Trending

சித்தர் யோகி மனிதன் - புரிதல்

 

சித்தர் யோகி மனிதன்

துவைத ஞானம் அமையப்பெற்றவர்கள் தத்துவ வழிபாட்டை ஏற்கமாட்டார்கள். அத்வைத ஞானம் கைவரப்பெற்றவர்களுக்கோ ஸ்தூல வடிவங்களான கோயில் வழிபாடு, பூஜை சமாச்சாரங்கள் பிடிப்பதில்லை ஆனால் ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு வேதாந்தியாகவும் அதே சமயத்தில் வடிவ வழிபாட்டையும் நிகழ்த்திய யோகியாய் தெரியப்படுகிறார் ஆனால் அவரின் முதன்மை சீடரான விவேகானந்தரோ தத்துவ வழிபாட்டினை மட்டுமே ஏற்றவராய் உள்ளார். சற்றே நுணுகி அணுகினோமானால் யோகிகளில் பெரும்பாலானோர் வடிவ வழிபாட்டை ஏற்று கொண்டதில்லை. சிலர் ஏற்றதுண்டு. சித்தர்களில் எவருமே வடிவ வழிபாட்டை ஏற்று கொண்டது இல்லை. ஏனென்று எவரும் யோசித்தது உண்டா? 


குடும்பத்தர்களின் பக்தி எல்லை வடிவத்தில் முடிந்துவிடுகிறது. வடிவத்தை மீறிய ஆற்றலின் மீது அவர்களுக்கு பிடிப்பு இருந்தாலும் அது வடிவமாகினால் மட்டுமே அவர்களுக்கு உற்ற துணையாய் தெரிகிறது.


வடிவத்தை எல்லையற்ற பரம்பொருளாய் எண்ணாமல் வடிவமாகவே எண்ணும் போது அதற்கு கோவில் கட்டத்தோன்றுகிறது, மாலை, பூசை, அபிசேகம், ஆராதனை என அனைத்தும் புத்திக்கு அவசியமாய்த் தெரிகிறது. 


அத்வைத ஞானமான தத்துவ விவரத்தையும் ஞானநிலையையும் எட்டியவர்களுக்கு அந்நிலையை அடையப் பெற உள்மனக் கேள்விகளே உதவுகிறது. 'தெய்வம் என்பது உண்மையா?' என்ற கேள்வியிலிருந்து 'விதிக்கு விதியாய் அமைவது எது?' என்ற கேள்வி வரை அல்லது அதையும் தாண்டிய நிலை வரை அத்வைதவர்களுக்கு இறைவனை அடைய பூஜைகளோ, அபிசேகங்களோ பயன்படவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.


வேதந்தின் அந்தமே வேத நிலையின் உச்சம் அதை பெறுபவனையே வேதாந்தி எனக்கூற வேண்டும். அதைப் பெறும் அடிப்படைத் தகுதி கேள்வி. சாதிக்க முடியாத ஒன்றை யாரொருவர் முதலில் கற்பனை செய்கிறாரோ அவரே பின் சாதனையாளர் ஆகிறார். வேத நிலையின் உச்சத்தை படித்தோ, ஆய்ந்தோ அல்லாமல் வெறும் கேள்விகளாலும் அனுபத்தாலும் மட்டுமே அறிந்த ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற பெரும் சாதனையாளர்களுக்கு அத்வைதத்தோடு துவைத குணமும் அமையப்பெற்றிருக்கிறது.


சித்தர்களில் ஒருவர் கூட அவ்வாறு இல்லாததற்கு காரணம் அவர்களிடம் இருந்தது ஞானப்பழக்கம் அல்ல. தேகப் பழக்கம்.


இறைவன் இல்லையென்றோ, இருக்கிறார் என்றோ பச்சையாக சாமனியர்களுக்கு புரியும் வகையில் எவ்வித புராண இடைச்செருகலும் இல்லாமல் கூறுவது சித்தர்கள் மட்டுமே.


யோகிகள் உடலைக் கொஞ்சம், மனதைக் கொஞ்சம் பழக்குகிறார்கள். உடல் சித்தர்களால், மாயை என்று புறந்தள்ளப்பட்ட உலக வாழ்க்கையை உண்மை என ஏற்றும், மனம் மாயை என்பதை அறிந்தும் ஒரு பொதுவான சமநிலை எண்ணத்திற்கு வந்துவிடுகிறது. 


அதாவது, மாயை என்பதும் ஒரு மாயையே. மாயையை முழுதும் உணராத குறைநிலையே மனத்தால் மாயை என்று எண்ணப்படுகிறது. 


ஆனால் சித்தர்களோ இதை உறுதியாக மறுப்பதால் தேக அனுபூதி அவர்களுக்கு சாத்தியமாகின்றது. தனித்து வாழ்வது அவர்களுக்கு சுலபமாகின்றது.


தேகத்தை வஜ்ரமாக எண்ணி அவர்கள் கடினமான பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள். மூச்சை அடக்குதல், பசியை அடக்குதல், இச்சையை அடக்குதல், தூக்கத்தை அடக்குதல், பேச்சை அடக்குதல் என அத்தேக ஞானத்திலும் உச்சமான காலத்தை அடக்குதலை கைவரப்பெறுகின்றனர்.


இதன் உண்மை விளக்கம் யாதெனில், அவையே ஏழு சக்கரங்கள். மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விஷுத்தி, ஆக்னா, பிரம்மாந்திரம் என்பவையே நம் உடலில் கீழிருந்து மேலாக காமம், பசி, மூச்சு, குரல், தூக்கம், சிந்தை, வளர்ச்சி ஆகியவைகளை நிர்வகிப்பதாக சித்தர்கள் வகைப்படுத்துகின்றனர். இவைகளை அடக்கி ஒவ்வொரு சக்கரமாக மேலெழுப்பி உச்சந்தலையில் இருக்கும் பிரம்ம சக்கரத்தை அடையும் போதே ஒருவரால் அண்டம் யாவையும் பிண்டத்தில் அடங்கும் எனும் கருத்தை உள்வாங்க முடியும். மனிதன் பிரபஞ்ச ஆற்றலை அறிய, விதிக்கு விதியாய் அமைந்த அப்பேராற்றலை அடைய சித்தர்கள் ஆக்கிய வழியே இத்தேக பயிற்சிகள். இவ்வாறு இப்பர பிரம்மத்தை அடையும் கடின சித்தரே தன் உடலின் காலத்தை கட்டுப்படுத்தும் ஆற்றலை கைவரப் பெறுகிறார். அவரின் உடலில் பசி, பிணி ஏற்படுவதில்லை. ரோமம், நகம் வளர்வதில்லை. கிழப்பருவம் எய்தாத சாகத தேகத்தை அவர் தவத்தால் அடைகிறார். அதாவது அக்கடின சித்தர் தன் தேகத்தை காயகல்பமாக மாற்றுகிறார். காலமாகாத காயத்தைப் பெறுகிறார். இதையே திருமூலர் செய்ததாக சித்தர் பாடல்கள் குறிப்பிடுகின்றன.


மகா அவதார் பாபாஜி போன்றோர் பரமஹம்ச யோகானந்தரின் குறிப்புரைப் படி இத்தகைய பயிற்சிகளை மேற்கொண்டே சாகாத தேகத்தைப் பெற்றிருப்பார்கள் என்று ஊகம் செய்யலாம் ஆனால் நிச்சயமாக சொல்லிவிட முடியாது.


வள்ளல் பெருமானார் மரணமில்லா பெருவாழ்வு என்று கூறியதையும் ரமண மகரிஷி, 'அருணகிரி நாதர் திருவண்ணாமலையில் தான் உயிரோடு உள்ளார்' என்று கூறியதையும் நினைவிற்கு கொண்டு வருகையிலுமே எனக்குத் தோன்றுவது திருமூலரின் இக்காயகல்ப திருமந்திரமே. 


வள்ளலாரும் இத்தகைய பண்பு நலன்களை பெற்றவரே. வள்ளல் பெருமானார் மறைந்தார் எனும் வாக்கு வாக்கேயன்றி உண்மையாய் இராது. மரணமில்லா பெருவாழ்வைப் பற்றி சத்திய திருவுருவாய் பிரச்சாரம் செய்த ஒருவர் எவ்வாறு மரணமடைந்திருக்க முடியும்? 


வடநாட்டோருக்கு மகா அவதார் பாபாஜி போலே தென்னகத்திற்கு வள்ளல் பெருமானார்.


சித்தர்கள் தேகத்தை கடின பயிற்சிக்கு உள்ளாக்கி பிரபஞ்ச ஆற்றலை அடைவது போல கடின பயிற்சிகள் கூடாது என்பது வள்ளல் பெருமானார் கருத்து.


ஒரு மனிதன் இறைவனை அடைவதற்கு எல்லோரிடம் அன்பு பாராட்டினால் மட்டுமே போதும், சத்திய ரூபமாய் தோன்றும் இறைவனும் அதையே விரும்புகின்றார். தன் பிள்ளைகள் அனைத்தும் ஒற்றுமையாய் தங்களுக்குள் அன்பு பாராட்டி கொள்வதையே தாய் விரும்புவாள் அதையே இறைவனும் விரும்புகிறார். அன்பு பாராட்டுதலை விடுத்து தனித்து சென்று கடின சித்தராய் இருத்தல் கூடாது. 


என்கிறார் வள்ளல் பெருமானார். துவைத ஞானம் தத்துவத்தை மறுக்கும். அத்வைத ஞானம் வடிவ வழிபாட்டை மறுக்கும். வள்ளல் பெருமானோ யோகியர், சித்தர் குணங்களையே மறுத்து மனிதனாய் வாழ்ந்தாலே போதும் என்கிறார்.


ஈசதாசன்

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு