Trending

அடக்காமை ஆரிருள் உய்த்து விடும்

 

அடக்காமை ஆரிருள் உய்த்து விடும்

மனிதனின் மனம் கட்டுகள் அற்று போகும் போது ஐம்புலன்களில் அதன் ஆதிக்கம் தெரியவருகிறது.


மனதால் அடக்கப்பட்டவனே மனுஸ்யன். "மனஸ்" அவனை செயல்படுத்தும் மூலம். அதுவே அவனது கர்மவினைப் பலன்களின் கர்த்தா எனும் தத்துவம் வடமொழி நூல்களில் உண்டு.


ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப் புடைத்து என்று அடக்கமுடன் கூறுவதே தமிழின் சிறப்பு


ஐம்பொறிகளை அடக்கி ஆளாதவன், வாழ்க்கை நெடுந்துயரில் நீங்க வழிக் காணாதவன் ஆகிறான்.


இருந்தும், மனது நம்மை அடக்கி ஆள்கிறதென்றும், ஒடிந்து விழுந்த சிறுகிளை நதியின் பிரவாகத்திலே அழைத்து செல்லப்படுவது போல காலம் மற்றும் மனதின் இச்சையினால் மனிதன் இழுத்துச் செல்லப்படுகிறான் என்பதையும் நாம் ஒப்பு கொண்டாக வேண்டும்.


வீழ்ந்த கிளை பிரவாகத்தின் பலத்தால் இழுக்கப்பட்டு செல்வது போலே மனிதனும் சென்றால் அவனும் அச்சிறு கிளைக்கு சமானமே ஆவான். மரணம் என்பது இயற்கையானால் அதை எதிர்த்து வாழ முயலுதல் தேவை ஆகிறது. அதே போல இச்சைகள் இயற்கையானால் அதை எதிர்க்கும் குணமும் அவசியம் ஆகிறது. புலனடக்கம் என்பது இயற்கைக்கு மாறானது என்பது தவறு. புலனடக்கம் மாறாகும் வாழ்க்கையை வேறாக்க வல்லது. அதுவே இயற்கை மனிதனுக்கு மறைத்து அளித்த பரிசு எனலாம்.


சீறும் பாம்பை சலனமின்றிக் காணும் சித்தர் பக்குவம் வேண்டாம். அதைக் கொன்றாலொழிய அச்சம் தீராதென்ற வன்மத்தை நீக்கலாம்.


புலன் என்பது இந்திரியங்கள் மட்டுமல்ல அதில் மனமும் அடங்கும். மனமே புலன்களை இயக்கும் கருவி. அதனாலே 'புலனழுக்கற்றான்' என்பர். மனம் தூய்மையாக இருக்க புலன்களும் மாசற விளங்கும்.


மகாத்மா காந்தியிடம் ஆங்கிலேயர்கள் நம் தேசத்தினருக்காக குடும்பக் கட்டுப்பாடினைப் பற்றிய அவசியத்தினை விளக்கினார்கள். ஆனால் அவர் அதனை ஏற்கவில்லை. அதற்கு காரணம் புலனடக்கத்தின் மீது அவருக்கு இருந்த நம்பிக்கை.


அடக்கத்திற்கு உட்படாத இச்சை என்று ஏதுமில்லை, அதற்கு அறுவை சிகிச்சை தேவையில்லை என்பது காந்தியின் கருத்தாயிருந்தது. 


காந்தி எல்லோரிடமும் ஒரு குறைந்தபட்ச புலனடக்கத்தை ஏற்படுத்த முயன்றார். இருப்பினும் இந்தியர்கள் அதற்கு ஒத்துழைக்கவில்லை.


நம் உடலில் 7 சக்கரங்கள் இருப்பதாகவும் அச்சக்கரங்கள் திறக்கப்படுவதால் நாம் 'ஞானா' நிலையை எய்தலாமென்றும் பௌராணிகர்களின் பிரசங்கத்தில் காணலாம்.


அவ்வேழு வலியுறுத்துவது வேறொன்மல்ல, அடக்கத்தையே. அதில் முதலாவதாய் அமைவதே மூலாதாரம். அடுத்து வயிற்றுப் பகுதி. அடுத்து மார்பு. இவ்வாறாக அவை கூற வருவன: இச்சை அடக்கம், பசி அடக்கம், மூச்சு அடக்கம் முதலியனவற்றையே. 


அடக்கம் என்பது, ஆகும் எனினும் ஆகாமல் இருப்பது, ஆகுமெனினும் அளவுக்கு மீறி ஆகாது இருப்பது எனலாம்.


இச்சை அடக்கத்தை மனத்தால் ஏற்படுத்த முடியாது திணறுபவர்களுக்கே குடும்ப கட்டுப்பாடு என்ற தனி சிகிச்சை தேவைப்படுகிறது. இதற்கான கல்வி வெளிப்படையாக இந்தியாவில் இல்லை எனினும் இந்திய ஞானத்தில் இக்கல்வி உண்டு. 


புலனடக்கத்திற்கான தலைச்சிறந்த மார்க்கம் ஆன்மீகம். ஆன்மீகத்தின் உண்மை சொரூபத்தினை கண்டவர்கள் பௌராணிகர்களின் புராணங்களை அறிவதில்லை அதன் தத்துவ சாரத்தினை அறிகிறார்கள். அறியும் தத்துவங்களையும் கடத்த மட்டுமல்லாமல் கடந்து பார்க்கவும் ஆசைக்கொண்டு வாழ்ந்து பார்க்கிறார்கள்.


அந்த உண்மையான ஆன்மீகத்தை உணருபவர்களுக்கு உலகில் அடைய வேண்டுமென்று ஒன்றுமில்லை. "கடின சித்தர்கள் போன்றோ மாந்திரீகர்கள் போன்றோ இவ்வுலக விதிகளை மீறி வாழ முடியுமென்ற பிரமையோ ஆசையோ அவர்களிடம் இருக்காது. இவ்விதிகளுக்கு விதியான ஒன்றை நோக்கி அவர்கள் குவிகிறார்கள். அதுவே அவராகிறார்கள்"


ஈசதாசன்

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு