Trending

அம்பேத்கர் பற்றிய கட்டுரை

 அம்பேத்கர் பற்றிய கட்டுரை

அம்பேத்கர் பற்றிய கட்டுரை


கதிரவனின்  கதிர்வீச்சு அதிகம் உள்ள ஆப்ரிக்கா போன்ற  நாடுகளில் பிறப்பவன் கருப்பாக பிறக்கிறான். சூரிய ஒளியின் தாக்கம் அதிகம் இல்லாத இங்கிலாந்து போன்ற நாடுகளில் பிறப்பவன் வெள்ளையாக பிறக்கிறான்.


காலம் காலமாக வயலிலும் வரப்பிலும் சூரியனின் அனல் வீச்சை எதிர்கொண்டு உழைத்து நமக்கு சோறு போட்டவன், கருப்பாகத்தான் இருப்பான். ஜெனிடிக் படி அவன் பரம்பரையும் கருப்பாகத்தான் இருக்கும்.  ஏசி அறையில் காலம் காலமாக முடங்கி கிடப்பவன், வெளி உழைப்பே இல்லாதவன்,  வெள்ளையாகத்தான் இருப்பான்.


கடவுள் ஒருவனை படைக்கும் போது குடியானத் தெருவில் பிறந்தால் உயர்சாதி என்றும் கொஞ்சம் ஒதுக்குப்புறத்து சேரியில் பிறந்தால் தாழ்ந்த சாதி என்றும் பிரித்து படைக்கவில்லை.


கருப்பு நிறத்தில் பிறந்த யானைக்கு உள்ள பலம், அதை அடக்கி ஆளும் மனிதனுக்கு கிடையாது. ஆனால் அந்த யானையை பல கொடுமைகளுக்கு உள்ளாக்கி, பட்டினி போட்டு, ஆறுக்கு ஆறு உள்ள கொட்டடியில் அடைத்து போட்டு, அடித்து, உதைத்து, ஒரு துண்டு வெல்லம் கிடைக்காதா என ஏங்க வைத்து, பாகன் அதை தன் வழிக்கு கொண்டு வருகிறான். பாகனை போல பத்து பேர் வந்தாலும் மிதித்து கொல்லும் ஆற்றல் கொண்ட  யானைக்கு அதன் பலம் தெரியாதவாறு கடைசி வரை பார்த்து கொள்கிறான்.


நூறு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு தாழ்த்தப்பட்டவர்களுக்கு நடந்ததும் அதுதான்.  கருப்பு நிறத்தில் பிறந்தவனை, மேல் சாதி என சொல்லிக் கொள்பவன், ஊருக்கு ஓதுக்குப்புறத்துக்கு துரத்துகிறான். உயர்சாதிக்காரன் உள்ள தெருவில், தாழ்த்தப்பட்டவன் நடந்தால் காலணி அணியாமல் நடக்க சொல்கிறான். மேல் துண்டு கூட, மேல் சாதிக்காரன் முன்னால் அணிய முடியாது. படித்துவிட்டால் எல்லாம் தெரிந்துவிடும் என்பதால் அவனை படிக்க விடுவதில்லை. ஆசிரியரிடம் கேள்வி கேட்க முடியாது. தேவபாஷை என்று சொல்லப்படும் சமஸ்கிருதத்தை அவன் படிக்க முடியாது. எல்லோரும் குடிக்கும் நீரை அவன் தொடக்கூட முடியாது.  பள்ளியில் மரப்பலகையில் உட்கார முடியாது. உட்காரும் இடம் தீட்டுப்பட்டுவிடும் என்பதால் வீட்டிலிருந்து வரும்போதே கோணிப்பையை எடுத்து வரவேண்டும்.


இப்படிப்பட்ட அத்தனைக் கொடுமைகளும் இந்தியாவுக்கு என்று அரசியல் சட்டத்தை உருவாக்கித்தந்த, ரிசர்வ் வங்கியை  உருவாக்கித் தந்த, சட்ட மேதை, பொருளாதார மேதை அம்பேத்கருக்கு ஏற்பட்டது. தனது அண்ணனுடன் அம்பேத்கர் மகிழ்வுடன் குதிரை வண்டியில் பயணம் செய்த போது பேச்சுவாக்கில்  குதிரை வண்டிக்காரன் அவரது சாதியை கேட்டான். அம்பேத்காரும் உண்மையைச் சொல்லவே ஆத்திரத்துடன் அவர்கள் இருவரையும் நடுவழியில் வண்டியை குடை சாய்த்து தள்ளி  விட்டான். சிறுவர்களான இருவருக்கும் தாங்கள் எதற்காக இறக்கிவிடப்படுகிறோம் என்பது கூட தெரியவில்லை. கள்ளம் கபடம் இல்லாத குழந்தைகளுக்கு கூட சாதிபாகுபாடு என்ற நஞ்சு அன்று  ஊட்டப்பட்டது. அதற்கு அம்பேத்காரும் தப்பவில்லை.


 அம்பேத்கரின் தத்துவங்கள்


யார் இந்த அம்பேத்கர்?


மராட்டியத்தை பூர்வீகமாக கொண்டிருந்தாலும், மத்திய பிரதேசத்தில் உள்ள இராணுவ பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர்தான் ராம்ஜி சக்பால்.  பணி நிமித்தமாக அங்கு உள்ள மாவ் என்ற ஊரில்  வசித்தபோது இராம்ஜி  சக்பாலுக்கும், பீமாபாய்க்கும் பதினான்காவது பிள்ளையாக மகர் என்ற தாழ்த்தப்பட்ட இனத்தில், 1891 ஆம் வருடம் ஏப்ரல் 13 ஆம் தேதி  பிறந்தவர்தான் அம்பேத்கார். ஆரம்பத்தில் அவருக்கு தாய் தந்தையர் வைத்த பெயர் பீமாராவ் இராம்ஜி.


பீமாராவ் இராம்ஜி சாத்தாரா எனும் பகுதியில் பள்ளி படிப்பை தொடங்கினார். தாழ்த்தப்பட்ட இனமானதால் எல்லா மாணவரோடு சேர்ந்து அமரக்கூடாது எல்லோரும் குடிக்கும் தண்ணீரை குடிக்கக் கூடாது, பிறர் மொண்டு தரும் தண்ணீரை கையில் வாங்கி குடிக்க வேண்டும். அவர்கள் புத்தககங்களை யாரும் தொடமாட்டார்கள். இப்படிப்பட்ட  கொடுமைகளோடு படித்த போதும்,  அம்பேத்கரின் கல்வித் திறமையைக் கண்டு வியந்த பிராமண ஆசிரியரான கிருஷ்ண மகாதேவ் அம்பேத்கர் பீமாராவ் இராம்ஜி மீது சாதி வித்தியாசம் பார்க்காமல், அன்பு செலுத்தி அவரது கல்விக்கு ஆதரவாக இருந்தார். அவரது அன்பில் நெகிழ்ந்த பீமாராவ் இராம்ஜி என்ற தனது பெயருக்கு பின்னால் ஆசிரியரின் பெயரான அம்பேத்கரையும் சேர்த்து கொண்டார்.


கல்வி


அம்பேத்காரின் தந்தைக்கு மும்பைக்கு பணிமாற்றம் ஏற்பட்டபோது, 1912 ஆம் ஆண்டில்  அறிவியல் பொருளியல் துறையில் மும்பை எல்பின்ஸ்டன் கல்லூரியில் இளங்கலை படிப்பை பரோடா மன்னர் உதவியுடன் படித்து முடித்தார்.


அம்பேத்கார் குடும்பத்துக்கு உதவும் பொருட்டு பரோடா மன்னர் தனது படைப் பிரிவு ஒன்றின் தலைவராக அம்பேத்கரை நியமித்தார். ஒரு தாழ்த்தப்பட்டவரின் கீழ் பணியாற்றுவதா என்ற சாதி ஆதிக்கம் அங்கு பணியாற்றிவர்களிடம் மேலோங்கியதால் அப்பதவியிலிருந்து விலகினார். மிகப் பெரிய திறமைசாலியான அம்பேத்கரை சாதியைக் காட்டி புறக்கணிப்பதைக் கண்டு வேதனை அடைந்த பரோடா மன்னர் ஷயாஜிராவ் கெய்க்வாட் நிதியுதவி செய்து அமெரிக்கா கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்த்தார். உயர் கல்வி படிக்க சென்ற முதல் இந்தியர் அம்பேத்கர்தான்.


இன்னொருவர் பணத்தில் படிப்பதால் அவரை ஏமாற்றாமல் கவனமாக படிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். புத்தகங்கள் வாங்க  வசதி இல்லாததால், நூலகமே கதி என்று கிடந்தார். அம்பேத்கார் நூலகம் திறந்தவுடன் படிக்க உட்கார்ந்து விடுவார். சாப்பாடு கூட சாப்பிடாமல் இரவு வரை எல்லா புத்தகங்களையும் படிப்பார். நேரம் முடிந்து நூலகத்தை பூட்டுவதற்காக,  நூலகர் வந்து விரட்டும் வரை படித்துக்கொண்டே இருப்பார்.  இந்தியாவில் உள்ள தலைவர்களில் அதிக புத்தககங்களை படித்தவர் அம்பேத்கர்தான்.


ஒரு நாளில் பதினெட்டு மணி நேரம் படிப்பிற்காக செலவிட்டார். அதன் பயனாக Ancient Indian Commerce என்ற ஆய்வு கட்டுரைக்காக 1915 ஆம் ஆண்டு MA பட்டம் பெற்றார்.


National Divident of India: A Historic and Analytical Study என்ற பகுப்பாய்வு கட்டுரையை கொலம்பியா பல்கலைக்கழகம் ஏற்றுக்கொண்டு அம்பேத்கருக்கு  தத்துவயியலில் டாக்டர் பட்டம் கொடுத்தது. ஒரு இந்தியர் வெளிநாட்டு பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெறுவது அதுதான் முதல் முறை ஆகும்.


பின்னர் லண்டன் கிரேஸ் இன் சட்டப்பல்கலைக் கழகத்தில் பாரீஸ்டர் பட்டம் பெற்றார். ரூபாயின் சிக்கல் என்ற ஆய்வுக்கட்டுரை லண்டன் தேர்வாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு Master Of Science பட்டம் பெற்றார்.


பட்டம் பெற்றார் என்று ஒரு வரியில் எழுதிவிடுகிறோம். ஆனால் அதற்கு அம்பேத்கர் பட்ட துயரங்கள், துன்பங்கள், காலங்கள், பொருளாதார இழப்புக்கள் கொஞ்ச நஞ்சமல்ல.


அரசியல்


பல பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் அம்பேத்கரின் ஆங்கில கட்டுரைகளால் கவரப்பட்ட ஆங்கில அரசாங்கம் லண்டனில் 1930ல் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்ள அம்பேத்காருக்கு அழைப்பு விடுத்தது. அதில் கலந்து கொண்ட அம்பேத்கர் தம் சமுதாய மக்கள் முன்னேற்றத்துக்கு அதை பயன்படுத்தி கொண்டார். பொதுப்பிரிவினரும் தாழ்த்தப்பட்டவரும் ஒரே தொகுதியில் இருவரைத் தேரந்தெடுக்கும் இரட்டை வாக்குரிமையை போராடி பெற்றார். ஆனால் ஆங்கில அரசாங்கம் கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர் அனைவருக்கும் இதே இரட்டை  ஓட்டுரிமையை கொடுக்க முடிவு செய்தது.


இது இந்திய மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி என எண்ணிய காந்தியடிகள், இரட்டை வாக்குரிமையை எதிர்த்து உண்ணாவிரதம் தொடங்கினார். சிறையில் இருந்து வெளிவந்த உடனேயே உண்ணாவிரதம் தொடங்கியதால் நான்கு நாள் உண்ணாவிரதத்திலேயே காந்தியின் உடல்நிலை மோசமடைந்தது. காந்தியடிகள் கைது செய்யப்பட்டார். 1932 ஆம் ஆண்டு ஏரவாடா சிறையில் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது.  காந்தியின் மகன் "என் தந்தையை காப்பாற்றுங்கள்" என அம்பேத்கரின் கையைப் பிடித்து கெஞ்சினார். மகாத்மாவுக்கு ஏதாவது நடந்துவிட்டால், அது தாழ்த்தப்பட்டவர்கள் மீதான  தாக்குதலாக மாறிவிடும் என பயந்த அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு  10% தனித்தொகுதி பெற்றுக் கொள்ள ஒப்புக்கொண்டார்.  இது பூனே ஒப்பந்தம் என கூறப்பட்டது. இவ்வொப்பந்தத்தில் ஜாதி இந்துக்கள் சார்பாக மதன் மோகன் மாளவியாவும், இராஜாஜியும்,  தாழ்த்தப்பட்டவர்கள் சார்பாக அம்பேத்கரும் கையெழுத்திட்டனர். இருந்தாலும் காந்தி மீது அம்பேத்கருக்கு கோபம் தணியவில்லை. உண்ணாவிரதத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி தன்னை வீழ்த்தி விட்டதாக கருதினார். தாழ்த்தப்பட்டவர்களை ஹரிஜன் என்ற பெயரில் கடவுளின் குழந்தைகளாக காந்தியடிகள்  பாவித்தார் என்பதும், கலப்பு திருமணமே சாதி ஒழிய தீர்வு என்றும் கூறிவந்தார் என்பதும் காந்தியை அறிந்தவர்கள் அறிந்த ஒன்றாகும்.


தீண்டாமை வெறுப்பு


சிறுவயதில் தனது தந்தையை காண சென்ற போது தீண்டாமைக்கு இலக்காகி, அவரது  தாகத்துக்கு யாரும் தண்ணீர் தர மறுத்தததால், மாடுகளும் எருமைகளும் புரண்டு கலக்கிய குட்டையில் தண்ணீர் குடிக்க நேர்ந்த கொடுமையான அனுபவம் அவருக்கு ஏற்பட்டது.


பாரீஸ்டர் பட்டம் பெற்று இந்தியா திரும்பி வக்கீல் தொழில் செய்தாலும் ஒரு டம்ளர் தண்ணீரை தானாக பொதுப்பயன்பாட்டில் இருந்து குடிக்க அனுமதி மறுக்கப்பட்டது. கடை நிலை ஊழியர் முகந்து கொடுக்கும் வரை காத்திருக்க வேண்டும். அதை மனதில் வைத்து பிற்காலத்தில் அவருக்கு அதிகாரம் கிடைத்த போது, அந்த கொடுமையை செய்தவர்களை அவர்  தண்டிக்கவில்லை.


மாறாக அமெரிக்காவின் டென்னஸி ஆற்றுப்பள்ளததாக்கு திட்டத்தை முன்மாதிரியாக கொண்டு தாமோதார் ஆற்றுப் பள்ளத்தாக்கு திட்டத்தை கொண்டு வந்தார். பீகாரிலும் வங்காளத்திலும் வெள்ளத்தினால் வீணாகும் நீரை நான்கு அனைகளை கட்டி தடுத்து, பத்து லட்சம் கிலோவாட் மின்சாரமும் எட்டு லட்சம் ஏக்கர் நில சாகுபடியும் எல்லா மக்களுக்கும் குடிநீரும் கிடைக்க ஏற்பாடு செய்தார்.


ஒரு குவளை தண்ணீருக்கு ஏங்க வைத்த சமுதாயத்துக்கு, அவர் நாண நாடு முழுவதும் மக்களுக்கு தங்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கப் பாடுபட்டார்.


இத்திட்டத்தில் இவருக்கு உதவி செய்தவர் தீண்டப்படாத சாதி என ஒதுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த  இயற்பியலாளர் மேக்நாட் சாகா முக்கியமானவர். இதுபோல மகாநதி, சோன் நதி பள்ளத்தாக்கு திட்டங்களும் அம்பேத்காரின் மூளையில் உதித்த திட்டங்களே. அதனால்தான் 2014 ஆம் ஆண்டு, அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் 14 ஆம் நாளை, தேசிய தண்ணீர் தினமாக மத்திய அரசு அறிவித்தது.


இரயில் தடங்களைப் போல நதிகளை தேசிய மயமாக்க வேண்டும் என முதலில் சொன்னவர் அம்பேத்கர்தான்.


அம்பேத்கர் தத்துவங்கள்


தாம் பிறந்த சமுதாயத்துக்கு, தன்னால் ஒரு சிறு முன்னேற்றமாவது ஏற்பட வேண்டும் என தினம் தினம் பாடுபட்டார்.


தாழ்த்தப்பட்டவர்கள் சுயமாரியதையுடன் வாழ சில வழிகளை ஏற்படுத்தி தந்தார் அம்பேத்கர். அவற்றில் சில


"ஒருவன் தான் அடிமைப்பட்டு உள்ளதை உணர்ந்தாலே போதும், அவன் மீண்டு எழுந்து விடுவான்."


"கடவுளுக்கு காணிக்கையாக கொடுக்கும் காசை, உன் பிள்ளையின் கல்விக்கு செலவிடு."


"தனக்கு அநீதி இழைக்கப்பட்டதை உணரக்கூட முடியாதவன் மனிதனே அல்ல."


"உன்னை ஒருவன் அவனது  அடிமை என்று நினைத்தால், நீ அவனை அழிக்கும் ஆயுதமாக மாற வேண்டும்."


"சாதி அமைப்பு என்பது, ஒரு இனத்தை பிரிக்கும் மாய வார்த்தை"


"ஒரு மதம் விலங்குகளை தொடுவதை புனிதமாகவும், மனிதர்களை தொடுவதை தீட்டாகவும் கருதினால் அது மதம் அல்ல."


"அறிவு, நன்னடத்தை, சுயமாரியாதை இம்மூன்று மட்டுமே ஒருவர் வணங்க வேண்டிய தெய்வங்கள்."


"தலைவிதி என்ற எண்ணமே தாழ்த்தப்பட்டவர்களின் உணர்வை மரத்து போக செய்வது."


"எதிர்ப்பு தெரிவிக்காத ஆடுகளையே கோவில்களில் பலி கொடுப்பார்கள். சிங்கங்களை அல்ல. தாழ்த்தப்பட்டவன் சிங்கமாக மாற வேண்டும்."


"மற்றவர்களின் தேவைகளை பூர்த்தி செய்தால்தான் உனக்கு நல்லவன் என்று பெயர் கிடைக்குமென்றால் அந்த பெயர் உனக்கு தேவையில்லை."


"வெற்றியோ, தோல்வியோ, திட்டோ,  பாராட்டோ, எதையும் கவலைப்படாமல் ஒருவன்  கடமையை செய்தால்,  அவனது திறமையும், நேர்மையும் வெளியாகும்போது, எதிரியும் அவனை  மதிக்க தொடங்குவான்."


"சக மனிதனை தொடக்கூட உரிமை இல்லாத போது, இந்தியா என் தாய்நாடு என்று எப்படி சொல்ல முடியும்?"


அம்பேத்கரின் பெருமைகள்


தாழ்த்தப்பட்டவர் என்று எந்த சமுதாயம் புறக்கணித்ததோ அந்த சமுதாயமே பிற்காலத்தில்  அம்பேத்காரின் அறிவாற்றலை அறிந்தபின்பு, அவரை கொண்டாடி தீர்த்தது.


அதற்கு ஆதாரம் என்ன என்று நீங்கள் கேட்பீர்களேயானால் அதற்கு பதில்தான் இது:


அம்பேத்கார் பெயரில் இந்தியாவில் நான்கு விமான நிலையங்கள் உள்ளன.


அம்பேத்கார் பெயரால் நான்கு உயரிய விருதுகள் வழங்கப்படுகின்றன.


நான்கு பெரிய நகரங்களுக்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.


அம்பேத்கார் பிறந்த நாள் தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அம்பேத்கார் பெயரில் இந்தியா முழுவதும் ஒன்பது அரசு மருத்துவமனைகள் உள்ளன.


எட்டு இடங்களில் அம்பேத்கர் பெயரில் அருங்காட்சியகங்கள், பூங்காக்கள் உள்ளன.


ஆறு முக்கிய நகரங்களில் அம்பேத்கர் சிலைகள் உள்ளன.


ஆறு இடங்களில் அம்பேத்கர் பெயரில் பெரும் மைதானங்கள் உள்ளன.


பதினோரு கட்சிகள் மற்றும் அமைப்புகள் அம்பேத்கர் பெயரில் செயல்படுகின்றன.


சிறுவயயதில் கல்வி மறுக்கப்பட்ட அம்பேத்கர் பெயரால் பதிமூன்று கல்வியல் பல்கலைக் கழகங்கள் இயங்குகின்றன.


கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் இந்தியா முழுவதும் 22 இடங்களில் செயல்படுகிறது.


பாபா சாஹிப் அம்பேத்கருக்கு இந்திய அரசு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னாவை 1990ல்  வழங்கியது.


அம்பேத்கர் & காந்தி


காந்தியடிகளோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் நாடு விடுதலை அடைய வேண்டும் என்பதில் அம்பேத்கருக்கு மாற்றுக் கருத்து இல்லை. நாடும் சுதந்திரம் அடைந்தது. விடுதலை பெற்றவுடன் அம்பேத்கர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அவரை சட்ட அமைச்சராக பொறுப்பேற்று கொள்ளும்படி காங்கிரஸ் அழைத்தது. அம்பேத்கரும் சட்ட அமைச்சரானார்.


ஆகஸ்ட 29 இந்தியாவுக்கான அரசியல் சாசன அமைப்பை உருவாக்கும் ஆணையத்துக்கு தலைவரானார். பல நாட்டு அரசியல் சாசனங்களை படித்து, இந்தியாவுக்கான அரசியல் சட்டத்தை உருவாக்கினார். அம்பேத்கார் உருவாக்கி தந்த அரசியல் சட்டம்தான் மிகச்சிறந்த சமூக பாதுகாப்பு ஆவணம் என வரலாற்று ஆய்வாளர் கிரான்வில்லா ஆஸ்டின் கூறுகிறார். இன்று வரை அவர் உருவாக்கித் தந்த சட்டதிட்டங்கள்தான் இந்தியாவில் சிறு திருத்தங்களுடன் கடைபிடிக்கப்படுகிறது.


கலப்புத் திருமணமும், இட ஒதுக்கீடும், சிறந்த கல்வியுமே தாழ்த்தப்பட்ட மக்களை உயர் நிலைக்கு செல்ல வழிவகுக்கும் என கருதினார். ஆனால் இட ஒதுக்கீடு கூட பத்து ஆண்டுகளுக்கு போதும் என அரசியல் சட்டத்தில் எழுதி வைத்தார்.


எவ்வளவுதான் மாற்றங்கள் ஏற்பட்டாலும், எவ்வளவோ பாடுபட்டாலும், இந்து சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சம அந்தஸ்து கிடைக்கவில்லை. அதனால் அவரது பார்வை புத்த மதத்தின் பக்கம் திரும்பியது. இந்துக்களில் உள்ள பிரிவுகளில் சம உரிமையை நிலை நாட்டும் சட்டமுன்வடிவை நேரு ஆதரித்தும் பாராளுமன்றத்தில்  நிறைவேற்ற முடியவில்லை. அதனால் சட்ட அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகினார்.


புத்தம் சரணம்


பல புத்தகங்களை படித்த அடிப்படையில் அம்பேத்கர் பிறந்த மகர் மக்கள், புத்த சமுதாய மக்கள் என்பதை கண்டறிந்தார். யார் சூத்திரர்கள்? Who were the Shudras? என்ற ஆய்வு நூலை எழுதினார். தமது மக்கள் கௌரவத்தோடு வாழ 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 14 அன்று நாக்பூரில் உள்ள தீக்சாபூமியில் 5,00,000 ஆதரவாளர்களோடு புத்த மதத்துக்கு மாறினார்.


இந்திய மக்கள் பெரும்பாலோருக்கு இருக்கும் தேசிய நோயான நீரிழிவு சர்க்கரை நோய், 1948 ஆம் ஆண்டு அம்பேத்கரையும் தாக்கியது. இதற்காக உட்கொண்ட மருந்துகளால் கண்பார்வை மங்கியது. 1954 முதல் படுக்கையிலேயே காலத்தை கழிக்க நேர்ந்தது. 1956 ஆம் ஆண்டு "புத்தரும் அவரின் தம்மாவும்" என்ற புத்தகத்தை எழுதிய மூன்று நாளில் 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் நாள், இவ்வுலகை விட்டு மறைந்தார்.


> பௌத்தத்தை நோக்கி அம்பேத்கரும் காந்தியடிகளும்


முடிவு


தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒரு பல்கலைக் கழகமே தொடங்கிய அம்பேத்கர், எல்லா மக்களுக்குமான சம நீதியை உருவாக்கினார். இதர பிற்படுத்தப்பட்டவர்களை பற்றி சிந்தித்த ஒரே தாழ்த்தப்பட்ட தலைவர் இவர்தான். மகாத்மா காந்தியடிகளுக்கு அடுத்து மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட, விரும்பப்பட்ட தலைவர் அம்பேத்கர்தான் என்பதற்கு இந்தியா முழுவதும் அவருக்கு வைக்கப்பட்டிருக்கும் பத்து லட்சம் சிலைகளே பதில் சொல்லும்.


ஜெ மாரிமுத்து

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு