Trending

காதலர் தினம் சிறுகதை

காதலர் தினம் சிறுகதை


இரவு பதினொரு மணி ஆகிவிட்டது.


பத்து மணிக்கு பாயில் படுத்த எனக்கு இன்னும் தூக்கம் வரவில்லை.


புரண்டு, புரண்டு  படுத்துக்கொண்டு இருந்த என்னைப் பார்த்த என் அம்மா,


"ஏண்டி ஹரிணி! இன்னும் நீ தூங்கலயா? இதுவரைக்கும் தூங்கலேன்னா காலையில் எத்தனை மணிக்கு எந்திரிப்ப? எப்பக் கடைக்கு கிளம்புவ? பத்து நிமிஷம் லேட்டானாலும் அன்னைக்கு உள்ள பேட்டா காச முதலாளி தரமாட்டார்னு சொல்ற. காலையில ஏழு மணி பஸ்ஸ விட்டா டவுனுக்கு வேறு பஸ் கிடையாது. சீக்கிரம் தூங்க வேண்டாமா? என்று சத்தம் போட்டார்.


தூக்கம் வராததற்கு காரணம் இருக்கிறது.


"பிப்ரவரி 14 அன்று கடைக்கு லீவு சொல்லிவிட்டு வா. வேளாங்கண்ணி பீச்சுக்கு போய் வரலாம்" என மகேஷ் என்னை  கூப்பிடுறான். மனதுக்குள் அவனோடு போய் வர எனக்கும் ஆசைதான்.


இருந்தாலும் கிராமத்து பெண் அல்லவா?

எனக்கு அந்த தைரியம் வரவில்லை. என்னுடைய கிராமத்திலிருந்து திருவாரூரை தாண்டி எங்கேயும் போனதில்லை.


அவனோடு போய் லவ்வர்ஸ் டேயை கொண்டாடுவதா?  இல்லை மறுத்துவிடுவதா?  இதுதான் மனதில் குழப்பம்.


வரமாட்டேன் என்று சொல்லிவிடலாம் அவன் முகம் வாடிவிடும். அவன் முகம் வாடுவதை பார்க்க என் மனசு தாங்காது.


மகேஷோடு எனக்கு பழக்கம் ஏற்பட்டதே ஒரு தனிக்கதை. நான் வேலை பார்க்கும் ஜவுளிக் கடையில் இரவு எட்டு மணிக்கு வீட்டுக்கு விடுவார்கள். எட்டு முப்பதுக்கு எங்க ஊர் கடைசி பஸ்.


ஒரு நாள் கஸ்டமர் கொஞ்சம் லேட்டாக்கி விட்டதால் பஸ் போய்விட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் பஸ் ஸ்டான்டில் நின்றேன்.


அப்போது என் அருகில் யமஹா பைக்கை  ஸ்டைலாக ஒரு வாலிபன் கொண்டு வந்து நிறுத்தினான்


"ஏன் பஸ்ஸை விட்டுவிட்டீர்களா" என்றான்.


"ஆமாம்" என்றேன் தடுமாற்றத்துடன்.


"நானும் உங்க ஊருக்கு பக்கத்து ஊருதான். வாங்க கொண்டு போய் விட்டுடுறேன்" என்றான்.


அவனை அடிக்கடி பார்த்து இருக்கிறேன். கொஞ்சம் பயமாக இருந்தாலும், அவனோடு போவதைத் தவிர எனக்கு வேறு வழியுமில்லை.


அவன் வண்டியில் ஏறி அமர்ந்தேன். அரை மணி நேரம் பஸ்ஸில் போகும் தூரத்தை பத்து நிமிடத்தில் கடந்து வந்து விட்டான். என்னை நன்றாக தெரிந்தவன் போல, நான் வழக்கமாக இறங்கும் இடத்தில் இறக்கிவிட்டான்.


சும்மா சொல்லக்கூடாது, நான் பயந்தது போல இல்லாமல், டீசன்டாக நடந்து கொண்டான்.


சோதனையாக, அடுத்த நாளும் கடையில் லேட்டாகிவிட்டது. சொல்லி வைத்தது போல வந்துவிட்டான். இப்போது பல்சரில் வந்தான். அவன் என் அருகில் வண்டியை நிறுத்திய உடனேயே அதில் ஏறி அமர்ந்து விட்டேன்.


ஏதோ அவனோடு நீண்ட நாள் பழகியது போல அவனோடு ஒட்டி அமர்ந்தேன். சாலையின் ஏற்ற இறக்கங்களில் பைக் செல்லும்போது அவன் மீது சாய நேரிட்டது. சமீப வருடங்களில் எந்த ஒரு ஆடவனோடும் இவ்வளவு நெருக்கத்தில் நான் அமர்ந்ததில்லை. இது என் உள்ளத்தில் ஒரு கிளுகிளுப்பை ஏற்படுத்தியது.


ஏதோ ஒரு தவறு செய்வது போல என் மனதில் ஒரு படபடப்பு ஏற்பட்டது.


"நேற்று உங்களுக்கு தேங்ஸ் சொல்லனும்னு நெனச்சேன், பதட்டத்தில் மறந்து விட்டேன்." என்று பேச்சு கொடுத்தேன்.


"நீங்கள் என் வண்டியில் வருவதே, எனக்கு மகிழ்ச்சிதான். இதற்கு நான்தான் தேங்ஸ் சொல்ல வேண்டும்"


அவனுடைய வேலையை பற்றி கேட்டேன். டூ வீலர் கம்பெனில, அவன்தான் சூப்பர்வைசிங் மெக்கானிக்காம்.


அதனால்தான் தினம் ஒரு வண்டியில் வருகிறானோ?


"இனிமே லேட் ஆனா,  பஸ் ஸ்டாண்டில் நிற்க வேணாம். இந்த நெம்பரை வச்சுக்குங்க.  உடனே என்னைக் கூப்பிடுங்க" என்று ஸ்டைலாக அந்த பேப்பரை என்னிடம் கொடுத்தான். அதில் மகேஷ் என்ற பெயருடன் ஒரு செல் நெம்பர் இருந்தது.


பஸ்ஸோ, லாரியோ எதிரே வந்தால் பத்து அடி வரை எதிரே சென்று, கட்அடித்து திருப்புவதை பார்க்கும் போது அவனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று என் மனம் திக் திக் என்றது.


"இப்படியெல்லாம் வேகமா போவாதீங்க! ஒரு நாள் இல்ல ஒரு நாள், ஏதாவது ஆயிட்டா... "இதற்கு மேல் எனக்கு பேச வார்த்தை வரவில்லை.


இறங்கும் இடம் வந்துவிட்டது.


அவன் தோலை தொட்டு,"போய்  வருகிறேன்" என்று கை அசைத்தேன்.


மறுநாள் ஜவுளிக் கடையில் அமர்ந்து இருந்தேன். வியாபாரம் இல்லை. அவன் கொடுத்த நம்பருக்கு போன் அடித்தேன்.


"மகேஷ்! நான் ஹரிணி." நேத்து உங்களோட வண்டியில்..."


"தெரியுது தெரியுது, காலையிலேயே இன்ப அதிர்ச்சியா இருக்கு! என்ன விஷயம்?


சும்மாதான் போட்டேன். சாப்பிட்டீங்களா?


இல்ல ஹரிணி! இன்னைக்கு ஒரு வண்டி பதினோரு மணிக்கு டெலிவரி கொடுக்கனும். ஃபிட்டிங் முடிச்சுட்டேன். எங்க டூ வீலர் கம்பெனில நான்தான் சீஃப் மெக்கானிக்னு, ஒன்னுட்டதான் சொல்லி இருக்கேனே! டெலிவரிக்கு  அப்புறம்தான் சாப்பாடு எல்லாம்"


"கால சாப்பாடுதான் உடம்புக்கு ரொம்ப முக்கியம்னு சொல்வாங்க. உடம்ப பாத்துக்குங்க"


அது சரி, நீ சாப்பிட்டியா?


இதுவரை என்னை வாங்க போங்கன்னு கூப்பிட்ட மகேஷ், நீ என்று என்னை உரிமையோடு அழைத்தது, மனதுக்கு சந்தோசமாக இருந்தது.


ஒரு நாளைக்கு மூனு, நாலு தடவையாவது போன் வருவதும் போவதுமாக இருந்தது. நாட்கள் மகிழ்ச்சியாக கழிந்தது.


ஒரு நாள் ஜவுளி எடுப்பதுபோல் நேராக கடைக்கே வந்துவிட்டான். நீண்ட நேரம் பேசிக்கொண்டு நின்றான்.


பக்கத்து கவுண்டர் புவனா எங்களை ஆச்சரியமா பார்த்தாள். அவன் போனவுடன்,


"என்னடி! நீயும் காதலில் விழுந்திட்டியா? எனக்கே தெரியாமல், எங்கடி இவனை புடிச்சே?" என்றாள்.


"அவன் இவன்னு பேசாதே! நான் அவனை ஆசையா, அவன்னு சொல்லலாம். நீ சொல்லக்கூடாது."


"சரி மேடம்" என்று பொய்யாக ஒரு கும்பிடு போட்டாள்.


என்னை பார்க்க மகேஷ் கடைக்கு  வரும்போதெல்லாம், எனக்கு ஒரு டைரிமில்க்கும், புவனாவுக்கு ஒரு டைரிமில்க்கும் வாங்கி வருவான்.


சிலசமயம், "எப்படி ஒன்னோட ஆள் வருவான்? டைரிமில்க் சாப்பிடனும் போல இருக்குடி!" என்று கலாய்ப்பாள் புவனா.


புவனாவும் ஒருவனை காதலிக்கிறாள்.

கோவிலில் புறகாரத்தை சுற்றும் போது அவனும் சுற்றி சுற்றி வந்து அவளை பிடித்து விட்டான். நெற்றி முழுவதும் விபூதி குங்குமத்தை வைத்து இருப்பான்.


காதலர் தினத்துக்கு வடகண்டம் கோயிலுக்கு அழைத்து செல்வதாக சொன்னானாம். இதிலிருந்தே அவர்களுடைய  காதலைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.


ஒரு வழியாக காதலர் தினத்தை மகேஷோடு கொண்டாடுவது என்று முடிவு செய்துவிட்டாள்.


நான்கு நாட்களுக்கு முன்பே மேனேஜரிடம் லீவு கேட்க வேண்டும். அப்போதுதான் பிரச்சனையில்லாமல் லீவு கிடைக்கும்.


'சார் வர்ர பதினாளாம் தேதி ஒரு நாள் லீவு வேணும் சார்"


"என்ன வேலன்டைன்ஸ் டேயா?"


"சே சே எங்க சித்தப்பா பையனுக்கு நாகப்பட்டினத்துல கல்யாணம்" வார்த்தைகளை மென்று விழுங்கினேன்.


"சரி சரி நீ தேவை இல்லாமல் லீவு போடமாட்டேன்னு எனக்கு தெரியும். லீவு எடுத்துக்க."


பொய் சொல்லாத என்னை, காதல் பொய் சொல்ல வைத்துவிட்டது.


லீவு போட்ட செய்தியை, மகேஷிடம் போனில் சொன்னேன். "வேளாங்கண்ணிக்கு போய்விட்டு மாலை அப்படியே ஃபாதர் கிட்ட பிளஸ்ஸிங் வாங்கிட்டு வந்துருவோம்." என்றான்.


எனக்கு அவன் சொல்ல, சொல்ல சந்தோஷமாக இருந்தது. பவுன் போட்டு கல்யாணம் பண்ணி வைக்கும் அளவுக்கு எங்கள் வீட்டில்  வசதியில்லை. அதனால் நல்ல பையனாக, என்னை ஆசையோடு  விரும்புறவன சந்தித்ததில், அந்த மாதாவின் பங்கும் இருக்கட்டுமே!


பிப்ரவரி 14


ரிஜிஸ்ட்ரேஷன் நம்பரே போடாத, புது பைக்கில் வந்து விட்டான் மகேஷ். இன்று என்னவோ தெரியவில்லை. ரொம்ப அழகாக இருந்தான். வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டேன்.


"வேகமாக போகாதீங்க! வீட்டுக்கு தெரியாம போறோம், தேவையில்லாம எந்த பிரச்சனையிலும் மாட்டக்கூடாது "


"சரி சரி நீ நன்றாக நகர்ந்து உட்கார்"


வேளாங்கண்ணி வந்துவிட்டது. கடற்கரைக்கு வந்தோம். கடல் நீரை வாரி இறைத்து விளையாடினோம். கடல் அலைகளால் புடவை நனைந்து உடலோடு ஒட்டிப் போனதால், என் அழகில் மயங்கி நின்றான் மகேஷ்.  எங்களை போல நிறைய காதல் ஜோடிகள் எங்கள் கண்ணில் பட்டார்கள். நீண்ட நேரம் பொழுது போக்க, வேளாங்கண்ணி கடற்கரையில் ஒன்றும் இல்லை.


"ஃபாதரை பார்க்கலாம்னு சொன்னீங்களே? எப்ப பார்க்கலாம்?" என்றேன்


"சாயங்காலம்தான் பார்க்கலாமாம், அதுவரை ரெஸ்ட் எடுக்க ஒரு ரூம் எடுத்திருக்கேன்" என்றான்.


முதல் முறையாக எனக்கு பயம் வந்தது.


ஒதுக்குப்புறமாக இருந்த லாட்ஜில் ரூம் போட்டிருந்தான்.


ரூமுக்குள் நுழைந்தோம். கிழிந்த பாயில் வீட்டில் படுத்திருந்த எனக்கு, கட்டிலும், மெத்தையும் ஆச்சரியமாக இருந்தது. மின் விசிறி கடற்காற்றை விசிறி அடித்தது.


ஒரு நிமிடம் என்று வெளியில் சென்றான் மகேஷ்.


திரும்பிவந்த போது பேப்பரில் சுற்றிய ஒரு நைட்டியை எடுத்து வந்தான்.


நீல கலர் பாக்கெட் ஒன்றை எடுத்து, பிரித்து உதட்டுக்கு அடியில் வைத்துக் கொண்டான்.


"புடவை வேறு நனைஞ்சு போச்சு இந்த நைட்டியை மாத்திக்க" என்றான்.


கதவு ஓரத்தில் சென்று உடைகளை அவிழ்த்து, நைட்டியை மாற்றுவதற்குள், என்னை அள்ளி வந்து கட்டிலில் கிடத்திவிட்டான்.


"வேணாம்! மகேஷ் வேணாம்! எல்லாம் கல்யாணம் முடியட்டும்" தடுத்து பார்த்தேன்.


"பெண்கள் வேணாம்னா வேணும்னு அர்த்தமாமே" என்று சிரித்தான்.


அவன் வாயிலிருந்து வித்தியாசமான வாசனை வந்தது. என்ன இது என்று கேட்டேன். அது உனக்கு எதுக்கு என்று கூற மறுத்துவிட்டான்.


அவன் பிடியில் இருந்து என்னை விடுவித்து கொள்ள முடியவில்லை. என் இளமையையும் கட்டுப்படுத்த முடியவில்லை. முழுவதும் சரண் அடைந்துவிட்டேன்.


"மகேஷ் என்னை உங்க வீட்டுக்கு அழைத்து போ. என்னை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க, கல்யாணம் செஞ்சுகிட்டா இப்ப மாதிரி சந்தோசமா எப்போதும்  இருக்கலாம்." என்றேன்.


"இன்னைக்கு செஞ்ச தப்புனாலே, ஏதாவது ஆகலாம் அதனால் உடனே கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்" என்று அவனை கட்டிப் பிடித்து அழுதேன்.


"ஏய்! இதற்கு ஏன் அழற! அடுத்தது நம்ம கல்யாணம்தான்" என்று கண்களில் இருந்து கன்னத்தில் வழிந்த நீரை துடைத்துவிட்டான்.


ஆறுதலாக என் உடலை அணைத்தவன், அப்படியே இரண்டாவது முறையும்…..


மாதா கோவிலுக்கு போகவோ ஃபாதரை பார்க்கவோ தோன்றவே இல்லை.


இரவு வீட்டுக்கு வந்துவிட்டோம்.


மறுநாள் கடைக்கு சென்றுவிட்டேன். புவனா நேற்று என்ன நடந்தது, என்று துருவி, துருவி கேட்டாள். நான் வெட்கத்தில் பதில் பேச முடியாமல் சிவந்து நின்றேன்.


இரவு பஸ் ஸ்டாண்டு வந்தேன். மகேஷுக்கு போன் செய்தேன். எடுக்கவில்லை. ஏதோ வேலையாக இருக்கும் என்று பஸ் பிடித்து வீட்டுக்கு வந்துவிட்டேன்.


வீட்டுக்கு போயும் போன் செய்தேன். சுவிட்ச் ஆப் என்றே இருந்தது. கடலில் நனைந்ததில் ஒடம்புக்கு எதாவது ஆகிவிட்டதா? என் போன் என்றால் எடுக்காமல் இருக்க மாட்டானே!


வேளாங்கண்ணி போய் வந்த பிறகு அவனை என் கணவனாகவே நினைக்கத் தொடங்கிவிட்டேன்.


மறுநாள் பஸ் ஸ்டாண்டுக்கே போகாமல், அவன் வழக்கமாக வரும்வழியில், முன்னதாகவே வந்து நின்றேன்.


மகேஷ் பைக்கில் வேகமாக வந்தான். அவனை பார்த்ததும் என் உடல் புல்லரித்தது. ஆனால் என் பக்கம் அவன் திரும்பவே இல்லை. அவன் அருகில், அவன் மீது சாய்ந்தபடி புவனா அமர்ந்து இருந்தாள்.


ஜெ மாரிமுத்து

2 Comments

 1. காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றும் இது போன்ற வன்முறைகளை தடுக்க பெண்களுக்கு விழிப்புணர்வு அவசியம்..

  அது மட்டும் இல்லாமல் காமம் என்பது உள்ளம் சம்பந்தப்பட்ட ஒன்று.

  அதனை வக்கிரம பொருளில் கையாளுவதைத் தவிர்ப்பது நல்லது.

  நாம் அனைவருடனும் நட்பு கொள்வது இல்லை.

  காதலும், அதன் உசசமாகிய காமமும் அபபடி தான்.

  காதலை ஏன் இச்சமுகம் தவறாக எண்ணுகிறது... காதல் தவறல்ல.. அது சுதந்திரத்திற்கான வழியில் ஒன்று.

  சுதந்திரத்தை எச்சரிக்கை உடன் கையாளுவது சிறந்தது..

  ReplyDelete
 2. காதலர் தினத்துக்கு வடகண்டம் கோயிலுக்கு அழைத்து செல்வதாக சொன்னானாம். இதிலிருந்தே அவர்களுடைய காதலைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

  இவ்வாறான எச்சங்களை கையாளுவது என் போன்ற வாசகருக்கு புரியவில்லை..

  ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு