Trending

சுவாமி விவேகானந்தர் பற்றிய கட்டுரை

சுவாமி விவேகானந்தர் பற்றிய கட்டுரை

{tocify} $title={உள்ளடக்கம்}

அறிமுகம்


ஒரு தாய் தனியாக தெருவில் நடந்து செல்கிறாள். அப்போது நாய் ஒன்று குரைக்கிறது. அந்த நாய்க்கு பயந்து அருகில் உள்ள வீட்டிலே தஞ்சம் அடைகிறாள். மற்றொரு நாள் தனது குழந்தையுடன் அதே தெருவில் நடந்து வருகிறாள். அந்த நேரத்தில் காட்டில் இருந்து வழி மாறி வந்த புலி ஒன்று பசியோடு வருகிறது. குழந்தையை கண்டதும் அதன் மீது பாய எத்தனிக்கிறது. எங்கிருந்துதான் அந்த இளம்தாய்க்கு ஒரு அசுர பலம் வந்ததோ தெரியவில்லை, தன் குழந்தையைக் காப்பாற்ற, புலி மீதே பாய்கிறாள். தாயின் ஆவேசத்தைக் கண்ட புலி ஒதுங்கி ஓடுகிறது. இந்தக் கதையைச் சொன்ன சுவாமி விவேகானந்தர் ஒரு செய்தியை நமக்கு தெரிவிக்கிறார்.


"அன்பு கொண்டவர்களுக்கு அச்சம் என்பது இல்லை"


"நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என  நினைத்தால் வலிமை படைத்தவன் ஆகிறாய். கோழை என நினைத்தால் நீ கூனிக் குறுகித்தான் நிற்பாய்"


சரி, யார் இந்த விவேகானந்தர்?


"ஜீவன் என்பதும் இறைவன் என்பதும் வேறல்ல, ஒன்றே" என்ற அத்வைத தத்துவத்தை உலகுக்கு சொன்னவர். இந்திய மற்றும் இந்து சித்தாந்தங்களை உலக மக்களுக்கு எடுத்துச் சென்றவர். அத்தகைய சிறப்பு பொருந்திய சுவாமி விவேகானந்தர் பற்றிய கட்டுரையே இது.


பிறப்பு & கல்வி


1863 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் தேதி, விசுவநாத் தத்தாவுக்கும், புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தவர் சுவாமி விவேகானந்தர்.


பெற்றோர் வைத்த பெயர் நரேந்திர நாத் தத்தா. சிறந்த நினைவாற்றல் கொண்டவராகவும், விளையாட்டு வீரராகவும், இசையில் நாட்டம் கொண்டவராகவும் வளர்ந்தார்.


1879 ஆம் ஆண்டு கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியிலும், பின்னர் ஸ்காட்டீஷ் சர்ச் கல்லூரியிலும் தத்துவம் பயின்றார்.


கல்வியைக் கற்க, கற்க, அவரது மனதில் இறைவனைப் பற்றிய சந்தேகங்கள் தோன்றின.


இறைவனை வழிபடுவோர் ஏராளம் இருக்கும்போது, ஏற்றத்தாழ்வுகளும், மனிதரிடையே ஏற்படும் வேறுபாடுகளும், அவர் மனதில் முரண்பாடகவே தோன்றியது. பெரியோர்கள் பலரிடம் விவாதித்து, உண்மைகளை அறிய முயன்றார். அக்காலத்தில் பிரபலமாய் இருந்த பிரம்ம சமாஜத்திலும், சிறிது காலம் இணைந்து இருந்தார்.


அவரது சந்தேகங்களுக்கு விடை அளிக்கும் அமைப்பாக, பிரம்ம சமாஜம் இல்லை. ஆனால் ஆன்மீக நாட்டம் மட்டும் இருந்தது.


இராமகிருஷ்ண பரமஹம்சர்


அப்போது நண்பர்கள் மூலம், இராமகிருஷ்ண பரமஹம்சரைப் பற்றி அறிந்தார். 1881 ஆம் ஆண்டு அவரைச் சந்தித்தார்.


இராமகிருஷ்ணர் ஒரு காளி கோயில் பூசாரி. படிக்காதவர். ஆனால் நல்ல பாதைகளை மக்களுக்கு காட்டும் பணியில் தனது வாழ்வை அர்பணித்தவர். இராமகிருஷ்ணரின் வழிபாடுகள், உருவ வழிபாடும், அருவ வழிபாடும் இல்லாது உணர்ச்சி பூர்வமாக இருந்தது. நரேந்தர் மனம் அவரை நாடியது.


அவரையும் உடனடியாக தனது குருவாக ஏற்றுக்கொள்ளவில்லை நரேந்திரர், 'கடவுள் இருக்கிறாரா?' என்று இராமகிருஷ்ணரிடமே நேரில் சென்றுக் கேட்டார். இருக்கிறார் என்றார் இராமகிருஷ்ணர். 'ஆதாரம் என்ன?' வினவினான் நரேந்திரன்.


'நானே ஆதாரம். விதைகள் எப்படி முளைக்கிறது? கிரகம் எப்படி சுழல்கிறது?' பதிலில் திருப்தி இல்லை நரேந்திரருக்கு.


நான் கடவுளை பார்க்க முடியுமா?


உன் கண்களை உன்னால் பார்க்க முடியுமா? மறு கேள்வி கேட்டார் இராமகிருஷ்ணர்.


சரி, கடவுளை நேரடியாக பார்க்கும் தைரியம் உன்னிடம் உள்ளதா?


"கடவுளை காட்டுங்கள் நான் பார்க்கிறேன்".


மீண்டும் மீண்டும் கேட்கும்  நரேந்திரனைத் திருப்திப்படுத்த, தரையில் படுக்க வைத்தார் இராமகிருஷ்ணர். மெதுவாக தனது கால்களை நரேந்திரனின் மார்பில் வைத்தார். அடுத்த வினாடி நரேந்திரர் உணர்வற்ற சமாதி நிலையை அடைந்தார்.


இராமகிருஷ்ணரிடம் ஒரு அற்புத சக்தி உள்ளதை அறிந்த நரேந்திரர், பின்னர் தனது குருவாக இராமகிருஷ்ணரை ஏற்றுக்கொண்டார்.


இராமகிருஷ்ணரும் தனது ஆன்மீக  செய்திகளை நாடெங்கும் பரப்ப, நரேந்திரர்தான் சரியான ஆள் என்று விரைவிலே முடிவு செய்தார். தனது உண்மையான பக்தியால் கடவுளை நெருங்கிய இராமகிருஷ்ணர் நரேந்திரரின்  ஒளிவீசும் கண்களைப் பார்த்தே, தனது தலைமை சீடராக ஏற்றுக்கொண்டார்.


சுவாமி விவேகானந்தர்


நரேந்தரரின் விசாலமான, விவேகமான அறிவை அறிந்த இராமகிருஷ்ணர், அவருக்கு "விவேகானந்தர்" என பெயரிட்டார். பெண் மோகம் இல்லாத, அடுத்த வேலை உணவுக்கு கூட பொருள் சேர்க்க விரும்பாத, ஒருவர்தான் தனது சீடராக இருக்க முடியும் என்று அறிவித்தார். அதை முழுமையாக பின்பற்றினார் சுவாமி விவேகானந்தர்.


ஐந்தாண்டுகள் இராமகிருஷ்ணரோடு இருந்து பக்திமார்கத்தையும், ஞான மார்கத்தையும், முழுமையாக அறிந்தார்.


1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் மறைவுக்கு பிறகு மடத்தின் பொறுப்பை ஏற்றார்.


பல நாடுகளுக்கு சென்று இராமகிருஷ்ணரின் செயதிகளை பரப்பினாலும், பிட்சை எடுத்தே சாப்பிட்டார்.


எங்கு சென்றாலும்  கமண்டலம் (தண்ணிர் பானை)  ஒன்றையும், பகவத் கீதையையும் மட்டுமே எடுத்துச் செல்வார்.


பயணங்கள்


அவரது முதல் பயணம் காசி என அழைக்கப்படும் வாரணாசியில் தொடங்கியது.


வாரணாசியில் அறிஞர்கள், துறவிகளை சந்தித்தார். ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டும், வறுமையிலும், மூட நம்பிக்கைகளாலும் துயரப்பட்ட, மக்களை கண்டு துன்பப்பட்டார் விவேகானந்தர்.


"என்னைப் போன்ற அர்ப்பணிப்பு உணர்வு உள்ள விவேகமான நூறு இளைஞர்களை கொண்டு வாருங்கள். நான் இந்த நாட்டையே தலைகீழாக மாற்றிக் காட்டுகிறேன்" என்று சூளுரைத்தார்.


பதிமூன்று கோடி பேர் வாழ்ந்த அக்காலகட்டத்தில், ஒரு நூறு பேர் அவருக்கு கிடைக்காதது ஆச்சரியம்தான்.


பல மாநிலங்கள், பல க்ஷேத்திரங்கள், பல அறிஞர்கள், பல மன்னர்கள், பல ஞானிகள் என அவர் வாழ்க்கை அமைந்தது.


பின்னர் புத்தர் தர்மம் போதித்த, சாரநாத்துக்கு சென்றார். பின்னர் அயோத்தி, ஆக்ரா, ரிஷிகேஷ், லக்னோவில், உபதேசங்களை முடித்து பூனே சென்றார். பூனேயில் பால கங்காதர திலகருடன் பத்து நாட்கள் தங்கினார்.


திலகர் உதவியுடன் பின்னர் பெங்களூர் சென்ற விவேகானந்தர், மைசூர் மகாராஜாவைச் சந்தித்தார். மைசூர் மகாராஜா, "தங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்படுகிறதா?" என விவேகானந்தரிடம் கேட்டார். இந்தியாவின் பண்பாடுகளை, கலாச்சாரங்களை, ஆங்கிலேயர்களும் உணரச் செய்ய, தான் அமெரிக்கா செல்ல விரும்புவதாக கூறினார்.


அதற்குரிய பொருளாதார உதவிகளைச் செய்வதாக, மகழ்வுடன் மஹாராஜா கூறினார். அதை அந்த சமயத்தில் விவேகானந்தர் ஏனோ ஏற்கவில்லை.


தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்


பின்னர் கால்நடையாகவே திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரி வந்த விவேகானந்தர், அங்கு கடலில் உள்ள பாறையில் அமர்ந்து மூன்று நாட்கள் தியானம் மேற்கொண்டார். இன்றளவும் அந்த பாறை விவேகானந்தர் பாறை என்றே அழைக்கப்படுகிறது.


தியானத்திலிருந்த போது, இறை அருளால் பல அறியாத செய்திகளை அறிந்து கொண்டார். பின்னர் மதுரைக்கு பயணமான போது, இராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதியை சந்திக்கும் நல் வாய்ப்பு கிடைத்தது.


விவேகானந்தரின் ஆன்மீக அறிவைக் கண்டு வியந்த பாஸ்கர சேதுபதி, சிகாகோவில் நடைபெற இருந்த, உலக சமய மாநாட்டுக்கு, தனக்கு வந்த அழைப்பை விவேகானந்தருக்கு அளித்து, சிகாகோ மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தார்.


சென்னை, மதுரை, புதுச்சேரி, மைசூர் மக்களின் நிதி உதவியுடன் மே 31, 1893 அன்று, கப்பலில் சிகாகோ புறப்பட்டார் விவேகானந்தர்.


சிகாகோ உரை


உலக சமய மாநாட்டில் ஆற்றிய உரை மூலம், உலக நாட்டினர் அனைவரையும் அன்பினால் ஆட்கொண்டார் விவேகானந்தர்.


"லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன்" என உரையைத் தொடங்குவதே அந்நாட்டவர் வழக்கம். அதற்கு மாறாக,"பிரதர்ஸ் அன்ட் சிஸ்டர்ஸ்" என தனது உரையைத் தொடங்கினார் விவேகானந்தர்.


எல்லோரையும் சகோதர சகோதரிகளாக பார்க்கும் இந்தியத் துறவியின் உரை அனைவரையும் கவர்ந்தது.


"உலகிலேயே பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையான இந்திய மண்ணில் இருந்து வருகிறேன். உலகில் ஒரு பகுதி மக்கள், கொடுமைப் படுத்தப்பட்ட போதெல்லாம் அவர்களுக்கு, மதம், இனம், பாராது அடைக்கலம் கொடுத்த, இந்திய மண்ணில் இருந்து வருகிறேன். எத்தனையோ மதங்கள், இனங்கள், இருந்தும் அந்த வேற்றுமையிலும் ஒற்றுமை பாராட்டும் இந்திய மண்ணில் இருந்து வருகிறேன்" என்று அவரை அறிமுகப்படுத்தி கொண்ட போது கைத்தட்டலால் அதிர்ந்தது அரங்கம்.


"பழமையான மதமாக இருந்தாலும் இந்து மதமானது, கிறிஸ்தவ மதம் உள்பட்ட எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல" என புரிய வைத்தார் விவேகானந்தர். ஆறுகள் பல இருந்தாலும், ஒரே கடலில் கலப்பது போல எல்லா மதங்களும், ஒரே வழியைத்தான் போதிக்கிறது என்பதால், நமக்குள் பிளவுகள் வேண்டாம் என வற்புறுத்தினார்.


பல நாட்கள் அவரது உரையை கேட்ட,  தொண்டர்கள் அவரை உரையாற்ற, ஊர் ஊராக கூட்டிச் சென்றார்கள்.


சுமார் நான்கு ஆண்டுகள்  அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஆன்மீக உபதேச நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.


மாதரைப் போற்றல்


ஐந்தடி எட்டு அங்குலம் உயரமும்,  ஒளி வீசும் கண்களும், பரந்த மார்பும், அன்பு கொண்ட சொற்களும், முப்பது வயது விவேகானந்தரை, இருபது வயதே ஆன அழகான வெளிநாட்டு  இளம் பெண்ணொருத்தி விரும்பினாள்.


"நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால், தங்களை போல அழகான, அறிவான, ஒரு குழந்தை நமக்கும் பிறக்குமல்லவா?" எனக் கூறினாள்.


ஆனால் சுவாமி விவேகானந்தர் என்ன சொன்னார் தெரியுமா?


"உன்னைப் போன்ற, என்னை போன்ற, ஒரு குழந்தைக்காக பல காலம் காத்திருப்பதற்கு பதிலாக, என்னையே உன் பிள்ளையாக இப்போதே ஏற்றுக்கொள். எனக்கும் இன்னொரு தாய் கிடைப்பாள் அல்லவா" என்றார்.


இதன் மூலம், உலக மாதர் அனைவரையும் தனது சகோதரிகளாக, தாயாக பார்க்கும் விவேகானந்தரின் பார்வை விளங்கும்.


1897ல் இந்தியா திரும்பினாலும், 1899 ஆம் ஆண்டு மீண்டும் வெளிநாடு பயணம் மேற்கொண்டார்.


அதனால் அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷனுக்கு உலகெங்கும் கிளைகள் தோன்றின.


கல்கத்தாவில் பிளேக் நோய் வந்து அழிவு ஏற்பட்டபோது, விவேகானந்தரும், நிவேதிதா போன்ற வெளிநாட்டு சிஷ்யைகளும், உயிரைப் பணயம் வைத்து மக்களைக் காப்பாற்றினார்கள்.


சுவாமி விவேகானந்தர் பொன் மொழிகள்


"கீழ் படிய கற்றுக் கொள், கட்டளையிடும் பணி தானாக வரும்"


"நீ பட்ட துன்பத்தைவிட, அதில் பெற்ற அனுபவமே முக்கியம்"


"பொய் சொல்லி தப்பிக்காதே. உண்மையை சொல்லி மாட்டிக் கொள். பொய் உன்னை வாழவிடாது. உண்மை உன்னை சாகவிடாது"


"பெண்மையைக் கொண்டாடாத, வீடானாலும் சரி, நாடானாலும் சரி முன்னேற இயலாது"


"மகத்தான சாதனை செய்ய நினைத்தால், பிறர் பாராட்டையும் செவிசாய்க்கக் கூடாது, பிறர் பழியையும் ஏற்கக் கூடாது.


"ஆயிரம் முறை தோல்வி கண்டாலும், ஆயிரத்தோராவது முறையும் முயற்சி செய்ய வேண்டும்".


"பொறாமையும், பகையும் உன்னை அழித்துவிடும்"


"சுறுசுறுப்பு மட்டுமே, சோம்பலை விரட்டும் ஆயதம்".


இளைஞர்களுக்கு எழுச்சியை, அவரது உரை ஊட்டியதால் ஜனவரி 12 ஆம் தேதி, "தேசிய இளைஞர்கள் தினமாக" கொண்டாடப்படுகிறது.


சுவாமி விவேகானந்தர் வாழ்வில் நடந்த நிகழ்வுகள்


ஒரு முறை ஒரு தம்பதியினரை, மாடு ஒன்று முட்ட வந்தது. மாடு தாக்குவதற்கு தயாரான போது, கணவன் மனைவியை விட்டு விட்டு ஓடிவிட்டான். விவேகானந்தர் அவன் மனைவியை முட்டாத அளவுக்கு மாட்டின் முன்னே எதிர்த்து நின்றார். அதைப் பார்த்த மாடு அவரை எதிர் கொள்ளாமல், ஓடிக் கொண்டிருந்த அவளுடைய கணவனை துரத்தத் தொடங்கியது.

துன்பம் வந்தால் துணிந்து எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தக் கதையைக் கூறுவார் விவேகானந்தர்.


விவேகானந்தர் சிறுவயதில் நண்பர்களோடு படகில் செல்லும்போது, உடல் நலமில்லாத சிறுவன் ஒருவன் வாந்தி எடுத்துவிட்டான். படகோட்டி படகை சுத்தப்படுத்தி தருமாறு கேட்டான். சிறுவர்களால் முடியவில்லை. இரண்டு மடங்கு பணம் தருவதாக சொல்லியும் படகோட்டி கேட்கவில்லை. என்ன செய்வதென்று தெரியாத நிலையில், நரேந்திரன் சாலையில் நின்று கொண்டிருந்த ஆங்கிலச் சிப்பாய்களிடம் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் முறையிட்டான். சிப்பாய்கள் வந்து படகுக்காரனை விரட்டிவிட்டார்கள். சிறு வயதிலேயே இப்படிப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் துணிவு விவேகானந்தருக்கு இருந்தது.


மன ஒருநிலை


ஒரு முறை ஆற்றில் மிதந்து வரும் இலைச் சறுகுகளைத் துப்பாக்கியால் சுட்டு சிறுவர்கள் சிலர் விளையாடினார்கள். யாராலேயும் குறிபார்த்து அந்தச் சறுகுகளை சுட முடியவில்லை. அதைப் பார்த்து விவேகானந்தர் சிரித்தாராம். அவர் ஏளனமாக சிரிப்பதாக கருதிய சிறுவர்கள், உங்களால் இதை குறி பார்த்து சுட முடியுமா? என கேட்டார்கள். துப்பாக்கியை கையில் வாங்கிய விவேகானந்தர், நீரில் ஓடிக்கொண்டிருந்த எல்லா சறுகுகளையும் குறி தவறாமல் சுட்டார்.


"நீங்கள் துப்பாக்கி சுடுவதில் வல்லவரா?" என சிறுவர்கள் கேட்டார்கள். அதற்கு விவேகானந்தர் குறி பார்த்து சுட வல்லமை தேவையில்லை. மனதை ஒரு நிலைப்படுத்தினால் போதும் என அறிவுரைக் கூறினார்.


சாரதா தேவி


இராமகிருஷ்ணரின் போதனைகளைப் பரப்ப தான் வெளிநாடு செல்ல, அவரது மனைவி சாரதா தேவியிடம் அனுமதி கேட்டார் விவேகானந்தர். சமையல் செய்து கொண்டிருந்த சாரதா தேவி, அருகில் உள்ள கத்தியை எடுத்துத் தருமாறு விவேகானந்தரிடம் கேட்டார். விவேகானந்தர் தனக்கு துன்பம் வந்தாலும் பரவாயில்லை எதிரில் உள்ளோர்க்கு துன்பம் நேரக்கூடாது என்று எண்ணி கத்தியின் கூர்முனையை பிடித்து எடுத்து கொடுத்த முறையைப் பார்த்த சாரதா தேவி, "நீ விரும்பியபடி போய் வா" என்றார்.


முடிவு


இளைஞர்களின் எழுச்சியை தட்டி எழுப்பிய விவேகானந்தர், ஆதிசங்கரர் 32 வயதில் மறைந்தது போல, பாரதியார் 38 வயதில் மரணம் அடைந்தது போல, வள்ளலார் 51 வயதில் மறைந்தது போல தனது 40 ஆவது இளம் வயதிலேயே 1902 ஆம் ஆண்டு ஜுலை 4 ஆம் தேதி தியானத்திலே சமாதி ஆனார்.


கட்டுரை PDF


➤ சுவாமி விவேகானந்தர் பற்றிய கட்டுரையை PDF வடிவில் பெற இங்கே தொடவும்


மேலும் விவேகானந்தர் பற்றிய தகவல்களுக்கு இவற்றைக் காண்க


1. விவேகானந்தர் ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்த நிகழ்வு


2. விவேகானந்தர் பொன்மொழிகள்


3. இறை பக்தி உங்களுக்கு என்ன தந்தது?

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு