Trending

பொன்மனச் செம்மல் எம்ஜிஆர்

 

பொன்மனச் செம்மல் எம்ஜியார்

1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இராமாவாரம் தோட்டத்தில் உள்ள தனது வீட்டில் முதல்வர் எம்ஜிஆர் மயங்கி விழுகிறார். உடனடியாக அப்பல்லோ மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். நாள்பட்ட நீரிழிவு நோயால் இரு சிறுநீரகங்களும் செயல் இழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிக்கிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் ஹன்டே மும்பையிலிருந்து சிறுநீரக சிறப்பு மருத்துவர்களை எல்லாம் வரவழைக்கிறார். மாற்று சிறுநீரகம் பொருத்துவது மட்டுமே உயிர்பிழைக்க ஒரே வாய்ப்பு என அறிவிக்கிறார்கள். அப்பல்லோவில் இந்த ஆபரேஷனை செய்து  தப்பித்தவறி ஏதாவது ஆகி விட்டால் என்ன செய்வது என்று சிறுநீரக சிகிச்சையில் உலகப்புகழ் பெற்ற அமெரிக்காவில் உள்ள நியூயார்க் புரூக்ளின்  மருத்துவணைக்கு கொண்டு செல்கிறார்கள்.


தமிழகமே பரபரப்பாகிறது. சீரகத்தண்ணீர் குடித்து வாழும் எம்ஜிஆருக்கு சிறுநீரகக்கோளாறா?. குடிப்பழக்கம் இல்லாத ஒரு சில நடிகர்களில் எம்ஜிஆரும் ஒருவர். அவரோடு அப்போது சினிமாவில் நடித்து கொண்டிருந்த சிவாஜி கணேசன், VK இராமசாமி, நாகேஷ், தேங்காய் சீனிவாசன், அசோகன், மேஜர் சுந்தரராஜன் என்று எல்லாருமே குடிகாரர்கள்தான். நம்பியாரும் எம்ஜியாரும்தான் குடிக்கமாட்டார்கள். அதுமட்டுமல்ல சினிமாவில் கூட குடிப்பது போல நடிக்க மாட்டார் எம்ஜிஆர். ஒளிவிளக்கில் மட்டும்,  "தைரியமாக சொல் நீ மனிதன்தானா" என்ற பாடலில் மட்டும் குடிப்பது போல நடித்திருப்பார். அதில் இரட்டை வேடம். கெட்டவன் வேடத்தில் உள்ள எம்ஜிஆர் குடிப்பது போல நடித்து இருப்பார். அது மட்டுமல்ல சிகரெட் குடிப்பது போன்ற காட்சியில் கூட அவர் நடித்ததில்லை. ஆனால் நாள்பட்ட நீரிழிவு இருந்து உள்ளது. நீரிழிவை அவ்வப்போது சோதித்து பார்க்காமல் கட்டுக்கடங்காமல் போய்விட்டால் அது கண், கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றை பாழ்படுத்திவிடும்.  முதல்வராக இருந்த ஜெயலலிதா வீட்டில் மயக்கம் அடைந்து அப்பல்லோ வந்த போதும் அவருக்கு இரத்த சர்க்கரை அளவு 800 இருந்தது. அவருடைய எடை 108 கிலோ. ஆறு அடிக்கும் குறைவாக உயரம் உள்ள ஒருவருக்கு இவ்வளவு எடை இருந்தால் இதயமோ நுரையீரலோ செயல்பாடு குறைந்துவிடும். அக்டோபர் மாதமே எம்ஜிஆர் அமெரிக்கா போனாலும் அவர் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை. நினைவு திரும்பி மீண்டும் நினைவு போய்விடும் நிலை. சில சமூக விரோதிகள் எம்ஜிஆர் இறந்து விட்டார். ஐஸ் பெட்டியில் வைத்துள்ளார்கள் என அவ்வப்போது புரளியை உண்டாக்கி கொண்டு இருக்கிறார்கள். அவர் மீது பாசம் செலுத்தும் தொண்டர்கள் கலங்கி போனார்கள். அவர் செய்த தருமம் அவரைக் காப்பாற்றி விடும் என தொண்டர்கள் நம்பினார்கள். மாற்று சிறுநீரகம் கொடுக்க அவரது அண்ணன் மகள் லீலாவதி அமெரிக்கா விரைந்தார். ஏனென்றால் இரத்த சொந்தம் உள்ளவர்களின் சிறுநீரகத்தைத்தான் அவர் உடல் ஏற்றுக்கொள்ளும் என்பதை மருத்துவர்கள் வலியுறுத்தி இருந்தார்கள்.  அன்று தனது சித்தப்பாவுக்கு ஒரு கிட்னியை கொடுத்த லீலாவதி ஒரு கிட்னியோடு 34 வருடம் வாழ்ந்து சமீபத்தில்தான் இறந்து போனார். நினைவு திரும்பும் நேரங்களில் அங்கு பணிபுரியும் ஜப்பான் டாக்டர் கானு என்பவர் "தைரியமாக இருங்கள் நீங்கள் நிச்சயம் பிழைத்து கொள்வீர்கள்" என்று சொல்வாராம். அதற்கு எம்ஜிஆர் "என்னைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். என்னுடைய அம்மா எனக்கென்று சில கடமைகளை கொடுத்து விட்டு சென்றுள்ளார். அது நிறைவேறும் வரை என் உயிர் போகாது" என்று சொன்னாராம். அம்மா மீது உயிரையே வைத்து இருந்தார் எம்ஜிஆர். ஏனென்றால் அவரது தந்தையார் எம்ஜிஆருக்கு 3 வயது இருக்கும்போதே இறந்துவிட்டார். அதன் பின்னர் அம்மாதான் எல்லாமே. அம்மாவின் மீது கடைசி வரை அன்பு செலுத்துவர்களை கடவுள் நல்ல நிலையில் வைத்து இருப்பார். பிரபலமானவர்களில் நான் பார்த்த உதாரணம் எம்ஜிஆர், கலைஞர், சிவாஜி இந்த மூன்று பேரும் அம்மாவை வணங்காமல் எந்த செயலையும் செய்ய மாட்டார்கள். எம்ஜிஆரின் அம்மா சத்யபாமா கணவர் கோபால மேனன் ஒரு நீதிபதி. கேரளாவை பூர்வீகமாய் கொண்ட குடும்பம் என்றாலும் உத்யோக நிமித்தமாய் இலங்கையில் வாழ்ந்தார்கள். அங்கேதான் 1917ல் கண்டியில் எம்ஜிஆர் பிறந்தார்.  அவருக்கே நல்லது கெட்டது சொல்லித் தருபவர் சத்யபாமா. ஆங்கிலேய அரசாங்கம் அவரை வற்புறுத்தி அந்தமானில் பணிபுரிந்த போது தினமும் சில இந்தியர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வற்புறுத்திய போது அந்த  பாவம் நமக்கு வேண்டாம் என பதவியை விட்டுவிடுங்கள் என கணவருக்கு யோசனை சொன்னவர் சத்ய பாமா. நீதிபதி பதவியிலிருந்து விலகியபின், ஆசிரியராக கூட வேலை பார்த்தார்.  எம்ஜிஆரோடு பிறந்தவர்கள் ஐந்து பேர். எம்ஜிஆர்தான் கடைசி. எம்ஜிஆர் பிறந்து மூன்று வருடத்தில் 1920ல் எம்ஜிஆரின் தந்தை மாரடைப்பால் இறந்து விட்டார். வறுமையும் நோயும் வாட்டியதில் இரண்டு பிள்ளைகள் மட்டுமே தப்பினார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு கணவரின்  வீடு உள்ள கேரளா  வந்தார்.  கணவருக்கு சேர வேண்டிய பங்கை அவர்களிடம் கேட்டார். அங்கு அவருக்கு ஆதரவாக யாருமில்லை.


அதனால் தனது தம்பி  நாராயணன் வசிக்கும் கும்பகோணயத்துக்கு பிள்ளைகள் சக்கரபாணியையும், இராமச்சந்திரனையும் அழைத்துக் கொண்டு வந்தார். அதிகம் படிக்க வைக்கமுடியவில்லை. நாராயணன் ஓரிஜினல் பாய்ஸ் கம்பெனி எனும் நாடகக் கம்பெனியில் வேலை பார்த்ததால் அங்கேயே இருவரையும் சேர்த்து விட்டார். சின்ன சின்ன வேடத்தில் நடித்து கொண்டிருந்த எம்ஜிஆர் 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி என்னும் படத்தில் கதாநாயகனாக நடித்தார். பின்னர் கலைஞர் வசனத்தில் இராஜகுமாரி, மந்திரி குமாரி, மருத நாட்டு இளவரசி, மலைக்கள்ளன் போன்ற படங்களில் நடித்தார். அப்போது எம்ஜிஆரை விட வசனகர்த்தா கலைஞருக்கு சம்பளம் அதிகம். சிவாஜியின் பராசக்தி கலைஞரின் வசனத்திற்காகவே ஓடிய படம். அதுவரை காங்கிரஸ்காரராக கதர் உடுத்தி கொண்டிருந்த எம்ஜிஆர்,  கலைஞரின் நட்புக்கு பிறகு  அவரது வாதத்திறமையான பேச்சுகளில் மயங்கி அண்ணாவின் திமுக வில் சேர்ந்தார். ஏற்கனவே கண்ணதாசனையும் சிவாஜியையும் திமுகவில் சேர்த்து வைத்திருந்தார் கலைஞர். இதற்கிடையில் திருமணத்தில் விருப்பம் இல்லாத எம்ஜிஆரை வற்பறுத்தி பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார் சத்யபாமா. பார்கவி காச நோயினால் இரண்டு வருடத்தில் இறந்துவிடவே அவரை மறக்க முடியாமல் பித்து பிடித்தவர் போலானார் எம்ஜிஆர். அதை மாற்றுவதற்காக சத்யானந்தவதியை திருமணம் செய்து வைத்தார் சத்யபாமா. பாசமுள்ள பெண்ணாக இருந்தாலும்  அவரும் பல நோய்களோடு போராடவே எம்ஜிஆர் வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் சென்றது. 50ல் மருதநாட்டு இளவரிசியில் நடித்த போது அதில் கதாநாயகியாக நடித்தவர் VN ஜானகி. ஜானகியின் கணவர் கணபதி பட்டு அய்யர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானது மட்டும் அல்லாமல் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கே வந்து  பணம் கேட்டு அடித்து துன்புறுத்த தொடங்கினார். இதைபார்த்து வேதனைப்பட்ட எம்ஜிஆர் ஒரு பெருந்தொகையை கொடுத்து பட்டு அய்யரிடம் VN ஜானகிக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று எழுதி வாங்கினார். பின்னர் மனைவியின் அனுமதியோடு VN ஜானகியோடு சேர்ந்து வாழ தொடங்கினார். சத்யானந்த தேவி 62ல் மரணம் அடைந்த பிறகு முறைப்படி திருமணம் செய்து கொண்டார். முதல் வண்ண திரைப்படமான அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் எம்ஜிஆர்தான் கதாநாயகன். தனது படங்களுக்கு என தனி ஃபார்முலாவை உருவாக்கிக் கொண்டார். ஏழைகளுக்கு உதவுபவராகவும் பெண்களை உயர்வாக சித்தரிப்பவராகவும் மத சின்னங்கள் அணியாதவராகவும் குழந்தைகளுக்கு புத்தி சொல்லும் பாடலை கொண்டவராகவும் தன் படங்களை அமைத்துக் கொண்டார். எம்ஜிஆரின் புகழ் பரவியது. ஏழைகளுக்கு நிறைய தருமகாரியங்களை செய்தார். அவருடைய புகழை அண்ணா சரியாக பயன்படுத்திக் கொண்டார். 1962 தேர்தலில் திமுக 50 இடங்கள் வெற்றிபெற எம்ஜிஆரின் பிரச்சாரமும் காரணம். அதற்கு பரிசாக மேலவை உறுப்பினராக அண்ணா எம்ஜிஆரை நியமித்தார். 1967 தேர்தலில் திமுக தேர்தல் நிதியாக ஒரு லட்ச ரூபாயை கலைஞரிடம் கொடுத்தார். ஆனால் அண்ணா எம்ஜிஆர் ஒரு லட்சம் நிதி கொடுப்பதை விட அவர் முகத்தை காட்டி ஓட்டு கேட்டால் போதும். தொகுதிக்கு முப்பதாயிரம் ஓட்டுக்களை வாங்கிவிடலாம் என்று கூறினார். தேர்தலுக்கு முன்பாக அடுத்த திரைப்படம் சம்பந்தமாக எம்ஜிஆரும் எம்ஆர் ராதாவும் பேசிக்கொண்டு இருந்தபோது வாக்குவாதம் முற்றி MR ராதா எம்ஜிஆரின் கழுத்தில் துப்பாக்கியால் சுட்டுவிட்டார். தமிழகமே பரபரப்பானது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அத்தனை நாளும் ஆயிரக்கணக்கான இரசிகர்கள் மருத்துவமனை வாசலிலேயே காத்துக் கிடந்தார்கள். குரல்வளையில் பாய்ந்த தோட்டாவை எடுத்தால் உயிருக்கு ஆபத்து என்று எடுக்காமல் விட்டுவிட்டார்கள். அதனால் அவரது பழைய வெங்கலக்குரல் போய்விட்டது.


எம்ஜிஆர் மருத்துவமணையில் சிகிச்சை பெறும் படத்தை ஒட்டி திமுக பிரச்சாரம் செய்தது. திமுக முதல் முறையாக ஆட்சியை பிடித்தது. எம்ஜிஆரும் பிரச்சாரத்துக்கு போகாமலையே பரங்கிமலை MLA ஆகிவிட்டார். ஆட்சியை பிடித்த இரண்டு ஆண்டுகளில் அண்ணா புற்று நோயால் இறந்து விடவே, "தம்பி வா தலைமை ஏற்க வா" என்று அழைக்கப்பட்ட நெடுஞ்செழியனுக்கு கிடைக்க வேண்டிய முதல்வர் பதவி மக்கள் செல்வாக்கு அதிகம் பெற்ற கலைஞருக்கு செயற்குழுவால் வழங்கப்பட்டது. இதற்கு எம்ஜிஆர் எடுத்த சில முயற்சிகளும் காரணம்.

புரட்சி நடிகர் என்று பட்டம் கொடுத்தவர் கலைஞர். மக்கள் திலகம் என்று பட்டம் கொடுத்தவர் தமிழ்வாணன். பொன்மணச்செம்மல் என்று பட்டம் கொடுத்தவர் யார்? திருமுருக கிருபானந்த வாரியார். அண்ணா மறைந்த போது ஒரு உபந்நியாசத்தில் வாரியார்,"கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை டாக்டர் மில்லரே நினைத்தாலும் காப்பாற்ற முடியாது." என மறைமுகமாக அண்ணாவின் மரணத்தை பற்றி பேசினார். அண்ணாவுக்கு சிகிச்சை அளித்தவர் டாக்டர் மில்லர். அதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் வாரியாரை தாக்க தொடங்கினார்கள். பத்திரிகைகளில் அவரை தாக்கியது எம்ஜிஆர் ரசிகர்கள் என்று செய்தி வந்தது. இதனால் வருத்தமடைந்த எம்ஜிஆர் ம.பொ.சி முலம் வாரியார் சுவாமிகள் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்து, அதில் அவரும் கலந்து கொண்டு வருத்தம் தெரிவித்தது மட்டும் அல்லாமல் அவர் மேற்கொண்ட ஒரு கோவில் திருப்பணிக்கு முழுத்தொகையும் அளித்தார். இதை கண்டு வியந்த வாரியார் எம்ஜிஆருக்கு பொன்மனச்செம்மல் என்ற பட்டத்தை வழங்கினார். முதல்வராக இருந்த போது சாலையில் கார் வராமல் காத்திருந்த  வாரியாரை, எம்ஜிஆர் தனது காரிலேயே சந்து பொந்துகள் நிறைந்த சிந்தாதிரிப்பேட்டைக்கு அழைத்து சென்று விட்டுவிட்டு வந்தார்.

திமுக பொருளாளராக இருந்த எம்ஜிஆர், தனக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பதவியை மதியழகன் மூலமாக கேட்டார். தனக்கு போட்டியாக வந்துவிடுவாரோ என்று எண்ணிய கலைஞர், சினிமாவை விட்டுவிட்டால் அந்த பதவியை தருவதாக கூறினார். அதனால் திருக்கழுக்குன்றம் பொதுக்கூட்டத்தில் பேசிய எம்ஜிஆர் திமுகவினர் கிளைக்கழக செயலாளர் முதல் முதல்வர் வரை சொத்துக் கணக்கை காட்டவேண்டும் என்று பேசினார். பொதுக்குழுவில் பேச வேண்டியதை பொதுவெளியில் பேசியதாக  கூறி திமுகவில் இருந்து நீக்கினார்கள். திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அவரது உலகம் சுற்றும் வாலிபனுக்கு பல தடைகளை ஏற்படுத்தினார்கள். ஆனால் அதையும் மீறி அப்படம் வெற்றி படமாக எம்ஜிஆருக்கு அமைந்தது. பின்னர் நடந்த திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் திமுகவை தோற்கடித்து அதிர்ச்சி ஏற்படுத்தினார். 1977ல் நடந்த  சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியையும் கைப்பற்றினார். அதன் பின்னர் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 39 இடங்களில் 37 இடங்களில் திமுக கூட்டணி வெற்றிபெற்றாலும் சட்டமன்ற தேர்தல் என்று வரும்போது எம்ஜிஆருக்கே வாக்களித்தார்கள். எனக்கு தெரிந்து நாகப்பட்டினம் இடைத்தேர்தல் மயிலாடுதுறை இடைத்தேர்தல் அண்ணாநகர் இடைத்தேர்தல் பட்டதாரிகள் தொகுதி தேர்தல் ஆசிரியர் தொகுதி தேர்தல் நகரசபை தேர்தல் போன்றவற்றில் அதிமுக தோல்வியடைந்தாலும் சட்டமன்ற தேர்தல் என்று வந்தால் மக்கள் எம்ஜிஆருக்கே வாக்களிப்பார்கள். சத்துணவுத்திட்டம், இலவச வேட்டி சேலை, இலவச காலணித்திட்டம் சமுதாயக்கூடங்கள் தமிழ் பல்கலைக்கழகம் மகளிர் பல்கலைக்கழகம் போன்றவை எம்ஜிஆரின் சாதனைகள். 1967க்கு பிறகு திராவிடகட்சிகளின் திட்டங்களில் பெரும்பாலும் கலைஞர் கொண்டு வந்தாலும் பெண்கள் வாக்குகளை பெறுவதில் கலைஞரால் எம்ஜிஆருக்கு எதிராக வெற்றி பெற முடியவில்லை. அதற்காக எம்ஜிஆர் கலைஞரை மதிக்க தவறியதில்லை. 1979ல் திமுகவை அதிமுகவுடன் இணைக்க பிஜுபட்நாயக் பேச்சு வார்த்தை நடத்தினார். திமுக என்ற கட்சி பெயரும் உதயசூரியன் சின்னமும் மட்டும் இருந்தால் போதும் எம்ஜிஆருடன் இணையத்தயார் என்று சொன்னார் கலைஞர். சில காரணங்களால் இணைப்பு நின்று போனது. நீதி கேட்டு நெடும்பயணம் என்று சுப்பிரமணிய பிள்ளை கொலைக்காக கலைஞர் மதுரையிலிருந்து திருச்செந்தூருக்கு நடைப்பயணம் மேற்கொண்ட போது அவரது கால்கள் கொப்புளித்தது. இதை அறிந்த எம்ஜிஆர் கலைஞருக்கு நேரடியாக போன் செய்து நடைபயணத்தை நிறுத்துமாறு வேண்டி கொண்டார். அதுமட்டுமல்லாமல் அரசு மருத்துவக்குழுவையும் அனுப்பிவைத்தார். அமைச்சர் இராஜாமுகமது கருணாநிதி என்று அழைத்தபோது மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் கலைஞர் கருணாநிதி  என்று சொல்ல வேண்டும் அறிவுறுத்தியவர் எம்ஜிஆர்.  காஞ்சி மடத்துக்கு எதிரே பெரியார் சிலை வைக்க அனுமதி மறுத்த எம்ஜிஆர்தான் பெரியார் நூற்றாண்டு விழாவை கொண்டாடினார். கோயமுத்தூரை பிரித்து ஈரோட்டை தலைநகராக கொண்ட பெரியார் மாவட்டத்தை உருவாக்கினார். சாதிப் பெயர்களை தெருக்களில் இருந்து நீக்கினார். மங்களூர் மூகாம்பிகையை வெளிப்படைமாக கும்பிட்ட எம்ஜிஆர்தான் பெரியாரின் எழுத்து சீர்த்திருத்தத்தை அமுல்படுத்தினார்.


மனித நேயமிக்க பண்பாளர் எம்ஜிஆர். வீட்டுக்கு வந்தவர்களை சாப்பிடாமல் அனுப்பியதில்லை எம்ஜிஆர். ஒருமுறை ஸ்டன்ட் மாஸ்டர் இராமகிருஷ்னன், மரத்தில் அடிபட்டு, பாம்புகள் மீது விழுவதாக காட்சி. அப்போது இராமகிருஷ்னனிடம் "நீயும் ஜாக்கிரதையாக விழ வேண்டும். அதற்காக பாம்பின் மேலும் விழுந்து விடக்கூடாது. பாம்பும் பாவம்தானே என்றாராம்.


அதனால்தான் நானும் பிரார்திக்கிறேன் என்ற தலைப்பில் எம்ஜிஆர் பிழைத்து வர வேண்டும் என்று கலைஞர் "கலைஞர் கடிதம்" எழுதினார். தமக்கு கடவுளிடம் பிரார்த்தனை செய்து பழக்கமில்லை என்றாலும் தன்னுடைய நாற்பது ஆண்டு கால நண்பருக்காக பிராத்திப்பதாக கலைஞர் கூறினார். அந்தக் கடிதத்தில் தன்னுடைய தாயின் கையால்  எம்ஜிஆர் பலமுறை உணவு உண்டதையும், ஒன்பது படங்களில் இணைந்து பணியாற்றியதையும் நினைவு படுத்தி கண்ணீர் வடித்திருப்பார். தனது அரசியல் எதிரியையே எம்ஜிஆர் சலனப்படுத்தி கண்ணிர் விட வைக்கிறார் என்றால் சாதாரண மக்களுக்கு அது எப்படி இருந்திருக்கும்?


"உள்ளமதில் உள்ளவரை, அள்ளித்தரும் நல்லவரை விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்? மேகங்கள் கண்கலங்கும் மின்னல் வந்து துடிதுடிக்கும் வானகமே உருகாதோ வள்ளல் முகம் பாராமல் உன்னுடனே வருகின்றேன் என் உயிரைத் தருகின்றேன் மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு" என்ற வாலியின் இந்தப் பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. "நீங்க நல்லா இருக்கனும் நாடு முன்னேற" என்ற பாடல் எல்லா திரையரங்கிலும் ஒலித்தது.


பிராத்தனை பலித்தது. எம்ஜிஆர் உயிர்பிழைத்தார். இடையில் ஒரு தேர்தலும் நடந்தது. அமெரிக்காவில் படுத்தபடியே ஆண்டிப்பட்டியில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக முதல்வரானார் எம்ஜிஆர். முதல்வரான பிறகும் உடல் சீரடையவில்லை. கத்திப்பாரா நேரு சிலை திறப்பு விழாவில்  இராஜிவ் காந்தியோடு கலந்து கொண்டார். திக்கி திணறி பேச முடியாமல் பேசினார்.  எம்ஜிஆரின் பேச்சை கேட்க வந்தவர்கள் அவர் படும் சிரமத்தை பார்த்து "பேசாதே தலைவா" என்று கண்ணீர் விட்டு அழுதார்கள்.


இதன்பின்னர் இரண்டாண்டுகள் கழித்து அண்ணாவின் தலைவரான பெரியார் மறைந்த டிசம்பர் 24 ஆம் தேதி,  அண்ணாவின் தம்பி எம்ஜிஆரும் மறைந்தார்


ஜெ மாரிமுத்து

தென்றல் இதழ் 33

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு