Trending

அரியவை சொல்லும் ஆசாரக்கோவை

 


இந்த ஆன்லைன் உலகில், நாம் பல பழக்க வழக்கங்களை மாற்றிவிட்டோம் என்பதை விட மறந்துவிட்டோம்! என்பதே பொருந்தும். மறந்தவற்றையும் நாம், அந்த இணையத்திலேயே தேடுகிற நிலமை…


பண்டைய தமிழ் சங்க இலக்கியங்களில் ஒழுக்கம், காதல், வீரம் ஆகியனவற்றை பற்றியே பாடல்கள் உள்ளன. அதில், காலங்காலமாக நம் முன்னோர்கள் பின்பற்றிய, நாம் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்களை மாலை போல் கோத்து "ஆசாரக்கோவையாக" தந்துள்ளார் பெருவாயின் முள்ளியார்.


பல நூற்றாண்டு முன்னே வாழ்க்கை நெறி, ஆரோக்கியமாக வாழ கடைப்பிடிக்க வேண்டிய பழக்கங்கள், அறிவியல் பொதிந்த விடயங்கள் ஆகியனவற்றை தமிழன் சொன்னான்! என்பதற்கு இந்த 'ஆசாரக்கோவை' தகுந்த சான்று.


பதிணென்கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான இந்த நூலின் சிறப்பு மற்ற பதிணென்கீழ் கணக்கு நூல்களில் சொல்லப்படாத அறிய கருத்தை சொல்லியதே ஆகும்.


காலை எழுவது முதல் மாலை உறங்குவது வரை நாம் செய்யும் அனைத்து செயலையும் எப்படி? எங்கு? எப்பொழுது? செய்ய வேண்டும் என்பதை கூறும் அறிய நூலே ஆசாரக்கோவை! எடுத்துக்காட்டாக, எப்போது குளிக்க வேண்டும்? நின்று கொண்டே சாப்பிடலாமா? எப்படி சான்றோர் சபையில் நடக்க வேண்டும்? எங்கு மல, ஜலம் கழிக்க வேண்டும்? இன்னும் நம் அன்றாட கேள்விக்கு பதில் தருவதாகவும் இன்னும் சிலவற்றை சொல்லும் ஆசானாக ஆசாரக்கோவை இருக்கும்.


இந்த நூல் அவ்வையாரின் மூதுரை, நல்வழி போல 'பேமஸ்' ஆகாதது வருத்தமே…


சரி, அப்படி என்னதான்யா இந்த நூலில் இருக்கு? ; வாருங்கள் சில பாடலின் கருத்தை மட்டும் இந்த கட்டுரையில் பார்போம்!


நாளந்தி கோல்தின்று கண்கழீஇத் தெய்வத்தைத்

தானறியும் ஆற்றால் தொழுதெழுக அல்கந்தி

நின்று தொழுதல் பழி.  


பொருள்: 


காலையில் எழுந்தவுடன். பல் துலக்கி, குளித்து, இறைவனை நின்று தொழுகை செய்ய வேண்டும். மாலையில் அமர்ந்து தொழுவது நல்லது. என்கிறார்.


எப்பொழுது குளிக்க வேண்டும்? என்று எழும் கேள்விக்கு இறைவனை வணங்கும் முன்னும், கெட்ட கனவை கண்ட பின்னும், உடலில் தூய்மை குறைந்ததாக தோன்றும் போதும், வாந்தி எடுத்த பின்னும்,  உணவு உண்ணும் முன்னும், காலையில் எழுந்த பிறகும் நீராட வேண்டும் என்றார். 


உணவை  எப்படி எவ்விதம் உண்ண வேண்டும்? 


நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலஞ்செய்து 

உண்டாரே உண்டார் எனப்படுவர் அல்லாதார் 

உண்டார்போல் வாய்பூசிச் செல்வர் அதுவெறுத்துக் 

கொண்டார் அரக்கர் குறித்து. 


பொருள் : 


நாள் தோறும் குளித்து, உணவு உண்பதற்கு முன் கைகால், வாய் சுத்தும் செய்து, உணவு இலையை சுற்றி நீர் தெளித்து (ஈ போன்ற பூச்சி இனங்கள் வாராமல் இருக்க) உணவு உண்பதே உணவு.  இவ்வாறு சொல்லிய படி உண்ணாமல். உணவு உண்பவரை 'கொண்டார் அரக்கர் குறித்து' வியாதிகள் வந்து விரைவில் அவரது உடலை எடுத்து சென்று விடும் என்கிறார்.


உண்ணுங்கால் நோக்கும் திசைகிழக்குக் கண்ணமர்ந்து

தூங்கான் துளங்காமை நன்குஇரீஇ யாண்டும் 

பிறிதியாதும் நோக்கான் உரையான் தொழுதுகொண்டு 

உண்க உகாஅமை நன்கு. 


பொருள்: 


உண்ணும் போது கிழக்கு திசை அமர்ந்து சாப்பிட வேண்டும். தூங்கி வழியாமல், அங்கும் இங்கும் ஆடிக்கொண்டு அசையாமல், நன்கு அசைபோட்டு, பிற விசயங்களைப் பார்க்காமல், பிற கதை பேசாது, ரசித்து, ருசித்து, இறைவனை வணங்கி உணவு உண்ண வேண்டும் என்கிறார். 


அடுத்த பாடலிலே எத்திசை ஆனாலும் தங்களுக்கு தகுந்த திசைபடியும் உண்ணலாம் என்கிறார். நம்மை விட பெரியவர் உண்ண ஆரம்பிக்கும் முன் நாம் உண்ணும் கூடாது! அவர் எழுவதற்கு முன் நாம் எழுவது கூடாது! இவ்வாறு செய்யாமல் இருப்பதற்கு உணவு உண்ணாமல் இருக்கலாம் என்கிறார் முள்ளியார்.


மலம், ஜலம் கழிக்கப்பதை குறித்து


புற்பைங்கூழ் ஆப்பி சுடலை வழிதீர்த்தம் 

தேவ குலம்நிழல் ஆநிலை வெண்பலிஎன்று

ஈரைந்தின் கண்ணும் உமிழ்வோடு இருபுலனும் 

சோரார் உணர்வுடை யார்.


பொருள் : 


கால்நடை மேயும் பசும்புற்கள் நிறைந்த பகுதிகளிலும், உண்ணும் பொருள் விளையும் விளை நிலத்திலும், இடுகாடு, பலர் செல்லும் வழி, நல்ல நீர் அருகில், நிழல் தரும் இடம், ஆடு மாடுகள் அடைத்து வைக்கும் இடம் போன்ற இடங்களில் மலம், எச்சில் உமிழ்தல், சிறுநீர் கழித்தல் கூடாது என்கிறார்.


பத்துத் திசையும் மனத்தான் மறைத்தபின்

அந்தரத்து அல்லால் உமிழ்வோடு இருபுலனும்

இந்திர தானம் பெறினும் இகழாரே

தந்திரத்து வாழ்துமென் பார்.


எட்டு திசையும், ஆகாயம், பூமி ஆகியவை மனத்தால் மறைந்துவிட்ட போது, அந்தரத்தில் இருப்பதாக நினைத்து, கழிக்க வேண்டும். 'இந்திர தானம் பெறினும் இகழாரே தந்திரத்து வாழ்துமென் பார்' இந்திர பதவியே கிடைப்பதாயினும் வெளிக்காட்டாமல் விலகாமல் கழிப்பதே சிறந்தது என்று நக்கலாக கூறுகிறார் முள்ளியார். அதாவது 'இரண்டு அடக்கேல்' என்பதை தெளிவுகாட்டி முழுதுமாக கழித்தல் சிறந்தது என்கிறார்.


வேறொரு பாடலில் "இரா மரமும் சேரார்" என்று இரவில் மரத்தடியில் படுக்க கூடாது என்று அறிவியல் சொல்லும் காரணத்தை உள் வைத்து அப்போதே சொல்லிவிட்டார்.  


இறுதியாக நாம், வாழ்க்கையை நல்ல முறையில் வாழ என்பவருக்கு முள்ளியார் சொல்லும் ஆசாரத்தை காண்போம்.


நிரல்படச் செல்லார் நிழன்மிதித்து நில்லார் 

உரையிடை ஆய்ந்து உரையார் ஊர்முனிவ செய்யார்

அரசர் படையளவுஞ் சொல்லாரே என்றும் 

கடைபோக வாழ்துமென் பார்.


எந்த அளவு உயரிய மரியாதையும் ஒழுக்கமும் நம் முன்னோர்கள் பின் பற்ற சொல்லி இருக்கின்றனர் பாருங்கள்! 


'நிரல்படச் செல்வார் நிழன்மிதித்து நில்லார்' 


ஒருவரை ஒருவர் உரசும் படி செல்ல மாட்டார். ஒருவர் நிழலை மிதித்து நிற்க மாட்டாராம்.  இந்த வரியே போதும் உயரிய ஒழுக்கத்துக்கு சான்றாக!


கடைசியாக 100வது பாடலில்


அறியாத தேயத்தான் ஆதுலன் மூத்தான் 

இளையான் உயிரிழந்தான் அஞ்சினான் உண்டான்

அரசர் தொழில்தலை வைத்தான் மணாளனென்ற

ஒன்பதின்மர் கண்டீர் உரைக்குங்கால் மெய்யான 

ஆசாரம் வீடுபெற் றார்.


அதாவது ஒரு நாட்டின் சட்டம் தெரியாதவன், வறுமையில் உள்ளவன், தள்ளாத நிலையில் இருக்கும் பெரியவர், குழந்தை, உயிரை இழந்தவன், உயிர் அச்சத்தில் இருப்பவன், உணவு உண்பவன், ஒற்றனாக இருப்பவன், திருமண கோலத்தில் இருக்கும் மணமக்கள் ஆகியோருக்கு இந்த ஆசாரத்தில் இருந்து விலக்கு அளிக்கிறார்.


ஒரு பாடலில் அரசர் வரும் போது அமர்ந்திருக்க கூடாது என்று சொல்லி இருப்பார். ஆனால் அது மணமக்கள் ஆயின் அவர்களுக்கு விலக்கு அளிக்கிறார். உண்பவனுக்கும் அப்படியே!


இன்னும் இந்த கட்டுரையில் குறிப்பிடாத பல அறிய கருத்துடன் 100 பாடல்களை கொண்டு ஆசாரக்கோவை விளங்குகிறது. (இந்த கட்டுரையில் உள்ள பாடல்கள் வெறும் சாம்பில்  மட்டுமே) சில பாடலுக்கு மட்டுமே உரை விளக்கம் தேவை மற்றவை படித்தாலே விளக்கம் புரியும். ஆகவே ஆசாரக்கோவையை அனைவரும் படித்தறிய வேண்டும் என்பதோடு மட்டுமல்லாது தமிழனின் அற அறிவு நிலை எத்தனை ஆண்டுக்கு முன்னே எத்தனை உச்சத்தில் இருந்துள்ளது என்பதை நீங்களும் அறிய வேண்டும்


குகன்

தென்றல் இதழ் 26

4 Comments

  1. இந்த இதழில் வெளியான கட்டுரைகளில் சிறந்தது இது என உறுதியாக
    கூறுவேன்.
    நல்வழி காட்டும் நம்
    மூதாதையரை
    நினைத்து பெருமை
    கொள்கிறேன்.

    ReplyDelete
  2. அதிகம் படித்திடாத கொள்ளுப்பாட்டியாள் இதில் சொல்லப்பட்ட பல வற்றை அடிக்கடி கூற கேட்டிருக்கிறேன்.. அதை கேலிகிண்டல் செய்து மறுதலித்தும் இருக்கிறேன்..
    அவை இத்தனை ஆயிரம் வருடங்களாக எழுதி பின்பற்றப்படுகிற பண்பாட்டு ஒழுக்கம் என்பது புரிகிற போது.. பாட்டி இல்லாவிடிலும் அந்த கூற்று செவிகளில் ஒலித்தவாறே இருக்கிறது..

    உண்மையில் அவர்கள் தான் வாழ்வை பற்றி படித்திருக்கிறார்கள். நான் எதை படித்தேன் என்பது கூட எனக்கு நினைவில்லை.

    நல்ல நூல் ஒன்றை புரட்டி பார்த்த திருப்தி கிடைக்கிறது..

    ReplyDelete
  3. ஐந்தாம் வகுப்பு வரை பிள்ளைகளுக்கு இதுபோன்ற நூல்களையே கட்டாய பாடமாக்கி படிக்க வைக்க வேண்டும். நாட்டின் சட்டங்களுக்கு முன்பாக தாயகத்தின் பண்பாட்டை பின்பற்ற பழக்குவிக்கவேண்டும்..

    ReplyDelete
  4. பதினெண்கீழ் கணக்கு ஒரு ஆச்சரியம். சென்ற இதழில் இனியவை நாற்பது பற்றி எழுதினேன்.

    இத்தனை அற நூலை கொண்ட அக்கால தமிழன். கொஞ்சம் இக்கால தமிழனை எட்டி பார்த்தான் எனில்,

    ச்சீ ... என்பான்

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு