Trending

ஒழுக்கம் விழுப்பம் தரும் கட்டுரை

ஒழுக்கம் விழுப்பம் தரும் கட்டுரை


முன்னுரை 


'ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்' என்பது வள்ளுவப் பெருந்தகையின் வாய்மொழியாகும். உயிர் எல்லாப் பொருளினும் சிறந்தது. ஆயினும் அவ்வுயிரினும் சிறந்தது ஒழுக்கமுடைமையாகும். ஏனெனில் ஒழுக்கம் ஒருவனுக்கு விழுப்பம் (பெருமை) தரவல்லது. எனவே நாம் ஒழுக்கமுள்ளவராக இருப்பதை நம் கடமையாகக் கொள்ள வேண்டும். ஒழுக்கம் என்னும் சொல்லுக்கு ஒழுகுதல் - நடத்தல் என்பது பொருள். நடத்தல் என்பது பொதுவாக நன்னெறியில் நடத்தலையே குறிக்கும். நன்மை தீமைகளை ஆராய்ந்து, பகுத்தறிந்து தீமையைக் கைவிட்டு நன்மையைக் கடைப்பிடிப்பதே ஒழுக்கம் எனப்படும். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் பதினொரு நூல்கள் நீதி நூல்களே. அவை செய்யத்தகுவன இவை என்றும், செய்யாமல் தவிர்க்கப்பட வேண்டுவன இவை என்றும் எடுத்துக் கூறிச் செய்வன செய்வது, தவிர்ப்பன தவிர்த்து வாழ வேண்டும் என்று நல்லொழுக்கத்தைப் போதிக்கின்றன. அதுபடியே ஒழுக்கம் விழுப்பம் தரும் என்ற கருத்தில் இக்கட்டுரையைக் காண்போம்


சங்க இலக்கியத்தில் ஒழுக்கம்


செய்ந்தன்றி மறவாமை, பொறுமை, இன்சொல் கூறல், இன்னா செய்யாமை, கல்வியறிவு பெறுதல், நல்லோர் நட்பு, உலக நடையை அறிந்து ஒழுகுதல் ஆகியவை ஒழுக்கத்திற்கு வித்து போன்றவை என்கிறது ஆசாரக்கோவை. தமிழ் மறையாய் விளங்கும் திருக்குறளில் வள்ளுவர் அருளுடைமை, பெருமான் அடக்கமுடைமை, அழுக்காறாமை, அன்புடைமை, இனியவை கூறல், இன்னா செய்யாமை, ஒழுக்கமுடைமை, பண்புடைமை, பிறனில் விழையாமை, புறங்கூறாமை, வாய்மை, வெகுளாமை என்னும் பல தலைப்புகளில், பல அதிகாரங்களில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகளை வலியுறுத்திக் கூறுகின்றார். என்றாலும் ஒழுக்க முடைமை என்று ஓர் அதிகாரத்தையே அமைத்து அதில் ஒழுக்கத்தின் உயர்வைப் பத்துக் குறட்பாக்களில் கூறிச் சிறப்பிக்கிறார். திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, சிறுபஞ்சமூலம், ஏலாதி போன்ற கீழ்க்கணக்கு நூல்களேயன்றித் தமிழ் இலக்கியங்கள் யாவற்றிலுமே நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகள் இலைமறை காயாயும், உள்ளங்கை நெல்லிக் கனியாயும் காணப்படுகின்றன. ஒளவைப் பெருமாட்டியின் ஆத்திசூடியும், கொன்றை வேந்தனும், நல்வழியும், மூதுரையும் ஒழுக்க நெறிகளைப் பச்சிளங் குழந்தைகளின் மனத்திலும் பசுமரத்தாணிபோல் பதியும் வண்ணம் எடுத்துரைக்கும் உயர்ந்த நூல்களே.


சங்க காலத்தும், சங்கம் மருவிய காலத்தும் தோன்றிய நூல்களேயன்றி இடைக்காலத்திலும், ஏன் இக்காலத்திலும் கூட மக்களை ஒழுக்கத்துடன் வாழச் செய்யும் நூல்கள் பல வந்துள்ளன. வந்து கொண்டும் இருக்கின்றன. 


அனோனின் கூற்று


"If wealth is lost nothing is lost 

If health is lost something is lost 

If character is lost everything is lost"


என்பது அறிஞர் அனோனின் கூற்று. ஒருவன் செல்வத்தை இழந்தால் ஒன்றையும் இழக்காதவனாகிறான். உடல் நலத்தை இழந்தால் ஏதோ கொஞ்சம் இழந்தவனாகிறான். ஆனால் ஒழுக்கத்தை இழந்து விட்டால் அனைத்தையும் இழந்தவனாகிறான் என்பதுதான் அதன் பொருள். செல்வத்தை இழந்தால் மீண்டும் ஈட்டிக் கொள்ளலாம். உடல் நலம் குறைந்தாலும் ஆரோக்கியத்தை மீண்டும் பெறமுடியும். ஆனால் உயிரினும் மேலான ஒழுக்கத்தை இழந்தவன் எல்லாவற்றையுமே இழந்தவன்தான். நல்லொழுக்கமுடையவன், சமூகத்தால் நன்கு மதிக்கப்படுவான், சிறப்பிக்கப்படுவான். போற்றப் படுவான். வள்ளுவர் கூறுவது போல ஒழுக்கத்தால் ஒருவன் மேம்பாடு அடைவான். ஒழுக்கம் தவறுதலாகிய இழுக்கமானது அவனை இழிந்த பிறப்பாளனாக்கி விடும். ஒழுக்கம் தவறுபவன் அடையக்கூடாத பெரும் பழியை அடைவான்.


பெருஞ் செல்வனாயிருப்பினும் பல நூல்களையும் ஐயந்திரிபறக் கற்ற பண்டிதனாயிருப்பினும் ஒழுக்க மில்லாதவனை உலகம் மதிக்காது. உள்ளத்தால் பொய்யாது ஒழுகுபவன் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் இடம் பெறுவான். எனவே கல்வியை விட, செல்வத்தை விட ஒழுக்கமே தேவையானது. ஒழுக்கம் உடையவனிடம் எல்லா நன்மைகளும் நாடிவரும். மன நிறைவும் மகிழ்ச்சியும் பெற்று வாழ்வாங்கு வாழ்வான். 


முடிவுரை


"பார்ப்பா னகத்திலே பால்பசு ஐந்துண்டு 

மேய்ப்பாரு மின்றி வெறித்துத் திரிவன 

மேய்ப்பாரு முண்டாய் வெறியு மடங்கினால் 

பார்ப்பான் பசுவைந்தும் பாலாய்ச் சொரியுமே” 


என்று திருமூலர் ஐம்புலன்களையும் அடக்குவதனால் ஏற்படும் நன்மையைக் குறிப்பிடுகின்றார். எனவே அறநூல்களில் கூறப்பட்டுள்ள ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடித்து, உலகம் பழிப்பனவற்றைத் தவிர்த்து வாழ்வதே உயர்ந்த வாழ்க்கையாகும். எந்தச் சூழ்நிலையிலும் நெறி பிறழாமல் ஒழுக்கத்தை உயிரினும் மேலான தாகக் கருதி வாழ்ந்து உயர்வடைவோமாக.

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு