Trending

இக்கிகய்: நூறு ஆண்டுகள் வாழ்வதற்கான ஜப்பானிய இரகசியம்

இக்கிகய்: நூறு ஆண்டுகள் வாழ்வதற்கான ஜப்பானிய இரகசியம்

இந்தத் தலைப்பை பார்த்தவுடன், இந்தக்காலத்தில் நூறு ஆண்டுகள் வாழ முடியுமா? இதெல்லாம் நடக்கின்ற கதையா? என கேட்கலாம்.

இந்தக் கட்டுரையை எழுதும் எனக்கு ஐம்பெத்தெட்டு வயதாகிறது. நான் நூறாண்டு வாழ்வேனா? என்றால் அது நடக்காது. ஏன் தெரியுமா? நான் சொல்லுகின்ற விஷயத்தை, எனது ஐந்து வயதிலிருந்தே நான் கடைப்பிடித்திருக்க வேண்டும். அது நடக்காத போது, இதுவும் நடக்காது.

அதற்கு என்ன செய்ய வேண்டும்?

பெற்றோர்களாய் இருப்பவர்கள், சின்ன வயதிலிருந்தே, இக்கட்டுரையில் குறிப்பிடும் கருத்துகளைப் பிள்ளைகளுக்குக் கற்றுத் தர வேண்டும்.

ஐம்பது வயதில் "கேட்டராக்ட்" வந்த ஒருவர், யாரோ ஒருவர் சொல்வதைக் கேட்டு சூரிய நமஸ்காரம் செய்தால் கண் பாதிப்பு போய்விடுமா? போகாது. 

கோவிலில் கைங்கரியம் செய்து வாழும் அடியார் வீட்டுப் பிள்ளைகள் காலை ஏழு மணிக்கு குளித்து சூரியனை நேருக்கு நேர் பார்த்து வணங்குவதை நான் சிறுவயதில் பார்த்திருக்கிறேன்.

அப்படி சூரியனை வணங்கும் போது, சூரியனின் மிதமான அந்த ஒளி, கண்ணில் புகைப் போல் படியும் படிவுகளை, அவ்வப்போது அகற்றிவிடும்.

அதனால் அவர்களுக்கு கண் புரை வருவதில்லை. வெள்ளெழுத்து வருவதில்லை. சாளேஸ்வரம் வருவதில்லை. எண்பது வயதில்  கூட கண்ணாடி போடாமல் பத்திரிக்கைகளை அவர்களால் படிக்க முடிகிறது.

அதனால்தான் கண்கெட்ட பிறகு, சூரிய நமஸ்காரம் எதற்கு? என்று சொன்னார்கள். கண் கெடாத போதே சூரிய நமஸ்காரம் செய்யப் பழக வேண்டும்.

சரி, நாம் விஷயத்துக்கு வருவோம்.

நூறு ஆண்டு வாழ வேண்டுமானால் "எண்ணெய் சேர்க்காதே, புளி சேர்க்காதே இனிப்பு சேர்க்காதே"  என்று வாட்ஸ்ஆப் போல அறிவுரைக் கூறுவதால் பலன் எதுவும் இருக்காது எனக் கருதுகிறேன்.

இக்கிகய்

நான் சமீபத்தில் ஜப்பானிய நூல் ஒன்றைப் படித்தேன். "இக்கிகய்" அதன் பெயர். இக்கிகய் - நீண்ட ஆயுளுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வதற்கான ஜப்பானிய இரகசியம். இக்கிகய் என்றால் "எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது தருகின்ற மகிழ்ச்சி". அதை எழுதியவர்கள் ஹெக்டர் கார்சியா மற்றும் பிரான்செஸ்க் மிராயியஸ் ஆகிய இருவர். தமிழில் PSV குமாரசாமி மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது.

அவர்கள் நீண்ட நாள் வாழ்வது பற்றி, தங்களுக்குள் உரையாடும் போது, ஒரு கருத்தை முன் வைத்தார்கள்.

அதாவது உலகிலேயே, நூறாண்டு கடந்தும் உயிர் வாழ்பவர்கள் ஜப்பானியர்களே. அவர்களைப் பற்றிய பழக்க வழக்கங்களை அறிந்தாலே, அதிக நாள் உயிர் வாழ்வதற்கான வழித் தெரிந்துவிடும் அல்லவா? அதைப் பிறநாட்டு மக்களுக்குச் சொன்னால் அவர்களும் அதிக நாட்கள் ஆரோக்யமாக வாழ வழி கிடைக்குமல்லவா?

அதனால் இருவரும் ஜப்பான் சென்றார்கள்.  ஜப்பானில் "ஒக்கினாவா" என்று ஒரு தீவு இருக்கிறது. அங்கு இலட்சம் பேரில் 25 பேர் நூறாண்டு கடந்தும் வாழ்பவர்கள். அதிலும் அந்தத் தீவில் "ஒகிமி" என்ற நகரம் உள்ளது. உலகிலேயே அதிக வயதானவர்கள் வாழும் நகரம் ஒகிமிதான். வயதானவர்கள் என்றால், ஏதோ படுக்கையில் படுத்திருப்பார்கள் என்று நினைத்து விடாதீர்கள். அந்த வயதிலும் அவர்களுக்குரிய வேலைகளை, அவர்களே செய்து கொள்வார்கள். ஆக்கப்பூர்வமான ஏதோ ஒரு வேலையைச் செய்து கொண்டே  இருப்பார்கள்.

அவர்களின் வாழ்க்கை இரகசியத்தை நேரில் சென்று, பலரோடு பல சந்திப்புகளை நடத்தி அவர்கள் ஆராய்ந்தார்கள்.

அவர்கள் ஆராய்ச்சி செய்து, இருநூறு பக்கங்கள் எழுதிய புத்தகத்தின் சாராம்சத்தை, நான் இரண்டு பக்கங்களில் சுருக்கித் தருகிறேன். இதுவொரு மதிப்புரை போலத்தான்

ஜப்பானியப் பழக்கங்கள்

"அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். செய்யும் வேலையை விருப்பத்துடன் செய்கிறார்கள். புதிதாக ஒருவரைப் பார்த்தால் கூட, நீண்ட காலம் பழகியவர்களைப் போல அன்பு செலுத்துகிறார்கள்.

முருங்கை இலையின் கொதி நீரைக் குடிக்கிறார்கள். பசுந் தேயிலை நீரை சுட வைத்து, பால் சேர்க்காமல் அருந்துகிறார்கள். அளவாகச் சாப்பிடுகிறார்கள். தேவையான அளவு மட்டும் ஓய்வு எடுக்கிறார்கள். சிறிய அளவிலான உடற்பயிற்சிகளைக்  கடைபிடிக்கிறார்கள். எல்லோரையும் சகோதர, சகோதரிகளாகப் பாவித்து, உதவிகளைச் செய்கிறார்கள். இன்ப, துன்பங்களில் பங்கெடுக்கிறார்கள். அதில் மகிழ்ச்சியும் அடைகிறார்கள்.

உணவாகக் காய்கறிகளையும், பழங்களையும் அதிகம் சாப்பிடுகிறார்கள். முடிந்தவரை காய்கறிகளை, அவர்கள் தோட்டத்திலேயே விளைய வைக்கிறார்கள்.


பெரும்பாலும் வேலைக்கு நடந்தே செல்கிறார்கள். பல மாடிக் கட்டிடங்களில் கூட, மின் தூக்கிகளை அவர்கள்  பயன்படுத்துவதில்லை.


குறைவாக சாப்பிட, சிறிய தட்டுகளைப் பயன்படுத்துகிறார்கள். சீனிக் கிழங்கு, மீன் வகைகளை அதிகம் எடுக்கிறார்கள்.


இரவு ஒன்பது மணிக்கே உறங்கச் சென்றுவிடுவார்கள். காலை ஐந்தரை மணிக்கு எழுந்துவிடுவார்கள்.


உடல் பருமன் ஆகாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.


செல்போன் டிவி போன்ற சாதனங்களை அதிகம் பயன்படுத்துவது இல்லை.


வசந்தமோ, வேனிலோ, குளிரோ, கோடையோ இயற்கையை அதன் வழியில் அனுபவிக்கிறார்கள்.


விரல்கள் அசைந்து கொண்டே இருக்குமாறு, கைகளுக்கு வேலை கொடுக்கிறார்கள்.


அவர்கள் முகத்தில் எப்போதுமே, ஒரு அசாதாரணமான ஒரு மகிழ்ச்சி, இருந்து கொண்டே இருக்கிறது.


விடுமுறை நாட்களில், பொது வெளியில் கோல்ஃப் போன்ற விளையாட்டுகளில், வயது வித்தியாசம் இல்லாமல், ஈடுபடுகிறார்கள்.


பிறந்த நாள் போன்றக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு ஆடிப்பாடி மகிழ்கிறார்கள்.


அவர்கள் தங்களுக்குள் நீண்ட கால இலக்கு ஒன்றை நிர்ணயம் செய்து கொண்டு, அந்த இலக்கை நோக்கி பயணிக்கிறார்கள். வாழ்வதற்கு ஒரு நோக்கம் இல்லையென்றால் விரக்தியே ஏற்படும்.


ஒரு முறை சிறுநீரகம் மற்றும் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட முன்னால் முதல்வர் எம்ஜிஆர் அவர்கள், அமெரிக்க புரூக்ளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். சிகிச்சை அளித்த டாக்டர் கானு, "பயப்படாதீர்கள் நீங்கள் பிழைத்துக் கொள்வீர்கள்" என்றார். அதற்கு எம்ஜிஆர், "நான் இறக்க மாட்டேன் என்பது எனக்குத் தெரியும். ஏனென்றால் எனது தாயார் சொல்லி வைத்து சென்ற சில ஆசைகளை நான் நிறைவேற்ற வேண்டி உள்ளது" என்றார். இதன் மூலம் இலக்கை நோக்கி பயணிப்பவர்களுக்கு, அந்த இலக்கை அடையும் வரை மரணம் இல்லை என்பதை உணரலாம்.


வேலையிலிருந்து ஓய்வு பெறுவது என்பது, அவர்கள் வாழ்க்கையில் இல்லை. வயது ஆகிவிட்டது என அவர்கள் ஒரு போதும் நினைப்பதுக் கூட இல்லை.


பாலியல் உணர்வுகள் கூட, எழுபது, எண்பது வயதிலும், ஆண்களுக்கோ, பெண்களுக்கோ குறைவதில்லை. தேநீர் அருந்துவதாலும், 80 சதவிகிதம் மட்டும் உணவு உண்பதாலும், அவர்களுடைய இரத்தத்தில் ஜோடியற்ற மூலக்கூறுகள் மிகவும் குறைவாக இருக்கின்றன. பாலுறவுத் தேவைக்கான உயிரணுக்கள் வேகமாக மூப்படைவதற்கு ஜோடியற்ற மூலக்கூறுகள் தான் காரணமாகும்.


ஆரோக்யமான வாழ்க்கையினால், ஹார்மோன்கள் புதுபிக்கப்படுவதால், மறதி நோய் அவர்களுக்கு இல்லை.


விளைச்சல் குறைவாக உள்ளவர்களுக்கு, விளைச்சல் அதிகமாக உள்ளவர்கள் கொடுத்து உதவுகிறார்கள். மீதமிருக்கும் பணத்தைக் கூட, பணத்தேவை உள்ளவர்களுக்கு கொடுத்து மகழ்கிறார்கள்.


மனதை இளமையாக வைத்திருப்பதும், உடற்பயிற்சியும், உடல் மூப்படையாமல் இருக்க உதவுகிறது.


சில நிறுவனங்களில் வயதை நிர்ணயித்து ஓய்வு வழங்கினாலும், அதே வேலையை ஊதியம் இல்லாமல் கூடச் செய்கிறார்கள்.


போட்டி, பொறாமை போன்ற எதிர்மறை எண்ணம் இல்லாததால், மன அழுத்தம் அவர்களுக்கு இல்லை.


வீட்டில் அமர்ந்து கிடக்காமல், பொழுது போக்கும் பொது நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கிறார்கள். ஆடல், பாடலில் ஈடுபடுவது அவர்களுக்கு அவர்களது வயதை மறக்கச் செய்கிறது.


போதுமான தூக்கத்தினால் சுரக்கும் மெலட்டோன் எனும் ஹார்மோன் மூப்படைவதைத் தடுக்கிறது.


கயிற்றால் கட்டப்பட்ட கழுதை, தன்னை விடுவிப்பதாக நினைத்துக் கொண்டு கட்டியிருக்கும் கம்பத்தை சுற்றி வந்தால், என்ன நடக்கும்?  அது போலத்தான் எதிர்மறை எண்ணங்கள் நம்மை மேலும் சிக்கலாக்கிவிடும். இதை உணர்ந்தவர்கள் ஜப்பானியர்கள்.


ஒரு மணி நேர வேலைக்கு, பத்து நிமிடம் ஓய்வு எடுத்துக்கொள்கிறார்கள்.


ஒரு நேரத்தில், ஒரு வேலையை மட்டுமே எடுத்துக்கொள்வார்கள். இதனால் கவனம் சிதறாமல் பாதுகாக்கப்படுகிறது.


ஒரு வேலை அலுப்பாக இருந்தால், ஜப்பானியர்கள் ஓய்வெடுப்பதில்லை. மாறாக முற்றிலும் மாறுபட்ட, புதிய வேலையில் ஈடுபடுகிறார்கள். உலகப் பணக்காரர் பில்கேட்ஸ் கூட, கணினியில் சில பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்படும் போது, மனதை இலகுவாக்க, வீட்டில் உள்ள பாத்திரங்களைக் கழுவ போய்விடுவாராம்.


நூறாண்டு கடந்தோர் கருத்து


117 வயது வரை வாழ்ந்த மிசாவா ஒகாவா, "நன்றாக சாப்பிடுங்கள். நன்றாக உறங்குங்கள்" என்று சொல்கிறார்.


116 வயது வரை வாழ்ந்த மரியா  காப்போவில்லா, தான் ஒரு போதும் வாழ்நாளில் இறைச்சியை உண்டதில்லை எனக் கூறுகிறார்.


122 வயது வரை வாழ்ந்த ஜீன் கால்மென்ட் என்பவர் "எல்லாமே சிறப்பாக நடக்கிறது" என்ற நேர்மறை எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.


114 வயது வரை வாழ்ந்த வால்டர் புருனிங், "உடலையும், மனதையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டாலே, நீண்ட காலம் வாழலாம்" என்கிறார்.


111 வயது அலெக்சாண்டர் இமிச், "இறப்பைப் பற்றிய அச்சமோ, கவலையோ இல்லாதிருந்தாலே, இறப்பு வராது" என்கிறார்.


"நீங்கள் கற்பதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள்" என்கிறார் ஒயிட்.


இளமைத் துள்ளலுடன் இருப்பது, பிறருக்காக இதயத்தை திறந்து வைப்பது, தோட்டங்களைப் பராமரிப்பது, விரல்களுக்கு வேலை கொடுத்துக் கொண்டே இருப்பது, அதிகாலை எழுவது, காய்கறிகளை  உண்பது, நண்பர்களை நேசிப்பது, சிரித்துக் கொண்டே மகிழ்வாக இருப்பது, இசை, நடனங்களில் மனதைச் செலுத்துவது, சர்க்கரையைக் குறைத்து தானியங்களை உண்பது, நல்ல நண்பர்களை அருகில் வைத்துக் கொள்வது, போன்றவை ஜப்பானியரின் ஆயுள் நீட்டிப்புக்கான காரணியாக அமைகின்றன.


மேலே சொல்லப்பட்ட கருத்துகளை நாம் பின்பற்ற, நாம் ஒரு பைசா கூட செலவழிக்க வேண்டியதில்லை. மனத் தெளிவு ஒன்று இருந்தாலே போதும்.


இறுதியாக


ஒரு பதிப்பகத்தில் ஒருவர் மூன்று மணி நேரமாக உட்கார்ந்து இருந்தாராம். அவரை அழைத்த பதிப்பகத்தை நடத்துபவர், இருநூறு ரூபாயைக் கொடுத்து, அடுத்த வாரம் வரச் சொன்னாராம். அவரும் அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு, சென்றாராம். அவர் யார் என விசாரித்த போதுதான் தெரிந்தது அவர்தான், "ஒரே மாதத்தில் லட்சாதிபதியாவது எப்படி?" என்ற புத்தகத்தை எழுதியவர். இந்த வார இராயல்டியை வாங்கிச் செல்கிறார்.


நிச்சயம் அந்த எழுத்தாளரைப் போல் அல்ல ஹெக்டர் கார்சியாவும் பிரான்செஸ்க் மிராயியசும். அவர்களால் உலக மக்கள் அனைவரும் நீண்ட ஆயுளுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வதையே நோக்கமாய் கொண்டு எழுதப்பட்ட இந்நூல் உண்மையிலே ஓர் அரிய இரகசியம் தான்; இக்கிகய்


ஜெ மாரிமுத்து

✉️ jmarimuthutvr@gmail.com


1 Comments

  1. மேலே சொல்லப்பட்ட கருத்துகளை நாம் பின்பற்ற, நாம் ஒரு பைசா கூட செலவழிக்க வேண்டியதில்லை. மனத் தெளிவு ஒன்று இருந்தாலே போதும்.

    எப்படி?

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு