Trending

பொம்மைக் காதல் - தீசன்

 

பொம்மைக் காதல்

அந்த டீக்கடை வாசல் வழியே அவனை கவனிப்பது என் வழக்கம் சூடாக அடுக்கிப் போடப்பட்டிருக்கும் வடைகள் கவரும் வகையில் கண்ணாடி இருக்கையில் இருக்க நீர் ஆவியின் அணைப்பிலும் அடுப்பின் அனலிலும் அவன் எனக்கு பரிதாபமாகத் தெரிவான். கிழிந்த பனியன், ஒருக்கால் முக்கால் மறுக்கால் அரை என்ற அமைப்பில் கீழாடை என்று சொல்லலாம். தலை கலைந்தும் பல நாள் எண்ணெய் இல்லாமல் செம்பட்டையாகவும் வறட்சியாகவும் இருப்பான். ஆனாலும் அவன் அழகு. ஏனோ அவன் பெயரை பற்றி நான் சிந்தித்ததே இல்லை. அவன் அவனாக இருப்பதால் அவனுக்கு அவன் என்றே பெயரிடுகிறேன். களங்கம் இல்லாத கருமை நிறம் அவனது திவ்யத்துவத்தை கூட்டியது. புதிதாக செருப்பு வாங்கி இருக்கிறான். இதற்கு பதிலாக சட்டை வாங்கி இருக்கலாம். மேலாடையின்றி பனியனோடு அவன் தெருவில் அமர்ந்திருப்பது எனக்கு ஏதோ செய்வது போல் உள்ளது. சென்ற வாரம் தான் கவனித்தேன், அவனும் காதலிக்கிறான். நானும் முதலில் அவன் எல்லோரையும் போலத்தான் என்று நினைத்து விட்டேன். அவன் படுத்து உறக்கும் இடத்திற்கு எதிரிலே உள்ள ஜவுளிக்கடை வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் ஒரு குறிப்பிட்ட பெண்பால் பொம்மையை தான் ஒருதலையாய் காதலிக்கிறான்.  இது அவனுக்கும் எனக்கும் மட்டுமே தெரியும் ரகசியமாகும். தெருக்குடியான அவன் கடை திறந்த பொழுதில் இருந்தே அங்கிரு கண் வைத்து விடுவான். முதல் நாள் கடைக்குள் சென்ற பொம்மை மறுநாள் வாயிலுக்கு வரவழைக்கப்படும் போது அவனை பார்க்கணுமே! முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் கடைக்காரரைப் பார்த்துக்கொண்டே தரையில் வேகமாய் ஒரு குத்து விடுவான் பின் 'ஆ' என்று கையை உதறுவான். பெண் பணியாள் தூக்கி வந்தால் மட்டும் அமைதியாய் இருப்பான். அந்த பொம்மைக்கும் அவனுக்கும் ஊடான ஓர் உறவு மனித பார்வையில் இருந்து நீண்டது தினமும் வெவ்வேறு தாவணிகளால் புனையப்பட்டு வரும் அப்பதுமை அவனோடு உறவாடுவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. தலைவன் ரசித்து மகிழ வேண்டி தலைவி தன்னை தயார்படுத்திக் கொள்ளும் இலக்கிய ரசம் இவனுள் எழுந்திருக்கலாம். கடை முதலாளி வாசலாண்டை வந்து அங்கும் இங்கும் நோட்டமிட்டு வேறு வழியின்றி இவனை அழைத்ததை அன்று கவனித்தேன். இவனும் 'தன்னை தானா' எனும் சந்தேகமுடனே எழுந்து சாலையைக் கடந்து கடைக்காரரிடம் ஏதோ பேசினான் பின் கடையினுள் சென்றான், என்பார்வை விட்டு மறைந்தான். கையில் டீ கோப்பையுடன் இருந்த நான் முன்னே நகர்ந்து மீண்டும் அவனை என் பார்வைக்குள் கொண்டு வந்தேன். சூரிய ஒளி புற உலகை உயர்த்தி விட்டதால், அக உலகு தாழ்ந்து விட்டது. அவன் தான் என்ற நம்பிக்கையில் அவனை கவனிக்கத் தொடங்கினேன். அவர் அந்த அஃறிணை அவளை வாசலில் கிடத்தும் உதவிக்காகவே அவனை அழைத்து இருக்கிறார். அச்சமயம் பணியாள் யாரும் இல்லாததால் இவனை அழைத்திருக்கிறார் போலும். என்னால் அவனது சங்கடத்தை புரிய முடிந்தது. ஆண் நாணும் பொழுது பார்க்கணுமே! அவனது கைகள் அவள் பக்கம் போய் போய் வந்து கொண்டிருந்தது ஆனால் படவே இல்லை. பின்னே இருந்து வந்த முதலாளி பொம்மையின் தோல் பகுதியை பிடித்து சாய்த்தார் அவன் உடனே செய்கை புரிந்து கால் பகுதியைப் பிடித்து தூக்கி விடுவான் என்று நினைத்தார் போலும். என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அவளது கைகளை பிடித்து இழுக்க துவங்கினான் எங்கே அவள் கீழே விழுந்து விடுவாளோ என்று பதறிவிட்டான். முதலாளிக்கோ பயங்கர கோபம். அவனை கடுமையாக திட்டினார். வாடிய முகத்தோடு அவனும் வெளியே வந்தான். சிரித்த என் கன்னங்களும் அவன் நிலையைக் கண்டு சுருங்கி விட்டது. சம்பந்தமே இல்லாமல் அவனது தாயைப் பற்றியும் குடும்பத்தை பற்றியும் சிந்தித்தேன் பாவம் அனாதையாக தெருவில் அன்றைய வயிற்றுக்காக அங்கும் இங்கும் உழன்று கொண்டிருப்பவர்களுக்கு யார் தான் ஆறுதல் அளிக்க முடியும். இருப்பவன் தான் ஆசையும் படலாம் என்று சூத்திரம் வகுத்துள்ள சமூகத்தை எரிக்கலாம் என்று இருந்தது. கவலையால் எழும் கோபம் கவலையாலே கடக்கப்பட்டு அவனது நிலை அங்கே இருவரை வெறுமையாக்கி விட்டிருந்தது. சிறிது நேரத்திலே பணியாட்களால் அப்பொம்மை வருவிக்கப் பெற்றது. அவனது முகமும் லேசாக பூத்தது. பக்கவாட்டில் வளர்ந்து நிற்கும் நித்திய கல்யாணி பூவில் ஒன்றைப் பறித்து பதுமையின் கரங்களுக்குள் திணித்தான். நிலன் நோக்கி இருந்த அக்கரம் பூவை ஏற்க முடியாமல் தவற விட்டது. புன்னகையுடன் கீழே விழுந்த பூவை எடுத்த அவன் மேலிருந்து கீழ்வரை அவளிடம் ஏதோ ஒன்றினை தேடினான். அவளது தலையிலும் தோளிலும் வைத்துப் பார்த்தான். பூ நிற்கவில்லை. கடைசியாக அவன் செய்த முயற்சி என் கண்களை விரித்தன. அந்த பூவை பதமாக எடுத்த அவன் அவளது மேல்சீலை மாராப்பு பகுதியில் சொறுகினான். அவனது இதழ்கள் சிரிப்பை உமிழ்ந்தன. நாணமுறுவல் நிறைந்த அவன் கண்கள் இதையவன் தவறான எண்ணத்தில் செய்யவில்லை என்பதை எனக்கு அப்பட்டமாகக் காட்டியது. ஒரு புறக்கணிக்கப்பட்ட ஏழையால் தரக்கூடிய மிகச்சிறிய பரிசை அவன் அவனது காதலிக்கு கொடுத்து பார்த்தான். ஏற்க முடியாத நிலையில் இருக்கும் அவளுக்கு தன்மையாக சூட்டி விட்டான். இதில் ஏதும் தவறு இருப்பதாய் எனக்கு தெரியவில்லை. சிரித்து கொண்டே எதிரே வந்த இவனை கவனித்துக் கொண்டிருந்தேன். கடையுள் இருந்த அந்த கடைக்காரர் சடசடவென வந்து பொம்மையின் மாராப்பில் இருக்கும் பூவினை எடுத்து கசக்கி எறிந்தார். திரும்பிச் செல்லும் அவனைக் கண்டு கடுமையாக முறைத்தார். நல்லவேளை அவன் அவரை பார்க்கவில்லை. பார்த்திருந்தால் ஒருவேளை அவன் நிம்மதி இழந்திருக்கலாம். இன்று இவனை அசை போடக்காரணம், அவனிடத்தில் அவனைக் காணோம். நீளமான கூந்தலை உடைய பதுமை அவளின் முகம் எனக்கு இன்று புன்னகையின்றித் தெரிந்தது. எங்கே அவன் என்று என் கண்கள் அலைபாந்தன. வெறுமையான அவ்வேளையில் என் தேநீர் குளிர்ந்துக் கொண்டிருந்தது. அவன் அளவுடைய ஆண்கள் எல்லாம் எனக்கு அவனாகவேத் தெரிந்தார்கள். இளவெயில் பட கொத்து கொத்தாக வளர்ந்திருந்த நித்திய கல்யாணி பூவும் பட்டாம்பூச்சியின்றி அழகற்றுத் தெரிந்தது.


தீசன்

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு