Trending

குறுந்தொகை 2

குறுந்தொகை 2 பாடல் விளக்கம்

{tocify} $title={உள்ளுறை}

கூற்று

  • தலைவன் கூற்று

இயற்கைப்புணர்ச்சியின் போது தலைவியின் நாணத்தால் தடைப்பட்ட தலைவன் தனது அன்பு தோன்ற (கலவியைத் தொடர) பொய் பாராட்டியது


கூற்று விளக்கம்


ஒத்த குலமும் செல்வமும் அழகும் உடைய ஆணும் பெண்ணும் தெய்வத்தின் ஆணையால் ஓரிடத்தில் எதிர்ப்பட்டு மனமொத்து தனியிடம் சென்று புணர்தலை நாடக வழக்கில் இயற்கைப்புணர்ச்சி என்பர். அப்புணர்ச்சியின் போது பயிர்ப்பு (பயிலாதவற்றின் மீது வெறுப்பு) நிரம்பியதாய் காட்டப்படும் தலைவி, தலைவனின் நடக்கைகளால் அஞ்சி நாணுற்றுக் குறுகுவாள். கலவியை இடை நிறுத்தும் தலைவியின் இச்செயல் தலைவனின் இன்ப நுகர்விற்குப் பெருந் தடையாய் அமையும். அதனாலே இதை இடையீடு என்பர். அப்போது தலைவியின் நாணத்தை நீக்கி கலவியைத் தொடர விரும்பும் தலைவன் பொய்யான மொழிகள் சிலவற்றைக் கூறி (ஆசை மொழிகள்) தலைவியை இணங்கச் செய்வான். இதையே மெய்தொட்டுப் பயிறல், பொய் பாராட்டல், இடம்பெற்றுத் தழாஅல், இடையூறு கிளத்தல்.. என்னும் தொல்.களவு நூற்பா விளக்கும்.


குறுந்தொகை பாடல் 2


கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமம் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய நட்பின் மயில்இயல்

செறிஎயிற்று அரிவை கூந்தலின்

நறியவும் உளவோ, நீ அறியும் பூவே?


சொற்பிரிக்காப் பாடம்


கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி

காமஞ் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்

செறியெயிற் றரிவை கூந்தலின்

நறியவு முளவோநீ யறியும் பூவே


ஆசிரியர்

  • அறியப்படவில்லை

முன்னோர் இறையனார் என்பர். அக்கருத்தில் உடன்பாடில்லை. (விளக்கத்தை என்னுரையில் காண்க)


ஒலி வடிவில்



குறுந்தொகை 2 பாடல் விளக்கம்


நல்ல மகரந்தத்தாது உள்ள பூவைத் தேடித் தேர்ந்து ஆராய்ந்து தேனருந்தும் வாழ்வுடைய அழகிய இறகுள்ள தும்பியே! நீ என் தோட்டத்து தும்பி, ஆதலால் எனக்கு விருப்பமானதைக் கூறாமல் கண்ணால் கண்டதை (உண்மை) மட்டும் கூறு. (என்) பழக்கங்களுக்குப் பொருந்திய நட்பையும் மயில் போன்ற சாயலையும் நெருக்கமான பற்களையும் உடைய இவ்வரிவையின் கூந்தலைக் காட்டிலும் நறுமணமுடைய பூவும் உளவோ? நீ அறிந்து வைத்திருக்கும் பூக்களில்


திணை

  • குறிஞ்சித் திணை

இயற்கைப்புணர்ச்சி நடைபெறத் தொடங்கும் போது தலைவியின் நாணத்தாலே தலைவனுக்கு இடையீடு ஏற்படுகிறது. கலவியை மீண்டும் தொடர விரும்பும் தலைவன் அவளைத் தன் செய்கைகளுக்கு உடன்படும் வகையில் பயில்விக்க எண்ணி பொய்யாகப் பாராட்டுகின்றான். இது புணர்தலும் அதற்கான காரணமுமே ஆம். அதனால் இது குறிஞ்சித் திணையே.


நிலம்

  • நிலம் அறியமுடியவில்லை

இப்பாடலை முன்னோர் குறிஞ்சி நிலம் எனச் சுட்டியிருப்பார்கள். திணை குறிஞ்சியாய் இருப்பதால் அவ்வாறான முடிவிற்கு அவர்கள் வந்திருக்கக்கூடும். புணர்ச்சி செயல்பாட்டைக் குறிஞ்சித் திணையாய் அடக்குவதில் மாற்றேதும் இல்லை ஆனால் புணர்ச்சி ஒழுக்கம் குறிஞ்சி நிலத்திற்கே உரியது எனும் அதிகாரக் கூற்றை ஒப்ப முடியாது. எல்லா நிலத்திலும் எல்லா ஒழுக்கமும் நடைபெறும். ஒரு நிலத்திற்கு உரிய ஒழுகலாறு ஒன்றே எனும் பார்வை பிற்காலத்து அகவிலக்கண மரபு செய்த பிழையென்றுணர்க. இதைத் திணை மயக்குறுதலும் கடிநிலை இலவே எனும் தொல்.அகம் நூற்பா வழி கண்டுத் தெளிக.


காலம்

  • காலமும் அறியமுடியவில்லை

பொதுவாய் தும்பி தேனருந்தும் காலம் காலையே ஆதலால் காலையெனக் கொள்ள முடியும். இருந்தும், முற்றாய் அவ்வாறும் ஓதிவிட முடியாது. இரவு பூக்கும் பூக்களின் தேனை நுகரவும் தும்பிகள் வரலாம். காலத்தைத் தெற்றெனக் காட்டும் குறிப்பு ஏதும் பாட்டில் இல்லை அல்லது திறங்கொண்டோர்க்குத் தெரியலாம்.


என்னுரை


செல்வம், குலம், அறிவு முதலியவற்றால் ஒத்த தலைவனும் தலைவியும் எதிர்பட்டு மனமொத்து தனியிடம் சென்று புணர்தலில் மெய்தொட்டுப் பயிறலே, இயற்கைப்புணர்ச்சியின் முதல் செயல்பாடாய் அறியமுடிகிறது. அவ்வாறு தலைவன் தலைவியின் உடலைத் தொட முற்படும்போது அச்சமும் நாணமும் நிரம்பியதாய் காட்டப்படும் தலைவியின் மேனி நடுக்குறும், நுதல் வியர்க்கும் அல்லது தலைவன் நெருங்குகையில் தலைவி, தன் இரு கைகளால் கண்களைப் பொத்தி நிற்பாள், மரம்பின் சென்று தன்னுடலை நாணி மறைப்பாள். இத்தகையச் செயல்பாடுகள் தலைவனுக்குப் பெரும் இடையூறாய்த் தோன்றும். கலவியைத் தொடர விரும்பும் அவன், முதலில் அவள்மாட்டு இருக்கும் அச்சத்தையும் நாணத்தையும் நீக்க வேண்டும். ஆதலாலே, மெய்தொடுதல் என்று கூறாது மெய்தொட்டுப் பயிறல் என்ப. 


பெண்களுக்குப் பயிலாதவற்றின் மீதிருக்கும் அச்சம்/ கலக்கம்/ வெறுப்பையே பயிர்ப்பு என்று வகுத்தோதி உள்ளனர். இயற்கைப் புணர்ச்சியில் ஈடுபடும் தலைவனும் தலைவியும் நெடுநாள் பழகியோர் அல்லர். பாலது ஆணையான் கண்டவுடன் புணரும் முதற்புணர்ச்சி. இங்கு, அறிமுகமே இல்லாது தழுவ நிற்கும் தலைவன் மீது தலைவிக்கு அச்சமே (பயிர்ப்பு) ஏற்படும்.


இதில் தலைவன் தன் இன்ப நுகர்விற்குத் தடையாய் இருக்கும் அப்பயிர்ப்பை நீக்கவே தலைவியைத் தீண்ட முயன்று தன்னை அவளிடத்துப் பயில்விக்கின்றான். இதையே இப்பாடல், பயிலியது கெழீஇய நட்பு (பழக்கம் செய்தலுக்குப் பொருந்தும் நட்பு) என்கிறது. 


'தும்பியே, நீ அறிந்து வைத்திருக்கும் பூக்களில் இவ்வரிவையின் கூந்தலைக் காட்டிலும் மணமானது உண்டோ?'  என்றது, உடல் நெருங்க உளவியலாய் நெருங்க வேண்டும் என்றோர்ந்து பொய் பாராட்டியது. குறிப்பிட்டு, 'இவளது கூந்தலைக் காட்டிலும் மணமானது உண்டோ' என வினவியது, அவளின் புத்தியை வேறிடம் நிறுத்தித் தழுவ முனைவதைக் காட்டிற்று. பழக்கம் ஏற்படுத்துதல் என்றும் கூறலாம்.


பேச இயலா ஒரு பொருளை (தும்பியை) நோக்கி பதில் கூறுமாறு விளிப்பது, சொல்லா மரபின் அவற்றொடு கெழீஇச் செய்யா மரபின் தொழிற்படுத்து அடக்கியும் எனும் தொல்.பொருள் விதியோடு இயையும். அறிவும் புலனும் வேறுவேறாய் ஆகும்படி காமம் மிக்கு இருக்கும் போது தலைவனோ தலைவியோ இவ்வாறாக மரம், செடி, விலங்கு, பறவை, பூச்சியுடன் பேசுமாறு கூற்று வருவது தமிழ் நாடக மரபு ஆகும். இதையே ஆளுருவாக்கம் என்பர்.


அவ்வாறு காமம் மிக்கு இருக்கும் தலைவன் அவளைத் தழுவும் விருப்பத்தை அவளிடத்து நேரே தெரிவிக்காமல், அவள் சூடியிருக்கும் பூவில் மொய்க்கும் தும்பியிடம், நீ அறியும் பூவில் இதைவிட நறுமணமான கூந்தல் உள்ளதோ? என்று பொய் கூறி, அதையே சாக்காய் கொண்டு, பூவை முகர்வதாய் வந்து அவளைத் தழுவ முனைகிறான்.


இதனால் பெண்களின் கூந்தலுக்கு உண்மையில் நறுமணம் உண்டு எனுங்கருத்து இப்பாட்டிலே இல்லை என்பதை உணர்க. அக்கருத்து அவளைத் தழுவ எண்ணும் தலைவனின் விருப்பதையே குறிப்பாய் உணர்த்தி நிற்கிறது. அதனாலே தான், மெய்தொட்டுப் பயிறல், பொய் பாராட்டல், இடம்பெற்று தழாஅல் (தழுவுதல்) என்றார்.


இது விளங்காது இப்பாடலில் பொருட்குற்றமிருப்பதாய் கூறும் தருமிக்குப் பொற்கிழி அளித்த சிவபுராணக்கதையை இப்பாட்டோடு கூட்டிக்கூறுவதே முறையல்ல. அத்தோடு, 'விரும்பிய வண்ணம் கூறாது, கண்ணால் கண்டதை மட்டும் கூறு' அதாவது உண்மையை மட்டுங்கூறு எனும் அவைதீக சிந்தனை மரபும் பாடலுள் இருப்பதை அறிக. (காமம் செப்பாது கண்டது மொழிமோ)


மோ - என்பது முன்னிலை அசை. நீ என்பது தோன்றா எழுவாயாய் நிற்கிறது. இறுதி ஏகாரம் ஈற்றசை. மயிலியல் என்றது, அதன் சாயலைக் (மென்மையை) கொண்டாள் என்றது. செறியெயிறு என்றது, விலகல் இல்லாத நெருக்கமான பல் வரிசைக் கொண்டாள் என்றது. இவ்விரண்டு குறிப்பும் அரிவை பருவத்தாளை விளங்க துணை செய்கிறது. இதற்கு ஆழ்பொருளிருப்பின் திறங்கொண்டோர்க்குத் தெரியலாம்.


இப்பாடல் தருமிக்கு பொற்கிழி அளித்த திருவிளையாடல் கதையோடு தொடர்பு படுத்தப்பட்டதாலே இதன் ஆசிரியர் இறையனார் என்று கூறப்பட்டிருக்க வேண்டும். இறைவனே வந்து பாட்டெழுதினார் எனுங்கட்டுக்கதையை இனியும் அறிவுடையோர் ஏற்கமாட்டர். இதற்கு மாற்றுக்கருத்தாய் இறையனார் எனும் ஒருவர்தான் இப்பாட்டைச் செய்தாரெனில் அவர் எழுதிய பிற பாட்டேதும் நமக்கு கிடைக்கவில்லை. நக்கீரரும் தான் செய்த இறையனார் அகப்பொருள் உரையில் இறையனாரை ஒரு மனிதரென்று கூறாது, மதுரை ஆலவாய்க் கடவுளே இறையனார் என்று கூறியுள்ளார். இறையனார் என்றொருவர் இருந்தார் என்பதற்கு போதிய சான்றில்லாததாலும் முன்னோர் அவரைக் கடவுள் என்றே சுட்டுவதாலும் இப்பாட்டுக்கு ஆசிரியர் பெயர் கிடைக்கவில்லை என்பதே என் எண்ணம் அல்லது அப்புராணக்கதை ஆசிரியர் பெயரை அழித்துவிட்டது என்பேன்.


தீசன்

✉️ writer.deesan@gmail.com


6 Comments

  1. இரவில் பூக்கும் பூவும் உள.. தும்பி தேனெடுத்தல் என்பது அவ்வக்காலத்தில் நிகழுமோ? என தெரியவில்லை..

    தலைவியின் கூந்தலில் உள்ள பூவில் தும்பி இருப்பதாகவும் அதனிடம் தலைவன் ஆளுருவாக்கம் செய்வாதாகவும் கூறியிருப்பது
    கற்பனை நயமிக்கதாக உள்ளது..
    இப்பாட்டில் அதற்கான இடம் உண்டா?

    ஏனென்றால் தன் தோட்டத்தில் உள்ள தும்பியிடம் எனக்கு பிடித்தவாறு கூறாது உண்மையைக் கூறென தலைவன் வினாவுதாகவுள்ளது.. ( உங்களதுரை)

    அப்படியானால் தலைவனின் நிலத்திலா புணர்தல் நிகழ்கிறது?
    சங்கப் பாடல்களுள் ஆசிரியர் பற்றிய தெளிவு சிலவற்றிற்கு இன்னும் பிடிபடவில்லை..



    ReplyDelete
    Replies
    1. ஆளுருவாக்கம் செய்வதற்கான இடம் பாட்டில் உண்டு. மோ என்னும் முன்னிலை அசையும் தும்பியிடம் வினவுவதாக அமைந்து இருப்பதுமே அதற்கு அரண் செய்கிறது. தலைவியின் கூந்தலில் பூ இருக்க வேண்டும் என்று சொல்வது அவளைத் தழுவ எண்ணும் அவனது செயலையும் குறித்து தொல்காப்பியக் கூற்றுமரபோடு பொருத்துவதற்கே (மெய்தொட்டுப் பயிறல்....)

      /தலைவனின் நிலத்திலா புணர்தல் நிகழ்கிறது?/

      எனும் உங்கள் கேள்வி முக்கியமானது. இவ்வாறு நான் யோசிக்கத் தவறியதற்கு மன்னிக்க. புணர்ச்சியானது தமரை நீங்கிய தனியிடத்தில் நடப்பதாயே படித்திருக்கிறேன்.

      இருந்தும் நுட்பம் அறியாது விலகியது என் பிழையே.

      நீ என் தோட்டத்து தும்பி - என்று உ.வே.சா தந்திருக்கும் குறிப்பு என்னையும் மயக்கிற்று. பொறுத்துக்கொள்க

      Delete
  2. காமம் செப்பாது -நான் விரும்பியதைச் சொல்லாது
    கண்டது மொழிமோ-நீ கண்டறிந்ததைக் கூறு

    சந்தேகப்படுவது தலைவனிடத்தில் இருக்கலாம்.. அதையும் இப்பாடல் மூலம் உணரலாம். அவனுக்கு தலைவி மீது புணர்ச்சி இன்பம் பெற வேண்டும் என்பதே நாம் கொண்டியப் பொருள். திணையைக்கான அவ்வாறு செய்து இயல்பு... திறனிருப்போர் அதனை வேறுவிதமாகவும் சொல்லலாம்..

    தலைவியின் பயிர்ப்பு பிடிக்காத தலைவன் ஊடல்( சிறு பிணக்காக) கொண்டு வண்டிடம் பேசலாம்..


    ஊடலை புணர்ச்சியில் கொண்டு நாம் முடிக்கலாம்.


    உண்மையைக்கூறென வண்டினைக் கட்டளையிடுவது ஊடலில் மட்டுமே முடிக்கலாம்..

    இவ்வாறு கற்பாகவும் கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளலாம்.

    ReplyDelete
    Replies
    1. மஞ்சக் கண்ணாடி போட்டுப் பாத்தா எல்லாம் மஞ்சளாத்தான் தெரியும் போலத்தான் - கூற்று தான் பாடலின் பொருளைத் தீர்மானிக்கிறது. பாடலின் சில கூறுகளே கூற்றைத் தீர்மானிக்கிறது. இயன்றவகையில் தொல்காப்பிய கூற்று மரபோடு பொருத்தியுள்ளேன்.

      Delete
  3. நாம் மஞ்சள் நிற கண்ணாடியை போட்டிருகிறோம்.. என தெரிந்தால் சரி.

    கண்ணாடி இல்லாமலும் பார்க்கலாம் என்ற எண்ணம் வரும்.

    ReplyDelete
  4. பாடலின் சில கூறென்பது அவர்களின் திறம் பொருத்தும் அமையும்....
    மஞ்சள் கண்ணாடி போட்டு பார்த்தல் என்பது செயற்கையானது தான்..

    குறிப்பானும் குறியீடும் ஊசலாட்டம் தானே..
    கூற்றும் அவ்வாறு தான் இருக்கும்...

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு