Trending

சத்தியமடி தங்கம் - சிறப்பு சிறுகதை

 


கல்யாண மண்டபமே ஒரே பரபரப்பாக இருந்தது. ஏழரை மணிக்கு முகூர்த்தம். மணி ஏழு ஆகிவிட்டது. மாப்பிள்ளை இதுவரை வரவில்லை.


மணமகள் அறையில் பெண்ணோடு தோழிகளும் உறவினர்களும் சூழ்ந்து நின்றாரகள். மணமகன் அறை காலியாக இருந்தது.


போன மாதம் தான் அபிராமிக்கும் பாஸ்கரனுக்கும் நிச்சயம் ஆகி இருந்தது. இந்த ஒரு மாதத்தில் பாஸ்கரன் அபிராமிக்கு தினமும் நாலு முறையாவது போன் செய்து விடுவான் அபிராமியும் அவன் அழைப்பை எதிர்ப்பாரத்து காத்திருப்பாள். மண்டபத்திலிருந்து இரவு முழுவதும் பல முறை போன் செய்து விட்டாள். ரிங் தான் போய் கொண்டு இருந்தது. ஒரு ரிங் கூட அடிக்கவிடாது போனை எடுக்கும் பாஸ்கரன் அன்று போனை எடுக்க வில்லை. சென்னையிலிருந்து வந்த அலுப்பில் தூங்கி இருக்கலாமென தன்னை சமாதனம் செய்து கொண்டாள் அபிராமி.


சென்னையில் தன்னோடு வேலை பாரக்கும் நண்பர்கள் பத்து பேருக்கு நல்ல ரூம் ஏற்பாடு செய்ய முன்பே போனில் சொல்லி இருந்தான் பாஸ்கரன் அபிராமியும் உடனே அப்பாவிடம் சொல்லி திருச்சியில் பெரிய ஹோட்டலில் ரூம் ஏற்பாடு செய்துவிட்டாள்.


நேரம் நெருங்க நெருங்க அபிராமி தன் தாய் மாமாவை அழைத்தாள். 'மாமா நீங்களாவது ரூமில் போய் பாத்துட்டு வாங்க… காலும் போக வில்லை' என்றாள்.


அதற்குள் மண்டபத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களை கற்பனையாக பேசிக்கொண்டு இருந்தார்கள். சாப்பாடு ரெடி ஆகிவிட்டது. பந்தியை ஆரம்பிக்க யாரும் சொல்லாததால் சமையல் காரர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார். 


இவ்வளவு பரபரப்புக்கு இடையே மண்டப வாசலில் ஏ.சி வேன் ஒன்று வந்து நின்றது. மாப்பிளையின் நண்பர்கள் முதலில் இறங்கினார்கள். கொஞ்சம் கைத்தாங்களாக பாஸ்கரனை அழைத்து வந்தார்கள். அபிராமி அவன் அருகே ஓடி வந்தாள். 'என்னங்க என்ன ஆச்சு'பதறினாள். அவளை ஒரு ஓரமாக அழைத்து சென்றான் பாஸ்கரன். 'ஒன்றுமில்ல...ஃப்ரெண்ட்ஸ்க்கு பேச்சிலர் பார்ட்டி வச்சேன்.. எல்லா வசதியும் சரியாக உள்ளதா என ரூமுக்கு பாக்க போனேன்… போதையிலிருந்த அவர்கள் வலுக்கட்டாயமாக எனக்கும் சரக்கை ஊற்றி விட்டார்கள்..எனக்கந்த பழக்கம இல்லாததால் நினைவு வர நேரமாகிவிட்டது. அவர்கள் இதே பிழைப்பாக கிடப்பதால் காலையில் எழுந்து ரெடியாகி விட்டார்கள். நான் ரெடியாவதில் கொஞ்சம் பிரச்சனை ஏற்பட்டு விட்டது' என்றான்.


அவன் சொல்வதை கேட்க கேட்க கோபத்தின் உச்சிக்கே சென்றாள் அபிராமி. அவன் சட்டையை பற்றி உலுக்கினாள். 'ஒவ்வொரு முறையும் போன் செய்யும் போது எத்தனை முறை கேட்டிருப்பேன் குடிப்பழக்கம் உண்டா? சிகரெட் பிடிப்பீர்களா? என்று… அந்த வாடையே எனக்கு பிடிக்காதென சொன்னீர்களா இல்லையா? என்னை நல்லா ஏமாத்திட்டீங்க.. எனக்கிந்த கல்யாணமே வேண்டாம்.. நான் இப்படியே இருந்துட்டு போறேன்' என ஆவேசமாக கத்தினாள்.


மாப்பிள்ளை குடித்து இருக்கிறான் என்பது மண்டபத்தில் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. ஊர் பெரியவர் இராமசாமி வந்தார். 'அம்மா அபிராமி இது ஒன்னும் எங்கும் நடக்காதது அல்ல.. நீ திறமையானவளாக இருந்தாள் அவனை திருத்திவிடலாம் யோசித்துப்பார். உன் அப்பா இரண்டு லட்சமாவது செலவு செய்து இருப்பார். மீண்டும் ஒரு செலவை அவரால் செய்ய முடியுமா? நல்ல முடிவா எடுமா' எனறார்.


ஏரியா கவுன்சிலர் அபிராமியிடம் வந்தார். 'அபிராமி நானும் உங்க அப்பாவும் சிறுவயது முதலே நண்பர்கள். நானே 15 வயதிலிருந்து குடிக்கிறேன். செத்தா போய்டேன். இன்னைக்கு நாட்டுல முக்காவாசி பேரு குடிக்கிற பழக்கம் உள்ளவங்கதான். அவங்கள கட்டிகிட்டவங்க எல்லாம் குடிகாரன் பொண்டாட்டியா தான் வாழுறாங்க. கல்யாணம் சாவு காதுகுத்து பாசு ஃபெயிலு பொறந்த நாள் ப்ரோமோசன் எதுவுமே தண்ணி இல்லாம நடக்காது. இதெல்லாம் கெட்டதுனா அரசாங்கமே இத விக்குமா? இத ஒரு பிரச்சனையா பேசுறியேம்மா.. போய் மணமேடையில் உட்காரு' என்றார்.


ஒரு பொய் பேசுற குடிகார கணவனோடு சேர்ந்து வாழ முடியாது. என்னை யாரும் வற்புறுத்தாதீங்க என்றாள் அபிராமி.


அபபோது அந்த திருமணத்திற்கு வந்திருந்த பங்காளியோட மாமா பையன் வேலு, 'குடிப்பதை கூட மன்னித்துவிடலாம், எவனாவது தனது கல்யாணத்து அன்னிக்கே குடிப்பானா?. அந்த பெண் கேட்பதிலே என்ன தப்பு? அறிவு வேண்டாமா? இப்படி பட்டவனுக்கு கழுத்தை நீட்ட அபிராமிக்கு எந்த அவசியமும் இல்லை. கல்யாணம் பண்ணிக்குற மாப்பிள்ளை கல்யாணத்து அன்னிக்கே குடிக்கிறானென்றால் அவள் மனம் என்ன பாடுபடும்' என்றான்


'இவ்வளவு பேசுறியே நீயே அவள கல்யாணம் பண்ணிக்க வேண்டியதானே?' என்று ஒரு குரல் கேட்டது.


'எனக்கும் அபிராமி முறை தான். ஆனால் எனக்கு அவளை விட பதினைந்து வயது அதிகம். இல்லையென்றால் நானே அவளை கல்யாணம் செய்திருப்பேன்' என்றான் வேலு.


யோசித்து பார்த்தாள் அபிராமி. வயது அதிகமானால் என்ன. ஒரு குடிகாரனோடு காலம் தள்ளுவதற்கு இவர் எவ்வளவோ மேல் என நினைத்தாள்.


'நான் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன், உங்களுக்கு சம்மதமா?' என்றாள். 


வேலுவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதே மண்டபத்தில் நல்லபடியாக திருமணம் முடிந்தது. 


முதலிரவு


முன்பே வந்து கட்டிலில் படுத்திருந்தான் வேலு. அபிராமி பாலோடு வந்தாள். பார்ப்பதற்கு தூங்குவது போல் இருந்த அவன் முகம் வியர்த்து இருந்தது. மெதுவாக அவன் மீது கை வைத்தாள். கண்களை திறந்தான். கண்கள் சிவந்து இருந்தது. தெளிவு இல்லாமல் குழறுவது போல் பேசத் தொடங்கினான். 'நாற்பது வயது நெருங்கிவிட்டதே திருமணம் ஆகுமோ ஆகாதோ என இருந்தேன். எதிர்பாராமல் இந்த திருமணம் முடிந்த மகிழ்ச்சியில் சாயந்தரம் கொஞ்சம் குடித்துவிட்டேன். நாளைமுதல் கண்டிப்பாக குடிக்கமாட்டேன். இது சத்தியம். இன்னைக்கு நீ நிம்மதியாக தூங்கு' என்றான்


-ஜெ.மாரிமுத்து


2 Comments

  1. மகேந்திர பல்லவ சக்கரவர்த்தி மத்தவிலாச பிரகசனம் என்று ஒரு நூலை எழுதியிருப்பார்..

    மதவெறிபிடித்த குடிகாரர்களின் ஹாஸ்ய நாடகம் அது.. இது ஒரு நவீன மத்த விலாச பிரகசனம்!

    ReplyDelete
  2. சிறிய கதை... முடிவிலோ அதிர்ச்சித் திருப்பம்





    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு