Trending

அஞ்சல் துறையால் Amazon ஆக முடியும்

 


நம் தலையையே அடமானம் வைத்தாலும் பக்கத்து கடைக்காரன் கடன் தர யோசிக்கும் இந்த காலத்தில், உலகம் மனிதர்களுக்கு விலை நிர்ணயம் செய்கிறது. உங்களுக்கு தெரியுமா? 2021 கணக்குப்படி பில் கேட்சின் விலை 9.14 லட்சம் கோடி ரூபாய். சுந்தர் பிச்சையின் விலை 9745 கோடி ரூபாய். முகேஷ் அம்பானியின் விலை 6.06 லட்சம் கோடி ரூபாய். ரத்தன் டாட்டாவின் விலை 3,500 கோடி ரூபாய்.


இப்படியே பட்டியல் நீள, முதல் இடத்தை 48 லட்சம் கோடியுடன் Amazon நிறுவனர் ஜெஃப் பெசோஸ் பிடிக்கிறார்.


48 லட்சம் கோடி என்பது சாதாரணம் அல்ல. இந்தியா நிலவுக்கு 2,400 முறை சென்று வருவதற்கான மொத்த செலவு அது.


சாதாரண கொரியர் நிறுவனம் 48 லட்சம் கோடி சம்பாரிக்கும் போது ஏன் இந்தியாவின் அஞ்சல் துறையால் அதிலொரு 10% ஆவது சம்பாதிக்க முடியாது?


ஆம், நிச்சயம் முடியும். முதலில் Amazon என்ன செய்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.


நானொரு கடை வைத்துள்ளேன்'. ஆனால் என் கடையில் ஒரு பொருள் கூட கிடையாது. அது ஒரு வெற்றுக்கடை.


ஒருமுறை ஒரு கிராமத்து கடைக்காரர் ஒருவர். என் கடை இருக்கும் கடைத்தெரு வழியே நடந்து செல்கிறார். அன்று தெருவில் நல்ல கூட்டம். அவர் என் கடைக்குள் நுழைந்து 'என்னிடம் நிறைய பொருள் இருக்கிறது. ஆனால் என் கடை கிராமத்தில் இருப்பதால் அதிக விற்பனை இல்லை. இங்கே நல்ல கூட்டம் இருக்கிறது. நான் உங்கள் கடையில் வைத்து விற்றுக் கொள்ளலாமா?' என்று கேட்கிறார்.


இங்கே தான் நீங்கள் என் யுக்தியை காண வேண்டும். 'சரி விற்றுக்கொள், ஆனால் நீ எந்த பொருளை விற்கிறாயோ அந்த பொருளின் மதிப்பில் 1% எனக்கு கொடுக்க வேண்டும்' என்கிறேன் நான்.


அவருக்கும் நல்ல லாபம் கிடைப்பதால் 1% பெரிதாக தெரியவில்லை. 'சரி' என்கிறார்.


கடையில் வந்து பொருளை வைக்கிறார். விற்கிறார். 1% கொடுக்கிறார்.


இது தான் Amazon 48 லட்சம் கோடி சம்பாதித்ததற்கான தொழில் ரகசியம். நான் நடைமுறையில் சொல்லியதை தான் Amazon இணையத்தில் website மூலம் செய்கிறது.


இணையத்தில் ஒரு வெற்று கடை ஒன்றை உருவாக்கினார்கள். அதை நம்ம கடை என்று நன்றாக விளம்பரம் செய்தார்கள். இணையம் தெரிந்த ஒருசில கடைகாரர்கள் அந்த கடை உள்ளே நுழைந்தார்கள். தங்களது பொருட்களை அடுக்கினார்கள். விலைப்பலகையை மாட்டினார்கள்.


அதே போல இணையம் தெரிந்த ஒரு சில வாடிக்கையாளர்களும் அந்த கடையினுள் நுழைந்தார்கள். நம் ஊரை காட்டிலும் நம்ம கடையில் விலை குறைவாக இருக்கிறதென்று அவர்களாகவே நினைத்துக் கொண்டார்கள். பொருளை வாங்கினார்கள்.


Amazon இதில் விற்பனை செய்வோரிடம் 1% பெற்றுக்கொள்வது மட்டுமல்லாமல் ரூ.599 கீழ் பொருட்கள் வாங்கும் நம்மிடமிருந்தும் ரூ.40 டெலிவரி கட்டணமாக பெற்றுக் கொள்வார்கள். Amazon-னின் அசுர வளர்ச்சிக்கு அதுவும் ஒரு காரணம்.


ஒருவகையில் நம்மை அதிக பொருட்களை வாங்க தூண்டுவதற்கான யுக்தியாகவும் அது அமைகிறது.


பின் நாளில் Amazon MTruck, Music, Prime, Kindle, Audible போன்றவைகளை உருவாக்கவும் அது காரணமாக இருந்தது.


நாம் இப்போது அஞ்சல் துறைக்கு வருவோம்.


Amazon Courier Agent செல்ல இயலாத கிராமத்திற்கு கூட இந்திய அஞ்சல் துறையால் நுழைய முடியும்.


Amazon Delivery Charge காட்டிலும் நம் அஞ்சல் துறையின் VPP கட்டணம் அதிகம் தான், ஆனாலும் இந்திய அரசாங்கம் போல் அனுப்பி வைக்கப்படும் பொருளுக்கு பாதுகாப்பு மற்றும் Refund சேவைகளை செய்ய முடியாது. அதுமட்டுமல்லாமல் அந்த 1%-த்திற்கு இங்கு வேலை இல்லை.


இருந்தாலும் என் கருத்து என்னவெனில் இந்திய அஞ்சல் துறையும் 1% கட்டணத்தை பெற வேண்டும். ஆனால் VPP கட்டணத்தை விட்டொழிக்க வேண்டும். அத்தோடு மட்டுமல்லாமல் இணையத்தில் ஒரு வலைதளத்தை உண்டு செய்து (Amazon போல்) எல்லா விதமான கடைகாரர்களின் பொருட்களையும் அதில் அடுக்க வேண்டும். (அப்படி அனைத்து விதமான வணிகர்களையும் ஒன்றிணைக்க அரசு அதிகாரிகளையே பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது அதற்கும் Affiliate Marketers நியமிக்கலாம்.


உண்மையில் இதுமாதிரியான வலைதளத்திற்கு விளம்பரமே தேவையில்லை. 'இன்று ஐஸ் வண்டி வந்திருக்கு' என்று பள்ளிக்குழந்தைகள் பேசிக்கொண்டே வருவது போல இதுவும் பரவி விடும்.


Amazon போல் கொண்டு சென்று கொடுக்க எல்லாவிதமான சக்தியும் நம் அஞ்சல் துறைக்கு உள்ளது. சிறந்ததொரு வலைதளத்தை உருவாக்கவும் தேர்ந்த web developers நம் நாட்டில் இருக்கிறார்கள். 


உணவிற்கு தேவையான அனைத்து மூலப்பொருளையும் கையிலே வைத்துக்கொண்டு நாம் இத்தனை ஆண்டு காலமாய் சமைத்துண்ணாமல் இருந்துள்ளோம்.


பிரதமர் சொன்ன Make in India திட்டத்திற்கும் இது சிறந்த உதவியாய் இருக்கும். கடைக்கோடி கிராமத்தில் உள்ள ஒரு சின்ன பொம்மை கடை காரர் கூட இந்த முயற்சியால் நன்றாக வருமானம் ஈட்டலாம்.


இந்த கட்டுரை நேரடியாக பெரியதொரு மாற்றத்தை கொண்டு வராது. ஆனால், இதை படிக்கும் மக்களால் ஒரு சிறு விழிப்புணர்வு ஏற்படலாம். அவர்களின் மூலம் இது நாட்டுக்கு உணர்த்தப்படலாம்.


இது போன்ற வலைதளங்கள் விவசாயிகளுக்காக முன்பே இந்திய அரசாங்கம் உருவாக்கியுள்ளது. நூற்றில் 80 சதவீத விவசாயிகளுக்கு அது என்னவென்றே தெரியாது. காரணம், அது மக்களிடையே பரவுமளவிற்கு வலுவற்றதாய் உள்ளது. அதற்கு மூலக்காரணம், வேற்று மொழிப்பெயரே.


நான் ஒரு விவசாயியிடம் சென்று 'உங்கள் பொருளை e-nam e-choupal போன்ற தளங்களில் விற்பனை செய்யலாமே' எனக்கேட்டால், அதற்கு பதில் யோசிக்கும் அந்த தருணத்திலே அவர்கள் அப்பெயரை மறந்துவிடவும் கூடும்.


இந்திய அரசாங்கம் இல்லையானாலும் இதை தமிழ்நாடு அரசு அரங்கேற்ற வேண்டும். அஞ்சல் மாதிரியான ஒரு துறையை படைப்பதிலிருந்து இவர்களது வேலை தொடங்குமாயின் இந்திய அரசிற்கு அத்தனை கடினமல்ல.


ஒருவேளை இந்திய அரசோ தமிழக அரசோ இப்படிபட்டதொரு இணைய கடையை நிர்வகித்து தமிழக வணிகர்களை ஒருங்கிணைத்தாயின், நான் ஒரு தனியார் கடையில் பொருளை வாங்கி அவதியுறமாட்டேன். அரசு கடையிலே வாங்கியதாய் திருப்தியடைவேன்.


தீசன்


3 Comments

  1. இந்த கருத்துகள் அஞ்சல் துறை அதிகாரிகளை அடைய வேண்டுமானால் அவர்களுக்கு உரிய வெப்சைட்டிலோ அந்தத் துறை அமைச்சகத்துக்கோ தெரியப்படுத்தினால் பலன் கிடைக்கும்.

    ReplyDelete
  2. அற்புதமான நடை... தெளிவான சிந்தனை... நல்ல கருத்து.. வாழ்த்துகள்... வளர்க..

    ReplyDelete
  3. கவிஞர்.. நல்ல கதாசிரியர் தேர்ந்த எழுத்தாளர் என்பதையெல்லாம் தாண்டி நம் தீசன் மகத்தான சிந்தனையாளராகவும் மிளிர்கிறார்..!

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு