Trending

ஏ! தாழ்த்தப்பட்ட தமிழகமே

 

ஏ! தாழ்த்தப்பட்ட தமிழகமே

முதல்வர் ஸ்டாலின் பள்ளி பிள்ளைகளுக்கான காலை உணவு திட்டத்தை கொண்டுவந்தது பாராட்டுதலுக்குரியதே. அதில் சந்தேகமில்லை.


ஆனால் அவர் குழந்தைகளுக்கு முன்னிலையிலே தட்டில் கை கழுவினார் என்பதை படித்த போது சங்கடமாய் இருந்தது. அதும் தட்டில் உணவு மிச்சம் இருந்த போதே கை கழுவினாராம்.


மரபுகளை நெறிமுறை என்று கருதாது பழைய வழக்கு என்று கருதும் காலமிது ஆதலால் மக்களிடைய நல்ல பழக்க வழக்கங்களை எதிர்பார்ப்பது கஷ்டமே. இருந்தாலும் சில நல்ல பழக்க வழக்கங்களை தெரிந்து கொள்ளுங்கள்.


தமிழன் தன் ஒவ்வொரு செயல்களிலும் நெறிகளை கடைப்பிடிப்பான். அது 'விரிச்சி' போலானது.


அதாவது நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் அதற்கு தகுந்த இன்னொரு விளைவை நல்கும். நாம் நல்லவைகளை செய்தால் நல்லவைகளையே பெறுவோம்.


'உன்னம்' பார்த்தல் என்பதொரு பழக்கம் தமிழிரிடையே உண்டு. உன்னம் கண்டு சென்றால் காரியத்தில் வெற்றி என்பது முன்னோரின் வழக்கு ஆனால் இது போர்மேற் செல்லும் வீரர்களுக்கானது என்பதால் இப்போது வழக்கில் இல்லை.


இவைகளை சகுனம் என்பர். முறையும் சகுனமும் வேறானது. சகுனம் பார்த்தல் பகுத்தறிவுக்கு பாதகம் செய்வது. ஆனால் 'முறைகள்' அவ்வாறல்ல.


இன்னும் சுருங்க சொல்ல வேண்டுமாயின், 'ஒலிம்பிக் போட்டி தொடங்கும் முன் ஒரு பந்தம் ஏற்றுவார்கள், முடியும் போது அணைத்திடுவார்கள்'. இது தான் முறை.


இங்கே சென்றும் நாம் பகுத்தறிவு பேசலாம். ஆனால் இது தான் 'முறை' எனில் அவற்றிற்கு மதிப்பளித்தல் நமது கடமை.


மிகவும் கேவலமான செயலொன்று நமது சமுதாயத்தில் இரண்டற கலந்துவிட்டது. இது மேற்கத்திய கலாச்சாரத்தின் வெளிப்பாடு


'வேலை முடிந்ததும் கதவை அடைப்பது'


இது மிகவுந்தவறு. ஒரு துப்புரவு பணியாளர் வீட்டு வாசலுக்கு வந்து குப்பைகளை கேட்கிறார். அவருக்கு குப்பைகளை கொடுத்த அடுத்த கணமே அவரது முகத்துக்கு நேராக கதவை தாழிட்டது ஒரு குடும்பம்.


இது மிக மிக மிக தவறு. ஒருவர் நம் வீட்டு வாசலில் நிற்பாரேயானால் அப்போது அவர் முகத்துக்கு நேரே கதவை தாழிடவே கூடாது. அவர் உங்களுக்கு யாரென்று தெரியாதவராகவே இருந்தாலுங் கூட கதவை அடைக்க கூடாது.


இது தான் தமிழர் பண்பாடு. இதே அவர் வீட்டுக்குள் வந்துவிட்டார் எனில் அவருக்கு தண்ணீர் கொடுக்காமல் வீட்டை விட்டு வெளியே அனுப்பக்கூடாது.


யார் நம் வீட்டு வாசலில் வந்து நின்று தண்ணீர் கேட்டாலும் மறுக்காமல் தண்ணீர் தர வேண்டும். 'உலகிலேயே இந்த இரண்டு நாடுகளில் மட்டும் தான் எந்த வீட்டு வாசலுக்கு சென்று தண்ணீர் கேட்டாலும் கிடைக்கிறது. ஒன்று இந்தியா, இரண்டாவது ஜப்பான்' என்கிறார் சாருநிவேதிதா.


இந்த பழக்கத்தை நாமெப்போதும் கைவிட்டுவிடக் கூடாது. இலையில் சோறு போட்டு ஈயை தூர ஓட்டு எனும் காலம் ஓடி, இலையில் சோறு போட்டு வீட்டு கதவை பூட்டு எனும் காலம் வருகிறது.


'தனியே உண்பவன் தமிழனே அல்ல' 


பசிக்கிறதா ஏதும் உண்கிறீர்களா! அருகில் எவரேனும் இருந்தார்களேயானால் அவருக்கு தந்து உண்ண வேண்டும். குறைந்தபட்சம் 'கேட்கவாவது' வேண்டும்.


வீட்டிலிருந்து ஒருவரை வழியனுப்புகிறோம் எனில் குறைந்தது ஏழு அடி முன் சென்று அவர்களை அனுப்பி வைத்தல் வேண்டும். பொருநராற்றுப்படையில் கரிகால் சோழன் தன்னை காண வந்த பொருநர்களை அரசனாகினும் தமிழர் முறை தவறாது ஏழு அடி முன் வந்து வழியனுப்பி வைத்தான் என்கிறது.


இது தான் முறைமை. 


இறைவன் இந்து முறையில் வடிவங்களாகினும். பார்க்கும் எதுவும் தமிழர்க்கு இறைவன். செய்யும் செயல் யாவும் இறைவனுக்கு அர்ப்பணம்.


அதனால் தான் நாம் மலையை வணங்கினோம். காட்டை வணங்கினோம். தொழிலை வணங்கினோம். ஆறு, கடல், மாடு, ஆடு எல்லாம் தமிழர்க்கு இறைவன்.


அதனால் தான் காகிதத்தில் கால் பட்ட உடன் அதை வணங்க சொல்லி தருகிறார்கள். கல்வியின் முன் சரணாகதி ஆகாதவன் அதை அடையும் யோக்கியதையை இழக்கிறான். பணத்தை அவமதித்தல் கூடாது. 


உணவை என்றுமே இகழ்தல் பாவம். அது தான் மூல முதல் தெய்வம். உணவு வைத்திருக்கும் பாத்திரத்திலோ அல்லது அதை போட்டு உண்ணும் தட்டிலோ உங்களது கால் விரல் நுனி பட்டால் கூட உயிரே சென்றதாக எண்ணி அதை தொட்டு வணங்குதல் வேணும். இந்த முறை உணவுக்கும் அதை விளைவித்த விவசாயிகளுக்கும் அவர்களுக்கு துணை நின்ற இயற்கைக்கும் நாம் செலுத்தும் நன்றியாம்.


அதே போலே உணவு போட்டு உண்ணும் தட்டிலே கை கழுவதல் கூடாது. அதும் உணவு இருக்கும் போதே தட்டில் கை கழுவதல் அந்த உணவை அவமதித்தலுக்கு சமானம்.


கல்யாண வீட்டில் கீழிருந்து மேலாக இலையை மடித்தல் பாவம். இது உங்களது நற்செய்கையில் எனக்கு விருப்பமில்லை. இதை ஒரு துர் சடங்காக எண்ணிக்கொள்கிறேன் என்பதை வெளிப்படுத்தும் காரியம்.


இழவு வீட்டில் இலையை கீழிருந்து மேலாக மடித்தல் வேண்டும். மேலிருந்து கீழாக மடித்தோமானல் உங்களது சங்கடத்தை நான் சந்தோஷமாக எண்ணுகிறேன் என்பதை வெளிப்படுத்துவதாகிறது.


ஆசாரக்கோவை என்னும் ஒரு நூலுண்டு அதில் பல நல்ல கருத்து இருந்தாலுமே கூட எனக்கு தனிப்பட்ட முறையில் அந்நூல் பதினெண்கீழ்கணக்கில் ஒன்றாக இருப்பதில் சம்மதம் இல்லை. 


இருந்தாலும் அந்நூலில் தமிழர்களின் ஒழுக்க முறைகள் பெரியோரை எவ்வாறு மதித்தல் வேண்டும். உண்ணும் முறையில் கொள்ள வேண்டிய ஒழுக்கம். தொழில்மேற் கொள்ளும் ஒழுக்கம் என்பது விரிவாக பேசப்படுகிறது.


தமிழரை முற்காலத்தில் தெலுங்கர் 'அறவர்' என அழைத்ததாக வரலாற்று ஆய்வாளர் டாக்டர் குண்டர்ட் அவர்கள் தன்நூலில் குறிப்பிடுகிறார்கள். 


அதற்கு காரணம் தமிழரின் ஒவ்வொரு செயலிலும் இருந்த நேர்மை. இத்தனை பண்பாளனை வேறெந்த நாட்டினரும் கண்டிராத காரணத்தால் தமிழரை வியந்து அறவர் என்றார்கள். தனிப்பட்ட ஒருவனுக்கு வைக்கும் பெயரை ஒரு பெரும் இனக்குழுவுக்கு ஒரு பெரும் தேசமே வைக்கிறதாயின் நம் முன்னோர் முறைமையை கருதி பார்க்க.


பின் நம்மவர் அனைவரும் இப்பட்டத்தை ஒழுக்கத்தில் நம்மிலும் மேம்பட்ட புத்தருக்கு சூட்டி மகிழ்ந்தோம்.


அறவராய் இருந்த நம் நிலையை கொஞ்சம் இன்றைய நிலையோடு ஒப்பிட்டு பாருங்கள். 


ஏ! தாழ்ந்த தமிழகமே என எவரேனும் கூறினால் சற்று திருத்தி கொள்ளச் சொல்லுங்கள்..


ஏ! தாழ்த்தப்பட்ட தமிழகமே… என்று


தீசன்

2 Comments

  1. ஸ்டாலின் ஏன் அப்படி நடந்து கொண்டார் என்று தெரியவில்லை. எழுபது வயது மனிதருக்கு அந்த உணவு ஒத்துக்கொள்ளவில்லை என கருதினாலும் தட்டில் உணவோடு கை கழுவுதல் என்பது யாராலும் ஏற்றுக் கொள்ள இயலாது.

    ReplyDelete
  2. திராவிட கொத்தடிமைகளுக்கு இதுலாம் புரியாது

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு