரின் தேவியரைப் பாடும் மரபு காணப்படவில்லை ஆனால் பதிற்றுப்பத்தில் சேரவேந்தரைப் பாடும்போது அவர்தம் தேவியரைப் பாடும் மரபு காணப்படுகிறது. இதே வாய்பாடு விறலியரைக் காட்சிப்படுத்தும் போக்கிலும் வெளிப்படுகின்றது. பரத்தைமை எனும் நிறுவனம் விறலி எனும் குழுக்களிலிருந்தே சமூக நடைமுறையாக்கம் செய்ப்பட்டிருக்கிறது. இதற்கு மன்னர்களின் காமக்கிழத்திகளாக விறலிகள் இருந்தது ஒரு காரணமாகலாம்.
ஆய்வுக் கருதுகோள்
சங்க காலத்தில் பரத்தைமை என்ற பாலியல் வணிகநிறுவனத்தின் தோற்றத்தைப் பாணர் மரபைச் சேர்ந்த விறலியரிடமிருந்து தொடங்குவதற்கான ஒருசில தடயங்களைப் பதிற்றுப்பத்தில் காணமுடிகின்றது.
ஆய்வு அணுகுமுறை
இவ்வாய்வு சமூகவியல், விளக்கமுறை மற்றும் பகுப்பாய்வு முறைகளை உள்ளடக்கி செய்யப்பட்டுள்ளது.
உள்ளடக்கம்
- பதிற்றுப்பத்துப் பாடல்களில் சேரமாதேவியரைப் பற்றிய புகழ்ச்சிகள் காணப்படுகின்றன. சேரவேந்தருக்கும் அவர்தம் தேவியருக்கும் இடையே நிலவிய உறவு தாய்வழிச் சமூக உறவின் பாற்பட்டது.
- பதிற்றுப்பத்துப் பாடல்களில் அவர்தம் தேவியர் புகழப்பட்டதை ஒப்ப சோழ பாண்டியர் பற்றிய பாடல்களில் அவர்களுடைய தேவியர் தனிப்படப் போற்றப்படவில்லை.
- பெண்ணின் ஒழுக்கத்தையும் உறுப்பு நலன்களையும் புலவர் மரபு பாடியதற்கு இத்தகைய பெண்ணை மனைவியாக அடைந்துள்ள வேந்தனின் பெருமையைப் போற்றுதற்கெனதெ் தெரிகிறது.
- படைகள், மதில்கள், துறைமுகப் பட்டினங்கள், மலைகள், கடல், வெற்றி ஆகியவற்றை உடையவனாகச் சேரனைப் பாடியபோது, அழகும் கற்புத் உடைய மனைவியையும் உடையன் என்றார்கள்.
- தேவியர் அருந்ததியோடு தொடர்புபடுத்தப்பட்டமை தெரிகிறது. விண்ணில் தெரிந்த மீன் கூட்டங்களோடு மண்ணக மாந்தர் இயையு படுத்தப்பட்டமை தெரிகிறது.
- பெண்ணின் உடல் உறுப்பையும், அவளது தெய்வீகக் கற்பையும் இணைத்துப் பாடுவது ஒரு வாய்பாடுபோல புலவர் மரபில் உள்ளது.
- சேரவேந்தர் மரபில் குடும்ப உறவில் தாய்வழிச்சமூக எச்சம் மறையாதிருந்ததற்கும் இதற்கும் தொடர்பு இருக்கலாம்.
- சேரவேந்தர் சிலர் இசை, கூத்து கலைகளில் தேர்ந்த விறலியரோடு காமம் நுகர்ந்ததாக ஒருசில குறிப்புகள் கிடைக்கின்றன. பரத்தைமை விறலியரிடம் இருந்து தொடங்குவதை இதிலிருந்து அனுமானிக்கலாம்.
- கொண்டி மகளிர், ஆளும் வர்க்கத்து ஆடவரின் காமக்கிழத்திகளாக வாழ்ந்து முடிவில் நகர்ப்புறப் பரத்தையராக ஆனர்கள் எனத் தெரிகின்றது.
- வேந்தர் கால வர்க்கச் சமூகவாழ்வில் பாடினி, விறலி, ஆடுமகள் முதலியோர் ஆளும் வர்க்கத்து ஆடவரைக் காமத்தால் இன்புறுத்தினார்கள் என்பதில் வரலாற்றுண்மை இல்லாமல் இருக்காது.
- இரவலர்களாக வாழ நிர்பந்திக்கப்பட்ட தொன்மையான – குழுச்சமூகங்களுக்கு உரிய பாணர் மரபினரின் விறலியரோடு வேந்தர், வேளிர் முதலியோர் பாலியல் உறவு கொண்டார்கள் என்பதைத் தகுந்த ஆதாரங்களோடு நிறுவமுடியவில்லை.
- பிற்காலத்தில் 1008 பொற்கழஞ்சு கொடுத்து வாங்கிய கோவலன் விடுதல் அறியா விரும்பினன் ஆகியதைக் கொண்டு சமூக இயக்கத்தை ஊகம் செய்யலாம்.
மதிப்பீடு
பரத்தைமை எனும் பாலியல் வணிக நிறுவன தோற்றத்தின் முன்மரபாக விறலி எனும் சமூக வடிவம் இயங்குவதாக ராஜ்கௌதமன் கூறுகிறார். பொதுவாக வணிக நிறுவனங்கள் அரசு எந்திரத்தோடு நேரடியாக இணக்கம் கொண்டது ஆனால் தலைவனின் பரத்தையிற்பிரிவு எனும் உறவியல் அமைப்பு குடும்ப அமைப்பிற்கு அச்சுறுத்தலாகவும் அரசு எந்திரத்திற்கு மட்டும் எதிராகவும் சமூக கருத்துருவ எந்திரங்களோடு இணங்கியும் இருப்பதால் இது வணிக நிறுவனம் ஆகாது. சங்க பனுவல்களிலும் பரத்தை வணிக நிறுவனமாக இயக்கம் கொண்டதாகக் குறிப்பிடப்படவில்லை. வணிக நிறுவனம் அரசு எந்திரத்தின் நேரடி தலையீடு கொண்டது. கருத்துருவ எந்திரங்கள் நேரடியான அரசு தலையீடு இல்லாதது. சங்க இலக்கியங்களில் பெண்களின் உறுப்புகள் குறிப்பாக தோள்கள், முலைகள், அல்குல், அடி, விரல் முதலியவை இயற்கையோடு உருகப்படுத்தியும் தன்னிச்சையாகவும் காட்டப்பெறும். இதேபோல பதிற்றுப்பத்தில் சேரமன்னர் மனைவிமாரின் முலைகள், அல்குல் முதலியவையும் காட்சிப்படுத்தப்படுகிறது. இதேபோல விறலியினரைக் காட்சிப்படுத்தலும் ஒன்றுகின்றது. சிறுபாணாற்றுப்படையிலும் பொருநராற்றுப்படையிலும் விறலியரைப் பாதம் முதல் மயிர்வரைப் பாடும்மரபும் இருந்திருக்கிறது. பொதுவாகவே புலவர் மரபு பெண்ணைக் காட்சிப்படுத்த அவர்களின் உடல் உறுப்புகளின் வழியாகவே அவர்களுக்குள் செல்கிறது. ஆண்கள் இவ்வாறு குறிப்பிடப்படாமை நமக்கு இதை ஆணாதிக்கப்பிரதியாகவும் விளக்கும் வாய்ப்பைத் தருகிறது. இத்தகைய செய்திகளை அணுகுவதில் விக்டோரியன் காலத்தாக்கமும் உடன் இயங்குவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ராஜ்கௌதமன் இக்கட்டுரையில் இதனைக் கவனத்திற் கொள்ளவில்லை. “பாசறையில் சேரன் இருந்தபோது அவனது நாள்மகிழிருக்கையில் முழவின் தாளத்திற்கு இயையுமாறு கையசைத்து அவனது வேலின் பெருமையைப் பாடினி பாடினாள். மற்றவிதச் சேவையை ஊகித்துக் கொள்ளலாம்” என்று அவர் கூறியிருப்பதில் விக்டோரிய காலத்து பாலியலெண்ணப் பெருக்கம் வெளிப்படுகின்றது. விறலி பரத்தை மரபை ஒத்ததாக இருப்பது கருதுகோளுக்குத் துணை செய்தாலும் தரவுகளின் அடிப்படையில் அது நிறுவப்படவில்லை.