Trending

ஆயுத பூஜை ஏன் கொண்டாட வேண்டும்?

சின்னஞ்சிறு பெண் போலே!
கல்விக்கென்று தனியே, ஒர் கடவுள் அமைத்து வழிபடுவதை வேறெங்கும் காண முடியாது. அதிலும் இருபாலுக்கும் அவசியமான கல்வி மற்றும் செல்வத்தையும், ஆண்பாலுக்கே இலக்கணமாக கூறப்படும் வீரத்தையும் பெண் வடிவில் அமைத்து வழிபடுவது அதனினும் சிறப்பு.


சரஸ் என்ற வடமொழி சொல்லுக்கு நகர்தல் என்று பொருள். சரஸ்வதி என்ற ஒர் ஆறு ஓடி, பின் அது பூமியுள் புதையுண்டதாக ஒர் செய்தி கூறப்படுகிறது. அதன் காரணமாக வடமொழியில் கலைமகளுக்கு சரஸ்வதி என்ற சொல் பெயராக வந்திருக்கலாம். 


மகிஷாசுரன் என்னும் அரக்கன் ஆண்கள் தன்னை வெல்ல முடியாதபடியும் பெண் தான் தன்னை தோற்கடிக்க முடியும் என்பதை கடும் தவம் இருந்து வரமாக பெற்றான். அவன் எல்லா தேவர்களுக்கும் தொல்லை கொடுத்துவந்தான். இதனால் பிரம்மன், விஷ்ணு, ருத்திரனால் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனால் மூவரும் கலைமகள், அலைமகள், மலைமகளை வேண்ட மூவரும் ஒன்றாகி ஒர் உருவம் கொண்டு ஒன்பது நாட்கள் கடும் போருக்கு பிறகு மகிஷாசுரனை வீழ்த்தினர். என்று ஒர் கதை உண்டு. அதனால் விஜயதசமி அன்று தீய பழக்கங்களை விட்டோழித்து நல்ல பழக்கங்களை துவங்கும் நாளாக அனுசரிக்கப்படுகிறது.


கடவுள் கதைகள், நவராத்திரி விழா மற்றும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயூத பூஜையை ஆகியவற்றை விமர்சிக்கும் அன்பர்கள், இந்த கதையை உற்று நோக்க வேண்டும்.


இதில் கூறப்படும் மகிஷாசுரன் பெண்கள் திராணியற்றவர்கள் என்று தப்பு கணக்கை போட்டு வம்பிழுக்க, முப்பெரும் தெய்வங்களாக கருதப்படும் மூன்று ஆடவர்களால் கூட அவனை சமாளிக்க முடியாமல் முத்தேவியை வேண்டியதால் மகிஷாசுரனுக்கு முடிவு வந்தது.  ஆம் இது கதை தான் ஆனால் இதிலே 'ஆண்களுக்கு பெண்கள் சலைத்தவர் அல்லர்' என்பன போன்ற பல கருத்துக்களை சுமந்துள்ளது.நவராத்திரி ஒன்பது நாள்களில் முதல் மூன்று நாட்கள் துர்க்கையை நினைத்து விரதம் இருக்க வேண்டும். இடை இரண்டு நாட்கள் லட்சுமியை நினைத்து விரதம் இருக்க வேண்டும். கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியை நினைத்து விரதம் இருக்க வேண்டும். இது எதன்காரணமாக செய்யவேண்டும் என்பதை பாரதி, நவராத்திரி கட்டுரையில் ஒர் தந்திக்கு பதில் தரும் வரிகளை அப்படியே தருகிறேன்'கும்பகோணத்துத் தந்தி பேசுகிறது: "இந்தப் பூஜைகளின் நோக்கம் உலக நன்மை. நவராத்திரிக் காலத்தில் யோகமாயை துர்க்கை, லக்ஷ்மி, ஸரஸ்வதி என்ற மூன்றுவித வடிவங் கொண்டு, துஷ்டரை எல்லாம் அழித்து, மனித ஜாதிக்கு மகிழ்ச்சி பெருக வைத்தாள். மனிதர் படும் துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டாக தேவி அவ்வாறு அவதாரம் செய்த காலம் முதல் இன்றுவரை, பாரத தேசத்தில் எல்லாப் பக்கங்களிலும் ஆரியர் இந்தத் திருவிழாவைக் கொண்டாடி வருகிறார்கள். தேவி உலகம் முழுவதிலும் பரவி இருக்கிறாள். ஒவ்வொரு தனிப்பொருளிலும் நிறைந்து நிற்கிறாள். இவளே மாயை; இவளே சக்தி; செய்பவளும், செய்கையும், செய்கைப் பயனும் இவளே, தந்தையும் தாயும் இவள்; இவளே பரப்பிரம்மத்தின் வடிவம். இவள் காத்திடுக" என்பது தந்தி.


பாரதியின் பதில்:

 'உண்மைதான், ஆனால், "தேவி அவ்வாறு அவதாரம் செய்த காலம் முதல்'' என்ற வாக்கியம் மாத்திரம் கதை. தேவி எப்போதும் அந்த வடிவங்களிலே நிற்கிறாள். ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற முத்தொழிலும் எப்போதும் நடக்கின்றன. லோக ஸம்ரக்ஷணை எப்போதும் செய்யப்படுகிறது. எப்போதுமே ஆராதனை செய்யவேண்டும். சரத்காலத் தொடக்கத்திலே பேரருளைக் கண்டு விசேஷ விழா நடத்துகின்றோம். 'தவம், கல்வி, தெய்வத்தைச் சரண் புகுதல் இம்மூன்றும் கர்ம யோகம் (கிரியா யோகம்)' என்று பதஞ்சலி முனிவர் சொல்லுகின்றார். லௌகிகக் கவலைகளாலே இம்மூன்று தொழிலையும் எப்போதும் செய்துகொண்டிருக்க முடியாமல் தடுக்கப்படும் சாமானிய ஜனங்கள் நவராத்திரி ஒன்பது நாள் இரவும் பகலும் மேற்கூறிய மூவகை நெறியில் நிலைபெறும்  வண்ணமான விதிகள் ஆகமங்களிலே கூறப்பட்டன.


ஒன்பது நாளும் தியானம், கல்வி, தவம் இவற்றிலே செலவிடத் திறமையில்லாதோர் கடைசி ஒன்பதாம் நாள் மாத்திரமேனும் விரதம் காக்கவேண்டும்; இந்தப் பூஜையின் பொருள் மிகவும் தெளிந்தது.


'சக்தியால் உலகம் வாழ்கிறது;


நாம் வாழ்வை விரும்புகிறோம்; ஆதலால் நாம் சக்தியை வேண்டுகிறோம்' என்று கூறுகிறார் பாரதியார்.


ஒரு பெரியவர் கேட்கிறார், ஓலைக்குடிசையும், கலப்பையும் ஏரும் மண்வெட்டியும் அரிவாளும் இரட்டை வண்டியும் உனக்கு தெரிந்த கண்டுப்பிடிப்புகள். கடவுட் படங்கள் கூட சரஸ்வதி பூஜை அறியாதவன் கண்டுபிடித்து கொடுத்ததினால் தான் நீ கொண்டாடுகிறாய்,


சரஸ்வதி பூஜை! ஆயுத பூஜை! ஏனப்பா, கொஞ்சம் யோசிக்கக்கூடாதா? என்று. 


ஆம் நீங்கள் சொல்வதெல்லாம் சரியென்றே வைத்துக்கொள்வோம். பெரியவரே! இப்படி கேள்விகளை கேட்க உங்கள் அறிவுக்கு உதவி புரிந்த கல்விக்கு ஒருமுறையேனும் நன்றி செலுத்தவே இந்த பூஜை.


அன்றாடம் ஒர் கருவியையோ அல்லது ஒரு பொருளையோ துணைக்கொண்டு பிழைப்பு செய்து வாழ்க்கை நடத்தி வரும் ஒருவர். அவர் பிழைப்பதற்க்கு காரணமாகிய அந்த ஜடப்பொருளுக்கு ஒருமுறையேனும் நன்றி செலுத்தவே தான் இந்த பூஜைகள்.சரஸ்வதி உருவத்துக்கு முன் கைக்கூப்பி வேண்டியவனுக்கு உள்ளத்துள் ஒருமுறையேனும் கல்வியின் அவசியத்தை பற்றியும் அதன் பெருமையை பற்றியும் தோன்றும். அது போல தான் கருவிகளை நம்பி பிழைத்து வருபவர்களுக்கும் அவர்கள் வாழ்வை சிறக்க வைத்த கருவிகளை பற்றியும் அதை கண்டுபிடித்தவன் யாரென தெரியவில்லை என்றாலும்,மனம் அவனுக்கு நன்றியை  ஒருமுறையாவது செலுத்தும்.


மனிதனிடம் நன்றி மறப்பது குற்றம் என்றால், உங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் கல்விக்கும், கருவிக்கும், தொழிலுக்கும் நன்றி சொல்ல மறந்தால் அதுவும் குற்றம் தான்.


எனக்கும் புத்தகத்தில் பொட்டு வைத்து அதற்கு சூடம் காட்டுவது பிடிக்காது. ஆனாலும் இதுவரையில் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் அந்த கல்விக்கு நன்றி கூற மறுத்தால் நானும் நன்றிகெட்டவன் ஆகிவிடுவேன்.


அத்தகைய காரணத்தினாலும் நம்மை மரியாதை நிமித்தமான ஒழுக்கத்தை கொடுப்பதற்காகவும் தான் இந்த பூஜைகளையும் கொண்டாடங்களையும் உருவாக்கினர் என்பது என் தீர்க்கமான கருத்து.


இப்போது வந்த ஆயுத பூஜை நாளன்று என் தெருவில் வசிக்கும் கிறிஸ்தவர் ஒருவர், இந்து மதத்தை சேர்ந்த நண்பர்களை அழைத்து, அவர் வைத்திருந்த டிராக்டர் வாகனத்தை கழுவி, அதில் வாழை மரத்தை கட்டி வண்டி முழுவதும் சந்தனத்தை தெளித்து பொரிகடலைகளை அனைவருக்கும் வழங்கினார். அவருக்கு தெரியாது கணேசனுக்கு சரஸ்வதி என்ன முறை வேணும் என்று. ஆனாலும் அவர் நல்லபடியாக வாழ உதவி செய்த அந்த வாகனத்திற்கு நன்றி செலுத்தினார்.


மத கலவரங்கள் பல இடங்களில் அடங்கிவிட்டன. இன்னும் சில நாட்களில் அது முற்றிலும் அழியத்தான் போகின்றன. ரம்ஜான் அன்று சாதி மதம் பாராமல் பிரியாணியை வழங்குபவர்களும், கிறிஸ்துமஸ் அன்று கேக் வழங்குபவர்களும், மசூதிக்கும் சர்ச்க்கும் சென்று வரும் இந்துக்களும். கோயிலுக்கு சென்று வரும் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் இன்று பல்கிப் பெருகிவிட்டனர். இங்கு கடவுளும் அதனால் ஏற்படும் பூஜைகளினாலே இவ்வளவு ஒற்றுமை இன்றைய சூழலில் பிறந்திருக்கிறது. கடவுளின் பெயராலே பல கவிகளும், அற்புத இசைகளும், கீர்த்தனைகளும் இன்னும் பலவை… எல்லா மதத்திலும் கண்டுபிடித்திருக்கின்றனர். கடவுள் இருக்கிறான்! அவன் எங்கும் இருக்கிறான்!


"

சாணிலு முளன்; மற் றாங்கோர்

அணுவினைச் சத கூறிட்ட

கோணிலும் உளன்; மாமேருக் குன்றிலும் உளன்; இந்நின்ற

 தூணிலும் உளன்; யான் சொன்ன

சொல்லினும் உளன்" கோபிக்காதே, யோசித்து பார்! முதலில் கோபம் வரும், பிறகு வெட்கம் பிறக்கும், அதையும் தாண்டினால் விவேகம் பிறக்கும்.


பொங்கலுக்கு நன்றி சொல்வது போல் தானே கல்விக்கு நன்றி சொல்கிறோம்.. பொங்கலென்று சூரியனுக்கு நன்றி சொல்லும் நீ ஏன் ஆயுத பூஜையில் உன் தொழிலுக்கும் கல்விக்கும் நன்றி சொல்ல மறந்தாய்.


செய்யும் தொழிலே தெய்வம் அதை ஒருநாளாவது வழிபட வேண்டாமா? 


வருடம் முழுதும் நேர்மையாக இருந்தாலே வழிபடுவதற்கு சமம் தான். நன்றி என்று ஒருநாள் கூற உனக்கு நாக்கில்லையா?


யோசித்துப்பார்! அடுத்த ஆண்டுக்குள்ளாவது!இவ்வளவு கருத்துகளையும் தாங்கி உள்ளத்திலே கருணையுடன் உருவத்திலே பல செய்திகளையும் கொண்டு மூன்று தேவிகளும், சின்னஞ்சிறு பெண் போலே சிலையாக அமர்ந்திருக்கிறாள்…

அவளுக்காக இல்லை என்றாலும் அவள் தன் உருவத்திலே சொன்ன கருத்தையாவது நினைவில் கொண்டு சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை மூலம் கட்டாயம் உங்கள் வாழ்வை மாற்றும் கல்விக்கும், தொழிலுக்கும் நன்றி செலுத்துங்கள்!


ஆயுதமும் காகிதமும் புரட்சிக்கு மட்டுமல்ல, பூஜைக்கும் தான்


ஆயுதமும் காகிதமும் பூஜைக்கு அல்ல புரட்சிக்கு மட்டும் தான் என்று கூறுவோரின் பேச்சை கேட்காதீர்கள். துடைத்து கழுவி சுத்தம் செய்ய அவனுக்கு அலுப்பு அவ்வளவு தான். 


உள்ளத்தை உருக வைக்கும் ஒர் அற்புத தமிழ் கீர்த்தனையை ஒலி வடிவமாக தந்து என் மன ஆதங்க கட்டுரையை நிறைவு செய்கிறேன்…


குகன்
சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி

சிவகங்கை குளத்தருகே ஶ்ரீ துர்கை சிரித்திருப்பாள் {சின்னஞ்சிறு}


பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது

பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் கிடையாது {சின்னஞ்சிறு}


மின்னலை போல் மேனி அன்னை சிவகாமி

இன்பமெல்லாம் தருவாள் எண்ணமெல்லாம் நிறைவாள்

பின்னல் சடை போட்டு பிச்சிப்பூ சூடிடுவாள்

பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள் {சின்னஞ்சிறு}இராகம்: சிந்து பைரவி

தாளம்: ஆதி

இயற்றியவர்: உளுந்தூர்பேட்டை சண்முகம்

பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்


2 Comments

  1. ஆயுதமும் காகிதமும் பூஜைக்கு அல்ல புரட்சிக்கு மட்டும்தான் என கூறுவோரின் பேச்சை கேட்காதீர்கள்.துடைத்து கழுவி சுத்தம் செய்ய அவனுக்கு அலுப்பு." நல்ல வரிகள்.சீர்காழியார் பாடல் காதுக்கு இனிமை.

    ReplyDelete
  2. மனிதனிடம் நன்றி மறப்பது குற்றம் என்றால், உங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் கல்விக்கும், கருவிக்கும், தொழிலுக்கும் நன்றி சொல்ல மறந்தால் அதுவும் குற்றம் தான்."## மனதை மாற்றிய வரிகள்..

    மேலும் நீங்கள் குறிப்பிட்டதுபோல நல்ல விஷயங்கள் மாற்றுமதத்தில் இருந்தாலும்கூட அதனை மனமுவந்து ஏற்று கொண்டாடுவதை தற்போது கண்கூடாக காணமுடிகிறது.. எவையெல்லாம் முன்பு சர்ச்சை ஆகினவோ அவை சீர்திருத்த பட்டு சீரோடும் சிறப்போடும் எல்லை தாண்டி பின்பற்றபடுவது மகிழ்ச்சிதருவதாய் இருக்கிறது..

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு