அண்மை

பொருள் மயக்கங்கள் மருதம் நெய்தல் திணைகள் - ராஜ் கௌதமன்


ராஜ் கௌதமன், பொருள் மயக்கங்கள் மருதம் நெய்தல் திணைகள், பதிற்றுப்பத்து – ஐங்குறுநூறு: சில அவதானிப்புகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2018.

ஆய்வுச்சுருக்கம்

சங்க இலக்கியங்களில் நெய்தல் திணைமரபுகளும் மருதத்திணை மரபுகளும் மயங்குவது ஓர் இயல்பான அம்சமாகக் காணப்படுகிஇறது. இதன் சமூகவியல் பின்னணியை விளக்க முனைவதாய் இவ்வாய்வு அமைகின்று.

ஆய்வுக் கருதுகோள்

களவிற்குள் கைக்கிளையும் பரத்தமைக்குள் பெருந்திணையும் அடங்குமாகையாலும் உடைமை, வர்க்கப்பாகுபாடு உருவான காலத்தின் பரத்தைமை உறவு கற்பிற்கு மாற்றானவையாக அமைந்ததாலும் மருதத்திலும் நெய்தலிலும் திணையுறவு ஏற்படுகின்றது இது மயக்கத்திற்கு அடிப்படை காரணமாகும்.

ஆய்வு அணுகுமுறை

இவ்வாய்வு வரலாற்றியல், சமூகவியல் மற்றும் பகுப்பாய்வு முறைகளை உள்ளடக்கி செய்யப்பட்டுள்ளது.

உள்ளடக்கம்

  1. மயக்கங்கள் எல்லாமே முதல், கரு, உரிப்பொருட்களைத் திணைகளுக்கு உரியனவாகப் பாகுபாடு செய்து விதிகளாக நிலைகுத்தும் உரை மற்றும் இலக்கண ஆக்கங்களால் ஏற்றபட்டவை.
  2. குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு ஆகிய நூல்களில் திணை வகுக்கப்படவில்லை. சங்கப் பாடல்களில் திணைப்பற்றிய ஓர்மை பிந்தியதாகலாம் என்றும் தெரிகிறது.
  3. நற்றிணைக்கும் குறுந்தொகைக்கும் மர்ரெ ராஜம் பதிப்பில் தான் முதன்முதலாகத் திணைப்பிரிவு தரப்பட்டது.
  4. ஐங்குறுநூற்றில் திணைமரபு இலக்கியமரபாகிவிட்டது.
  5. நெய்தல் மருதம் இவ்விரண்டின் உரிப்பொருள்கள் முதல் மற்றும் கருப் பொருள் மயக்கங்களில் வைத்துப் பாடப்படுவது சங்ககாலப் பெருவழக்காகத் தெரிகிறது.
  6. இவ்விரண்டில் நிகழ்த்தப்படும் களவும் பரத்தைமையும் முல்லை, பாலை போல கற்பு சார்ந்ததாக இல்லை. இது தொல்பழங்கால முறைமையைத் தொடர்கிறது.
  7. மருதநிலம் உடைமை ஆட்சிகாலத்தின் போது பரத்தைமையைப் பாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கலாம்.
  8. அகப்பாடலின் தொல்மரபினை முடியுடை வேந்தர் காலச் சமூக மதிப்பீடுகளுக்கு ஏற்ப உகந்த முறையில் மீள்படைப்புச் செய்தது புலவர்மரபு. தொண்டிப்பத்து அந்தாதிமுறையில் அமைந்தது இதற்கொரு சான்று.
  9. புறப்பாடல்களைப் போல அகப்பாடல்கள் புலவர் மரபின் அசல் ஆக்கங்களைப் போல தெரியவில்லை. பாணர் மரபு புறத்திணையை உள்ளடக்கிய அகத்திணை மரபொன்றை வேறொரு வடிவில் கொண்டிருந்திருக்கலாம்.
  10. உடைமை காலத்ததிற்கு ஒவ்வாத மரபாக அகமரபு ஆகிவிட்டது. புறமரபு வளர்ந்த அளவிற்கு அகமரபில் வளர்ச்சி இல்லை.

மதிப்பீடு

முதல், கருப்பொருளை மையமிடும் வழக்கை விடுத்து உரிப்பொருளை மையப்படுத்தும் திணைமயக்கத்தை ராஜ்கௌதமன் இக்கட்டுரையில் ஆய்ந்திருக்கிறார். மருதத்திற்கும் நெய்தலுக்கும் மிக நெருங்கிய நிலவியல் ஒற்றுமை கூறுகளும் கவிதையாக்கத்தில் ஒத்திசைவான கூறுகளை உற்பத்தி செய்திருக்கலாம். மருதத்திணையின் ஊடலும் நெய்தல் நிலப் பகுதிகளில் காட்டப்படும் பரத்தைகளும் முல்லையும் வஞ்சியும் போல் இணைகின்றது. உடைமை, அரசு நிறுவனங்கள் குடும்ப மற்றும் கற்பு கருத்தாக்கத்தினால் எழுப்பப்படும் எந்திரமாவதால் தொல்மரமான பரத்தைமையை இழிவாக்கம் செய்யும் பொறுப்பினை எந்திர இயக்கத்தின் கருத்துருவ கச்சா பொருட்களான புலவர் மரபு ஏற்கிறது. மருதம், நிலவுடைமையின் செல்வாக்கினால் அதிக ஓய்வு காலத்தைப் பெற்றிருப்பதும் பரத்தைமைக்கு அடிப்படையாகின்றது. மருதத்தலைவி ஏனைய திணைமரபைப் போல் எயினர் மகள், உமணர் மகள், கானவர் தங்கை என்னாது ஊரன்மகள் என்று தனிநபரைக் கொண்டு குறிப்பிடும் முறையும் நெய்தல் நிலத்தோடு (கொண்கன் மகள்) பொருந்துகிறது. இது அவ்வக்கால சமூக மதிப்பீட்டிற்கேற்ப தனிமனிதரின் சமூக மதிப்பை வெளிப்படுத்தும் போக்கில் அமைந்த கவிதையாக்க முயற்சியைக் காட்டுகிறது. அதே சமயத்தில் இது மருதத்திற்கும் நெய்தலுக்கும் உரிய வழக்காக அமைகிறது. இதற்கு இவ்விரு நிலப்பகுதியின் வணிக அடித்தளங்களும் காரணமாகும். நிலவியல் கூறு அதனால் கட்டமைக்கப்படும் மக்களின் வாழ்க்கை மற்றும் உற்பத்தி முறை அதனால் உருவாகும் வணிக உற்பத்தி, சமூக உறவுகள் இவையாவும் மருதம் நெய்தலுக்குப் பொதுவாக அமைதலாலும் இதன் மயக்கங்கள் சங்கப் பாடல்களில் இயல்பாக்கம் செய்யப்பட்டிருக்கலாம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை