.jpg)
ஆய்வுச்சுருக்கம்
இக்கட்டுரை சங்க இலக்கியத்தில் பயின்றுவரும் புலையர், இழிசினர், இழிபிறப்பாளர் எனும் சொற்களின் பயன்பாட்டு எல்லையை ஆராய்கின்றது. இனக்குழு சமுகத்தில் மேல் கீழ் என்று பாகுபாட்டைப் பெறாத சமூகம் உடைமை காலகட்டத்தில் தொழிலடிப்படையில் பிரிந்தது எனும் சமூகவியல் ஆய்வுக் கருதுகோளுடன் பாணன், பறையன், துடியன், கடம்பன் முதலியோரை இவ்வாய்வு ஒப்பிட்டாய்கிறது. அதன்வழி புலையர், இழிசினர், இழிபிறப்பாளர் எனும் சமூக கருத்தாக்கம் உடல்மேல் ஏற்றப்படும் சமூகவியல் காரணத்தை அடைய முயல்கிறது.
உள்ளடக்கம்
- ‘புல்’ எனும் சொல் யாராலும் விரும்பப்படாத எனும் பொருளில் வழங்கியுள்ளது. (புறம். 106) அறநடத்தையின் எதிர்மறையைச் சுட்டிய இச்சொல் தொழில் நடத்தையின் எதிர்மறையைக் குறிக்க பரிணமித்துள்ளது.
- பழம் புகழ்மரபைக் கைவிடாத மன்னர்களை உற்பத்தி உறவு மாறிய சமூகத்தில் தேடி அலைந்து கண்டறிந்து பரிசு பெற்றனர் பாணர்கள். துடியனைப் புலையன், இழிசினன், இழிபிறப்பாளன் என்று கூறுவதுபோல பாணரைக் கூறவில்லை.
- இனக்குழு சமூக அழிப்பின் எச்சமாக, சடங்கியல் பாத்திரமாகப் பாணர் மரபு உள்ளது. இனக்குழு சமூத்தில் இருந்து உடைமை சமூகத்திற்கு ஏற்றாற்போல தகவமைத்துக் கொண்ட துடியர் மரபு ஆள்வினை செயல்பாடுகளில் ஏவல் செய்யும் பிரிவாக மாற்றங்கொண்டது. அதில் தொன்றுதொட்ட சடங்கியல் வழக்கும் இணைந்துள்ளது. (போர், வேட்டை – அரவம்)
- துடியன் எனும் சொல்லாட்சி ஒரு கூட்டத்தைக் குறிப்பதாக சங்க இலக்கியத்தில் பயின்றுவரவில்லை. பறையன், கடம்பன் பற்றிய செய்திகள் பாட்டுகளில் இல்லை. பாணரை மன்னராட்சிக் காலம் இரந்துண்போர் என்றதேயன்றி இழிபிறப்பாளர் என்று கூறவில்லை. புலவர் மரபு, முருகு பற்றி ஆடும் கானக்குறத்தியை புலைத்தி என்றது. ஆனால் விறலியைப் புலைத்தி என்று கூறவில்லை.
- ஆடை வெளுக்கும் பெண்ணை, ஈமச்சடங்கில் கலந்து கொண்ட ஆணை, கலம் தொடா மகளிரைப் புலையர் எனும் கூறும் வழக்கம் இருந்தது. இதனால் புலையன், இழிசினன் எனும் சொற்பயன்பாடு செய்யும் தொழிலின் அசுத்தம் காரணமாக இழிவு கற்பிக்கப்பட்டவர்களைக் குறிக்கும்.
- தங்கள் வாழ்க்கைக்குப் பிறர் தரும் பரிசில், பாதீடு, ஊர் தரும் கடமை, சடங்கு பங்கெடுப்பால் கிடைக்கும் தானம் ஆகியவற்றைச் சார்ந்தோரே புலையர் எனப்பட்டனர்.
- சங்க காலத்தில் செய்யும் தொழில் அடிப்படையில் ஏற்பட்ட இந்த ஏற்றத்தாழ்வே பின்னாளைய சாதிய சமூகத்திற்கு அடித்தளமானது.
மதிப்பீடு
உற்பத்தி உறவுகள் சமூக உறவுகளுக்கு அடித்தளமாக அமைகின்றது எனும் மெய்யியல் கூற்று சமூக கருத்துற்பத்தியையும் குறித்து நிற்கின்றது. இனக்குழு சமூகத்தில் மேல் கீழ் எனும் பிரிவு உண்டாகவில்லை என்றும் உடைமை சமூகத்தில் தொழிலடிப்பையில் தான் ஏற்றத்தாழ்வு மிக்க சமூகம் உருவாகி பின்னர் சாதீய சமூகமாக உருவெடுத்தது என்பதும் இனக்குழு சமூகத்தில் உண்டான கருத்துற்பத்தி உறவின் மீதான பார்வையைத் தவிர்த்ததாய் உள்ளது. வர்க்க பகைமை பாலின கருத்தில் இருந்தே தொடங்குவதாய் எங்கெல்ஸ் குறிப்பிடுவது நோக்கத்தக்கது. அரசுருவாக்கத்திற்கு உதவாத கருத்தியல் வடிவங்கள் சமூகத்தினரால் இழிவாக்கம் செய்யப்படுகின்றது. பாணர் போன்ற இசைமரபினர் அரசதிகாரத்தின் இயங்கும் விளம்பர உடல்களாய் இருப்பதால் பொருளாதரநிலையில் கீழே தள்ளப்பட்டாலும் சமூக மதிப்பு குறையாமல் வாழ்கின்றனர். சமூக மதிப்பில் குறைவுபடாமல் வாழும் பாணர் மரபு இசை வழக்கிலும் சிறப்புற்று விளங்கியது. உடைமை காலத்திற்கேற்றாற்போல பரிணமித்த துடியர் மரபு ஏவலுக்குத் துடி கொட்டுவதற்கு முன் தனக்கான தனித்துவமான இசை மரபைக் கொண்டிருக்கலாம். உற்பத்தி உறவுகளுக்குள் அடங்காமல் போனதால் சமூக மதிப்பற்று தனக்கான இசை மரபையும் இழந்திருக்கலாம். அல்லது சமூகத்தினரால் புறந்தள்ளப்பட்டு இருக்கலாம். அரசு இயந்திரத்திற்கு துணை செய்யும் கருத்துருவ இயந்திரங்களாய் ஆகாதோர் சமூக உற்பத்தி உறவுகளோடு இணக்கம் கொள்ளாமல் பரிசு, தானம் முதலியவற்றையே ஆதாரமாகக் கொள்ளும் போது புலையர் ஆகும் வாய்ப்பினைப் பெறுகிறார்கள். பண்பாட்டுக் கருத்தாக்கத்தால் சொல்லப்பட்ட அசுத்தம், தீமை முதலிய கருத்துக்களோடு இவ்வாய்புடை உடல் இணையும் போது புலையராக இழிசினராக இழிபிறப்பாளராக்க் கொள்ளப்படுகிறார்கள்.