Trending

பௌத்தத்தை நோக்கி அம்பேத்கரும் காந்தியடிகளும்

பௌத்தத்தை நோக்கி அம்பேத்கரும் காந்தியடிகளும்

{tocify} $title={உள்ளடக்கம்}

தொடக்கவுரை


பண்டைய இந்தியா பெரும் ஞான நிலப்பரப்பாக இருந்தது என்பதற்கு பௌத்த மதமே சாட்சி. பௌத்தத்தை ஒரு மதம் என்று கூறுவதும் பொருத்தாத கூற்றாகும். பௌத்தம் ஒரு நிலை. தத்துவமும் சமயமும் கட்டுண்டு சிறைக்கைதியாய் கிடந்த நமது இந்திய தேசத்தை தத்துவம் வேறு சமயம் வேறு என்ற பின்நவீனத்துவப் போக்கை பல நூற்றாண்டு முன்பே தன் மென்மையான போக்கால் எடுத்துரைத்த பேரறிவு நிலை பௌத்தம். புத்தர் என்பது கூட பௌத்த மதத்தில் ஒரு நபரைக் (கௌதம புத்தரை) குறிக்கவில்லை. புத்தர் என்பதும் ஒரு நிலையே (state) அந்நிலையை அடைந்த அனைவருமே புத்தராவார்கள். இந்தியாவில் பௌத்த கூற்றுக்களை, பௌத்த சிந்தனைகளை, பௌத்த சமத்துவ பார்வையினை செம்பட புரிந்து எழுந்த இருபெருந் தலைவர்கள் அம்பேத்கரும் காந்தியடிகளும் ஆவர். பௌத்தம் தனி மனித சுதந்திரத்தையும், பல்லுயிர்நேய சமத்துவத்தையும், சகோதரத்தையும் வலியுறுத்தும் பக்குவம் கொண்டது. அந்த அன்பு மயமான மதத்தை இந்தியா தழுவியது என்றால் அதிகாரம் (power), ஏற்றத்தாழ்வு, சாதிகள், சமயங்கள் எல்லாம் ஆட்டங்கண்டு விடும். இப்போதும் உலகத்தை கவனித்தீர்களானால் அறிவில், மனிதநேயத்தில், ஏற்ற தாழ்வற்ற சமதர்ம சமத்துவ சமூதாயத்தை உருவாக்க முனைப்புடன் செயல்படும் அனைத்து நாடுகளும் பௌத்தத்தை ஏற்றுக் கொண்ட நாடுகளேயாம். அவ்வாறு வளர்ச்சியை நோக்கி நகரும் பௌத்தத்தை நோக்கிய அம்பேத்கர் காந்தியடிகள் பார்வை பற்றிய ஓர் ஆய்வே இக்கட்டுரை.


இணைமுரண்


காந்தியடிகளும் அம்பேத்கரும் இந்தியாவில் மிகச்சிறந்த இணைமுரண்கள் (binary opposition) ஆவர். இணைமுரண் என்பது ஒன்றுக்கு எதிரான இன்னொன்றை கொள்வது. தற்போதும் காந்தியைப் பற்றிய படைப்பு விமர்சனங்களில் அம்பேத்கரை உயர்த்தி காந்தியை பழித்தும், அம்பேத்கரைப் பற்றிய படைப்பு விமர்சனங்களில் காந்தியை உயர்த்தி அம்பேத்கரை பழித்தும் எழுதும் மூடப்போக்குடைய விமர்சனவாதிகளை காணமுடிகிறது. இவ்வொப்பற்ற தலைவர்களைகளை சத்திய நெறியோடு புரிந்து கொண்டால் இவர்கள் மனிதர்கள் மீதுகொண்ட சமத்துவத் தன்மை விளங்கும். வேறு வேறு பாதையானாலும் இருவருடைய நோக்கமும் ஒன்றாகவே இருந்தது. இருந்தும் காந்தியும் அம்பேத்கரும் இணைமுரணாக ஆக்கப்பட்டதன் காரணம், இருவருடைய சித்தாந்தமும் என்றுமே ஒட்டிக்கொள்ளாதவை.


காந்தியின் கருத்து


காந்தியடிகள் கருத்து முதல் வாதியாகவும், அம்பேத்கர் பொருள் முதல் வாதியாகவும் இருந்ததே இதன் விளைவு. 


"ஏழைகளிடம் போய் வேதாந்தம் பேசுவது அவர்கள் மனதை புண்படுத்துவதாகும். பேசினால் என்னையும் உங்களையும் கொடிய அரக்கர்களாக பாவிப்பார்கள். அவர்கள் அறிந்ததெல்லாம் கருணையற்ற கொடுங்கோல் தெய்வம் அல்லவா? கோபமும் பயங்கரமும் நிறைந்த தெய்வத்தை தான் அவர்கள் கண்டது. அவர்களிடம் நான் ஆண்டவனைப் பற்றி என்ன பேச முடியும்? எனக்கு துணிவு இல்லை. காலை பலகாரம் நன்றாக முடித்து, மத்தியான சாப்பாடு என்னவாக இருக்கலாம் என்று யோசனை செய்யும் நிலையில் இருக்கும் நாம் தெய்வத்தை பற்றி ஆராய்ச்சி செய்யலாம். ஒருவேளை சோற்றுக்கே திண்டாடும் நிலையில் வாழும் மக்களிடையே நானென்ன தெய்வ ஆராய்ச்சி செய்ய முடியும்? அவர்களுக்கு ஈசனுடைய அவதாரம் சோறும் சாறுமே. - காந்தி" (காந்தியடிகளின் செய்தி)


இதுதான் காந்தியடிகளுடைய சிந்தாந்தம். இல்லாதவர்களுக்கு சோறும் சாறுமே தெய்வம் என்பதை காந்தியடிகள் ஒப்புக் கொண்டாலும் தெய்வ ஆராய்ச்சியை அவரால் விட்டொழிக்க முடியவில்லை.


அம்பேத்கரின் பொருள்


ஆனால் அம்பேத்கர் தெய்வத்தை தூக்கி எறிந்தார். அவர் கண்களுக்கு புலப்படும் மனிதர்களுக்கே முக்கியத்துவம் கொடுத்தார். தெய்வ ஆராய்ச்சியினால் பயனொன்றும் இல்லை என்பதை நன்கு விளங்கினார். 


"ஒரு மனிதன் நிகழ்காலத்தில்தான் வாழ முடியும். கடந்த காலத்தைப் பின்னே விட்டு வருவதால் அமைந்திருக்கும் வாழ்க்கையே நிகழ்காலம். கடந்த காலம் தோற்றுவித்த விஷயங்களை ஆராய்வது நிகழ்காலத்தைப் புரிந்துகொள்ள உதவாது. கடந்த காலத்தையும் அதன் பாரம்பரியத்தையும் பற்றிய அறிவு நிகழ்காலத்துக்குப் பயன்படும்போது தான் அதற்கு முக்கியத்துவம் இருக்கிறது. மற்றபடி இல்லை. கடந்த காலத்தின் ஆவணங்களையும் சின்னங்களையும் கல்விக்கு முதன்மையான அடிப்படை விஷயங்களாக வைப்பது தவறு. அவ்வாறு செய்வதன்மூலம் கடந்தகாலம் நிகழ்காலத்துக்குப் போட்டியாக வருகிறது. நிகழ்காலம், கடந்த காலத்தை மாதிரியே செய்கின்ற பயனற்ற முயற்சியாகி விடுகிறது - அம்பேத்கர்" (இந்தியாவில் சாதிகள்)


இதன் மூலம் கடந்த காலத்தைப் பற்றிய ஆராய்ச்சி பயனற்றது என்று நவீனத்துவ விழிப்புணர்வை தருகிறார் அம்பேத்கர்.


இந்த இரண்டு சிந்தனையையும் ஒருங்கே இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே தந்தது தான் பௌத்தம்.


பௌத்த நோக்கு


பௌத்தம் பொருள், கருத்து இரண்டிற்கும் முக்கியத்துவம் தந்தது. மனிதரை மனிதராக மதிக்கும் பக்குவத்திற்கு அதிக முக்கியத்துவம் தந்தது இதனால் பௌத்தம் அம்பேத்கரை பெரிதும் ஈர்த்தது.


"சமத்துவத்தை விரும்பும் பௌத்தம் எனக்கு சிறந்ததாகத் தெரிகிறது - அம்பேத்கர்"


பௌத்தம் பொருளையும் அருளையும் இணைத்துப் பார்க்கிறது. செயல்களும் மனதும் பௌத்தத்தில் பெரிதும் முக்கியத்துவப்படுத்தப் படுகிறது. புத்தரின் தம்மம் எனும் நூல் வழி இதை நன்கு அறியலாம்.


"ஒரு மனிதனின் நிழல் அவனை எப்பொழுதும் விட்டு அகல்வதில்லை அவன் எங்கு சென்றாலும் உடன் செல்லும் நிற்கின் நிற்கும், நடந்தால் நடக்கும், அமரின் அமரும், படுத்தால் படுக்கும் அதுபோல நல் மனத்தோரை இன்பம் அவன் ஒதுக்கினும் ஒதுங்காது தொடரும். எல்லா செயல்களுக்கும் மனமே முன்னோடி ஆகிறது மனமே அனைத்து செயல்களுக்கும் தலைமை ஆனது செயல்கள் அனைத்தும் மனத்தின் வெளிப்பாடு ஒருவன் தூய எண்ணங்களோடு பேசினாலும் சரி செய்தாலும் சரி அவற்றினால் உண்டாகும் நன்மைகள் எப்பொழுதும் அவனை அவன் நிழல் போன்று தொடர்கின்றன செயல்களும் மனத்தின் தூய எண்ணங்களுக்கு காரணமாகிறது இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்ததாக உள்ளது"


என்னும் புத்தரின் தம்மம் சிந்தனை கருத்தை முன்னிலைப் படுத்தும் காந்தியடிகளுக்கும் பொருளை முதன்மைப்படுத்தும் அம்பேத்கருக்கும் சிறந்ததாக தெரிவதற்கு வேறு சான்று தேவையில்லை. 


பௌத்தத்தின் நவீனம்


அதோடு பௌத்தம் நவீனத்தை ஏற்கக்கூடியது இந்து மதமோ, இஸ்லாமோ நவீனத்தை ஏற்கத்தயங்குவன. தனது பழைமை வாதங்களை புதுமைகளோடு உலவ விடுவதற்காக பழைமை சிந்தனைகளை புத்தாகம் செய்ய வாய்ப்பு தேடி அலைவன. ஆனால் பௌத்தம் அப்படி அல்ல. மாறாக,


"ஒரு அறைக்குள் புகும் காற்று அந்த அறையை விட்டு நீங்கும் போது புகுந்த பொழுது இருந்த காற்றாக இருப்பதில்லை - கௌதம புத்தர்"


அதாவது நேற்றைய நாம் இன்றைய நாம் அல்ல. இன்றைய நாம் நாளைய நாமாக இருக்கப்போவது இல்லை. நாம் நம்மை நவீனப்படுத்திக் கொண்டே இருக்கிறோம். பௌத்தம் அதனை அனுமதிக்கிறது. ஆனால் இந்தியாவின் பிற மதங்கள் சடங்கு சம்பிரதாயங்கள் என்ற பெயரில் நவீனத்திற்குள் நுழையாது, கிணற்றுத் தவளைகளாகவே இருக்கின்றன.


இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே இராமலிங்க அடிகளார் இதைப்பற்றி எடுத்துரைத்தார்,


"தத்துவ நியாயத்தை அநுசரித்துச் சமயங்களேற் படுத்தப் பட்டிருக்கின்றன. தயவை விருத்தி செய்வதற்குத் தடையாக இருப்பன சமய ஏற்பாடு, ஜாதி ஏற்பாடு முதலியன. ஆதலால், இவைகளை விட்டொழித்து பொது நோக்கம் வந்தாலொழிய, காருண்ணியம் விருத்தி ஆகிக் கடவுள் அருளை பெற்று அனத்தசித்தி வல்லபங்களை பெற முடியாது. - வள்ளலார்"


இக்கருத்துக்கு பெரிதும் அரண் செய்வது பௌத்தமே. சமணம் கூட விதிகள் சடங்குகளுக்குள் முடங்கி கிடப்பது வளர்ச்சியை அடையாததற்கு காரணம்.


நீங்களே கவனிக்கலாம், பௌத்தத்தை ஏற்ற அனைத்து நாடுகளும் இன்றைய காலத்தில் மிகவும் நவீனமாகவும் ஏற்ற தாழ்வு என்ற பேச்சிக்கே இடமில்லாமலும் இருக்கும்.


பௌத்தத்தை நோக்கி அம்பேத்கர்


அம்பேத்கர் தனது இறுதி காலத்தில் பௌத்தத்தை தழுவினார். பௌத்தம் சமத்துவத்தை மனிதருக்கு அடுத்தக்கட்டமாக எல்லா உயிர்களிடத்திலும் காட்டியது. பௌத்தத்தை தழுவிய பிறகு அம்பேத்கர் தாவர (சைவம்) உண்ணியானார். அது சமத்துவத்தின் அடையாளம். சம தர்ம சமுதாயத்தை உருவாக்கும் நோக்கிற்காகவே அம்பேத்கர் பௌத்தத்தை தழுவினார். இன்றைய பௌத்தத்துறவிகளைப் போல் பௌத்தத்தை புனிதப்படுத்தும் எண்ணம் அம்பேத்கருக்கு இல்லை. பெண்களை புனிதப்படுத்துவதின் விளைவே பெண்ணடிமை கருத்தாக்கம் என்பதை அம்பேத்கர் நன்கு விளங்கி இருந்தார்.


"பௌத்த சமய விதிகளின்படி ஒருவர் எவ்வளவு வயதானவராயினும் அவர் துறவு மேற்கொள்வாராயின் தனக்கு முன் துறவியானவர் தன்னிலும் வயதில் இளையவராயினும் அவருக்கு மரியாதை செலுத்த கடமைப்பட்டவராவார் அவ்வாறன்றி தம் வயது குறித்து தமக்கு முன் துறவியானவர் தமக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் அவர்கள் அறியாமல் செய்யும் மரியாதையை அவர்களுக்கு தன்னிலையை வெளிப்பட உணர்த்தாது மறைத்து ஏற்றுக் கொள்வதும் குற்றமாகும். இங்கு பெரியவர் சிறியவர் என்பது துறவு வாழ்க்கை காலத்தைக் கொண்டே கணக்கிடப்படுமே யன்றி பிறப்பை கொண்டு கணக்கிடப்படுவதில்லை. - புத்தரின் தம்மம்"புத்தரின் இத்தம்ம சிந்தனை சமத்துவம் எவ்வளவு ஆழமாக செயல்பட வேண்டும் என்பதைக் காட்டுகிறது. பெரியவர் சிறியவர் என்பது பௌத்தத்தில் பிறப்பின் அடிப்படையில் கணக்கிடப்படுவதில்லை. இதையே கணியன் பூங்குன்றனர்.


"மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே,

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே"


அது தான் சமதர்மம், சமூக நீதி. குழந்தைகளையும் பெரியவர்களையும் ஒரே மாதிரியாக காணும் கண்ணோட்டம் வேண்டும். பால் புதுமையோரையும், திருநங்கைகளையும் ஒரே மாதிரி காணும் கண்ணோட்டம் வேண்டும். ஊனமுற்றோரையும், பட்டியலினத்தவரையும் உயர்ந்தோர் சிறந்தோர் தாழ்ந்தோர் இயலாதோர் என்ற கண்ணாடிகளைப் போட்டுக் கொண்டு பார்ப்பது எவ்வகையில் நியாயமாக இருக்கும்? மனிதனின் புறமோ அகமோ எப்படி இருந்தாலும் சரி அவனை மனிதனாகவே பார்க்க வேண்டும். இதையே பௌத்தம் சொல்கிறது. புரட்சியாளர் அம்பேத்கரும் அன்போடு அதையே நம்மையும் ஏற்கச் சொல்கிறார்.


பௌத்தத்தை நோக்கி காந்தியடிகள்


காந்தியடிகள் பிறரோடு ஒப்பிட்டே பார்க்கப்படுவதால் பலருக்கு அவர் பகைவராகத் தெரிகிறார். அன்புவயப்பட்ட அவர் எப்படி பகையை ஆதரிப்பார்?


"பௌத்தம் நாத்திக மதம் என்று கூறுவதை நான் ஏற்கமாட்டேன். அவர்கள் மறுபிறவியையும் கர்மாவையும் நம்புகிறார்கள். அச்சிந்தனையே அவர்களை ஒழுக்கமுடன் செயல்படச் செய்கிறது. கடவுள் நம்மை ஒழுக்கமுடன் செயல்படச் செய்கிறார் - காந்தி"


ஆம். பொருளையும் முதன்மைப்படுத்தும் பௌத்தம் மறுபிறவி என்ற கருத்தையும் ஏற்காமல் இல்லை. இதை தம்மம் பாடல் வழி அறியலாம். பௌத்தத்தை நோக்கியதான காந்தியடிகளின் சிந்தனை தம்மத்தில் பல இடங்களில் வெளிப்படுகிறது.


"இவன் என்னை பழித்துரைத்தான். இவன் என்னை அடித்தான். இவன் என்னை பேச்சினாலோ செயலினாலோ வென்றான். இவன் என் பொருள்களை கவர்ந்து கொண்டான். என்று ஒருவன் எண்ணி வெறுப்பினை வளர்த்துக் கொண்டால் அவர்களிடையே பகை ஒருபோதும் தீர்வதில்லை." (தம்மம் 3)


"இவன் என்னை பழித்தான். என்னை அடித்தான் என்னை வென்றான் என் பொருள்களை கவர்ந்து கொண்டான் என்ற வகையில் ஒருவன் வெறுப்பை வளர்த்துக் கொள்ளா விடில் அவர்களிடையே உள்ள பகை தீர்ந்து விடுகிறது" (தம்மம் 4)


காந்தியடிகள் இச்சிந்தனையையே இந்தியாவின் சிந்தனையாக மாற்றினார். நவீன இந்தியாவின் அகிம்சையின் அடையாளமாக காந்தியடிகள் திகழ்ந்தார், திகழ்கின்றார், திகழ்வார்.


புத்தர் தற்போதைய காந்திய சிந்தனையின் முன்னைய வடிவமாய் தெரிகிறார்.


"இவ்வுலகில் பகைமையால் பகைமையை ஒழிக்கவே இயலாது மாறாக அன்பால் அதனை அழிக்கலாம் இதுவே தொன்மையான அறம் - புத்தர்"


புத்தரின் இந்த தண்ணளி கொண்ட கூற்றே பௌத்தத்தை நோக்கிய காந்தியடிகளின் சிந்தனையை விளக்கும். 


முடிவுரை


பௌத்தத்தை நோக்கிய அம்பேத்கரின் சிந்தனையும் பார்வையும் காந்தியடிகளின் சிந்தனையும் பார்வையும் ஒரு லட்சியவாதமே ஆகும். இன்றைய இந்தியாவிற்கு இச்சிந்தனை பொருந்தி ஒத்துழைப்பு கொடுத்தால் உண்மையான நவீன இந்தியாவை நாம் கண்டுவிட்டே சாகலாம். லட்சிய வாதம் என்பது ஒரு ஆசை, கனவு அவ்வளவு தான். நடப்பு இயக்கத்தோடு இந்த கனவும் ஆசையும் ஒன்றினால் தான் அறிவும் சமூகமும் முன்னேறும். அம்பேத்கரும் காந்தியடிகளும் ஒப்பற்ற பல சிந்தனைகளை ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதற்காகவும் சாதிகளை ஒழிப்பதற்காகவும் சமதர்ம சமூகநீதி கொண்ட சமூகத்தை ஆக்கவும் எடுத்துரைத்து உள்ளார்கள். அவை பௌத்தத்தை நோக்கி இருப்பது நமக்கு தொன்மை அறத்தின் வளர்ச்சியை காட்டுகிறது. அவற்றை மேலே குறிப்பிட்டோம். அந்த கருத்தை போற்றுவோம். நடப்பில் கொண்டுவர முயற்சிப்போம். அப்படி இல்லாமல் அம்பேத்கரையும் காந்தியையும் புனிதப்படுத்தி மாலை போட்டு அழகு பார்ப்பதில் எந்த முன்னேற்றமும் இல்லை.


இதையும் காண்க


அம்பேத்கர் தத்துவங்கள்


முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு


பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய தமிழ்நாடு


அம்பேத்கர் பற்றிய கட்டுரை

1 Comments

 1. எந்த மதமும் தொடக்கத்தில் தன்னை ஒரு மதம் என்று பிரகடனபடுத்திக்கொள்வதில்லை. வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தையும், சமூகத்திற்கு ஒழுக்கத்தையும், தனிமனிதன் வழிபடவும் பின்பற்றவும் புரிந்துகொள்ள பிடிக்கும்படியான ஒரு சித்தாந்தத்தையும் கொண்டதாய் பெருவாரியான மக்கள் செல்வாக்கை பெறும்போது அது மதமாக கவனிக்கப்பட்டு அங்கீகாரமும் அடைகிறது.

  பௌத்தம் நல்ல மதம் தான். ஆனால் அதுவும் ஒரு கட்டத்தில் எல்லா மதங்களையும் போல தான் வந்த வேலையை விடுத்து வேண்டா வேலைகளிலும் களப்பணி செய்தது.

  உருவெடுத்த சில நூற்றாண்டுகளிலே யே மகாயான & ஹீனயான என இரண்டாய் பிளந்து சடங்கு சம்பிரதாயங்களை உள்வாங்கி உலகின் மிகப்பெரிய மற்றும் மிக அதிகமான எண்ணிக்கையில் இருக்கும் சமயத்தலைவரின் சிலையாக உருவெடுத்து விட்டது.

  அரசியல் தலையீடுகளாலேயே வளர்ந்த மதமும் கூட.

  தத்துவத்தில் பௌத்தம் போற்றுதலுக்குரியது.
  ஆனால் வெகுஜனங்கள் பஜனைபாடுவதிலும் யாத்திரை தரிசனம் சடங்கு விதிமுறைகளோடு தங்கள் ஆன்மீகத்தை முடித்துக்கொண்டு விடுவார்கள். அப்போது பௌத்தம்.....?

  ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு