Trending

இந்திய விடுதலைப் போரில் நேருவின் பங்களிப்பு

இந்திய விடுதலைப் போரில் நேருவின் பங்களிப்பு


முன்னுரை


இந்திய விடுதலைப் போரில் பல்வேறு வீரர்கள் தங்களது மகத்தான பங்களிப்பினை தந்துள்ளார்கள் அதில் தவிர்க்க முடியாத இடத்தினை பெறுபவர் ஜவகர்லால் நேரு ஆவார். 14-11-1889 இல் அலகாபாத்தில் பிரபல வழக்கறிஞராக இருந்த மோதிலால் நேருவுக்கும் சொரூப ராணிக்கும் புதல்வராகப் பிறந்தவரே ஜவகர்லால் நேரு ஆவார். இவரது பிறந்த தினம் இந்தியாவில் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் மீதும் அவர்களின் எதிர்காலத்தின் மீதும் அக்கறை கொண்ட சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் இந்திய விடுதலைப் போரின் மையக் களம் கொண்டிருந்தவர். மகாத்மா காந்தியின் ஆளுமை திறனையும் தொலைநோக்கு பார்வையையும் கொண்டு எல்லோருக்குமான சமத்துவமான பாரதத்தையும் அமைக்க பாடுபட்டவர். அத்தகைய மாபெருந் தலைவர் இந்திய விடுதலைப் போரில் அளித்த பங்களிப்பினை இக்கட்டுரையில் காண்போம்.


இளமையும் எழுச்சியும்


பிள்ளைப் பருவத்தில் அரேபிய பெண்மணி ஒருவரின் மேற்பார்வையிலே நேருவுக்கு கல்வி அளிக்கப்பட்டது. நேருவுக்கு பதினைந்து வயது இருக்கும் போது, இங்கிலாந்தில் ஹாமாரவில் படிக்க சேர்க்கப்பட்டார். அதிலிருந்து நாள்தோறும் நாளிதழ்கள் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.


➤ நேருவும் குழந்தைகளும் கட்டுரை


அவை தரும் செய்திகள் மூலம் ரஷ்யாவிலும், ஜப்பானிலும் நடக்கம் யுத்த பயிற்சிகள் பற்றியும் வானில் பறக்க சோதனைகள் நடப்பது பற்றியும் நேரு அறிந்து கொண்டார். இதனால் சிறுவயதிலே நேருவுக்கு உலகியல் அறிவு அதிகமாகி இருந்தது. அதற்காக அவரைப் பாராட்டி புத்தகங்கள் பரிசாக கிடைத்தது. அந்த புத்தகங்களில் ஒன்றே 'கரிபால்டியின்' வாழ்க்கை வரலாறு. அந்த புத்தகத்தைப் படித்த நேருவுக்கு இளம் வயதிலே அடிமைப் பட்டு கிடக்கும் நம் பாரத நாட்டை சுதந்திரமாக்க வேண்டும். சிறையிலிருந்து நம் தாயகத்தை விடுதலை செய்ய வேண்டும் என்ற நேருவுக்கு ஏற்பட்டது.


முதல் அரசியல் உரை


1915 ஆம் ஆண்டு அலகாபாத்தில் 'சாப்ரூ' என்பவரின் தலைமையில் பத்திரிக்கை அடக்குமுறை எதிர்ப்பு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கலந்து கொண்ட நேரு ஆங்கிலத்தில் சுருக்கமாகப் பேசினார். அதில் கருத்து நிறைந்திருந்தது. நேரு பேசிய முதல் மேடைப் பேச்சாக அது அமைந்தது. மக்கள் ஆரவாரம் செய்து அவர் உரையை ஆதரித்தனர். அதைக்கண்ட 'சாப்ரூ' நேருவைக் கட்டிச் சேர்த்து பிடித்து உணர்ச்சி தழும்ப தழுவிக் கொண்டார்.


காந்தி சந்திப்பு


1916 ஆம் ஆண்டு இலட்சுமணபுரியில் காங்கிரஸ் மகா சபை கூடியது. அப்போது தான் காந்திஜியை முதன் முதலாக சந்தித்தார் நேரு.


தென்னாப்பிரிக்காவில் காந்திஜி செய்திருந்த மேலான சேவைகளை முன்பே அறிந்திருந்தார் நேரு.


➤ ரோஜாவின் ராஜா நேரு கட்டுரை


காந்தியடிகள் விடுத்த ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரப் பங்கு கொண்டு நாடு முழுவதும், ரௌலட் சட்டத்திற்கு எதிராக ஹர்த்தாலை அனுஷ்டிக்கச் செய்தார். பஞ்சாப் ஜாலியன்வாலா பாக்கில் நடந்த படுகொலையைக் கண்ட இவர் வெள்ளையர்களை எப்படியும் விரட்டியே தீருவது என்று தீர்மானித்தார். 1920 இல் கேரளாவில் இந்து, முஸ்லீம் வகுப்புக் கலவரம் ஏற்பட்டு நாடு முழுவதும் பரவியது. இதனால் இந்தியாவை மதச் சார்பற்ற தன்மையுடைய நாடாக ஆக்குவதாக உறுதி செய்து கொண்டார்.


சிறை சென்ற நேரு


ஒத்துழையாமைப் போராட்டத்தைத் தொடர்ந்து அன்னியத்துணி பகிஷ்கரிப்புப் பொருள்களையும் பகிஷ்கரித்ததோடு, தீயிட்டு எரித்தனர். ஐரோப்பிய உடைகளையே விரும்பி அணிந்து வந்த மோதிலால் நேருவும், ஜவஹர்லால் நேருவும் கதராடைக்கு மாறினார்கள்.


ஒத்துழையாமைப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களை சிறையிலிருந்து விடுதலை செய்த போதும், மோதிலால் நேருவை மட்டும் விடுதலை செய்யவில்லை. சிறையிலிருந்த தந்தையைக்கான 'லக்னோ' சிறைக்குச் சென்ற நேருஜியை, துணி வியாபாரிகளைப் பயமுறுத்தி கலகம் செய்யத் தூண்டியதாக ஆங்கிலேயப் போலீசார் கைது செய்தனர். வக்கீல் வைத்து வாதாடவோ, தீர்ப்பை எதிர்க்கவோ நேருஜி மறுத்தார். மிகவும் உணர்ச்சிவசப்பட்டு தனது பக்கமே நியாயமிருப்பதாக வாதாடினார். 


பயமுறுத்தலின் பேரிலும் பயங்கரவாதத்தினாலும் மக்களை அடக்கி விட முடியும் என்று எண்ணுவதனால் அவர்களை உங்களின் விசுவாசிகளாக ஆக்கி விடவும் முடியாது. அன்பு என்பது இதயத்தின் அடித்தளத்திலிருந்து எழ வேண்டும். அதை விலை கொடுத்து வாங்க முடியாது. துப்பாக்கியைக் காட்டிப் பயமுறுத்தி பெறவும் முடியாது. என்னைப் பொறுத்தளவில் இந்திய தேச விடுதலைக்காகப் போராடுவதை தனக்குக் கிடைக்கும் கௌரவம் என்றும் நேருஜி கூறினார். இதைக்கேட்ட நீதிமன்றம் நேருஜிக்குப் பதினெட்டு மாதங்கள் சிறைத் தண்டனை விதித்தது. இதனால் இந்திய விடுதலைப் போருக்காக தன்னையே தியாகம் செய்த ஜவகர்லால் நேரு 'லக்னோ' சிறையில் அடைக்கப்பட்டார்.


சிறைப் பறவை


நேரு வெளியிலிருந்த நாட்களைவிட சிறைக்குள் இருந்த நாட்களே அதிகம், அந்த அளவிற்கு பற்பல போராட்டங்களில் ஈடுபட்டத்தின் பேரில் அடுத்தடுத்துச் சிறை சென்றார். தண்டனைகளை அனுபவித்தார். அதனால் அவரை 'ஒரு சிறைப் பறவை' என்றே அக்கால தேசியத் தலைவர்கள் கூறி வந்தார்கள். 


1923 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் நாளன்று சிறையிலிருந்து விடுதலையான பின்னர், செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற அமிர்தசரஸில் நடந்த அடக்கு முறை சம்பந்தமாகப் பேசுவதற்காகச் சென்றார். அந்த இடத்திலேயே நேருவைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். விசாரித்த நீதிபதி, 'முப்பது மாதங்கள் கடுங்காவல் தண்டனையினை விதித்து' 'நாபா சிறையில் அடைக்க உத்திரவிடுகிறேன்' என்று தமது தீர்ப்பில் கூறினார். இவ்விதம் ஒன்பது தடவை நேரு சிறையிலடைக்கப்பட்டு கிட்டத்தட்ட 3262 நாட்கள் சிறையிலே தன் வாழ்வை கழித்தார்.


நேருவின் அறிக்கை


இந்தியாவில் பல்வேறு அரசியல் கட்சிகளை சைமன் குழு புறக்கணிப்பு ஒன்றிணைத்தது. சைமன் குழு முன்மொழிவுகளுக்கு அரசியல் சாசனம் மாற்றாக இந்தியாவுக்கு உருவாக்குவதை குறிக்கோளாகக் கொண்டு 1928 இல் அனைத்துக் கட்சி மாநாடு நடைபெற்றது. இந்த கொள்கைகளின் அடிப்படையில் அரசியல் சாசன வரைவுக்காக திட்டம் வகுக்க மோதிலால் நேரு தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டது. அந்தக் கமிட்டியின் அறிக்கை 'நேரு அறிக்கை' என்று அழைக்கப்பட்டது. அதில் பரிந்துரை செய்யப்பட்டவை

  • இந்தியாவுக்கு தன்னாட்டசி அதிகாரம் வழங்கப்பட வேண்டும்
  • வாக்காளர் தொகுதிகளுடன் தேர்தல் நடத்தப்பட வேண்டும்
  • முஸ்லீம்கள் சிறுபான்மையினராக உள்ள மாகாண சட்டப் பேரவைகளில் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு
  • இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ள மாகாண சட்டப் பேரவைகளில் இந்துக்களுக்கு இட ஒதுக்கீடு
  • பொது வாக்களிப்பு முறையும் அடிப்படை உரிமைகளும் வழங்கப்பட வேண்டும்

இவைகள் நேருவின் அறிக்கையில் இடம்பெற்றிருந்தன. மத்திய சட்டப்பேரவையில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஜின்னா சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்தார்.


➤ நேரு பற்றிய கட்டுரை


மூன்றில் ஒருபங்கு இடம் முஸ்லீம்களுக்கு வேண்டும் என்று ஜின்னா கோரினார். அவரை ஆதரித்த தேஜ் பஹதூர் சாப்ரூ இது பெரும் மாற்றத்தைத் தராது என்று வேண்டினார். எனினும், அனைத்துக் கட்சி மாநாட்டில் இவை அனைத்தும் தோல்வி கண்டன பின்னர், ஜின்னாவின் 14 அம்சங்கள் என்று அழைக்கப்பட்ட தீர்மானத்தை முன்மொழிந்தார். எனினும் அதுவும் நிராகரிக்கப்பட்டது. இந்து முஸ்லீம் ஒற்றுமையின் தூதராக பாராட்டப்பட்ட ஜின்னா பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு முஸ்லீம்களுக்கு தனிநாடு என வலியுறுத்த ஆரம்பித்தார்.


காந்தி - இர்வின் ஒப்பந்தம்


புதிய வைஸ்ராய் 'இர்வின் பிரபு' தேசிய காங்கிரசுடன் தொடர்பு வைத்துக் கொள்ள விரும்பினார். அதனால் 1931 ஆம் ஆண்டு 17 ஆம் நாளன்று பேச்சுவார்த்தைக்கு வரும்படி செய்தி அனுப்பினார்.


காங்கிரஸ் செயற்குழு டில்லி சென்றது. காந்தி சமரசமான முறையில் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளும் வகையில் பேசி வந்தார். இந்த செயல் நேருவை ஆத்திர மூட்டிடச் செய்தது. காந்தி - இர்வின் ஒப்பந்தம் மார்ச் 5 ஆம் நாளன்று கையெழுத்தானது. காந்தியின் சம்மதம் அறிந்து நேருவுக்கு கவலை உண்டானது. நேருவின் முகக் குறிப்பறிந்த காந்தி அவரைச் சமாதானப்படுத்தினார். நேரு - காந்தி இருவருக்கும் இடையே அரசியலில் கருத்து பேதமிருந்தாலும் அவர்களின் சுமூகமான உறவு ஒருபோதும் பாதிக்கவில்லை.


பெருங்கிளர்ச்சி


இர்வின் பிரபுவின் பதவிக்காலம் முடிந்த பின்னர் வெலிங்டன் பிரபு புதிய வைஸ்ராயாகப் பதவி ஏற்றார். அப்போது காந்திஜியை வற்புறுத்தி வட்டமேஜை மாநாட்டிற்கு வரும்படி அழைத்தனர். அதனை அறிந்த நேரு மும்பை சென்று காந்தியை இலண்டனுக்கு செல்ல வழியனுப்பி வைத்தார்.


காந்தி இந்தியாவை விட்டுச் சென்றவுடன் ஆங்கிலேய அரசு, இந்திய மக்களுக்கு தொல்லைகளைத் தரத் தொடங்கியது. வடமேற்கு மாகாணத்திலும் வங்காளத்திலும் கிளர்ச்சிகள் ஏற்பட்டன. ஐக்கிய மாகாணக் குடியானவர்களும் தொல்லைதாளாமல் பெருங்கிளர்ச்சி செய்ய முனைந்தனர். அதன் பொருட்டு நேரு சிறையிலடைக்கப்பட்டார் . சிறையிலிருந்தவாறு வெளியில் நடைபெறும் சம்பவங்களை எல்லாம் நேரு அவ்வப்போது அறிந்து வந்தார். நேருவின் தாயார் சொரூபராணியார் அலகாபாத் எதிர்ப்புக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். அதனை அறிந்த போலீசார் சொரூபராணியாரை லத்திக் கம்பைக் கொண்டு தலையில் தாக்கியதின் பேரில் ரத்தம் கசிந்தவாறு நடுவீதியில் விழுந்து விட்டார். விழுந்த சொரூபராணியாரை போலீசாரே ஆனந்தபவனத்துக்குக் கொண்டு சேர்த்தனர். 


➤ ஒரு லட்ச ரூபாய் பரிசு போட்டி கட்டுரை


சொரூபராணியார் அடிபட்ட இரண்டாவது நாளில் தலையில் பெரிய கட்டுடன் நேருவைக் காணச் சிறைச் சாலைக்கு வந்தார். நேருவுக்கு ஆறுதல் மொழிகளைக் கூறினார். தம்முடைய துன்பத்தில் தமது தாயும் பங்கு கொண்டது குறித்து தாயன்பை வியந்தார் நேரு.


ஜின்னாவின் போராட்டம்


1946 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தேர்தலில் நேரு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜின்னாவோ தனிநாடு வேண்டுமென போராட்டத்தில் இறங்கினார். வைஸ்ராய், நேருவை இடைக்கால அரசு அமைக்கும்படிக் கேட்டுக் கொண்டார். காங்கிரசுக்கு ஆறு இடங்களையும், முஸ்லீம்களுக்கு ஐந்து இடங்களையும் ஒதுக்கினார். அப்படியும் ஜின்னா திருப்தியடைவில்லை. அமைதியாக இருந்த கொல்கத்தாவில் மதக் கலவரம் ஏற்பட அவரே காரணமாகி விட்டார். முஸ்லீம்கள், இந்துக்கள், இடைக்கால அரசை எதிர்த்து முழக்கமிட்டனர். அத்தோடு மும்பை பீஹார் போன்ற நகர்களிலும் கலவரம் தீவிரமடைந்தது. இத்தனை கலவரங்கள் நடந்த போதிலும் நேரு பொறுமையுடனே இருந்தார். அதிருப்தியடைந்திருந்த முஸ்லீம்களிடையே இந்தியர்களிடையே ஒற்றுமை இருந்தால்தானே நாம் அந்நியரை நாட்டைவிட்டு விரட்ட முடியும் என்று சமாதானமாகவே கூறிவிட்டுச் சென்றார். 


முடிவுரை


இந்தியா சுதந்திரமடைந்தது. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15 ஆம் நாளன்று புது டில்லியே விழாக்கோலம் பூண்டிருந்தது. சுதந்திர விழாவில் கலந்து கொள்வதற்காக மக்கள் வெள்ளம் செங்கோட்டையை நோக்கி வந்தது. தேச விடுதலைக்காக போராடி உயிர்நீத்த தியாகிகளுக்கு மெளன அஞ்சலி செலுத்தினார்கள். வெண்ணிற உடைகளில் நேரு நள்ளிரவு நேரத்தில் உரை நிகழ்த்தினார். அதன்பின்பு இந்திய தேசிய மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்.


அந்த நிமிடத்தில் இருந்து சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஜவகர்லால் நேரு பதவி ஏற்றார். இந்திய விடுதலைப் போரில் நேருவின் பங்களிப்பு அளப்பரியதாகும். அவரது தந்தை மோதிலால் நேருவின் பங்களிப்பும் தாயார் சொரூபராணியின் தியாகமும் வணக்கத்திற்கு உரியது. அத்தகையோரினை நினைவில் கொண்டு இத்தேசத்தினை வளம் செய்வோம்


இந்திய விடுதலைப் போரில் நேருவின் பங்களிப்பு pdf


கட்டுரையை Download செய்க 

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு