ஆய்வுச்சுருக்கம்
பின்னமைப்பியல், பிரதியின் மையத்தைக் கலைத்துப் பொருள்கொள்ளும் வாசிப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறது. வள்ளுவரது காலம் அல்லது அதற்குப் பின்னைய காலம் சமயம்சார் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்திருப்பதனால் திருக்குறளும் சமயவழிப்பட்ட நம்பிக்கைகளின் பகுதியாகவே இயங்கியிருக்க முடியும் எனும் கருதுகோளுடன் இவ்வாய்வு அமைகின்றது. பின்னமைப்பியல் ஆய்வு முறையில் படைப்பின் அர்த்தம் தற்காலிகமானது என்று கொள்ளப்படுவதால் திருக்குறளின் கடவுள் கருத்தாக்கம் நெகிழ்வுத்தன்மையோடு வாசிக்கப்படுதலை இக்கட்டுரை சுட்டிக்காட்ட முயல்கிறது.
உள்ளடக்கம்
- படைப்பின் அர்த்தத்தை வாசகர் உருவாக்க முடியும் என்பதற்கும் முழுமையான அர்த்தம் என்பது எப்போதும் உருவாகாது என்பதற்கும் இடையே உள்ள வளர்ச்சிநிலை அறிமுகமாகத் தரப்படுகிறது.
- திருக்குறளின் காலவெளி, முதல் அதிகார அமைப்பு முதலியவை ஆணைக் கடவுளாகக் கொள்கிறது. (அதில் நெகிழ்வு இல்லை)
- விடுதலை அடைந்த மனிதர்கள் விடுதலை அடைய விரும்பும் மனிதர்களுக்கு வினைத்தளைகளிலிருந்து விடுபட வழிக்காட்டுவதாய் முதல் அதிகாரம் உள்ளது.
- சரணடைதல் முழுமுதற் கடவுளைக் கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு உரியது.
- இல்லறவியல் ஆசிரம தர்மத்தைக் காட்டுகிறது இதனால் திருக்குறள் மனுதர்மத்தோடு நெருங்கியது.
- விசிட்டாவைதத்தின் பிரம்மபரிணாமவாதம் ‘அகர முதல’ குறட்பாவில் வெளிப்படுகிறது.
- நீலகேசி ‘இதுயெம் ஒத்து ஆதலின்’ என்று திருக்குறளைச் சுட்டுகிறது.
- சமணர் உமாஸ்பதி எழுதிய தத்துவார்த்த சூத்திரம் (கி.பி. 1) அடிக்கருத்தியலாகவே முதல் அதிகாரத்தோடு ஒன்றுகிறது.
- மணிமேகலை ‘ஆதிமுதல்வன்’ என்று கூறுவதும் ஆதிபகவனும் ஒன்றுகிறது.
- புத்தரை பகவன் என்று குறிக்கும் வழக்கு உண்டு.
- ஆசீவகத்தின் ஊழ் திருக்குறளில் பேசப்படுகிறது.
- கிறிஸ்தவ இஸ்லாம் மதத்திற்கும் ஒத்த கருத்துகளைத் திருக்குறள் கொண்டுள்ளது.
- ஆதிபகவனைச் சூரியனாகக் கொண்டால் பொருள்முதல்வாதத்திற்கும் பொருந்தும்.
- வள்ளுவர் எத்தகைய சமய நம்பிக்கை உடையவர் என்பதை அறிய முடியவில்லை என்று முடிவுரை தரப்படுகிறது.
மதிப்பீடு
கோட்பாட்டுச் சிக்கல்
ஆய்வுக்கட்டுரை பின்னமைப்பியல் கோட்பாட்டைத் தெளிவில்லாத நிலையில்/ குழப்பத்தோடு பயன்படுத்தியிருக்கிறது. ஆசிரியரின் தேக்கநிலையை, நூலின் பொருள் தேக்கநிலையை பின்னமைப்பியல் கடுமையாக எதிர்க்கிறது. இதனால் பின்னமைப்பியல் பனுவலுக்கு உள்ளாக இருக்கும் முரண்களுக்கு முதன்மைத் தருகிறது. ஆனால் இக்கட்டுரை அகச்சான்றுகளைக் கொண்டு நூலின் மையத்தைத் தகர்க்க முனையவில்லை. அதற்கு மாற்றாகப் புறச்சான்றுகளைப் பயன்படுத்துகிறது. ஆசிரியரை முதன்மை செய்யாத கோட்பாட்டைக் கருவியாகக் கொண்டு ஆசிரியரின் சமய நிலைப்பாட்டைக் கண்டறிய இயலவில்லை எனும் முடிவைத் தருகிறது. கருதுகோளுக்கும் முடிவுரைக்கும் பொருத்தப்பாடில்லை.
தரவுச் சிக்கல்
இந்தியாவில் சமண பௌத்தத்திற்கு முன்பாக இந்துமதம் இருக்கிறது எனும் தரவு தவறானது. சிறுதெய்வங்களை இக்கட்டுரை இந்துமதத்தின் பகுதியாகப் பார்க்கிறது. மனு தர்மத்தில் கூறப்பட்டுள்ள பக்திமார்க்கமும் பரபக்தி மார்க்கமும் திருக்குறளில் கடவுள் வாழ்த்தாகத் தரப்பட்டுள்ளது என்கிறது இக்கட்டுரை. ஆனால் பக்தி மார்க்கம் வேதாந்த மரபிற்கு எதிரான பூர்வ பழங்குடி மரபாகும். யோகம், பக்தி, தாந்ரீகம் முதலானவை பின் வேதமரபில் சேர்க்கப்பட்டன. கி.பி. 6ல் உருவான இஸ்லாம் மதத்தை அதற்கு முன் தோன்றிய திருக்குறளின் மெய்யியலோடு பொருத்த முயல்கிறது. பொருள்முதல் வாதத்தை ஒரு சிந்தனையாகக் கொள்ளாமல் மதம் என்ற வகையில் அணுகியிருக்கிறது. திருக்குறளில் கடவுள் பற்றிய கருத்து நெகிழ்வுத்தன்மையுடன் இருப்பதாகவும் அதைப் பல்வேறு மையங்களாகவும் மாற்ற முயலும் இக்கட்டுரை அதை நிறுவத்துணியும் தருக்க நியாயத் தெளிவில்லாமல் உள்ளது.
இறுதியாக
திருக்குறள் வாசிப்புநிலையில், நிலையில்லாத பொருட்தளத்தைக் கொண்டிருக்கிறது எனும் பார்வையைப் பின்னமைப்பியல் சிந்தனை தருகிறது. அது தனக்குள்ளாகவே கொண்டிருக்கும் அர்த்தமுரண்கள் ஆசிரியரைத் தேங்கவிடாமல் செய்யும் இயல்பைக் கொண்டிருக்கிறது. ஆனால் இக்கட்டுரை நூலின் மையத்தைக் கட்டவிழ்க்காமல் பல்வேறு மையங்களை உறுதிசெய்யத் துணிந்ததுடன் ஆசிரியரின் சமயத்தேடலைச் செய்யும் தலைப்பிற்கே எதிரான கோட்பாட்டு முரணையும் கொண்டிருக்கிறது.
