Trending

இந்திய விடுதலை போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு + pdf

இந்திய விடுதலை போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு pdf


 

முன்னுரை 


இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு பெருமைக்குரிய ஒன்றாகும். விஜயநகர, மதுரை சுல்தானிய, மராத்திய மேலாதிக்கங்களை அந்நிய ஆதிக்கமாகக் கருதாத தமிழ்நாடு, ஆங்கிலேய ஆட்சிக்கெதிரான போராட்டத்தில் முனைப்புடன் ஈடுபட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே தென்னிந்தியக் கிளர்ச்சி (1800-1801)க்குத் தோற்றுவாயாக இருந்தது தமிழ்நாடு. வேலூர் கிளர்ச்சியில் (1806) தமிழ்நாட்டுப் படைவீரர்கள் துணிவுடன் போராடினார்கள் . ஆயினும், அவ்விரு துவக்க கால ஆங்கிலேய ஆதிக்க எதிர்ப்புப் போராட்டங்கள் முறியடிக்கப்பட்டன. அதன் பின்னர் ஆங்கிலக் கல்வி பெற்ற தமிழ்நாட்டுத் தலைவர்கள் உரிமை உணர்வும், விடுதலை வேட்கையும் பெற்று அரசியல் சார்ந்த அமைப்புகளை ஏற்படுத்தினர். சென்னை சுதேசி சங்கமும், சென்னை மகாஜன சபையும் அத்தகைய அமைப்புகளேயாகும். 1884 டிசம்பர் மாதம் சென்னை அடையாறில் பிரம்மஞான சபையின் ஆண்டுக் கூட்டத்துக்குப் பின் திவான் இரகுநாதராவ் இல்லத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பிரதிநிதிகள் கூடி இந்தியாவுக்குப் பொதுவான ஒரு அமைப்பை ஏற்படுத்தவும், அதன் மாநிலக் கிளைகளைத் துவக்கவும், அடுத்த ஆண்டு இறுதியில் தேசிய மாநாட்டைக் கல்கத்தாவில் கூட்டவும் தீர்மானித்தனர். ஆனால், அத்தீர்மானம் செயல் வடிவம் பெறுவதற்கு முன்னரே பம்பாயில் இந்திய தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டுவிட்டது.


தமிழர் பங்களிப்பு


பிரசித்திபெற்ற பம்பாய் மாநாட்டில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்தீர்மானங்களை மூன்மொழி வதிலும், வழிமொழிவதிலும் பங்கேற்ற சென்னை மாகாணப் பிரதிநிதிகள்; ஜி.சுப்பிரமணிய அய்யர், எஸ்.சுப்பிரமணிய அய்யர், வி.அனந்தாச்சாரியார், மூ.வீரராகவாச்சாரியார், ரங்கைய நாயுடு, எஸ்.ஏ. சுவாமிநாத ஐயர், எஸ்.வெங்கட சுப்பராய பந்துலு, அனந்தப்பூர் பி.கேசவப் பிள்ளை. அவர்களுள் மூ.வீரராகவாச்சாரியார்  'இந்து ' பத்திரிகையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ்நாட்டு தேசிய போராளிகள்


மிதவாதிகள், தீவிரவாதிகள் ஆகியோரின் சட்டரீதியான நடவடிக்கைகளைக்கூட பிரிட்டிஷ் அரசாங்கம் முறியடித்த போது தீவிரவாதிகளில் சிலர் பயங்கரவாதிகளாயினர் (Terrorists), மிதவாதிகளிடமிருந்து தீவிரவாதிகள் தோன்றியது போன்று தீவிரவாதிகளிடமிருந்து பயங்கரவாதிகள் உருவாயினர் . இவர்களில் சிலர் 1905 - ல் இலண்டனில் 'ஹோம் ரூல் லீக்" என்ற அமைப்பையும், 1906 - ல் 'இந்தியா விடுதி' என்ற முகாமையும் அமைத்தனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த வ.வே.சுப்பிரமணிய அய்யரும், திருச்சி டாக்டர் டி.எஸ். எஸ்.ராஜனும், எம்.பி.டி. ஆச்சாரியாவும் இப்பயங்கரவாதப் பாசறையில் பயிற்சிபெற்றோர் ஆவர். வெள்ளை அதிகாரிகளைக் கொன்று அந்நிய ஆட்சியாளர்களிடையே பயத்தை ஏற்படுத்தி தக்க தருணத்தில் வன்முறைக் கிளர்ச்சி செய்து, இந்தியாவை விடுவிப்பது இவர்களது குறிக்கோளாகும்.


வ.வே.சு.ஐயர்


வ.வே.சு.ஐயர். வீரசவார்க்கரின் '1857 முதலாவது இந்திய சுதந்திரப் போராட்டம்' என்ற நூலை மராத்தியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அரசாங்கத் தடையை மீறி, உலகின் பல பகுதிகளுக்கும் அனுப்பினார். "தியாக பலிக்கு ஆயத்தமாகுங்கள், பாரத மாதா அழைக்கின்றாள், 1857 திரும்புகிறது" என்ற துண்டுப் பிரசுரங்களுடன் புத்தகங்கள் தாங்கிய பெட்டி ஒன்றைப் பாண்டிச்சேரிக்கு அனுப்பினார். ரஷ்யாவுக்குச் சென்று வெடிகுண்டு தயாரிக்கும் முறையைக் கற்றுக்கொண்டு புதுவைக்கு வந்தார் (1910). புதுவையில் தஞ்சம் புகுந்து 'தர்மாலயம்' என்ற அமைப்பை ஏற்படுத்த பயங்கரவாதப் புரட்சியாளர்களுக்கு குத்துச்சண்டை, மல்யுத்தம், சுத்திச்சண்டை, துப்பாக்கிச் சுடல் ஆகியவற்றில் பயிற்சி அளித்து வந்தார். புதுவையில் புகலிடம் பெற்றிருந்த மற்றொரு தமிழ்நாட்டுப் பயங்கரவாதியான நீலகண்ட பிரம்மச்சாரியைப் பார்க்கச் சென்ற இளைஞர் வாஞ்சிநாதனுக்கு 'பிரௌனிங்' கைத்துப்பாக்கியால் சுடுவதற்குப் பயிற்சி அளித்தார் வ.வே.சு.ஐயர்.


வாஞ்சிநாதன்


செங்கோட்டை இரகுபதி ஐயரின் மகனான வாஞ்சிநாதன் திருவிதாங்கூரிலுள்ள புனலூரில் அரசாங்கக் காட்டிலாகாவில் பணிபுரிந்துவந்தார். வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா போன்ற தூய்மையான தேசியவாதிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளால் வெள்ளை அதிகாரிகளுக்கெதிராக வெறுப்பையும், வஞ்சத்தையும் வளர்த்துக்கொண்டார் வாஞ்சிநாதன். அரசாங்க அடக்குமுறைக்குக் காரணமான நெல்லை மாவட்டக் கலெக்டர் ராபர்ட் வில்லியம் ஆஷ் (Robert William D.Eticourt Ashe) என்ற அதிகாரியைக் கொல்லத் திட்டமிட்டார். புதுவையிலிருந்த நீலகண்ட பிரம்மச்சாரியை சந்தித்தார். வ.வே.சு.ஐயரிடம் துப்பாக்கி சுட பயிற்சி பெற்றார். 1911 ஜுன் 17 ஆம் தேதி கொடைக்கானலுக்குச் செல்வதற்காக நெல்லையிலிருந்து புகைவண்டியில் தன்மனைவியுடன் புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்த ஆஷை மணியாச்சி புகைவண்டி நிலையத்தில் 'பிரௌனிங்' கைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, தன்னையும் சுட்டுக்கொண்டு உயிர் தியாகம் செய்தார் வாஞ்சிநாதன்


பாரதியாரின் கருத்து


வாஞ்சிநாதன் ஆஷ் துரையைக் கொலை செய்த செய்தியை அறிந்து அதிர்ச்சியடைந்த பாரதியார் அவருடைய கருத்தைப் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்:


"ஒரு தூதிருஷ்டமான சம்பவம். இதை எதிர்பாராத விபத்து என்று சொல்லட்டுமா? ஏனென்றால், இம்மாதிரியான மற்றொரு சம்பவம் நமது ராஜதானியில் நடந்ததே இல்லை... இது மகத்தான சோக சம்பவம்"


சென்ன ஜனசங்கம்


திலகரின் விருப்பத்துக்கேற்ப தமிழ்நாட்டு சுதேசித் தலைவர்கள் 1908 ஜனவரி 11 ஆம் தேதி சென்னை திருவல்லிக்கேணி கங்கை கொண்டான் மண்டபத்தில் சென்னை ஜனசங்கம் என்ற அமைப்பைத் துவக்கினர். இந்த அமைப்பைத் துவக்க பாரதி பெரிதும் காரணமாக இருந்தார்; வ.உ.சி. இச்சங்கத்தின் தலைவராகவும், மண்டயம் எஸ்.சீனிவாசாச்சாரி, சி.எஸ்.ஆரியா, கே.வெங்கட்ரமணராவ் ஆகியோர் நிர்வாகக் குழு உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பல மாணவர்கள் இச்சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தனர். 


சென்னை ஜனசங்கத்தின் நோக்கங்கள்

  • சுதேசிப் அல்லாத பொருட்களைப் புறக்கணித்தல்
  • தேசியக் கல்வியைப் பரப்புதல். 
  • பள்ளிகளில் இளைஞர்களுக்கு உடற்பயிற்சி அளித்தல். 
  • இளைஞர்களிடையே விழிப்புணர்வை உருவாக்கல்
  • சுதேசி இயக்கக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தல் 
  • சங்க உறுப்பினர்களை அதிகரித்தல்

சென்னை ஜனசங்கம் 1912 வரை செயல்பட்டு தமிழ்நாட்டு சுதேசி இயக்கத்தை முன்னெடுத்துச்சென்றது


ரௌலட் அறப்போராட்டம்


காந்தி துவக்கிய ரௌலட் சத்தியாகிரசுத்தில் தமிழ்நாட்டுக்குத் தனிச் சிறப்புண்டு. அச்சத்தியாக்கிரகம் துவக்கப்பட்டதே தமிழ்நாட்டில் தான். 1919 பிப்ரவரி மாதம் இந்திய சட்டமன்றத்தில் ரௌலட் மசோதாக்கள் விவாதிக்கப்பட்டபோது வி.சீனிவாசாச்சாரி அம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால் இந்தியா கொந்தளிப்புக்கு உள்ளாகும் என்று அரசாங்கத்தை எச்சரித்தார். ரௌலட் மசோதாக்கள் சட்டமாக்கப்பட்டால் அதை எதிர்த்து சத்தியாக்கிரகம் செய்யப் போவதாக அறிவித்தார் காந்தி. சி.ராஜகோபாலாச்சாரியின் ஆலோசனையின் பேரில் கஸ்தூரிரங்க அய்யங்கார் காந்தியைத் தமிழ்நாட்டுக்கு வருகை தருமாறு கேட்டுக் கொண்டார். அந்த அழைப்பை ஏற்று தமிழ்நாட்டுக்கு வந்த காந்தி (1919 மார்ச் 17) கஸ்தூரிரங்க அய்யங்கார் வீட்டில் தங்கினார். அங்குதான் ரெளலட் சட்ட எதிர்ப்புத் திட்டம் உருவாக்கப்பட்டது (மார்ச் 21, 22) அதன் விளைவாக சத்தியாக்கிரக சபை அமைக்கப்பட்டது. காந்தி அச்சபையின் தலைவராகவும், சி.விஜயராகவாச்சாரி, டாக்டர் எம்.சி.நஞ்சுண்டராவ் . டி.பிரகாசம் ஆகியோ துணைத் தலைவர்களாகவும் , சி.ராஜகோபாலாச்சார் எ.கஸ்தூரிரங்க அய்யங்கார் , ஜி.அரிகரவோத்தம் ராவ் , சேலம் டி.ஆதிநாராயணச் செட்டியார் தியோச செயலாளர்களாகவும் பொறுப்பேற்றனர். சென்னை மாநிலத்தில் 120 பேர் சத்தியாகிரக சபதத்தில் கையொப்பமிட்டனர். சி.ராஜகோபாலாச்சாரி, சத்தியமூர்த்தி, வ.உ.சிதம்பரம் பிள்ளை, திரு.வி.கலியாண சுந்தர முதலியார் ஆகியோர் அந்த சபதத்தில் கையொப்பம் இட்டவர்களுள் முக்கியமானவர்களாவர். அவர்களோடு எஸ்.சீனிவாச அய்யங்கார், டி.வி.வெங்கட் ராமய்யர், டி.ராகவாச்சாரி, பி.டி.வாடியா, ஈ.வே.ராமசாமி நாயக்கர், டாக்டர் பி.வரதராஜுலு நாயுடு, சுப்பிரமணிய சிவா, பாரதியார் போன்றோரும் காந்தியின் போராட்டத்துக்கு ஆதரவளித்தனர். 1919 ஏப்ரல் 6ஆம் தேதி நாட்டில் ரௌலட் சட்ட எதிர்ப்பு நாள் துக்க தினமாக கொண்டாடப்பட்டது.


ஒத்துழையாமை இயக்கம்


தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கம் (Non - Cooperatios | Movement) சி.ராஜகோபாலாச்சாரியின் தலைமையில் ஆர்வத்துடன் நடத்தப்பட்டது. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அவரது மகன் ரா.இராமசாமியையும் மாநிலக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மற்றொரு மகன் ரா.கிருஷ்ணசாமியையும் அக்கல்லூரிகளிலிருந்து வெளியேறச் செய்து, அவர்களை கதர்த் தொண்டில் ஈடுபடுவதற்காக சேலத்துக்கு அனுப்பி வைத்தார் அவர். 'பாரிஸ்டர்' பட்டம் பெற்றிருந்த வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசப் தனது தொழிலைத் துறந்து ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தார். எஸ்.சீனிவாச அய்யங்கார் தனது அட்வகேட் ஜெனரல் பதவியையும், 'சி.ஐ.ஈ' என்ற பட்டத்தையும் துறந்தார். வ.உ.சிதம்பரம் பிள்ளை ஒத்துழையாமை இயக்கத்தை ஆதரிக்காவிட்டாலும் கூட தனது வக்கீல் தொழிலைத் துறந்து இலக்கிய பணியில் ஈடுபட்டார். சென்னை என்.எஸ்.வரதாச்சாரி , எஸ்.ராமநாதன் ஆகிய இளம் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் செல்வதை நிறுத்தி விட்டனர். இசுலாமியர்களில் சிலர் தாங்கள் வகித்த மாஜிஸ்ரேட் உத்தியோகங்களை உதறித் தள்ளினர். 1920 இறுதியில் நடக்கவிருந்த மாநில சட்டமன்றப் புறக்கணிப்புப் பிரச்சாரத்தில் தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டனர். தேர்தலில் போட்டியிட வேண்டாமென்று வேட்பாளர்களையும், மீறிப் போட்டியிடுவோருக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று வாக்காளர்களையும் அவர்கள் வேண்டிக்கொண்டனர். ராஜகோபாலாச்சாரியும், ராஜனும் திருச்சி, கோயமுத்தூர், சேலம் மாவட்டங்களில் சூறாவளிச் சுற்றுப்பயணம் செய்தனர். சென்னையிலும் திருச்சியிலும் காங்கிரஸ், கிலாபத் தொண்டர்கள் தேர்தல் புறக்கணிப்பு முயற்சியில் இறங்கினர். அதன்விளைவாக 24 தேசியவாதிகள் தேர்தலிலிருந்து விலகிக்கொண்டனர். எனினும், 1920 நவம்பர் 30 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் சென்னை மாநில சட்டமன்றத்துக்கான 98 இடங்களில் 63 - ஐக் கைப்பற்றியது நீதிக்கட்சி. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சட்டமன்றப் புறக்கணிப்பு வெற்றி பெறவில்லை. நீதிக் கட்சி தேசிய நீரோட்டத்திலிருந்து விலகிச் சென்று அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்று ஒத்துழையாமை இயக்கத்தை ஒதுக்கிவிட்டு மக்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி ஆட்சியை எளிதில் கைப்பற்றியது.


சைமன் குழு புறக்கணிப்பு


1928 பிப்ரவரி 3 ஆம் தேதி சைமன் குழு (Simon Commission) பம்பாயில் வந்திறங்கிய போது அதை எதிர்த்து இந்தியாவெங்கிலும் அர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற பிரமாண்டமான ஆர்ப்பாட்டத்தைக் கலைக்கப் போலீசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் மூன்று பேர் மாண்டனர். பிரகாசம், ஓத்துரங்க முதலியார், பக்தவத்சலம் ஆகியோர் தடியடிக்கு ஆளாயினர். திருவல்லிக்கேணி ஜார்ஜ் டவுனில் நிலைமையை சமாளிக்க இராணுவம் அழைக்கப்பட்டது. சைமன் குழு சென்னைக்கு வந்தபோது 'சைமனே திரும்பிப் போ' என்ற முழக்கம் எழுந்தது. அக்குழுவுக்கெதிராகக் கருப்புக்கொடி காட்டப்பட்டது. கண்டன ஊர்வலமும் கடற்கரைக் கூட்டமும் நடைபெற்றன. சைமன் குழுவுக்கு அளிக்கப்பட்ட அரசாங்க வரவேற்பில் டாக்டர் பி.சுப்பராயன் கலந்து கொண்டதைக் கண்டித்து அவரது அமைச்சரவையிலிருந்து ரங்கநாத முதலியாரும், ஆரோக்கியசாமி முதலியாரும் பதவி விலகினர். சைமன் குழு மீண்டும் சென்னை வந்தபோது (1930 பிப்ரவரி 29) தீவிரமாகப் புறக்கணிக்கப்பட்டது. சைமன் குழு வருகையால் தமிழ்நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சி மீதிருந்த அதிருப்தியும் வெறுப்புணர்ச்சியும் அதிகரிக்கவே செய்தன.


உப்பு சத்தியாக்கிரகம்


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராயிருந்த ராஜகோபாலாச்சாரி தமிழ்நாட்டில் உப்புச் சத்தியாக்கிரகத்தை நடத்துவதற்கான தளபதியாக காங்கிரஸ் மேலிடத்தால் நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் தலைமையகத்தை சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்றி அதைச் சட்ட மறுப்பு இயக்க மையமாகக் கொண்டிருந்தார். ராஜகோபாலாச்சாரி மதுரை சென்று மதுரை மாவட்டக் கமிட்டித் தலைவரான என்.எம்.ஆர்.சுப்பராமனையும் வக்கீல் வைத்தியநாத அய்யரையும் சந்தித்துப் பேசி வேதாரண்யம் உப்புச் சத்தியாக்கிரகம் பற்றி முடிவு செய்தார்.


தமிழ்ப் புத்தாண்டு நாளும் ஜாலியன் வாலாபாக் படுகொலை நாளும் ஒன்றாகச் சேர்ந்த 1930 ஏப்ரல் 13 ஆம் நாளன்று ராஜாஜி சுப்பராமன், மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 98 சத்தியாக்கிரகிகள் ஆக மொத்தம் 100 பேர் அதிகாலை 5 மணிக்குத் திருச்சியில் டாக்டா டி.எஸ்.எஸ்.ராஜனின் மகள் ராஜகோபாலாச்சாரியாரின் நெற்றியில் திலகமிட்டு வழியனுப்ப, தேசியக்கொடி பிடித்தோர் முன் செல்ல, சத்தியாக்கிரகிகள் வரிசைக்கு இருவராக அணிவகுத்துச் சென்றனர். வழிநெடுகிலும் பாரதியாரின்  ‘அச்சமில்லை' என்ற பாடலை அவர்கள் பாடிச் சென்றனர். அந்த யாத்திரைக்கென்றே நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது, சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்’ என்ற பாடலை புனைந்து தந்திருந்தார். சத்தியாக்கிரகிகள் அனைவரும் அப்பாடலைப் பாடிச் சென்றனர்.


வெள்ளையனே வெளியேறு இயக்கம்


1942 ஆகஸ்டு 7, 8 தேதிகளில் பம்பாயில் கூடிய காங்கிரசில் 'வெள்ளையனே வெளியேறு’ தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்தநாள் காந்தி கைது செய்யப் பட்டார். பம்பாய் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிய தமிழ்நாட்டுப் பிரதிநிதிகளான கே.காமராஜர், வேலூர் வி.எம்.உபயதுல்லா, திருவண்ணாமலை என்.அண்ணாமலைப் பிள்ளை, சி.என்.முத்துரங்க முதலியார், எம்.பக்தவச்சலம், எஸ்.சத்தியமூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறைக்குக் கொண்டுசெல்லப் பட்டனர். மதுரை அருகே ம.பொ.சிவஞானம் கைது செய்யப்பட்டார். காங்கிரஸ் மீது அரசாங்கம் நடத்திய திடீர்த் தாக்குதலால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தலைவர்கள் போராட்டத் திட்டம் எதுவும் அறிவிக்காத நிலையில் மக்கள் மனம் போன போக்கில் செயல்பட்டனர். ஆகஸ்டுப் போராட்டம் துவங்கியது.


காந்தி கைது செய்யப்பட்ட செய்தி எட்டியவுடன் சென்னையில் பூரண கடையடைப்புப் போராட்டம் கடைப் பிடிக்கப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன. தொழிற் சாலைகள் மூடப்பட்டன. கல்விக்கூடங்கள் காலியாகக் கிடந்தன. தொழிலாளர் ஆர்ப்பாட்டத்தை அடக்கப் போலீசார் சுட்டதில் 9 பேர் உயிரிழந்தனர். ஐரோப்பியர் நடத்திய கடைகள் மீது கற்கள் வீசப்பட்டன. நகரின் பல பகுதிகளில் நடைபெற்ற தடியடிப் பிரயோகத்தில் பலர் காயமுற்றனர். சென்னை, செங்கற்பட்டு, வடஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.


மதுரை மாவட்டம் முழுவதும் கடையடைப்பு செய்யப்பட்டது. பல இடங்களில் போலீசாருக்கும் இளைஞர்களுக்குமிடையே மோதல்கள் நடைபெற்றன. மதுரையிலும் பசுமலையிலுள்ள தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். மதுரையில் தடையை மீறிட்ட பேசியதற்காக எ.வைத்தியநாத அய்யர், ரெ.சிதம்பரபாரதி, கே.ராஜாராம் நாயுடு போன்ற பல பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர்.


முடிவுரை


மத்தியில் ஜவஹர்லால் நேருவின் தலைமையில் அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்தில் தமிழ்நாட்டி லிருந்து சி.ராஜகோபாலாச்சாரி இடம் பெற்றார். அதேபோன்று, இந்திய அரசியல் அமைப்புச் சட்டமன்றத்துக்காக சென்னை மாநிலத்திலிருந்து தேர்த்தெடுத்து அனுப்பப்பட்ட 49 பிரதிநிதிகளில் 22 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அட்லியின் அறிவிப்பைத் தொடர்ந்து மவுண்ட்பேட்டன் பிரபு இந்திய வைசிராயாகப் பொறுப்பேற்றார். பாகிஸ்தான் பிரிவினையோடு இந்தியா, பிரிட்டிஷ்பிடியினின்றும் விடுதலை பெற்றது. 1947 ஆகஸ்டு 14 ஆம் தேதி நள்ளிரவில் டெல்லியில் நடைபெற்றது போன்றே சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலும் பிரிட்டிஷ் ஜாக் கொடியை இறக்கி விட்டு அதற்குப் பதில் அசோகச் சக்கரம் பொறிக்கப்பட்ட சுதந்திர இந்தியாவின் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டு பட்டொளி வீசிப் பறக்கவிடப்பட்டது. சென்னை நகரம் அலங்கார ஒளிவிளக்கு வெள்ளத்தில் மிதந்தது. நள்ளிரவிலும் தமிழ்நாட்டுத் தெருக்கள்தோறும் மக்கள் கூட்டம் ஆனந்தச் சுதந்திரக் கூத்தாடிற்று. "ஆடுவோமே பள்ளும் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று” என்ற பாரதியாரின் பாடல் தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெல்லாம் பரவி மக்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு