முத்துமோகன், ந., இந்தியச் சூழல்களில் தமிழர் தத்துவ மரபுகள், இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மூன்றாம் பதிப்பு, 2023.
ஆய்வுச் சுருக்கம்
இக்கட்டுரை சங்க காலம் தொடங்கி நவீன காலச் சூழலின் தமிழடையாள உருவாக்கம் வரையிலான மெய்யியல் பின்னணியைச் மார்க்சீய சமூகவியல் நோக்கில் ஆய்கிறது. அரசியல் மாற்றங்கள் முன்னைய மெய்யியல் மரபுகளை முழுதுமாகத் தவிர்க்காமல், அவற்றை ஒருங்கிணைத்து புதிய மரபாக எழுச்சி பெறச் செய்கிறது. இதனை இந்தியாவின் தத்துவ இயங்கியலாகக் கொள்கிறது இக்கட்டுரை.
உள்ளடக்கம்
- கடவுள் நிலப்பிரிவின் இயற்கை தன்மைக்கு ஏற்ப உருவாக்கம் பெற்றிருந்தார். அதாவது புவியியல் பொருள்முதல்வாதம் எனும் பண்பு கொண்டதாகப் பழங்காலச் சிந்தனைகள் இருந்தது.
- சங்க காலத்தில் உயிர் என்றது அனுபூதவியலின் கருத்தான ஆன்மா என்று கொள்ளப்படவில்லை.
- சங்க பாடல்கள், தத்துவ முடிவுகளாக நிலைத்த அறுதிப் பொருட்களைக் கண்டுபிடிப்பதில் முதலில் சிரத்தை எடுத்துக்கொள்ளவில்லை.
- சிராமண தத்துவங்களின் வரிசை தமிழ்ப் பண்பாட்டு அடிக்கட்டுமானத்தில் பழமையானது என்பதையும், அது தமிழ்ப் பண்பாட்டு உருவாக்கத்தில் அதிகச் செல்வாக்குப் பெற்றிருந்தமையும் கண்டுகொள்ள முடிகிறது.
- சமண பௌத்த வருகைக்குப் பின், தத்துவக் கருத்துக்களைத் தினசரி வாழ்வுடன் இணைப்பது என்பது புதிதாக உருவான ஒரு நடைமுறையாக இருந்திருக்க வேண்டும்.
- சிராமண சிந்தனைகள், தமிழர்களின் ஆதிப் பொருள்முதல்வாத அடிப்படை ஆகிய இரண்டின் இயங்கியல் தமிழ் மண்ணில் மதச்சார்பற்ற அறத்தையும் மானுடப் பொதுநிலைகள் குறித்தும் பேசின.
- பொருள்முதல்வாதமும் ஆன்மீகமும் மத்திமப் பகுதியில் சந்தித்து இயங்கியல்ரீதியாக இணக்கம் பெற்று அறநெறிகளாகவும் ஒழுக்கங்களாகவும் வடிவம் பெறுகின்றன.
- தமிழ்ச் சைவர்களும் வைணவர்களும் அவர்களுடைய பக்தி மார்க்கம், சாதி வேறுபாடுகளற்ற ஒரு சமய இணைப்பை வெற்றிகரமாகத் தமிழ் மண்ணில் உருவாக்கியதாக கோரி வருகின்றனர். எப்படி இருந்த போதிலும் மதக் கேள்விக்கும் சமூகக் கேள்விக்கும் அதாவது சாதிய இருப்பிற்கும் இடையிலான முரண்பாடு பெரிதாக எந்தத் தீர்வையும் கொண்டிருக்கவில்லை.
- வினைக்கோட்பாட்டைக் கடவுட் கோட்பாட்டால் மாற்றியமைக்க இயலாமல் போய்விட்ட சைவம், வினைக்கோட்பாட்டைக் கண்காணிக்கும் சக்தியாகக் கடவுளைச் சித்திரிக்க முயல்கிறது.
- நவீன மரபில் திராவிட இயக்கத்தார் மூடிய வடிவில் சைவ சித்தாந்தத்தோடு தொடர்பில் இருந்தனர். தமிழ் மரபு சமயம் சாரதது என்பது இவர்களின் வாதமாக இருந்தது.
மதிப்பீடு
அறவியல் உருவாக்கம் ஆதிப்பொருள்முதல்வாதக் கருத்துக்களுடன் மெய்யியல் கருத்தாக்கங்கள் கொண்ட இயங்கியல் உறவினால் உற்பத்தி செய்யப்பட்டது எனும் மார்க்சீய நிலைப்பாடு பொருள்முதல்வாத மரபை அறவியல் தனக்கு எதிரிடையாக வைத்து கருத்துவயப்படுத்தி உட்செரித்ததை விளக்குகிறது. அறம் மதங்களின் பொதுத்தன்மையாகக் கொள்ளப்பட்டதால் அறவியலுக்கு எதிரிடையாகப் பார்க்கப்பட்ட உலகாயதம் அனைத்து சமயத்தாராலும் புறக்கணிக்கப்பட்டது. ஆதிப்பொருள்முதல்வாதம் அல்லது உலகாயதம் தனக்கே உரித்தான அறவியலைக் கொண்டிருந்ததை தேவிபிரசாத் குறிப்பிடுகிறார். தமிழ்ப் பண்பாட்டு அடிக்கட்டுமானத்தில் சிராமண தருக்கவியல் இருந்தமையாலே தமிழ் மொழிவழி சமய அரசியலை முன்னெடுத்த சைவம் சிராமண மரபை உட்செரித்துக் கொண்டது. சமணமும் பௌத்தமும் அறநெறி சார்ந்த கருத்துமுதல்வாதத்தைத் திணிக்க முயன்றும் நிகழ் உலகில் இயங்கும் உலகாயத மரபு அதற்கான கருத்தியல் எதிர்வினை செய்திருப்பதை அறம் பொருளோடு ஒருங்கிணைந்த காமத்துப்பால் உருவாக்கம் நமக்குத் தெளிவுப்படுத்துகிறது. இதன்மூலமாக திருக்குறள் உருவான போதே அது தமிழ் சமூகத்தைத் கருத்துவயப்படுத்தும் ஒரு காலனிய பிரதியாக இயங்கி இருப்பதை ஊகம் செய்யலாம். சமணத்தின் அனேகாந்தவாதம், பௌத்தத்தின் ஆணவமலம் பற்றிய கருத்து சாங்கியத்தின் பிரகிருதி பக்தி, யோகம், தாந்ரீகம் முதலியவற்றை ஏற்ற மரபாக சைவசித்தாந்தம் இருந்ததாலேயே ஒரு முழுமையடைந்த நிலபிரபுத்துவ மெய்யியலாக / வணிக மெய்யியலாக உருக்கொள்ள முடிந்தது. திராவிட அமைப்புகள் காலனிய எதிர்ப்பை தன் மொழிவழி அடையாள அரசியலை முன்வைத்து செயல்பட்டு இருப்பதாலும் நிலவுடைமையாளர்களின் அரசியல் பின்னணியோடு இணைந்திருந்ததினாலும் சைவசித்தாந்தத்தோடு பொருத்திப்பார்க்கக்கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது. சைவ சித்தாந்ததம் உலகை ஏற்பது அதன் நிலவுடைமை ஆதிக்கத்தையும் தவிர்க்க முடியாத லோகாயத ஏற்பையும் காட்டுகிறது. தமிழ் நிலத்தில் நுகர்வு வாதத்தை மறுக்கும் தூய அறவியல் கருத்தாக்கம் சங்க காலம் தொட்டு இன்றுவரை நடைமுறையாக்கம் செய்ய முடியவில்லை. அதற்கு தமிழ் நிலத்தின் தீவிரமான நுகர்வு மனப்பான்மை தடையாகவுள்ளது.
